வில்வமான மகாலட்சுமி



வணக்கம் நலந்தானே!

பாற்கடல் பரந்தாமனின் திருமார்பில் நிரந்தரமாக தான் உறைய வேண்டும் எனும் பேரவா கொண்டாள் மஹாலஷ்மி. மானசீகமான பூஜையைத் தாண்டி ஏதேனும் புஷ்பங்களால் அர்ச்சித்தால் என்ன என்று நினைத்தாள். புஷ்பங்கள் அர்ச்சனை முடிப்பதற்குள் வாடிப்போகுமே என்று கவலையுற்றாள். தன்னுடைய அன்புக்கும், பக்திக்கும் வெளிப்பொருளைக் கொண்டு எவ்வாறு வெளிப்படுத்த முடியும், தன் மனம் அதில் நிறைவடையுமா என்று ஆழ்ந்து சிந்தித்தாள். அந்தப் பிரதேசத்தில் இன்னதென்று கணிக்க முடியாத பட்ட மரம் ஒன்றிருந்தது. அதன் கீழ்சென்று அமைதியாக அமர்ந்தாள்.

சட்டென்று அவளுக்குள் மின்னலாக சிந்தனைக் கீற்று வெளிப்பட்டது. தான் தனக்குள் எதை உயர்வாக நினைத்திருக்கிறோமோ, அதை தியாகம் செய்வதைத் தவிர வேறெந்த வழியும் இல்லை எனத் தெளிவுற்றாள். வேறேதேனும் வழியுண்டா என்ற முடிவுக்கு வந்தாள். தன் உயிர் திரட்சியாக விளங்கும் பிராணனைக் கொண்டு ஈசனை வழிபட்டாள். அந்தப் பிராணன் இடகலை, பிங்கலை, சுழிமுனை என்று மூன்றாகப் பிரிந்து ஈசனை அடைந்தது. மகாலட்சுமி மட்டிலாது மகிழ்ச்சி கொண்டாள். வேறொரு ஆச்சரியமும் அங்கே நிகழ்ந்தது.

அவள் அமர்ந்த அந்த மரம் துளிர்க்கத் துவங்கியது. பச்சைமாமலைபோல் மேனியனின் நிறம் அதில் படர்ந்தது. திருமகளிடமிருந்து வெளிப்பட்ட பேராற்றல் மிகுந்த பிராண சக்தியானது, மூவிதழாகப் பிரிந்தது. சிறு சிறு இலை வடிவம் கொண்டது. தனித்தனித்தனியாக இருந்தாலும் ஒரு சிறு காம்பின் மூலம் இணைந்தது. அவளின் தவம் பெருக்கு அதில் சாரலாக வீசியது.

இன்னும் தமக்குள் ஆழ்ந்து சென்றதால் வெளியே இலைகள் அதிகமாயின. கிட்டத்தட்ட அடர்ந்த கானகமாக பெருகின. இடையறாத அதிர்வுகளாலும், பக்தியின் வெம்மையாலும் அந்த மூவிலைகளும் மழையாக மாறி சிலிர்த்துக் கொட்டின.

அதன் வாசமும், ஈசனின் சாந்நித்தியமும் அவ்விடத்தை நிறைத்தன. விஸ்வம் எனும் பிரபஞ்சத்தையே அசைக்கும் ஈசனுக்கு உரியதாக அந்த இலைகள் இருந்ததால் வில்வம் எனும் பெயர் பெற்றது. ஈசனுக்குச் செய்யும் பூஜையில் ரத்னம்போல தனித்தன்மை பெற்றது. மஹாலஷ்மியின் சொரூபமாக அந்த மூவிலைகளும் விளங்கின. தொடர்ந்து தவம் புரிந்து வில்வ இலைகளால் அர்ச்சித்தாள்.

வைகுந்த வாசன் த்ரைலோகி எனும் அந்தத் தலத்திலே சயனக்கோலத்திலே திருக்கண் வளர்ந்தார். இவ்வாறு திருமகள் எம்பெருமானோடு இணைந்த வைபவமும், வில்வம் எனும் புனித இலைகள் உருவெடுத்ததே இத்தலத்தில்தான். வில்வமரம் பூரண லட்சுமி கடாட்சம் மிகுந்த மரமாகும். திருமகள் தவம் செய்தமையால் ஸ்ரீபுரம் என்றும் இத்தலத்தை அழைக்கலாம். இத்தலமே தற்போது திரிலோகி (திருலோகி) என அழைக்கப்படுகின்றது. இத்தலம் கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயே உள்ளது.

கிருஷ்ணா
(பொறுப்பாசிரியர்)