அகவிருளை அகற்றும் அரங்கனின் கிரீடம்



தனி மனிதன் தன் மனதிற்குள் ஒரு செயலை செய்ய நினைக்கிறான். அதற்கான செயலாற்றும் உத்திகளை ஆழ்ந்து சிந்தித்து முடிவு செய்கிறான். செயலாற்றத் தொடங்குகிறான். செயல் செயலாற்றும் திசை நோக்கி நகரத் தொடங்குகிறது. மனிதன் அந்த நகர்வு தன்னால்தான் தனது கைகளால்தான் நிகழ்கிறது எனும் எண்ணம் தன்னை ஆட்கொள்ள அனுமதிக்கிறான். கர்வம் மெல்ல அவனை தின்னத் தொடங்குகிறது. நகர்தல் நின்று போகிறது.
கர்வம் தின்று மீந்த மனிதன் எப்படியாவது செயலை நகர்த்தி அதன் முழுவடிவத்தை உருவாக்கியே தீரவேண்டுமெனும் உத்வேகம் கொள்கிறான். சக மனிதர்களின் சக்தியையும் உதவியையும் கோருகிறான். அதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கிறான். உத்தரவுகள் செயல் வடிவம் பெறுவதற்கான போதிய அதிகாரம் அந்தத் தனிமனிதனிடம் இல்லையென்றால், செயலின் நகர்வும் நின்றுதேங்கிவிடும்.

நகர்வதற்கு இயங்குவதற்கு ஆற்றல் தேவை. அரிய ஆற்றலை சரியான திசை நோக்கிச் செலுத்த அதிகாரம் தேவை. அந்த அதிகாரம் பரம்பொருளான அரங்கனிடமே இருக்கிறது என்பதையே கடவுள் விக்ரஹங்கள் படைத்த, அர்ச்சா வடிவங்கள் செதுக்கிய முன்னோர்கள் கிரீடம் என்பதை அதீத சக்தியின் தலை உச்சியில் வடிவமைத்தார்கள்.

 கிரீடம் அதிகாரத்தின் குறியீடு. அதிகாரம் சரியான தேவையான ஆணையிடுதலை செய்ய வேண்டும். அகங்காரத்திற்கோ தான்தான் அதற்கான சரியானவன் என்ற நினைவிற்கோ இடம் தரும்போது ஆணைகள் தவறாகிவிட நேரும். எந்தச் செயலும் இயக்கமும் அரங்கனின் ஆணைப்படியே நடக்கிறது அல்லது நிகழ்கிறது அதன் பின்னான இறுதி வடிவமும் பெறுகிறது என்பதை மனிதன் நினைவில் வைத்துக் கொள்ளவே அர்ச்சா வடிவங்களில் அரங்கனுக்கு கிரீடம் சூட்டப்படுகிறது.

மனித வடிவங்களை அரங்கன் கிரீடம் இன்றியே படைத்தான். ஆனால் மனிதர்கள் அதிகாரத்திற்கான தங்களது ஆசையின் வெளிப்பாடாய் கிரீடம் சூட்டிக் கொள்கிறார்கள். அரங்கன் மெல்ல தனக்குள் நகைத்துக் கொள்கிறான்.அரங்கனே தனது வடிவத்தை முதன் முதலில் அமைத்துத் தந்ததாக சில்ப சாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றன.

அரங்கன் பிரளயத்திற்குப் பின் தேங்கிய உலக இயக்கத்தை மெல்ல நகர்த்த முடிவு செய்கிறான்.மிக நீண்ட ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்கிறான். எல்லா உயிர்களையும் படைத்த பின் மனிதனை படைக்க முடிவு செய்கிறான். மனித உருவில் தன்னை முதலில்களிமண்ணில் செதுக்கிப் பார்க்கிறான்.

வெலா வியாய பரராச ஜாச
வரக்ஷவி வியா: வஜா

- என்று மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. முதன்முதலில் தன்னை வடிவமைத்துப் பார்த்த அரங்கன் விஸ்வகர்மா எனும் பெயர் பெற்றதாக வேதங்கள் சொல்கின்றன.
முதலில் கிரீடமற்ற தன் உருவத்தை செதுக்கிய அரங்கன் நகர்தல் நிகழாமையைக் கண்டு வியந்து போகிறான். அதிகாரம் நகர்தலுக்கு அவசியமென்பதை உணர்ந்து கிரீடம் வரைகிறான். கிரீடம் தலையில் சரியாக பொருந்த மறுக்கிறது.

நெற்றி கண் புருவம் மூக்கு வாய் காதுகள் முதலியவைகளை சரியான கணக்கீடுகளில் செதுக்குகிறான். அதற்கு அலைபாயும் மனதால் முடியாதெனும் உண்மை உணர்ந்து ஆழ்நிலை தியானத்திற்கு தன்னை உட்படுத்திக் கொள்கிறான். பிரளய நீரலையில் ஒரு குழந்தையென மிதக்கத் தொடங்குகிறான். கால் கட்டைவிரலை வாயில் வைத்துச் சிந்திக்கத் தொடங்குகிறான்.

நெற்றியிலிருந்து மூன்றங்குலம் கேசாந்தம். அதனின்று அஷிஸ்திரம் வரை நான்கங்குலம். அதிலிருந்து மூக்கின் நுனி வரை மீண்டும் நான்கு அங்குலம். பின் மன்வந்தரம் வரை மீண்டும் நான்கங்குலம். கழுத்தின் உயரம் நான்கங்குலம். அதிலிருந்து ஹிருதயம், மார்பு அல்ல… வரை பன்னிரண்டு அங்குலம்.

பிறகு ஓஷம் எனும் பெயருடைய தலைப் பாகையை வடிவமைக்கிறான். இதை பிற்காலத்தில் உத்தம நவதால வடிவமைப்பாக சிற்ப சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இது எவ்வாறு வேதங்கள் அரங்கனின் வாயிலிருந்து வெளியான சொற்களாலும் அரங்கன் ஆழ்ந்து சிந்தித்து ஆணையிட்ட செயல் வடிவங்களாலும் தோன்றின என்பதை தளும்பாத கண்ணாடி நீர் இருக்கும் சமுத்திரத்தின் ஆழத்து பவளப் பாறையென மானுட கண்களுக்குக் காட்டிக் கொடுக்கிறது.

இன்றைய காலச் சூழலில் கிரீடம் என்பது பதவியெனும் வடிவில் மனிதனின் தலையில் சூட்டப்படுகிறது. பதவி… அதிகாரம் எனும் வெற்றுக் கற்கள் பதிக்கப்பட்ட ஒரு உலோக வடிவம் என்பது புரியாமல் கிரீடத்திற்குப் பின் ஒரு ஒளிவட்டம் இருப்பதாக மனிதன் நம்பத் தொடங்குகிறான். கிரீடம் சற்று மெல்ல கீழிறங்கி நெற்றி தாண்டி கண்ணை மறைக்கிறது.
அதிகாரம் நன்மை செய்வதற்கானது எனும் பொருள் மறந்து தீமைகளைச் செய்யத் தொடங்குகிறான். அதனால்தான் அதிகாரம் அழிவிற்கான தொடக்கம் என்பதை முன்னோர்கள் சொல்லிச் சென்றார்கள்.

அரங்கன் தன் அவதாரங்களில் அதிகாரமற்ற சாமான்ய மனித உருவங்களிலேயே பெரும்பாலும் தோன்றியிருக்கிறான். அரங்கன் மணிமுடி சூட்டிக் கொள்வதில்லை. முடி சூட்ட நிச்சயிக்கப்பட்ட சூழ் நிலையில் அதை துறக்கிறான். பிறகு, அரங்கனுக்கு பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முடிசூட்டப்படுகிறது. அங்கே அந்த மணிமுடியை கிரீடத்தைச் சூட்டிக் கொள்ளும் அந்த புனித நிமிடங்களை கம்ப நாட்டாழ்வார் இப்படிச் சொல்கிறார்…

அரியணை அனுமன் தாங்க,
அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க,
இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க
வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி
வசிட்டனே புனைந்தான் மௌலி.

இங்கே அரங்கன் முடி சூடிக் கொள்ளவில்லை. அதிகாரத்தை அரங்கனிடம் வசிட்டர் சூட்டுகிறார். கம்பர் கிரீடம் என்றோ மணிமுடி என்றோ வார்த்தைகளை உபயோகிக்கவில்லை என்பதை
கவனித்தால் கிரீடம் என்ற சொல் எவ்வளவு கர்வத்தை ஆழ்மனதில் திணிக்கும் வல்லமையுடையது என்பது புரியும்.ஆச்சாரியார் திருவஹிந்திரபுர எம்பெரு மானை அணு அணுவாய் அனுபவிக்கிறார். ஒவ்வொரு அவயவங்களுக்குமான பொருளை வியந்து அரங்கன் உணர்த்துவதாகவே உணர்கிறார்.

கடைசியாக அட்டபுயகர எம்பெருமானின் மணிமுடியில் பார்வையை பதிக்கிறார். சில்ப சாஸ்திரங்களின் அரிய உண்மைகளை அந்தச் சிற்பியின் கைவண்ணம் பிரமிப்பாய் அரங்கன் உருவில் அவருக்கு உணர்த்துகிறது.

மெய்சிலிர்க்க மெய் மறக்கிறார். கிரீடம் சாஸ்திரங்களின் வழிகாட்டுதல்படியே செதுக்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக மனிதன் செய்திருந்தால் அந்த உருவில் ஒரு விஸ்வகர்மாவாக அரங்கனே அவதரித்திருக்க வேண்டும். அந்த உண்மை அவரின் ஒவ்வொரு நாடித் துடிப்பிலும் அமர்ந்து கொள்கிறது. மெல்ல இதயம் வேகத்தை மேலும் மேலும் கூட்டி நகர்த்துகிறது. அற்புதமான பாடல் ஒன்றை அரங்கன் அவருக்குத் தருகிறான்.

தேவேஸ்வரத்வ மிஹ தர்சயிதும் க்ஷமஸ்தே
நாத த்வயாபி சிரஸா வித்ருத: கிரீட:
ஏகீக்ருத த்யுமணி பிம்ப ஸஹஸ்ர தீப்தி:
நிர்மூலயந் மநஸி மே நிபீடம் தமிஸ்ரம்
[ஆச்சாரியர் ஸ்ரீ நிகம்மாந்த மஹாதேசிகர்]

ஆச்சாரியர் சொல்கிறார். அரங்கா எத்தனையோ மானுட அரசர்களின் கிரீடங்களைப் பார்த்திருக்கிறேன். அவைகளில் வைரங்களும் வைடூரியங்களும் தங்க மின்னல்களும் தருவிக்கப்பட்டிருக்கின்றன.ஆனால், அவைகள் மின்னுதலை இழந்து ஒளியிழந்தல்லவோ காணப்படுகிறது. இதோ உன் முடியின் மேல்இருக்கும் இந்தக் கிரிடம் பலமடங்கு பிரகாச மின்னல்களை வாரியிறைக்கிறதே...

எப்படி? மன்னர்களின் கிரீட ஒளி அவர் களின் அகம் வரை கூட ஒளிர்வதில்லை. எனக்கோ ஆழ்மனதின் அகவிருளை அகற்ற கூரிய ஒளியுடன் உன் கிரீட மின்னல்கள் இதயமெங்கும் ஊடுறுவுகின்றனவே. இது எப்படி? கிரீடம் அகவிருளை அகற்றவேண்டும். இல்லையேல் அது கனக்கத் தொடங்கும். கனம் கூடிக்கொண்டே போய் அதை கழற்ற வேண்டியதாகிவிடும் என்பதை உணர்த்தத்தான் நீ கிரீடம் சுமந்து அர்ச்சா வடிவில் காட்சிதருகிறாயோ… என்ற பொருள்பட தேவநாயக பஞ்சாசத்தில் உருகி உருகி பாடிக் காட்டியிருப்பார்.

மனித மனம் கிரீடங்களை தேடிச் செல்கிறது. அரியணையில் அமரத் துடிக்கிறது. அதிகார அலங்காரக் கட்டிலில் உறங்கி விடலாம் என நினைக்கிறது. பதவி பதவி எனும் கிரீடம் தேடி ஓடிக்கொண்டே இருக்கிறது. நிஜம் எதுவெனில் கிரீடம் இருக்கும். தலை கனத்துக் கிடக்கும். கண்கள் பார்வையிழந்திருக்கும். சப்ரமஞ்சக் கட்டிலில் மெத்தைக்குப் பதில் முட்களே கிடக்கும் என்ற உண்மையை அகவிருளை அகற்றவே அரங்கன் கிரீடத்துடன் காட்சி தருகிறான்.

பாண்டியன் கொண்டை சவுரிக் கொண்டை வைரமுடி தங்கக் கிரீடம் முத்துகோர்த்த மணிமுடி வைடூர்ய மகுடம் போன்ற விதவிதமான அலங்காரங்களை அரங்கன் தனது அர்ச்சா உருவத்திற்கு கொடுப்பதும் மனிதக் கண்களுக்கு காட்டுவதும் ஆணவம் என்ற இதய இருட்டை போக்கி அன்பெனும் ஒளியூட்டவேஎன்பது புரிந்தால், தனிமனித போராட்டங்களும் போர்களும் மறைந்து உலகெங்கும் திருவிழாக்கள் களைகட்டும்.ஆதி காட்டினிடை பிரம்மம் என்றொரு மரம் இருந்தது. அதைச் செதுக்கியவனும் அந்த பிரம்மமே. அந்த மரசிற்பமே அரங்கன் என்பதை உணர்த்தும் ஒரு யஜூர் வேதப் பாடல்…

ஓறவ நம்ஹம ஓம வாவரஷ சூலிச
யதோ டிபாபாவரயி நிஷதக்ஷ

- என்று தொடங்குகிறது. அந்த மரச் சிற்பத்திலிருந்தே இந்த உலகம் சிறிது சிறிதாக சீவி எடுத்து உருவாக்கப்பட்டதாக யஜுர் வேதம் கூறுகிறது. ஆனால் கிரீடத்தைச் சீவி எதுவாக உருவாக்கினார்கள் என்பது அந்த ஆதி மூல பரபிரம்மத்திற்கு மட்டுமே புரியும்.

ஆலயங்கள் அறிவோம்

*அரியக்குடி தென் திருவேங்கடமுடையானுக்கும் தாயாருக்கும் 12 வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டால், விரும்பிய வேலை கிடைக்கும்.

*திருநாங்கூர் திருப்பதிகளுள் ஒன்றான திருக்காவளம்பாடி ராஜகோபால சுவாமிக்கு அவலும், வெண்ணெயும் நிவேதித்தால் மழலை வரம் கிட்டும்.

*திருக்கோலக்காவில் அருளும் தொனிப்ரதாம்பாளுக்கு வாக்வாதினி அர்ச்சனை செய்து அம்பிகைக்கு அபிஷேகித்த தேனை உண்ணச்செய்தால் சரியாகப் பேச வராத குழந்தைகள் நன்கு பேசும்.

*செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள சிராத்த சம்ரட்சணப்பெருமாளை தொடர்ந்து அமாவாசையில் தரிசித்தால் பித்ரு தோஷங்களும், பித்ரு சாபங்களும் விலகும்.

*திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலைப்பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணெயை சரும நோய் உள்ளவர்கள் தடவி வர அந்த நோய் நீங்குகிறது.

*கடும் ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் அருளும் ஐராவதேஸ்வரருக்கு மிளகு அரைத்துத் தடவி வெந்நீரால் அபிஷேகம் செய்து அர்ச்சிக்க, காய்ச்சல் விலகிவிடுகிறது.

*சிறுநீரக நோய்கள் நீங்க லால்குடிக்கு அருகே உள்ள ஊட்டத்தூரில் அருளும் பஞ்சநதக் கல்லால் செய்யப்பட்ட நடராஜப்பெருமானை தரிசித்து வெட்டிவேர் மாலை சாத்தி தினமும் வெட்டிவேர் போட்ட நீரை அருந்தலாம்.

*திருக்காரவாசல் கண்ணாயிரமுடையாருக்கு மூலிகைத் தைல அபிஷேகம் செய்து,அத்திப்பழத்தை நிவேதித்து பிரசாதமாகப்பெற்று 48 நாட்கள் தைலத்தை தலையில் தேய்த்தும் தேனில் ஊறிய அத்திப்பழத்தை உண்டும் வந்தால் கண்நோய்கள் தீரும்.

*திருநீலக்குடி மனோக்ஞநாத சுவாமிக்கு அர்ச்சனை செய்து நீல நிறபட்டுத்துணியையும், எள்ளையும் தானமளித்தால் மரணபயம் விலகும்.

*சென்னை மயிலாப்பூர் கோலவிழியம்மன் ஆலயம் அருகில் உள்ள வாலீஸ்வரரை வணங்கினால் எதிரிகள் தொல்லை விலகும்.

ராகவபிரியன்