உள்ள(த்)தைச் சொல்கிறோம்



பிள்ளையார் பற்றி அறியப்படாத தகவல்களை வழங்கி எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதோடு நில்லாமல்; லேமினேஷன் செய்யப்பட்ட கற்பக விநாயகர் படத்தை இலவசமாக வழங்கி புண்ணியம் சேர்த்து விட்டீர்கள்.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

பிரம்மச்சரியத்தை ஐம்புலன்களும் பின்பற்றினால் பிரம்மத்தை நோக்கி பயணிக்கலாம். கூடவே, லௌகீகத்தில் ஈடுபட்டவர்கள் இல்லறம் நல்லறமாக, சித்தி, புத்தியோடு ஐங்கரன் அருளும் பெறலாம் என்பதையும் பொறுப்பாசிரியர் (கடிதம்) மூலம் புரிந்து கொண்டோம்.
- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

சங்கடங்கள் நீக்கவா, சங்கத் தமிழ் மூன்றும் தா என்று சங்கரன் மைந்தனை வணங்கி வேண்டிய கட்டுரையைத் தொடங்கி, அதிராவடிகள் பாடிய ஆனைமுகத்தான்’ என்று அறுகல்புல் நாயகனின் புகழ் பாடிய கட்டுரை வரை, வினைகள் தீர்த்தருளும் விநாயகப் பெருமானின் மகத்துவங்களைக் கூறும் படைப்புகளைத் தொகுத்து ஒரு மகத்தான சிறப்பிதழைத் தந்து மனம் குளிரச் செய்து விட்டீர்கள்.  
- த.சத்தியநாராயணன்,அயன்புரம்.

பறையடித்து செய்தி சொல்வது, மடலேறுதல், காது குத்துதல், காவடி, தராசு, நடுகல் என்று பழந்தமிழர்களிடம் நிலவிய பழக்க வழக்கங்களையும், திருக்குறள் எடுத்துக் காட்டுகிறது என்று திருப்பூர் கிருஷ்ணன் விளக்கியபோது இன்னும் எத்தனை பொக்கிஷங்கள் அந்த நீதி நூலில் கிடைக்குமோ! என்று பெருமித பெருமை பொங்கியது.
- அ.யாழினி பர்வதம், சென்னை - 78.

விநாயகர் சதுர்த்தி விருந்தாக கோகுலாச்சாரி அவர்கள் எழுதிய ‘முத்துக்கள் முப்பது’’ என்ற கட்டுரை ஒரு வரப்பிரசாதம்தான். அதுவும் சாதாரணமாக பண்டிகையைக் கொண்டாடாமல் அதன் பின்னணி நோக்கம் இவைகளை அறிந்து கொண்டு கொண்டாடுவது ஆன்மிகத்தின் இன்னுமொரு சிறப்பும் ஆகும். குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய, பேழைப் பெருவயிறன் கணபதி எனும் கரிவதனன் கண்டேன். அருமை.  
- கணேசன், பொன்னியம்மன்மேடு சென்னை - 600110.

விநாயகர் சதுர்த்தி பக்தி ஸ்பெஷல், இதழோடு தனியே வழு வழுப்பான அட்டையில் விநாயகர் படம் தந்திருப்பது எம்மை மகிழ்வித்தது. சுழி விளக்குகள் அருகில் ஜொலிக்க துயர் இருள் நீங்கியது. பிள்ளையார் சுழி விளக்கம் பாமரருக்கும் புரியும் வண்ணம் இருந்தது. காரியம் வெற்றி பெற எளிதான வழி ‘‘காதைப் பிடி’’ என்பது விநாயகரின் உச்சாடன மந்திரமென திகழ்ந்தது.
- சு.இலக்குமணசுவாமி, மதுரை-6.

‘முத்துக்கள் முப்பது’ முழு முதல் தகவல்களும் அருமை. காலந்தோறும் ஆனைமுகன், கூப்பிட்ட குரலுக்கும் கூப்பிடாமல் வந்தருள் புரியும் ஆனைமுகன். அற்புதங்களிலெல்லாம் மேலான அற்புதம்.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி - 629703.

இளையான்குடி நாயனாரின் வாழ்வில் சிவன் நடத்திய திருவிளையாடலைப் படித்து மனம் நெகிழ்ந்தோம். மகான்களுக்கே சோதனையா? மாந்தர்கள் எம்மாத்திரம்? என மனதை தேற்றிக் கொண்டோம். வெற்றிமேல் வெற்றி தரும் கவசங்கள் வாசர்களுக்கு வரப்பிரசாதம். விநாயகர், விநாயகர் சதுர்த்தி பற்றிய விவரங்கள் அருமை.
- கே.பிரபாவதி,மேலகிருஷ்ணன்புதூர்.

குடந்தையில் பிறந்த எனக்கு சாரங்கபாணிப் பெருமாள் கோயில் பற்றி மட்டுமே தெரியும். ஆன்மிகத்தில் வெங்கடேஷ் அவர்களின் தொடர் மூலம் கோபுரங்களின் சிற்பம் பற்றியும் இறைத் தொண்டு செய்த லட்சுமி நாராயணனைப் பற்றியும் அறிய முடிந்தது. அவருக்கு இறைவன் அருளிய கருணையை எண்ணி மெய்சி லிர்த்தது. ‘வேகவதே நமஹ’ என்றிட இறைவன் வந்து அருள்புரிவான் என்பதை உணர்ந்தோம்.
- மகாலட்சுமி சுப்ரமணியன், காரைக்கால் - 609602.

ஐங்கரன் என்கிற பிரம்மச்சாரி ஐம்புலன்களை அடக்கும் பிரம்மச்சாரிகளை எப்படி அரவணைப்பார் என்கிற ஞானப் பழத்தை கிருஷ்ணாவின் தலையங்கம் மூலம் அறிந்தோம். ‘பிரம்மச்சரியம்’ தலையங்கம் பிரமாதம் மட்டுமல்ல சதுர்த்தியின் பிரதானம்!
-  மருதுர்மணி மாறன், இடையன்குடி - 627651.

முப்பது வகையான கோணங்களில் கணபதியின் ‘முத்துக்கள் முப்பது’ என சதுர்த்திக்கான சரம் கோர்த்திட்ட கோகுலாச்சாரியாரின் 11 பக்கங்களுமே ‘பக்கா’ பொக்கிஷம்!
- ஆர்.ஆர்.உமா, திசையன்விளை - 627651.

தொற்று நேரத்திலும் பிள்ளையார் பற்று அகலாதிருக்க கற்பக விநாயகர் வண்ணப்படம் தந்து எண்ணம் ஒருமிக்க அவர் பாதம் பற்றிட
வைத்ததில் வெற்றி ஆன்மிக இதழுக்கே!
- ஆர்.விநாயக ராமன், நெல்லை - 627657.

பக்கம் ஒன்று! தரிசனம் பத்து என பேழைப் பெருவயிறன் கணபதி எனும் கரிவதனனை பத்து வகையாக தரிசனம் தர வைத்த ஆன்மிகம் எங்களுக்கு முத்து மட்டுமல்ல ஆத்மாவின் சொத்து!
- ஆர்.ஜி.பாலன், திசையின்வினை - 627657.