ஊழ்வினை போக்கி நல்வாழ்வினைத் தந்தருளும்வசந்த மாதம்! சித்திரை மாத சிறப்பு ராசி பலன்கள்!!



பகவத் கைங்கர்ய,ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M. ராஜகோபாலன்

“நவ கிரக நாயகன்” எனப் பூஜிக்கப்படும் சூரியன், அளவற்ற வீர்யத்தையும், பலத்தையும் பெறும் மேஷராசியில் பிரவேசிக்கும் நன்னாளே “தமிழ்ப் புத்தாண்டு” பிறக்கும் புண்ணிய தினமாக, தமிழக மக்களாகிய நாம் காலம், காலமாகக் கொண்டாடி மகிழ்கிறோம். தற்போது பிறந்துள்ள தமிழ்ப் புத்தாண்டு, “பிலவ” வருடமாகும்!

நமது சூரிய மண்டலத்தில், சதா வலம் வந்துகொண்டிருக்கும் கிரகங்களனைத்தும்,  சூரியனிடமிருந்துதான் தங்களது ஆகர்ஷண (Gravitational Power)மற்றும் மருத்துவ (Medical) சக்திகளையும், வீரியத்தையும் பெறுவதாக வராகமிகிரரின் “பிருஹத் ஸம்ஹிதை”யும், மருத்துவ வல்லுநரான சரகரின் “சரக் சம்ஹிதை”யும், மூளைப் பகுதி அறுவை சிகிச்சையில் நிபுணரான மகரிஷி சுஸ்ருதரின் “சுஸ்ருத சம்ஹிதை”யும் விவரிக்கின்றன.  சூரியனுக்கும், இதயம், ரத்தம் நரம்பு சம்பந்தமான நோய்களுக்கும், உள்ள தொடர்பின் சூட்சுமங்களை “அஷ்டாங்க ஹிருதயம்” என்னும் பிரசித்திப் பெற்ற ஆயுர்வேத நூல் கூறுகிறது. தற்கால மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் இதை உறுதிசெய்துள்ளனர். வெண்குஷ்டம் போன்ற சர்ம நோய்களை குணப்படுத்தும் சூரிய கிரணங்களின் மருத்துவ சக்தியை “அதர்வண வேதம்” விளக்கியுள்ளது.

வசந்த காலம்! சூரியன் மேஷ ராசியில் வலம் வரும் சித்திரை மாத காலத்தை “வசந்த ருது” என வர்ணிக்கின்றன நமது பண்டைய நூல்கள். சித்திரை மாதத்தில், சூரியன் தான் பெறும் விசேஷ சக்தியை, தனது கதிர்களின் மூலம் உலகிற்கு அளிப்பதால், விருட்சங்கள் வளர்ந்து, வனங்கள் பொலிவுற்று, விளங்குகின்றன. மலர்கள் கொத்து கொத்தாகப் பூக்கின்றன; மலர்கின்றன. தென்றல் வீசி, மக்கள் மனத்தில் உற்சாகத்தை ஏற்படுத்துகின்றது, என மகாகவி காளிதாசன், தனது அழியாத காவியமான “மேக சந்தேஸ”த்தில் வர்ணித்துள்ளார்.

சித்திரை மாதத்தின் தெய்வீகம்! சித்திரை மாதத்தின் தெய்வீக சக்தி அளவற்றது. “ஆத்ம, சரீரகாரகன்” சூரியன் என ஜோதிடக் கலை பகலவனைப் புகழ்கிறது. அதாவது, மனிதர்களுக்கு மன பலத்தையும், உடல் நலனையும் அளிப்பவர் எனப் போற்றுகிறது.  காலக் கணிப்பு கலையான ஜோதிடம் மற்றும் மருத்துவக் கலையான ஆயுர்வேதம் ஆகிய இரண்டுமே, சித்திரை மாதத்தின் பெருமையை எடுத்துக் கூறுகின்றன! “ராம ராஜ்யம்” என்ற அழியாப் புகழை பாரதப் புண்ணிய பூமிக்கு அளித்த ஸ்ரீராமபிரான், அயோத்தியில் அவதரித்த பெருமை இந்த சித்திரை மாதத்திற்குத்தான்! அவதார புருஷர்களான ஸ்ரீஆதி சங்கரரும், ஸ்ரீமத் ராமானுஜரும் அவதரித்த புகழும் சித்திரை மாதத்தையே சாரும்!!

இவ்விதம், சித்திரை மாதத்தின் ஜோதிட. மருத்துவ, தெய்வீகப் பெருமைகளை கூறிக்கொண்டே போகலாம்!இனி, சித்திரை மாதத்தின் ராசிபலன்களை சற்று ஆராய்வோம்! மேஷராசியில் முன்னரே அமர்ந்துள்ள, சுக்கிரன், புதன், சந்திரனுடன் இணைகிறார், சூரிய பகவான். சித்திரை முதல் தேதியன்று. மேஷராசிக்கு, அதிபதியான செவ்வாய், சூரியனுக்கு நட்புக் கிரகமாகும். இத்தகைய கிரக நிலைகளை, மிகத்  துல்லியமாகக் கணித்து, இங்கு தந்துள்ள ராசி பலன்களும், எளிய பரிகாரங்களும் கூறப்பட்டுள்ளன. இதனால், “தினகரன்” வாசக அன்பர்கள் பயனடைந்து, மகிழ்ச்சியுற்றால், அதுவே நாங்கள் பெறும் மன நிறைவாகும்.

மேஷம்

குடும்பம்: ராசிக்கு அதிபதியான செவ்வாய், மற்றும் சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களின் சஞ்சார நிலைகள் அனுகூலமாக உள்ளன. வருமானம் தொடர்ந்து நல்லபடி நீடிக்கிறது.  சென்ற மாதம் மன அமைதியை பாதித்துவந்த குடும்பப் பிரச்னைகளின் கடுமை குறைவதை அனுபவத்தில் காணலாம்.சூரியன், ராகுவின் நிலைகளினால், ஆரோக்கியத்தில் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டிய மாதமிது. சரீரத்தில்
ஏற்படும் அதிக  உஷ்ணத்தினால், அடிக்கடி அசதியும் சோர்வும் மேலிடும். உடல், ஓய்விற்குக் கெஞ்சும். வெளியூர்ப் பயணங் களினாலும்,அதிக அலைச்சலினாலும்உடல்நலன் பாதிக்கப்படக்கூடும்.  வாக்கு ஸ்தானத்தில் ராகு, நீச்ச நிலையில் அமர்ந்திருப்பதால், பேச்சில் நிதானம் அவசியம். மேஷ ராசியினருக்கு இரு பலவீனங்கள் பிறவியிலேயே உண்டு: 1. அவசர முடிவுகள் 2. முன்கோபம், பிடிவாதம். அவர்களது நற்குணங்கள் அனைத்தும் இவ்விரு பலவீனங்களின் காரணமாக மறைந்துவிடுகின்றன. திருமண முயற்சிகளில் தடங்கல்கள் நீடிக்கும்.

உத்தியோகம்: அலுவலகச் சூழ்நிலை உற்சாகத்தையளிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். பொறுப்புகளும் வேலைச் சுமைகளும் சக்தியை மீறியதாக இருக்கும். வேலை வாங்கினாலும் அதற்கேற்ற கூலி கொடுக்கும் நியாயவான் சனிபகவான்! கொரானா உருவாக்கிய சூழ்நிலையினால், வேலையை இழந்து வருந்தும் மேஷ ராசியினருக்கு, வேறு உத்தியோகம் கிடைக்க வாய்ப்புகள் உருவாகும். வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும். ஆட்சி பெற்றுள்ள சனிபகவானுடன்  நீச்சகுரு இணைந்திருப்பதால், சக-ஊழியர்களுடன் நெருங்கிப் பழகுவதாலும், அவர்களின் சொந்தப் பிரச்னைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வதாலும், உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. தவிர்ப்பது மிகவும் அவசியம். ஜோதிடம் எனும் வாழ்க்கைக் கலை, அத்தகைய முக்கிய தருணங்களில் தக்க வழிகாட்டி உதவுகிறது.   

தொழில், வியாபாரம்:  உற்பத்தியும், விற்பனையும் தொடர்ந்து அதிகரிக்கும். மந்த நிலையிலிருந்துவந்த சந்தை நிலவரம் சாதாரணமான சகஜநிலைக்கு மாறும்., நிதிநிறுவனங்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். அரசாங்கக் கொள்கைகள் தொழில், வியாபார அபிவிருத்திக்கு ஆதரவாக மாறும்.
கலைத் துறையினர்:  சுக்கிரனின் நிலையினால் பல நன்மைகளை நீங்கள் இம்மாதம் எதிர்பார்க்கலாம். கொரானா காரணமாக,  மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்களுக்கு, புதிய வாய்ப்புகள் உருவாகும். மீண்டும் புத்துயிர் பெற்று, தழைக்க, கிரக நிலைகள் மிகவும் சாதகமாக உள்ளன. இயக்குநர்களுக்கு, புதிய சந்தர்ப்பங்கள் கைகொடுக்கும். அரசியலில் பிரவேசிக்க ஆர்வம் மேலிடும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறையின் வெற்றி - தோல்விகளை நிர்ணயிப்பது, சுக்கிரனும் செவ்வாயும். ராகுவிற்கும் அதில் அளவோடு பொறுப்பும் உண்டு (ஆதாரம்: ப்ருகத் சம்ஹிதை, அர்த்த சாஸ்திரம்)சுக்கிரனும், செவ்வாயும் சிறந்த சுப-பலன் பெற்றிருப்பதால், நல்ல முன்னேற்றம் ஏற்படுவது உறுதி. ஜனன கால கிரக நிலைகள் அனுகூலமாக இருப்பின்,  அரசாங்கப் பதவி ஒன்று கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது. மத்திய - மாநில அரசுகளில் செல்வாக்கு மிகுந்த அதிகாரிகளுடன் தொடர்பும், அதனால் நன்மைகளும் ஏற்படும்.

மாணவ - மாணவியர்: இம்மாதமும் கல்வித் துறைக்கு ஆதிபத்யம் கொண்டுள்ள கிரகங்கள் சுபத்துவப் பாதையில் சஞ்சரிப்பதால், படிப்பில் ஆர்வம் மேலிடும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று திகழ்வீர்கள். இரவில் நெடுநேரம் கண்விழித்துப் படிக்க வேண்டாம். ஏனெனில், உடல் நலன் சிறிது பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.  

விவசாயத் துறையினர்: அடிப்படை வசதிகளுக்குக் குறைவிராது. வயல் பணிகளில் உழைப்பு கடுமையாக இருப்பினும், அதற்கேற்ற விளைச்சலும், வருமானமும் கிடைப்பதால், மனத்தில் உற்சாகம் மேலிடும். அரசாங்க ஆதரவு தேடி வரும்.பெண்மணிகள்: இம்மாதம் முழுவதும் சுக்கிரன் உங்கள் பக்கம்தான். குடும்பச் சூழ்நிலை, மன-அமைதியைத் தரும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றமும் மகிழ்ச்சியளிக்கும்.  சிறு சிறு உடல்  உபாதை
கள் ஏற்படக்கூடும். கூடிய வரையில் தேவையற்ற அலைச்சலையும், உடலுழைப் பையும் குறைத்துக்கொள்ளவும். வேலைக்குச் சென்றுவரும் பெண் மணிகளுக்கு நன்மையான மாதமாகும்.

அறிவுரை: உடல் நலனில் கவனமாக இருங்கள். கடின உழைப்பையும் வீண் அலைச்சல், வெளியூர்ப் பயணங்களைக் குறைத்துக்கொள்ள முயற்சிக்கவும். நீண்ட நேரம் செல்போனில் தொடர்ந்து பேசுவதையும் தவிர்க்கவும். ஏனெனில், கண் உபாதைகள் ஏற்படச் சாத்தியக்கூறு உள்ளது.
பரிகாரம்: அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது வீட்டின்பூஜையறை யிலோ மண் அகலில் செவ்வாய்க்கிழமைகளில் நெய்தீபமும், சனிக் கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமும் மிகச் சிறந்த பரிகாரமாகும். ஒவ்வொரு துளி நெய்க்கும், நல்லெண்ணெய்க்கும் மகத்தான சக்தி உள்ளது.

2. வைத்தீஸ்வரன் கோயில் தரிசனம் கைமேல் பலனளிக்கும். 3. தினமும் ஒரு சர்க்கம் ஸ்ரீமத் சுந்தரகாண்டம் படித்து வருவது உடல்நலனைக் கவசமென பாதுகாக்கும். ஆதாரம்: புராதன சூட்சுமப் பரிகார நூல்கள்.
அனுகூல தினங்கள்:
சித்திரை 1 - 3, 6-8, 13, 14, 18-22, 26-29 சந்திராஷ்டம தினங்கள்:
15 பிற்பகல் முதல் 17 மாலை வரை.

ரிஷபம்

குடும்பம்: சுக்கிரன் ஒருவரே உங்களுக்கு பூரண அனுகூலமாக  உள்ளார். குரு மற்றும் சனி, புதனால் அவ்வப்போது சிறு, சிறு நன்மைகளை எதிர்பார்க்கலாம். மற்ற கிரகங்கள் ஆதரவாக இல்லை. வரவும் - செலவும் கிட்டத்தட்ட சமமாகவே இருக்கும். மாதத்தின் கடைசி வாரத்தில், பணத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். நெருங்கிய உறவினர் ஒருவரின் தேவையற்ற தலையீடு, காரணமாகக் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு உருவாக வாய்ப்புள்ளது.

ஜென்ம ராசியில் நிலை கொண்டுள்ள நீச்ச ராகு காரணமாக, அதிக அலைச்சலும், வெளியூர்ப் பயணங்களும், சிறு சிறு உடல்
நலப் பாதிப்புகளும் கவலையை அளிக்கும். உத்தியோகம்: வேலைச் சுமையும் பொறுப்புகளும், அலுவலகம் சம்பந்தமாக வெளியூர் பயணங்களும் சோர்வையளித்தாலும், பணிகளில் உற்சாகம் குறையாது. சில தருணங்களில், மேலதிகாரிகளுடன் கருத்துவேற்றுமை ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமை, நிதானம் அவசியம். “Boss is always right!” என்பதை அடிக்கடி நினைவில் வைத்துக்கொள்ளுங் கள்! உணர்ச்சிவசப்படுவதையும், அவசர முடிவுகளையும் விலக்க வேண்டும் என்பதை குரு மற்றும் சுக்கிரனின் சஞ்சார நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

தொழில், வியாபாரம்:  சென்ற சுமார் 11 மாதங்களாக, நிலவிவந்த சூழ்நிலை, படிப்படியாகவே மாறும் என்பதை சந்தை நிலவரம் (Market Condition)எடுத்துக்காட்டுகிறது. ஆதலால், லாபம் படிப்படியாக ஏறுமுகத்தை நோக்கிச் செல்வதை உணர்ந்துகொள்ள முடியும். லாபமும் படிப்படியாகவே உயரும்.புதிய முயற்சிகள், புதிய முதலீடுகள், விஸ்தரிப்புத் திட்டங்கள் ஆகியவற்றை ஒத்திப்போடுதல், மிக மிக முக்கியம். தவறான முயற்சிகள், கடன் பிரச்னைகளில் கொண்டுபோய்விடும் என்பதை கிரகநிலைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. கடுமையான பணப் பிரச்னைகளை நீங்கள் சமாளிக்க நேரிடும்.

அனைத்திற்கும் மேலாக, கடனுக்கு பொருள்கள் சப்ளை செய்வதைக் குறைத்துக்கொள்வது மிகச் சரியான தற்காப்பு நடவடிக்கையாகும். ஏனெனில், கிரக நிலைகளின்படி, வரவேண்டிய பாக்கிகள் வசூலாவது கடினம் எனத் தெரிகிறது.ஏற்றுமதி இறக்குமதித் துறையினருக்கு பிரச்னைகள் நீடிப்பதால், புதிய முயற்சிகளில் தற்போதைக்கு இறங்கவேண்டாம் எனவும் கிரகநிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. எதையும் சிந்தித்து முடிவு செய்தல் அவசியம் என்பதை சனி பகவானின் நிலை வலியுறுத்துகிறது.

கலைத் துறையினர்:   நல்ல வாய்ப்புகள் தடைப்படும். வசதியான வாழ்க்கையையே தொடர்ந்து அனுபவித்துவரும் ரிஷிப ராசியினருக்கு, நிதி வசதி இம்மாதம் குறைந்துவிடுவதால், வருமானத்திற்குள் வாழ்க்கை நடத்துவது சிரமமாகவே இருக்கும். பணியாட்கள் வேலையை விட்டு விலகிச் சென்றுவிடுவதும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

அரசியல் துறையினர்: ரிஷப ராசி, அரசியலுக்கு ஆதார கிரகமான சுக்கிரன் ராசியாகும். இந்த ராசிக்கு குரு பகவானின் பார்வை இருப்பதால், எத்தகைய பிரச்னையையும் சமாளிக்கும் திறன் ஏற்படும். இருப்பினும், முக்கிய முடிவுகளை எடுப்பதற்குமுன் சற்று
ஆழ்ந்து சிந்தித்து எடுப்பது அவசியம்.

மாணவ - மாணவியர்: புதன் உங்களுக்கு அனுகூலமான நிலையில் சஞ்சரிப்பதால், கல்வி முன்னேற்றம் எவ்விதத்
தடையுமின்றி நீடிக்கும். இருப்பினும், ஜென்மராசி, ராகுவினால் அடிக்கடி சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். கீழே கூறியுள்ள பரிகாரங்கள் சிறந்த பயனளிக்கும்.

விவசாயத் துறையினர்:  வயல் பணிகளில், உழைப்பு கடினமாக இருக்கும்.  கால்நடைகளின் பராமரிப்பு காரணமாக செலவுகள் அதிகரிக்கும். பழைய கடன்கள் கவலையளிக்கும்.
பெண்மணிகள்:  குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும். வயிற்றுக் கோளாறு, ஒற்றைத் தலைவலி, மாதவிடாய் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட்டு, எளிய மருத்துவ சிகிச்சையினால் குணமாகும்.

அறிவுரை: திட்டமிட்டு செலவு செய்தல் அவசியம். சுக்கிரனின் ராசியான ரிஷபத்தில் பிறந்துள்ளவர்கள், சற்று தாராளமாகவே செலவு செய்யும் குணம் படைத்தவர்கள்! கையில் பணம் இல்லாதபோது, நீரிலிருந்து எடுத்த மீனைப்போன்று தவிப்பது, இவர்களது பிறவி பலவீனம். ஆதலால், எளிதில் கடன்வாய்ப்படுவார்கள். தவிர்ப்பது அவசியம்.

பரிகாரம்:  
1. தினமும் கீழ்க்கண்ட தியான ஸ்லோகத்தை காலை, மாலை இரு வேளைகளிலும் 12 தடவை சொல்லிவருதல் நல்ல பலனைத் தரும். ஸ்ரீவேதவியாசர் அருளிய ஸ்லோகம் இது. கவசமென உங்களைப் பாதுகாக்கும். “அர்த்தகாயம் மஹாவீர்யம் சந்திராதித்ய விமர்தனம் சிம்ஹிகா கர்ப்பஸம்பூதம் தம்ராகும் ப்ரணமாம்யஹம்”.
2. உங்கள் வீட்டின் பூஜையறையில், மாலையில், 3. அகல்களில் நல்லெண்ணெய் தீபமேற்றிவருவது நல்ல பலனளிக்கும்.
3.அருகிலுள்ள திருக்கோயிலில் கர்ப்பகிரகத்தில் எரியும் விளக்கில் 12 சனிக்கிழமைகள் நல்லெண்ணெய் சேர்த்து வருவது அற்புத பரிகாரமாகும். ராகுவுக்கு, குரு பார்வை இருப்பதால், இந்தப் பரிகாரங்களே போதும்.
அனுகூல தினங்கள்:
சித்திரை 3 - 5, 10 - 15, 20 - 23, 27 - 29
சந்திராஷ்டம தினங்கள்:
17 மாலை முதல் 19  இரவு வரை.

மிதுனம்

குடும்பம்: சனி, செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களைத் தவிர, மற்ற கிரகங்களனைத்தும் அனுகூலமான நிலைகளில் சஞ்சரிக்கின்றன. வருமானம் நல்லபடி நீடிக்கிறது. சென்ற மாதம் ஏற்பட்ட திடீர் செலவுகள் இந்த மாதம் இராது. குடும்பச் சூழ்நிலை, நிம்மதியை அளிக்கும். விவாக வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், தடங்கல் நீங்கி வரன் அமையும். சிலருக்கு, வீடுமாற்றம் ஏற்பட சாத்தியக்கூறு உள்ளது. குடும்பப் பொறுப்புகள் சம்பந்தமாக அலைச்சல் இருப்பினும், முயற்சிகள் நிறைவேறும். சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு,  எளிய மருந்துகளினால்
உடனுக்குடன் குணம் கிடைக்கும்.

நீதிமன்ற வழக்குகள், சொத்து சம்பந்தமான பிரச்னைகள் சமரசத்தில் முடியும். உங்கள் நலன் விரும்பும் நெருங்கிய உறவினர் அல்லது
நண்பர் ஒருவரின் வருகை, மகிழ்ச்சியையும், மன-
நிறைவையும் அளிக்கும்.

உத்தியோகம்: உழைப்பும் பொறுப்பு
களும் சக்திக்கு மீறி இருப்பினும், மேலதிகாரி களின் ஆதரவு மனத்திற்கு ஆறுதலைத் தரும். சென்ற மாதம் அலுவலகத்தில், நிலவிய கெடுபிடியான சூழ்நிலை, இம்மாதம் தளரும். வேறு வேலைக்கு, முயற்சிக்கும் மிதுன ராசியினருக்கு, வெற்றி கிடைக்கும். தாற்காலிகப் பணியிலுள்ளவர்களுக்கு, வேலை நிரந்தரமாகும். சிலருக்கு இடமாற்றம் அல்லது, இலாகா மாற்றம் ஏற்படும். மறுக்காமல் ஒப்புக்கொள்வது நல்லது என
கிரகநிலைகள் அறிவுறுத்துகின்றனகொரோனா தொற்று காரணமாக, வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டுள்ள மிதுன ராசியினர், தாய்நாடு திரும்புவதற்கான வசதியான சூழ்நிலை உருவாகும். தொற்று எதிர்ப்பு ஊசி மருந்து போட்டுக்கொள்ள ஔஷத கிரகமான புதனும், உச்ச சூரியனும் உதவிபுரிவார்கள். அனுபவத்தில் பார்க்கலாம்!

தொழில், வியாபாரம்: சென்ற இரு மாதங்களாக, தொழிலிலும், விற்பனையிலும் ஏற்பட்ட நல்ல முன்னேற்றம் இந்தச் சித்திரை மாதத்திலும் நீடிக்கிறது. லாபமும் படிப்படியாக உயர்வதால், உங்கள் நிதிநிலைமையை சீர்செய்துகொள்ள, தக்க தருணம் இது. ஏற்றுமதி-இறக்குமதித் துறையினருக்கும் புது வாய்ப்புகள் உருவாகும். பணவிஷயங்களில் மட்டும் தொடர்ந்து கண்டிப்பாக இருக்கவேண்டியதின் அவசியத்தை கிரகநிலைகள் வலியுறுத்துகின்றன.

கலைத் துறையினர்: தொடர்ந்து புதிய வாய்ப்புகள் கிட்டும். வருமானமும் உயரும். அரசியலில் பிரவேசிக்க ஆர்வம்
மேலிடும்.தவிர்ப்பது நல்லது. தயாரிப் பாளர்களுக்கு சம்பந்தப்பட்ட கிரக நிலைகள் ஓரளவே அனுகூலமாக மாறியுள்ளதால், சக்திக்குமீறி கடன் வாங்கி படங்களில் முதலீடு செய்யாமல், அளவோடு செலவு செய்து, தயாரிப்பது எதிர்கால நன்மைக்கு உதவிகரமாக அமையும்.

அரசியல் துறையினர்: அரசியல் சம்பந்தப்பட்ட கிரகநிலைகள் தொடர்ந்து அனுகூலமற்ற நிலைகளில்தான் நீடிக்கின்றன. தேர்தலில் நின்றால், வெற்றி பெற கடுமையாக பாடுபடவேண்டிவரும். நண்பர்கள் என நீங்கள் நினைப்பவர்களே, உங்களுக்கு எதிரியாகச் செயல்படக்கூடும்.
கட்சியிலும் மறைமுக எதிரிகளால் சூழ்ச்சிகள் உருவாகும்.

கட்சிமாற ஆர்வம் மேலிட்டாலும், சற்று தீர சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. தவறான முடிவுகள் உங்கள் செல்வாக்கை கடுமையாக பாதித்து விட வாய்ப்புகள் உள்ளதை கிரகநிலைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

மாணவ - மாணவியர்: வித்யா (கல்வி) காரகரான புதனும், அதிசாரகதியில் உள்ள குருவும் உங்களுக்கு பக்கபலமாக நிற்பதால், கல்வி முன்னேற்றம் எவ்வித இடையூறும்இன்றி நீடிக்கிறது இம்மாதம் முழுவதும். கிரகிப்புத் திறனும், ஞாபகசக்தியும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள்
பெறுவதற்கு ஆதரவாக உள்ளன.

விவசாயத் துறையினர்: விளைச்சலும், வருமானமும் திருப்திகரமாகவே நீடிக்கின்றன, இம்மாதமும். கால்நடைகள் வளர்ப்பு அபி
விருத்தியடையும். சூரியனின் நிலை அரசாங்க ஆதரவை உறுதிசெய்கிறது.பெண்மணிகள்: குடும்பத்தில் நிலவும் பரஸ்பர, அன்னியோன்னியம் மன-நிறைவைத் தரும். குழந்தைகளாலும் நன்மைகள் உண்டு. திருமண வயதிலுள்ள பெண்களுக்கு மனத்திற்கு இசைந்த வரன் அமையும்.வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு, அலுவலக சூழ்நிலை பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். வேலையில்லாத மங்கையர்க்கு, சிறு முயற்சியிலேயே வேலை கிடைக்கும்.

அறிவுரை: சனி, செவ்வாய், ராகுவின் சஞ்சார நிலைகளினால், அலைச்சல், திடீர்ப் பயணங்கள் “கொரோனா” பற்றிய  பல
கற்பனையான அச்சத்தினால், மனோபயம், உடல் உபாதைகள், ஏற்படக்கூடும். அதற்கு அவசியம் இல்லையென சம்பந்தப்பட்ட மற்ற கிரக நிலைகள் உறுதியளிப்பதால், வீண் பயத்தையும், அதாரமற்ற வதந்திகளையும் புறக்கணியுங்கள்.

பரிகாரம்: 1. திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு ஆகிய இரு சக்திவாய்ந்த சனி பரிகாரத் திருத்தலங்களில் ஏதாவதொன்றை தரிசிப்பது சிறந்த பரிகாரமாகும்.
2. 12 சனிக்கிழைமைகள் உங்கள் வீட்டின் பூஜையறையிலோ அல்லது அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ மாலையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவருதல் கைமேல் பலனளிக்கும்
பரிகாரமாகும்.
3. ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம க்ஷேத்திரங்களான (பூவரசங்குப்பம். சோளிங்கபுரம்,  பரிக்கல், அபிஷேகபாக்கம், அஹோபிலம்) ஆகிய
வற்றில் ஒன்றை தரிசிப்பது சனி, செவ்வாய், ராகு தோஷங்களைப் போக்கும்.  
அனுகூல தினங்கள்:
சித்திரை 2-4, 9 - 12, 16-18, 22-24, 27-29
சந்திராஷ்டம தினங்கள்:
19 இரவு முதல், 20, 21 பின்னிரவு வரை.

கடகம்

குடும்பம்: குடும்ப நிர்வாகம், பிரச்னையின்றி நடக்கும். வருமானமும் போதிய அளவிற்கு நீடிப்பதால்,  பணப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. லாபஸ்தானத்தில் அமர்ந்துள்ள ராகுவினால், எதிர்பாராத பணவரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளது. திருமண முயற்சிகள் கைகூடும். கணவர் மனைவியரிடையே அன்னியோன்னியம் நிலவும்.

விருச்சிகத்தில், நிலைகொண்டுள்ள மோட்சகாரகராகிய கேதுவின் நிலையினால் மனத்தில் ஆன்மீக உணர்வுகள்
மேலிடும். தீர்த்தத் தல யாத்திரை தேடி வரும். மகான்கள், பெரியோர்கள் மனைவிக்கு சிறு உடல் உபாதைகள் ஏற்படும், உடன் குணமாகும்.

உத்தியோகம்: சென்ற மாதம், ஏற்பட்ட நன்மைகள் நீடிக்கின்றன. மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் மனத்தில் நிம்மதியை ஏற்படுத்தும். புதிய வேலைக்கு முயற்சித்தால், வெற்றி கிடைக்கும். உழைப்பும், பொறுப்புகளும் அதிகரித்தாலும், அதற்குரிய அங்கீகாரமும் பாராட்டுதலும் கிடைக்கும். சூரியன், புதன் நிலைகள் காரணமாக, பல கடக ராசியினர், தாமாகவே முன்வந்து, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள். அதன் காரணமாக பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது.

தொழில், வியாபாரம்: மார்க்கெட் நிலவரம் சாதகமாக மாறுவதால், விற்பனை அதிகரிக்க ஆரம்பிக்கும் இம்மாதம். போட்டிகள் குறையும். லாபமும் உயர்வது மன நிறைவைத் தரும். வியாபாரத்தையே நிறுத்திவிடலாம் என்ற விரக்தி நீங்கி, எதிர்காலத்தைப் பற்றிய அவநம்பிக்கை விலகும். லாபஸ்தானத்தில், சுக்கிரனின் ராசியாகிய ரிஷபத்தில், ராகு சுப பலத்துடன், இப்போது இருப்பதே இதற்குக் காரணமாகும். அரசாங்க உதவிகள் கிடைப்பதற்கும் கிரகநிலைகள் சாதகமாக உள்ளன.

கலைத் துறையினர்: அடியோடு நின்றுபோன நிலை மாறி, மீண்டும் வருமானம் கிடைக்க வாய்ப்புகள் தேடிவரும்.  தடைப்பட்டு, பாதியில் நின்றுபோயிருந்த படப்பிடிப்பு, மீண்டும் தொடர வழிபிறக்கும். அரசியல் தொடர்புகளினால், ஆதாயம் கிடைக்கும். தயாரிப்பாளர்களுக்கு
அரசாங்க உதவியும் நிதிநிறுவனங்களின் ஆதரவும் தேடிவரும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு தொடர்புள்ள கிரகங்களனைத்தும் மிகவும் அனுகூலமாக சஞ்சரிப்பதால், தேர்தலில் நிற்கும் கடக ராசியினருக்கு எளிதில் அமோக வெற்றி கிட்டும். கட்சியில் செல்வாக்கு அதிகரிக்கும். ஜெனனகால கிரகநிலைகளும் (லக்னம் மற்றும் 5, 9ம் இடங்கள்) சுப பலம் பெற்றிருந்தால், பொறுப்புள்ள அரசு பதவி ஒன்று கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.

மாணவ - மாணவியர்: கல்வி முன்னேற்றம் நீடிக்கிறது. பாடங்களில் மனம் தீவிரமாக ஈடு படும். நினைவாற்றல் கூடும். பரிட்சையில்
கேள்விகளை தெளிவாகப் புரிந்துகொண்டு, பதிலளிக்கும் திறனை வித்யாகாரகரான புதனும், அறிவுத் திறனை அளிப்பவரும், கடகராசிக்கு அதிபதியான
வருமான சந்திரனும் அளித்தருளுகின்றனர் இந்தச் சித்திரை மாதத்தில்!

விவசாயத் துறையினர்: பயிர்கள் செழித்து வளரும். உழைப்பிற்கு ஏற்ற வருமானம் கிடைப்பது, வயல் பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். கடன்கள் இருப்பின், அவை அடைபடும். உங்கள் பொருளாதார நிலையை சீர்செய்துகொள்ள ஏற்ற மாதம் இது. அரசாங்க உதவியும், நிதிநிறுவனங்களின் ஆதரவும் எளிதில் கிடைக்கும்.

பெண்மணிகள்: குடும்பச் சூழ்நிலை, மன நிம்மதியைத் தரும். சென்ற சில மாதங்களாக, மனத்தை வருத்திவந்த மிகமுக்கிய பிரச்னை ஒன்று நல்லபடி தீரும். திருமணத்திற்குக் காத்திருக்கும் கடகராசிப் பெண்களுக்கு நல்ல வரன் அமையும். வேலைக்கு முயற்சிக்கும் கடகராசி பெண்டிற்கு வேலை கிடைக்கும். கணவருடன் கருத்துவேற்றுமை, விவாகரத்து வழக்கு போன்ற பிரச்னைகளினால், மனமுடைந்து வருந்தும் பெண்களுக்கு, அவை நல்லபடி முடிந்து, மறுவாழ்வு மலர வழிபிறக்கும். மனோகாரகரான சந்திரனின் ராசியான கடகத்தில் ஜெனித்துள்ள பெண்மணிகள் எளிதில் உணர்ச்சிவசப்படும் இயல்பினர் இதுவே அவர்களது பலம் மட்டுமல்லாது, பலவீனமும் கூட!

அறிவுரை: 1.எனிதில் உணர்ச்சிவசப்படுதலையும், சின்னஞ்சிறு பிரச்னைகளுக்குகூட நிதானத்தை இழப்பதையும் நீங்கள் தவிர்க்கவேண்டும். பெண்மணிகள் நெருங்கிய உறவினர்களால் இம்மாதம் ஏற்படக்கூடிய சிறு சிறு பிரச்னைகளை பொருட்படுத்தாமல், அவற்றை ஒதுக்கிவிட்டு, மனத்தை நிம்மதியாக வைத்துக்கொள்ள வேண்டும் (கடகராசியில் பிறந்துள்ள ஆண்களுக்கும் இந்த அறிவுரை பொருந்தும்!)  ஏழு கிரகங்களில், அதிவேகமாக வலம் வருபவர் மனவுணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் சந்திரனாவார். அவரது ராசியில் பிறந்துள்ள, அனைவருக்கும் இந்த அறிவுரையைக் கூறுகிறது “பூர்வ பராசர்யம்” எனும் மிகப் பழைமையான ஜோதிட நூல்.

பரிகாரம்: வீட்டின் பூஜையறையிலோ, அல்லது அருகிலுள்ள திருக்கோயிலிலோ 24 சனிக்கிழமைகள் நல்லெண்ணெய் தீபமும், 24 திங்கட்கிழமைகள் பசுநெய் தீபமும், மாலையில் ஏற்றிவருவது சிறந்த பரிகாரமாகும். 2.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத் தரிசனமும் இத்தகைய கிரகநிலை
களுக்கு மிகவும் ஏற்ற பரிகாரமாகும். 3.தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் கீழ்க்கண்ட சந்திரன் தியானஸ்லோகத்தைச் சொல்லி
வந்தாலேபோதும் பலன் கிட்டும்!

“ததிஸங்க துஷாராபம் க்ஷீணோதார்ணவ ஸம்பவம் நமாமி ஸஸினம் ஸோமம் ஸம்போர்   முகுடபூஷணம்”  வேத வியாஸர்
அனுகூல தினங்கள்:
சித்திரை 1, 5 - 9, 13 - 16, 20, 24 - 26, 30, 31
சந்திராஷ்டம தினங்கள்:
21 பின்னிரவு முதல் 23 வரை.

சிம்மம்

குடும்பம்: சுக்கிரன், செவ்வாய், சனி ஆகிய மூவரும் சிறந்த சுப-பலன் பெற்றுள்ளனர். குருபகவானால் அளவோடு நன்மைகள் ஏற்படும். பணப்பற்றாக்குறை இராது. பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெறுவதற்கு அனுகூலமான மாதமிது. சென்ற மாதம் ஏற்பட்ட வீண் செலவுகள் இம்மாதத்தில் இராது. திருமண முயற்சிகளில் சிறு சிறு தடங்கல் களும் மனக் குழப்பமும் ஏற்பட்டு, அதன் பிறகே வரன் அமையும். எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளதைசெவ்வாயின் நிலை எடுத்துக்காட்டுகிறது.

மகரராசியிலிருந்த குரு, அவரது அதிசார கதியில் கும்பராசிக்கு மாறியுள்ளதால், சென்ற மாதம் ஏற்பட்ட வீண் செலவுகளும், பண விரயமும் இம்மாதம் இராது. உத்தியோகம்: ஜீவனகாரகரான, சனி பகவான் மிகுந்த சுப-பலம் பெற்று, தனது ஆட்சி வீடான மகரத்தில் நிலைகொண்டுள்ளதால், பல நன்மைகளை இப்போது நீங்கள் எதிர்பார்க்கலாம். கொரோனா காரணமாக பணி இழந்தோர்க்கு, வேறு வேலை கிடைக்கும். நின்றுபோன வருமானம், மீண்டும் கிடைக்க வாய்ப்புகள் உருவாகும். சக-ஊழியர்களின் ஒத்துழைப்பும் மனோபாவமும் பொறுப்புகளில் உற்சாகத்தையும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வீண்பழிகள் இருப்பின் அவை நீங்கும்.

தொழில், வியாபாரம்: உற்பத்தியை அதிகரிப்பதற்கு உகந்த மாதமிது. தற்போது உலகளவில் நிகழும் சூழ்நிலையினால், கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலைமை இம்மாதத்தில் மாறுவதை அனுபவத்தில் பார்க்கலாம். நியாயமற்ற போட்டிகள் குறையும். சககூட்டாளிகளுடனும், பங்குதாரர்களிடமும் ஏற்பட்ட கருத்துவேற்றுமை, பரஸ்பர சந்தேகம் ஆகியவை படிப்படியாக நீங்குவதால் உற்பத்தியிலும் விற்பனையிலும் மனதைச் செலுத்த இயலும். நிதிநிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கலைத் துறையினர்: முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். அரசியல் தொடர்புகளால் ஆதாயம் உண்டு. மக்களின் ஆதரவு உற்சாகத்தை ஏற்படுத்தும். தயாரிப்பாளர்கள்,அளவோடு முதலீடு செய்து, புதிய தயாரிப்புகளில் இறங்கலாம். இயக்குநர்களுக்கும் லாபகரமான மாதமிது.

அரசியல் துறையினர்: அரசியல் துறையை தன்வசம் கொண்டுள்ள சுக்கிரன் மிகவும் அனுகூலமாக நிலைகொண்டுள்ளதால், கட்சியில் தொண்டர்களிடையே செல்வாக்கு உயரும். மேலிடத்தின் ஆதரவு மன-நிறைவைத் தரும். நடைபெற இருக்கும் தேர்தலில் நின்றால் வெற்றிக் கனியை எட்டிப்பிடித்துவிடுவீர்கள் எளிதில்! அந்த அளவிற்குச் சம்பந்தப்பட்ட கிரகங்கள் சாதகமாக உள்ளன. உங்கள் அரசியல்
கனவுகளை நினைவாக்கும் காலகட்டத்தில், உள்ளீர்கள் இம்மாதத்தில்!

மாணவ - மாணவியர்: சென்ற மாதம் கல்வியில் ஏற்பட்ட முன்னேற்றம், எவ்வித இடையூறுமின்றி நீடிக்கிறது. மனத்தை பாடங்களில் ஊன்றச் செலுத்தும் அளவிற்கு, ஆர்வமும் நினைவாற்றலும் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் திகழ்வது உறுதி என கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. வெளிநாடுகளில் உயர்கல்வி பயின்று வரும் மாணவ-மாணவி யருக்கும் பல நன்மைகள் ஏற்படும்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளார் பூமிகாரகர் என பூஜிக்கப்படும் செவ்வாய். ஆதலால், தண்ணீர் பற்றாக்குறை இராது. அடிப்படை வசதிகளும் எளிதில் கிட்டும். விளைச்சலும், வருமானமும் எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்கும். கால்நடைகள் அபிவிருத்தியடையும். பழைய கடன்கள் இருப்பின் அவற்றை அடைத்து நிம்மதி பெறலாம்.

பெண்மணிகள்: குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு மனநிறைவை அளிக்கக்கூடிய மாதம் இந்தச் சித்திரை! சென்ற மாதம் குடும்பத்தில் ஏற்பட்ட வீண் வாக்குவாதங்கள், கருத்துவேற்றுமை ஆகியவை நீங்கும். நீதிமன்ற வழக்குகள் சமரசத்தில் முடியும்.

அறிவுரை: உங்கள் ராசிநாதனான சூரியன், செவ்வாயின் ராசியான மேஷத்தில் உச்சகதியில் சஞ்சரிப்பதால், உடலில் ஏற்படும் அதிக உஷ்ணத்தின் காரணமாக அடிக்கடி அசதியும், சரும பாதிப்பும் ஏற்படக்கூடும், உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்யும் உணவு, ஐஸ் சேர்த்த குளிர்பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.பரிகாரம்: 1. சிறு ஸ்படிக லிங்கத்திற்கோ அல்லது சாளக்கிராமத்திற்கோ, தினமும் காலையில் நீராடிய பின்பு சுத்த தீர்த்தம், பசும்பால் ஆகியவற்றால் அபிஷேகம் - திருமஞ்சனம் செய்து சந்தனம் சாற்றி மலர்சூட்டி, கற்பூர ஆரத்தி எடுத்து, 12 தடவைகள் நமஸ்கரித்து,  அந்த அபிஷேகத் தீர்த்தத்தை சிறிது பருகிவருவது சர்வ கிரக தோஷ பரிகாரமாகும்.குடும்பத்தில் அசைவ உணவு கண்டிப்பாகக் கூடாது.

அசைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், சிவலிங்கம், சாளகிராமம், தாமரை நாகலிங்கம், துளசி, வில்வம் ஆகியவற்றைத் தொடவும் கூடாது. தொட்டால், நோய் வரும்.  2. சூரியனார் கோயில் தரிசனம் சிறந்த பரிகாரமாகும். 3. தினமும் ஒரு தசகம் ஸ்ரீமத் நாராயணீயம் படித்து வருதல் சிம்ம ராசியினருக்கு நல்ல பலனையளிக்கும். 4. “சூரியன் பித்ரு காரகன்” அதாவது, மறைந்த நமது முன்னோர்களுக்கு அதிபதியாவார். மறைந்த நம் பெரியோர்களை மனத்தால் பூஜித்தால், சூரியபகவான் அருள் கிட்டும். மாறி, மாறிவரும் கிரக சஞ்சார நிலைகளில் அது நமக்குத் துணை நிற்கும் சக்திவாய்ந்தது.

அனுகூல தினங்கள்:
சித்திரை 1, 2, 6 - 9, 13 - 15, 19 - 23, 27, 28
சந்திராஷ்டம தினங்கள்:24 முதல் 26 இரவு வரை.

கன்னி

குடும்பம்: சூரியன், செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களைத் தவிர, மற்ற அனைவரும் அனுகூலமாகவே சஞ்சரிக்கின்றனர். சனிபகவானால், ஏற்பட்டிருந்த “அர்த்தாஷ்டக தோஷ”மும் நிவர்த்தியாகிவிட்டது. குரு பகவான், அதிசாரகதியில் கும்பராசிக்கு, மாறியிருந்தாலும், நன்மையே செய்வார். ஏனெனில், குரு ஒருவருக்கு மட்டும் வக்கிர, அதிசாரகதி தோஷங்கள் கிடையாது (ஆதாரம்: பூர்வபாராசர்யம், பிருஹத் ஸம்ஹிதை, ஜோதிட அலங்காரம் ஆகிய பண்டைய நூல்கள்). சென்ற மாதம் மனத்தை வருத்திய பல குடும்பப் பிரச்னைகள் நல்லபடி தீரும். குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம்
பற்றிய கவலைகளின் கடுமை குறையும்.  

வருமானம் நல்லபடி நீடிக்கிறது. இருப்பினும், சேமிப்பிற்குச் சாத்தியமில்லை. திருமண முயற்சிகளில் நல்ல வரன் அமைவது, மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.உத்தியோகம்: சென்ற மாதம் ஏற்பட்ட நன்மைகளை, இம்மாதம் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. கவலை தரும் அளவிற்கு விபரீதப் பிரச்னைகள் ஏதும் ஏற்படாது. இருப்பினும், மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு சற்று குறையும். சிறு தவறும், பெரிதாக நிர்வாகத்தினரிடம் புகார் செய்யப்படும். பொறுப்புகளிலும், கடமைகளிலும் மிகவும் கவனமாக இருத்தல் நலம்.

சகஊழியர்களுடன் பேசுவதிலும் பழகுவதிலும் நிதானம் வேண்டும். உங்கள் குடும்பப் பிரச்னைகளினால் ஏற்படும் உணர்ச்சிகளை சக-ஊழியர்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது, தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்க உதவும். வாழ்க்கையின் மிக முக்கிய தருணங்களில் தக்க வழிகாட்டி உதவுகிறது ஜோதிடம் எனும் தன்னிகரற்ற தெய்வீகக் கலை!தொழில், வியாபாரம்: லாபம் ஒரே சீராக இருக்கும். நிதி நிறுவனங்களால் எதிர்பாராத பிரச்னைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன. அஷ்டம ராசியில் அமர்ந்துள்ள சூரியனால், அரசாங்க அதிகாரிகளின் மறைமுகத் தொல்லைகள், கவலையை அளிக்கும். தொழில் கூட்டாளிகளுடன் பரஸ்பர சந்தேகங்களும், அவநம்பிக்கையும் பகையுணர்ச்சியும் மேலிடும். சற்று அனுசரித்து, விட்டுக்கொடுத்து, நடந்துகொள்வது, எதிர்காலத்திற்கு நல்லது. மேற்கூறிய பிரச்னைகள் உற்பத்தியை பாதிக்காது. மார்க்கெட் நிலவரம் சாதகமாகவே நீடிக்கும் இம்மாதமும்.

கலைத் துறையினர்: புதிய வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும். வருமானம் மட்டும் அளவோடுதான் இருக்கும். தயாரிப்பாளர்கள் அளவோடு முதலீடு செய்து, புதிய தயாரிப்புகளில் இறங்கலாம். மற்ற துறைகளைவிட, கலைத்துறையை அதிகமாக பாதித்துவரும் போட்டிகளும், பொறாமையும் இம்மாதமும் நீடிப்பதை ராகுவின் ரிஷப ராசி சஞ்சார நிலை குறிப்பிட்டுக் காட்டுகிறது. காரணம், இதுவரை ராகுவிற்குக் கிடைத்துவந்த குரு பகவானின் சுபப்பார்வை தற்போது இல்லாது போனதேயாகும்.அரசியலில் ஈடுபட கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால், முயற்சிக்கலாம். கட்சி யிலும் மக்கள் மத்தியிலும் ஆதரவு கிட்டும்.

அரசியல் துறையினர்: கிரக நிலைகள் தொடர்ந்து அனுகூல நிலைகளில் சுபபலம் பெற்று, வலம் வருகிறார்கள். இந்தச் சித்திரை மாதம் முழுவதும். எந்த அணியில் சேர்ந்தால் நன்மை கிடைக்குமென சுக்கிரனின் சஞ்சார நிலை சரியாக வழிகாட்டும். தேர்தலில் நின்றால், வெற்றி பெற்றதாக மகிழ்ச்சி செய்தி உங்களைத் தேடி வரும். அரசாங்க பதவி ஒன்று உங்களுக்குக் கிடைக்க சாத்தியக்கூறு உள்ளது. ஜனன கால கிரக நிலைகளை ஆராய்ந்து பார்த்து இதனை முடிவு செய்துகொள்ளலாம். மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும்.

மாணவ - மாணவியினர்: மனத்தைப் பாதித்து வந்த குழப்பங்கள், சஞ்சலங்கள் சபலங்கள் நீங்கி, படிப்பில் மனம் செல்லும். ஞாபகத் திறன் ஓங்கும். தேர்வுகளில் மனத்திற்குப் பெருமை தரும் மதிப்பெண்களைப் பெறுவீர்கள்! பல மாதங்களாக நின்றுபோன விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவை ஆரம்பிக்கப்பட்டு, அவற்றில் சேர்ந்துகொண்டு, வெற்றிபெறுவதற்கும் கிரகங்கள் சுபபலம் பெற்று விளங்குகின்றன. ஆதலால், துணிவுடனும், தன்னம்பிக்கையுடனும் ஈடுபடலாம்.

விவசாயத் துறையினர்: வயல் பணிகளில் உழைப்பு சற்று கடினமாக இருக்கும். இருப்பினும் உழைப்பிற்குப் பலனாக விளைச்சலும் வருமானமும் கிடைப்பது மனத்திற்கு நிறைவைத் தரும். என்றோ பட்ட கடன்கள், தற்போது வளர்ந்து, கவலையளிக்கும். கால்நடைகள் நோய்வாய்ப் படுவதால், மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.

பெண்மணிகள்: வருமானம் ஓரளவு திருப்திகரமாகவே இருந்தாலும், எதிர்பாராத செலவுகளினால், குடும்ப நிர்வாகத்தில் கவலை ஏற்படும். சில தருணங்களில் மனதில் “டென்ஷன்” உண்டாகும். உடல்நலனில் கவனம் வேண்டும். எளிய பாதுகாப்பு முறைகள் உதவும்.

அறிவுரை:

 1. கூடியவரையில் வீண் செலவுகளைத் தவிர்க்க முயற்சிக்கவும்.     
     
2. ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.
பரிகாரம்: தினமும் காலையில் நீராடிய பின்பு “கோளறு பதிகம்''  சொல்லிவந்தால்,  கிரகதோஷங்கள் அடியோடு விலகும்.
ஸ்ரீபெரும்புதூர் சென்று, அங்கு சூட்சும நிலையில் தரிசனம் அளிக்கும் ஸ்ரீமத் ராமாநுஜரை தரிசிப்பது தன்னிகரற்ற பரிகாரமாகும்.
அனுகூல தினங்கள்:
சித்திரை 4 - 8, 12 - 15, 20 - 23,   29, 30
சந்திராஷ்டம தினங்கள்:
1-ந் தேதி இரவு வரை; மீண்டும் 26 இரவு முதல் 28 வரை.

துலாம்

குடும்பம்: வருமானத்தைவிட,
செலவுகளே அதிகமாக இருக்கும். இம்மாதக் கடைசியில் பற்றாக்குறை ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. கூடியவரையில், கடன் வாங்கு வதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், ராசிநாதனான சுக்கிரன் அனுகூலமற்று இருக்கும்போது, ராகுவும் அஷ்டமஸ்தானத்தில் அமர்ந்திருந்தால், அத்தகைய கிரக நிலைகளில் நாம் வாங்கும் கடன் மேலும் மேலும் வளரும் என்றும், அதனை எளிதில் திருப்பித்தர முடியாத நிலை ஏற்படும் என்றும் “ஜோதிட பாரிஜாதம்'' எனும் மிகப் பழைமையான நூல் விவரித்துள்ளது.மேலும், ராசிக்கு 8ம் இடத்தில் ராகு நீச்சம்அடைந்துள்ளதால், ஆரோக்கியத்திலும்  சற்று கவனமாக இருத்தல் நல்லது.சிறு உபாதையாகத் தோன்றினாலும், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது ஓர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். திருமண முயற்சிகளிலும், வரன் அமைவதிலும் தாமதம் ஏற்படும். வாகனம்ஓட்டும்போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

உத்தியோகம்: ஜீவனகாரகரான சனி பகவான் ராசிக்கு அர்த்தாஷ்டக ராசியில் அமர்ந்திருப்பதால், சக்திக்கு மீறிய உழைப்பைத் தருவார். அலுவலக சூழ்நிலையும் கவலையளிக்கும்.இருப்பினும், துலாம் சனிபகவானுக்கு உகந்த உச்ச ராசியாக இருப்பதால், சிரமங்கள் அனைத்தும்
அளவோடு இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவை எதிர்பார்ப்பதில் பயனில்லை. சிறு கவனக் குறைவும் பிரச்னையில் கொண்டுவிடக்கூடும்.“கொரோனா” தொற்று விளைவித்த சூழ்நிலையினால், வேலையை இழந்துள்ள துலாம் ராசியினர் வேறு நல்ல வேலை கிடைக்க மேலும் சிறிதுகாலம் காத்திருக்க வேண்டியுள்ளது. சிலருக்கு இடமாற்றம் அல்லது பொறுப்புகள் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தொழில், வியாபாரம்: நியாயமற்ற போட்டிகள் நீடித்தாலும், அவை உங்கள் விற்பனையை பாதிக்காது. இருப்பினும், பிற பிரச்னைகள் உங்கள் உற்பத்தியைப் பாதிக்கும். உற்பத்திக்கு அத்தியாவசியமான மூலப் பொருட்களின்  (Rawmaterials) விலை உயர்வதால், உற்பத்தி பாதிக்கப்படக்கூடும். விற்பனையும் பாதிக்கப்படும், கூட்டாளி களுடன் ஒற்றுமை குறையும்.“கொரோனா” காரணமாக, பணியிலிருந்து விலகி வெளிமாநிலங்களுக்குச் சென்றுவிட்ட முக்கிய தொழிலாளர்கள் பணிக்குத் திரும்புவதில் தடங்கல்கள் உண்டாகும்.

கலைத் துறையினர்: கிரகநிலை
களின்படி, சற்று சிரமமான மாதம்தான் இது. எதிர்பார்த்துள்ள வாய்ப்புகள் கிடைக்காமல், மனத்தில் ஏமாற்றத்தைத் தரும். சினிமாத் துறைக்கு அவசியமான ஆடம்பர வசதிகளைக் குறைத்துக் கொள்ள நேரிடும். வீட்டு வேலைக்காரர்கள், கார் ஓட்டுநர்கள் ஆகியோரால் பிரச்னைகள் ஏற்படும். தயாரிப்பாளர்கள் நிதி வசதியின்மையினால், கஷ்டப்படுவார்கள். தேவைகளைக் குறைத்துக்கொண்டு, இருப்பதை வைத்துக்கொண்டு சமாளிப்பது நல்லது, எக்காரணத்தைக் கொண்டும், கடன் வாங்காமல் இருத்தல் நல்லது.

ஸ்டண்ட் நடிகர்கள், ஆபத்தான கதாபாத்திரங்களில் நடிக்கும்போது, விழிப்புடன் இருத்தல் அவசியம். ஏனெனில், கிரக நிலைகளின்படி, விபத்துக்கள் நேரிடக்கூடும். கொடுக்கல் - வாங்கலிலும் பகை ஏற்படும். மன-நிம்மதி பாதிக்கப்படும்.

அரசியல் துறையினர்: அரசியலுக்கு ஆதிபத்யம் கொண்டுள்ள கிரகநிலைகள் சாதகமாக இல்லை. கட்சியில் ஆதரவு குறையும். தேர்தலில் நின்றால், வெற்றிபெற மிகவும் பாடுபட வேண்டியிருக்கும். கூட்டணியைத் தேர்ந்தெடுப்பதில் தவறு நேரிட வாய்ப்புள்ளது. எத்தகைய முடிவானாலும் தீர சிந்தித்து, ஆழ்ந்து ஆராய்ந்து முடிவெடுப்பது மிக, மிக அவசியம்.

மாணவ - மாணவியர்: பலவித சபலங்கள், குழப்பங்கள், எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையான பயம் ஆகியவை மனத்தை பாதிக்கும். சக-மாணவ, மாணவியரிடம் நெருங்கிப் பழகாமல் இருப்பது மிக மிக அவசியம். பல மாணவ-மாணவியரின் எதிர்கால நல்வாழ்க்கை பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம், மனத்தில் ஏற்படும் பலவீனங்களேயாகும் என ஜோதிடக் கலை விளக்கியுள்ளது. தற்கால மனோ தத்தவ நிபுணர்களும் இதனை உறுதி செய்துள்ளனர்.ஆதலால், படிப்பைத் தவிர வேறு எதிலும் மனத்தைச் செலுத்தக்கூடாது என கிரக நிலைகள் அறிவுறுத்துகின்றன.

விவசாயத் துறையினர்: ராசிக்கு 8ம் இடமாகிய அஷ்டமஸ்தானத்தில் ராகு அமர்ந்திருப்பதால், குறிப்பாக, இரவு நேரங்களில் வயலுக்குச் செல்லும்போது கவனமாக இருக்கவும்.  விஷஜந்துக்களால் பாதிப்பு ஏற்படக்கூடும். வருமானமும், விளைச்சலும் திருப்தியளிக்கும். பழைய கடன்கள் தொல்லை தரும்.
பெண்மணிகள்: வீண் அலைச்சல்களைக் குறைத்துக்கொள்ளுங்கள். இருசக்கர வாகனங்கள் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.

அறிவுரை: முக்கிய கிரகங்கள் அனுகூலமற்று சஞ்சரிக்கின்றன. அனைத்து
செயல்களிலும் விழிப்புடன் இருத்தல் அவசியம்.பரிகாரம்: துலாம் ராசி அன்பர்களுக்கு பரிகாரம் அவசியம்.

1. காளஹஸ்தி, திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு தலதரிசனம்.

2. திருமலை வேங்கடவன் தரிசனம்.
3. சனிக்கிழமைகளில் உபவாசம்.
4. திருக்கோயிலில் சனிக்கிழமைகளில்
நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவருதல்
அனுகூல தினங்கள்:
சித்திரை 4 - 9, 13 - 16, 20 - 22, 27, 28
சந்திராஷ்டம தினங்கள்:
1 இரவு முதல் 3 வரை;  மீண்டும் 29 முதல் 31 மாலை வரை.


விருச்சிகம்

குடும்பம்: சூரியன், சனி, சுக்கிரன் ஆகிய மூன்று முக்கிய கிரகங்கள் உங்களுக்கு மிகவும் சாதகமாக நிலைகொண்டுள்ளனர், இம்மாதம் முழுவதும். கேதுவினால் அளவோடு நன்மைகள் கிட்டும். மற்ற கிரகங்கள் அனுகூலமாக இல்லை.நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். முயன்றால், சேமிப்பிற்கும் சாத்தியக்கூறு உள்ளது. மோட்ச காரகரான கேது, ராசியில் அமர்ந்துள்ளதால், மனத்தில் ஆன்மீக சிந்தனைகள் மேலோங்கும். மனம் பக்திமார்க்கத்தில் ஈடுபடும். பெரியோர், அருளாளர்களின் ஆசி கிட்டும். தீர்த்த - தலயாத்திரை சென்று வரும் வாய்ப்புகள் தேடிவரும், திருமண முயற்சிகளில் சிறு தடங்கல்கள் ஏற்பட்டு, பின்பு வரன் அமையும். சுபச்செலவுகளில் பணம் விரயமாகும்.

ரிஷபத்தில் வலம் வந்துகொண்டிருக்கும் ராகுவின் தோஷத்தினால், மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.
குடும்பத்தில் பரஸ்பர ஒற்றுமை நிலவும்.உத்தியோகம்: மிகவும் அனுகூலமான மாதமிது! ஜீவன காரகரான சனி பகவான் சிறந்த சுப-பலம் பெற்று மகரத்தில் சஞ்சரிப்பது நல்ல யோக பலன்கள் ஏற்படவிருப்பதை எடுத்துக்காட்டுகிறது. பதவியுயர்வு, சலுகைகள் அதிகரித்தல் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். “கொரோனா” தொற்று காரணமாக வேலையை இழந்திருப்பின், மறுவேலை காத்திருக்கிறது உங்களுக்கு!

மேலதிகாரிகளின் ஆதரவு, பணிகளில் ஊக்கத்தை ஏற்படுத்தும். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், பதவியுயர்வு ஒன்று கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.தொழில், வியாபாரம்: சென்ற பல மாதங்களாக தொடர்ந்து ஏற்பட்டுவந்த பின்னடைவிலிருந்து மீண்டும் தலையெடுத்துவிடுவீர்கள் என்பதை பாக்கிய, ஜீவன, லாபஸ்தானங்களின் நிலைகளும், கோள்சார கிரக நிலைகளும் உறுதியளிக்கின்றன. உற்பத்தியை அதிகரிக்க உதவியாக முன் ஆர்டர்கள் கிடைக்கும். வங்கி மற்றும் இதர நிதிநிறுவனங்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைப்பதால். உங்கள் பொருளாதார நிலையை சீர் செய்துகொள்ள முடியும் இந்த சித்திரை மாதத்தில்!

கலைத் துறையினர்: இதுவரை, ஏதாவது ஒரு காரணம்காட்டி, உங்களைப் பார்க்கக்கூட வராத தயாரிப்பாளர்கள், இப்போது உங்களைத் தேடி, நாடிவருவார்கள். மத்திய அரசில் செல்வாக்குள்ள ஓர் அரசியல் பிரமுகரின் தொடர்பு உங்களை உயர்த்த உள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு, முதன்முறையாக இம்மாதம் வருமானம் வரத் தொடங்கும். திருமணமாகியுள்ள நடிகர், நடிகையருக்குக் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை ஒன்று நல்லபடி தீரும் என கிரக நிலைகள் உணர்த்துகின்றன!

அரசியல் துறையினர்: சுக்கிரன், சனி ஆகிய இருவருமே உங்கள் பக்கம்தான் இம்மாதம் முழுவதும்! தோல்வி என்பதில்லை, உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும். வரும் தேர்தலில் நின்றால், வெற்றி நிச்சயம் என உறுதியளிக் கின்றன கிரகநிலைகள்!பலருக்குக் கட்சிமாற்றம் தவிர்க்க இயலாத ஒன்று. தசாபுக்திகள் சுபபலம் பெற்றிருப்பின், முக்கிய பதவி ஒன்றை ஏற்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.மாணவ - மாணவியர்: சென்ற மாதம் கல்வியில் ஏற்பட்ட முன்னேற்றம், இப்போதும் நீடிக்கிறது - பல மடங்கு அதிகமாக! படித்தவற்றை மறக்காமல் வைத்துக்கொள்ளும் நினைவாற்றல் நன்கு
உள்ளது. கிரகிப்புத் திறனுக்கும் குறைவில்லை. ஆதலால், தேர்வுகளில் உயர்ந்த மதிப்பெண்கள் பெறுவது நிச்சயம். பாடங்களில் மனம்
ஆர்வத்துடன் ஈடுபடும்.

விவசாயத் துறையினர்: விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். அவர்தான் “பூமி காரகர்” என ஜோதிடக் கலையில் போற்றப்படுகிறார். அவர்தான் விவசாயத்துறைக்கும், விளைச்சலுக்கும், காரகத்துவம் கொண்டுள்ள கிரகம் ஆவார்.விவசாய நிலத்திற்கும், அதில் ஊன்றும் விதைகளுக்கும் உயிர் சக்தியை அளிக்கும் சூரியன், செவ்வாய்க்கு நட்புக் கிரகமாவார். அந்தச் சூரியன் தற்போது, செவ்வாயின் ராசியில் உச்சம் பெற்றுத் திகழ்வதால் நல்ல விளைச்சலும், வருமானமும் கிட்டும்.

பெண்மணிகள்: நினைத்தவை கைகூடும் இந்தச் சித்தரை மாதத்தில்! அந்த அளவிற்கு முக்கிய கிரகங்கள் அனுகூல
நிலைகளில் அமர்ந்துள்ளனர்.அறிவுரை: இந்த மாதம் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பயன்படுத்திக்கொள்வது, உங்கள் திறன். களத்திர ஸ்தானத்திற்குச் சிறிது தோஷம் ஏற்பட்டுள்ளதால், மனைவின் உடல்நலனில் கவனம் வேண்டும். சிறு உபாதையாக நீங்கள் நினைத்தாலும், மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

பரிகாரம்: 1.மறைந்த முன்னோர்களை தினமும் பூஜித்துவாருங்கள். பித்ருக்களின் உலகிலுள்ள அந்தப் பெரியோர்கள், தங்களது புண்ணிய பலன்களை,
 சூரியனின் மூலம் நமக்கு அளித்து, நம்மைக் காப்பாற்றுகிறார்கள் என ரகசிய நூல்கள் கூறுகின்றன.
2. தினமும் காலை, மாலை இரு வேளை
களிலும் 108 தடவைகள் “ராம நாமம்’’ ஜெபித்து வந்தால் போதும், பலன் கைமேல்!
அனுகூல தினங்கள்:
சித்திரை 1 - 3, 7 - 10, 13 - 15, 20 - 22, 26 - 28
சந்திராஷ்டம தினங்கள்:
4 முதல் 6 இரவு வரை.

தனுசு

குடும்பம்: ஏழரை சனியின் கடைசி பகுதியில் நீங்கள் உள்ளநிலையில், இந்தத் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. ராசிநாதனான குரு, அதிச்சாரகதியில் கும்பராசியில் இருப்பினும், மகரத்தின் பலனையே அளித்தருள்வார் என்பது ஜோதிடக் கலையின் வாக்காகும். ஏனெனில், குரு பகவானை மட்டும் அதிச்சார வக்கிர கதி மாறுதல்கள் பாதிப்பதில்லை என்று புராதன ஜோதிட நூல்கள் அறுதியிட்டுக்கூறுகின்றன. இத்தகைய ஓர் விசேஷ சக்தி குருவுக்கு மட்டும்தான் உண்டு!

சுக்கிரன், ராகு ஆகிய இருவரும் அனுகூலமான நிலைகளில் சஞ்சரிக்கின்றனர்.வருமானம் போதிய அளவிற்கு இருக்கும், ஆயினும், சேமிப்பிற்கு சாத்தியக்கூறு கிடையாது. குடும்பச் சூழ்நிலை மனநிம்மதியைத் தரும். சுபநிகழ்ச்சிகளும், சுபச்செலவுகளும் இருக்கும். குழந்தைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவது மகிழ்ச்சியைத் தரும்.உத்தியோகம்: உத்தியோகஸ்தர்களுக்கு உற்சாகமான மாதமாகும் இது. மேலதிகாரி
களின் ஆதரவும், சக-ஊழியர்களின் ஒத்துழைப்பும் நிர்வாகத்தினரின் பாராட்டுதல் களைப் பெறுவதற்கு உதவும், தசா-புக்திகள் அனுகூலமாக உள்ள தனுர் ராசியினருக்கு பதவியுயர்வு ஒன்று கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது, “கொரோனா” தொற்று காரணமாக, வேலையை இழந்தவர்களுக்கு வேறு வேலை கிடைக்கும். பெரும்பாலும் பழைய நிறுவனத்திலிருந்தே அழைப்பு வர வாய்ப்பு உள்ளதை ராகுவின் அனுகூல நிலை குறிப்பிடுகிறது.
தொழில், வியாபாரம்: மந்த நிலையிலிருந்த உற்பத்தியை அதிகரிக்க சாதகமான சூழ்நிலை உருவாகும். அரசாங்க சலுகைகள் கிடைக்கும். ராகுவின் நிலையும், செவ்வாயின் நிலையும் சுப-பலத்துடன் திகழ்வதால், பாதுகாப்புத் துறை சம்பந்தமான (Defence-oriented) பொருட்கள் உற்பத்தி லாபகரமாக இருக்கும். அரசாங்க கொள்கையும் இதற்கு உதவிகரமாக உள்ளது.

கலைத் துறையினர்:  பல மாதங்களாக உங்களைப் பற்றி நினைக்காத தயாரிப்பாளர்கள், இப்போது உங்களைத் தேடி வருவார்கள். சுக்கிரனின் ஆதிக்கம் பலமாக இருப்பதால், பலர் அரசியல் கட்சிகளுடன் இணைவார்கள். நலிந்த நிலையில் சரிந்த பொருளாதாரம், அந்நிலையிலிருந்து படிப் படியாக மீள புதிய வாய்ப்புகள் கைகொடுக்கும். மக்களிடையே செல்வாக்கும் உயரும். பாதியில் நின்றுபோன படங்களை முடித்துக்கொடுக்க இயலும்.

அரசியல் துறையினர்: முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும், உற்சாகம் மேலிடும். பலருக்கு கட்சிமாற்றமும், அதன் காரணமாக, சிறந்த ஆதாயமும் கிட்டும். ராகுவின் அனுகூல சஞ்சாரத்தினால், பேச்சினால்  மக்களைக் கவரும் ஆற்றல் கூடும். நினைத்ததை நிறைவேற்றி வைக்கும் கிரகம் ராகு  என “ஜோதிட அலங்காரம்’’ எனும் மிக, மிகப் பழைமையான கிரந்தம் போற்றுகிறது.

சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களுக்கு அடுத்தபடியாக, மூர்க்கத்தனமான செயல் உறுதி கொண்டவர் (Most Postive Planet) ராகு என
விவரித்துள்ளன ரோமானிய கிரேக்க வானியல் நூல்கள்! அத்தகைய “ராகு”, உங்களுக்கு ஆதரவாக சுக்கிரனின் வீடான ரிஷபத்தில் நிலைகொண்டிருப்பது பல நன்மைகளை அளிக்கவல்லது! மாணவ - மாணவியர்: மிகப் பழைமையான ஜோதிட நூல்களில்  “வித்யாகாரகர்”  எனப் போற்றப்படும் புதனும் மற்ற முக்கிய கிரகங்களும், உங்களுக்கு இந்தச் சித்திரை மாதத்தில் யோக பலன்களை அளிக்கக்கூடிய பாதைகளில் (Celestial Path) வலம் வருவதால், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கிரகிப்புத்திறன் கூடும். நினைவாற்றலும் குறைவின்றி நீடிக்கிறது.

ஆதலால், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பது நிச்சயம்!
விவசாயத் துறையினர்: விளைச்சல் எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்கும். வருமானம் திருப்தி தரும். கால்நடைகள் பராமரிப்பில்,  செலவுகள் அதிகரிக்கும். இயற்கை விளைபொருட்களுக்கு (organic agricultural products) நல்ல விலை கிடைக்கும். அரசாங்க ஆதரவும் நிதியுதவியும் சலுகைகளும் தேடிவரும். பெண்மணிகள்: சென்ற மாதம் ஏற்பட்ட நன்மைகள், இம்மாதமும் நீடிக்கின்றன. குடும்பத்தில் ஒற்றுமையும்  பரஸ்பர அன்பும் மனத்திற்கு இதமாக இருக்கும். வருமானம் நல்லபடி இருந்தும், குடும்பச் செலவுகள் சற்று அதிகமாகவே இருக்கும். கூடியமட்டும் திட்டமிட்டுச் செலவு செய்தால் நல்லது. வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு அலுவலக சூழ்நிலை, பணிகளில் உற்சாகத்தைத் தரும். விவாக வயதிலுள்ள பெண்களுக்கு மனத்திற்குப் பிடித்த வரன் அமையும். உலகளாவிய சூழ்நிலை மாற்றத்தினால் வேலையை இழந்துள்ள பெண்மணி களுக்கு, வேறு வேலை கிடைக்க, கிரகநிலைகள் சாதகமாக உள்ளன.

அறிவுரை: செலவுகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள முயற்சிக்கவும். கிடைக்கும்போது சேமித்து வைத்துக்கொள்ள வேண்டுமென்ற அறிவுரையைச் சிற்றெறும்பு நமக்கு போதிக்கிறது அல்லவா?  கார் காலத்திற்கென்று (மழைக் காலம்) தானியங்களை முன்கூட்டியே பாடுபட்டு சேமித்து வைக்கிறது.

பரிகாரம்: 1. 24 வெள்ளிக்கிழமைகள் (அரை மண்டலம்) மாலையில் உங்கள் வீட்டிலிலோ அல்லது அருகிலுள்ள திருக்கோயில்களிலோ மூன்று நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவருவது, கைமேல் பலனளிக்கும்.
2. தினமும் மாலையில் மகாலட்சுமி அஷ்டோத்ரம், அபிராமி அந்தாதி,
மீனாட்சி பஞ்சரத்தினம் ஆகிய
ஸ்தோத்திரங்களைப் படித்து வருதல்.
அனுகூல தினங்கள்:
சித்திரை 1 - 3, 9 - 12, 16 - 19, 24-29
சந்திராஷ்டம தினங்கள்:
6 இரவு முதல் 7, 8 பின்னிரவு வரை.

மகரம்

குடும்பம்: சுக்கிரன், செவ்வாய் ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். மற்ற கிரகங்களினால் அனுகூலத்தை எதிர்பார்க்க
இயலாது. ஏழரை சனியில் ஜென்ம சனியாக இருப்பினும், மகரம் அவரது ஆட்சிவீடாக இருப்பதால், அதிக அளவில் சிரமங்கள் ஏற்படாது. கைப்பணம் கரையும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் மட்டும் கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு ஏற்படும். சில தருணங்களில்,  புதிய கடன்களை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தமும் உருவாகக்கூடும்.  கூடியவரையில் தவிர்ப்பது நல்லது.

அர்த்தாஷ்டகத்தில் உச்ச பலம் கொண்டுள்ள சூரியனின் நிலை காரணமாக, உஷ்ண சம்பந்தமான உடல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அடிக்கடி, காரணமில்லாமல் அசதியும், சோர்வும் ஏற்படும்.திருமண முயற்சிகளைச் சிறிது ஒத்திப்போடுவது நன்மையைத் தரும். ராசிக்கு 5ம் இடத்தில் நீச்ச ராகுவும், அதிசாரத்தில் குருவும் நிலைகொண்டுள்ள தருணத்தில், சிந்தனைத் திறன் குறைந்து,  அதன் காரணமாக தவறான முடிவுகள் எடுப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது என “கால ப்ரகாஸிகா” எனும் பிரசித்திப் பெற்ற ஜோதிட நூல் கூறுகிறது.

உத்தியோகம்: பணிகளில் கவனமாக இருத்தல் நல்லது. சிறு தவறும் பிரச்னையில் கொண்டுவிடக்கூடும். சக-ஊழியர்களுடன் நெருங்கிப் பழக வேண்டாம் என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன.“ஜோதிடம்” பெற்ற தாய்க்குச் சமம் எனப் போற்றுகிறது, வராகமிஹிரரின் “பிருஹத் ஸம்ஹிதை”. ஒருவரது வாழ்க்கையில் இத்தகைய கிரக அமைப்புகள் நிழும்போது, நாம் எதைச் செய்யவேண்டும்; எவற்றைத் தவிர்க்க வேண்டும் என நமக்குச் சரியான வழிகாட்டுவதால், ஜோதிடக் கலையை, பெற்ற தாய்க்குச் சமமாகப் போற்றியுள்ளார் விக்கிரமாதித்த மன்னரின் அவை ஜோதிட நிபுணரான வராகமிஹிரர்.

மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம்“The Boss is always right....” என்ற கொள்கைகளைக் கடைப்பிடித்தால், பிரச்னைகள் ஏற்படாது! “கொரோனா”வினால் வேலையை இழந்துள்ள மகரராசி யினர், மேலும் சில மாதங்களுக்குப் பொறுமையாக இருத்தல் நல்லது.

தொழில், வியாபாரம்: எதிலும் சற்று ஆழ்ந்து சிந்தித்து செயல்படுவது அவசியம் என பாக்கிய, ஜீவன, லாப ஸ்தானங்கள் எச்சரிக்கை செய்கின்றன. அரசியல் கட்சி ஒன்றுடன் உள்ள நெருங்கிய தொடர்பால், கடும் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். சந்தை நிலவரம் அனுகூலமாக உள்ளது. உற்பத்தியும் விற்பனையும் திருப்திகரமாகவே இருப்பதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக்காட்டுகின்றன.கலைத் துறையினர்: ஓரளவே இம்மாதம் நன்மைகளை எதிர்பார்க்கலாம். தற்போது நிலவும் சூழ்நிலையினால், புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் மேலும் சிறிது தாமதம் ஏற்படும், பணப் பற்றாக்குறை நீடிக்கும். அரசியல் பிரமுகர்களின் தொடர்பினால், எவ்வித நன்மையும் கிடைக்காது. உங்களைப் பிறர் பயன்படுத்திக் கொள்வார்கள்.

அரசியல் துறையினர்: சுக்கிரனும், செவ்வாயும் அனுகூல நிலைகளில் சஞ்சரிப்பதால், பல நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்.  நடைபெறவுள்ள தேர்தலில் நின்றால் வெற்றி பெறுவீர்கள். இருப்பினும், அதற்காக இரவு-பகல் பாராது அலையவும், உழைக்கவும் வேண்டியிருக்கும். கைப்பணம் விரயமாகும். நண்பர்களே எதிரியாவார்கள். ஆயினும், வெற்றி நிச்சயம்!

மாணவ - மாணவியர்: கல்வி முன்னேற்றம் தடைபடாது. ஆசிரியர்களின் ஆதரவும், வழிகாட்டுதலும் குறையாது. உயர் கல்விக்கு அனைத்து உதவியும் கிடைக்கும். சக்திக்கு மீறிய உழைப்பை மட்டும் சற்று குறைத்துக் கொள்ளுங்கள்.விவசாயத் துறையினர்: செவ்வாய், சிறந்த சுப-பலம் பெற்றிருப்பதால், வயலில் உழைப்பு மிக அதிகமாக இருந்தாலும், அதற்குப் பரிசாக நல்ல விளைச்சலும், லாபமும் கிடைக்கும் என்பதே ஜோதிட நூல்கள் கூறியுள்ள உண்மையாகும். அடிப்படை வசதி களுக்காக அலைய வேண்டியதில்லை. அரசாங்க சலுகைகள் தக்க தருணத்தில் கிடைக்கும்.

பெண்மணிகள்: குடும்பப் பிரச்னைகள்
கவலையளிக்கும். அடிக்கடி ஏதாவது ஒரு சிறு உபாதை ஏற்படுவது மனத்தளவில் சோர்வை ஏற்படுத்தும். வருமானத்திற்குள் செலவுகளைச் சமாளிப்பது கஷ்டமாக இருக்கும். நெருங்கிய உறவினர்களிடையே தினமும் ஏற்படும் தேவையற்ற வாக்குவாதம், மனத்தில் வேதனையை ஏற்படுத்தும். உடல் நலனிலும் கவனமாக இருத்தல் நல்லது என்பதை கிரக நிலைகள் எடுத்துக் கூறுகின்றன.

அறிவுரை: குடும்பத்தில் அனைவருடனும் அனுசரித்தும், விட்டுக் கொடுத்தும் நடந்துகொள்ளுங்கள். நெருங்கிய உறவினர்கள் உங்களிடம் நியாயமில்லாது நடந்து கொள்ளும்போது,  உணர்ச்சிவசப்படாமல், மௌனமாக இருத்தல் உங்கள் மனதை மேலும் நோகச் செய்யாமல் இருக்கும். இத்தகைய தருணங்களில் மனத்திற்கு ஏற்ற அருமருந்து “மௌனம்” ஆகும்!
 பரிகாரம்: 1. உயர்ந்த பரிகார நூல்

களில் “மகா மந்திரம்” எனப் போற்றப்படும் லட்சுமி நரசிம்மரின் “மந்திர ராஜ பத ஸ்தோத்ரம்“ காலையில் நீராடிய பின்பும், மாலையில் கை-கால்களைச் சுத்தம் செய்து கொண்ட பின்னரும் சொல்லி அவரை பூஜிப்பது கண்கண்ட பரிகாரமாகும்.

2. அஹோபிலம், சோளிங்கபுரம்,
சிங்கப்பெருமாள் கோயில், சிம்மாசலம், ரங்கம் காட்டு அழகிய சிங்கர் போன்ற நரசிம்ம க்ஷேத்திரங்களில் ஏதாவது ஒன்றில் நெய்தீபம் ஏற்றி வைத்து, தரிசித்துவிட்டுவருவது கிரக தோஷங்களை அடியோடு போக்கிவிடும்,
அனுகூல தினங்கள்:
சித்திரை 1, 2, 5 - 7, 11 - 16, 23 - 26
சந்திராஷ்டம தினங்கள்:
8 பின்னிரவு முதல் 10 வரை.

கும்பம்

குடும்பம்: சென்ற மாதம் கவலையளித்த உடல்நலக் குறைவு இப்போது சீராகும். வருமானமும் தேவையான அளவிற்கு இருப்பதால், பணப் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. நெருங்கிய உறவினர்களுடன் நிலவிய கருத்து வேற்றுமை நீடிக்கிறது. திருமண முயற்சிகளில் எதிர்பாராத தடங்கல்களும், மனக் குழப்பமும் உண்டாகும். உத்தியோகம் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ கணவர் - மனைவியரிடையே தற்காலிகமான பிரிவு ஏற்படக் கூடும். பூர்வீகச் சொத்து ஒன்று கை நழுவிப் போகவும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. நீதிமன்ற வழக்குகள் இருப்பின், நீடிக்கும்.

உத்தியோகம்: உங்கள் பொறுப்புகளிலும், கடமைகளிலும் அதிக கவனத்துடன் இருப்பது அவசியம். மற்றபடி, மேலதிகாரிகள், நிர்வாகத்தினர் ஆகியோருடன் உள்ள நல்லுறவு நீடிக்கிறது. சக-ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையாது. “கொரோனா” சூழ்நிலை காரணமாக வேலை இழந்த கும்ப ராசியினருக்கு வேறு வேலை கிடைக்கும். ஆயினும், அது பலவகைகளிலும் திருப்தியை அளிக்காது. ஒப்புக்கொள்வது
எதிர்காலத்தில் பயன்படும்.

தொழில், வியாபாரம்: நியாயமற்ற போட்டிகள் நீடித்தாலும், உங்கள் லாபம் ஒரே சீராக நீடிக்கிறது. சககூட்டாளிகளினால் சிறு மனஸ்தாபம் ஏற்பட்டு, பின்பு சரியாகும். நிதி நிறுவனங்களினால், அவ்வப்போது பிரச்னைகள் ஏற்பட்டு, உடனுக்குடன் நல்லபடி தீரும். ஏற்றுமதித் துறையினருக்கு வரவேண்டிய பாக்கிகள் வசூலாவதில் மேலும் பிரச்னைகள் உருவாகும்.

உற்பத்திக்கு அவசியமான மூலப் பொருட் களின் (Raw Materials) விலை உயர்வது, கவலையளிக்கும். சந்தை நிலவரம், வியாபாரி
களுக்கு சாதகமாக இருக்கும்.கலைத் துறையினர்: பல மாதங்களாக, தொடர்ந்து நீடித்து வந்த பின்னடைவு நீங்கி, மீண்டும் வருமானம் வரத் தொடங்கும்.இருப்பினும், எதிர்பார்க்கும் அளவிற்கு வருமானம் இருக்காது. அரசியலில் ஈடுபட ஆர்வம் மேலிடும். கிரக நிலைகளின்படி, அரசியல் முயற்சிகள் ஓரளவே கைகொடுக்கும்.

தயாரிப்பாளர்கள் அளவோடு முதலீடு செய்து, சிறு படங்கள் தயாரிக்கலாம். ஆன்மிகம், சரித்திரம் ஆகியவற்றின் பின்னணியை வைத்து எடுக்கும் படங்கள் லாபகரமாகவே இருக்கும் (குரு-சுக்கிரன் நிலைகளின் அடிப்படையில்).

அரசியலில் பிரவேசிக்க கிரக நிலைகள் அனுகூலமாக இருப்பதால், முயற்சிக்கலாம். அரசியல் துறையினர்: பலர் கட்சி மாறுவது மூலம் பயனடைவார்கள். தற்போதுள்ள கட்சியில் எதிர்ப்பு அதிகரிக்கும். மேலிடத்து ஆதரவும் குறையும். “நன்றி”  என்ற சொல்லுக்கும், அரசியலுக்கும் இடையே உள்ள தூரம் மிக அதிகம் என்பது, ஒவ்வொரு அரசியல் பிரமுகருக்கும் நன்றாகவே தெரியும்! இதனை “அர்த்த சாஸ்திரம்” மிகவும் அற்புதமாக விளக்கியுள்ளது. “அரசியலில் நிரந்தர நண்பன் கிடையாது; நிரந்தர எதிரியும் கிடையாது” என்பதையும் அந்நூல் கூறுகிறது. தற்போதைய கிரக நிலைகள் கும்பராசியினருக்கு இவ்வுண்மையை உணர்த்துகிறது.

மாணவ - மாணவியர்: கல்வி முன்னேற்றம் தடையின்றி நீடிக்கிறது. சில சபலங்களும், எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும் மனதை அரித்தாலும், உங்கள் படிப்பை அவை பாதிக்காது. தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு அனுகூலமாக விளங்குகின்றன, படிப்பிற்கு ஆதிபத்யம் பெற்றுள்ள கிரகங்கள். வெளிநாடுகளில் உயர்கல்வி பயின்று வரும் மாணவமணிகளுக்குக்கூட அவரவர்களது “பிராஜக்ட்டு”களைக் குறித்த காலத்தில் முடிப்பதற்கு கிரகங்கள் சாதகமாக உள்ளன.

விவசாயத் துறையினர்: வருமானமும், விளைச்சலும் திருப்திகரமாக இருப்பினும், பணம் பல விதங்களிலும் விரயமாகும்.
ஆடு-மாடுகள் நோய்வாய்ப்படுவதால் மருத்துவச் செலவு பல மடங்கு உயரும். பழைய கடன்களினாலும், தொல்லைகள் உண்டாகும். அடிப்படை வசதிகள் பாதிக்கப்படக்கூடும்.

பெண்மணிகள்: அன்றாட குடும்பப் பிரச்னைகள், வருமானத்தை மீறிய செலவுகள், திருமண முயற்சிகளில் ஏற்படும் குழப்பங்கள், சிறு சிறு ஆரோக்கிய பாதிப்பு ஆகியவை மனதில் நிம்மதியின்மையை ஏற்படுத்தும்.அறிவுரை: நமது பெண்களுக்கே உரிய பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை
உதவும். கீழே தந்துள்ள பரிகாரங்கள் மிகவும் எளிதானவை. ஆனால், சக்திவாய்ந்தவை. கடைப்பிடித்தால் போதும். துன்பங்கள் சூரியனைக் கண்ட பனிபோல் “பளிச்” என்று மறைந்துவிடும்.

பரிகாரம்: 1. வசதியுள்ள அன்பர்கள், கர்நாடகாவில், “மாண்டியா” நகருக்கு அருகிலுள்ள நாகமங்களா க்ஷேத்திரம் சென்று, அங்குள்ள 2,500 ஆண்டுகளுக்கும் முந்தைய ஸௌமிய கேசவ பெருமாள் திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராகு, கேதுவுக்கு நெய் தீபம் ஏற்றிவருது அற்புத பரிகாரமாகும். பிறவியில் ஒவ்வொருவரும் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய அழகிய, சக்திவாய்ந்த கோயில் இது. 2. தினமும் காலையில் நீராடிய பின்பு காகத்திற்கு 9 சாத உருண்டைகள், நெய், சிறிது பருப்பு, எள் சேர்த்து வைப்பது சூட்சும பரிகாரமாகும். 3. அருகிலுள்ள திருக்கோயிலில் 24 சனிக்கிழமைகள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வருதல் கைமேல் பலன்தரும்.4. தினமும் காலை, மதியம், மாலையில் 24 அல்லது 48 காயத்ரி மகாமந்திரம் சொல்லிவருதல், இதற்கு இரண்டு நிபந்தனைகள்:  1. அசைவம் கூடாது 2. பெரியோரிடம் காயத்ரி மகா மந்திர உபதேசம் பெற்றிருக்க வேண்டும்.
அனுகூல தினங்கள்:
சித்திரை 1, 4 - 9, 14-16, 20 - 22, 27, 28
சந்திராஷ்டம தினங்கள்:
11லிருந்து 13 நடுப்பகல் வரை.

மீனம்

குடும்பம்: பெரும்பாலான கிரகங்கள் உங்களுக்கு அனுகூலமாகவே நிலைகொண்டுள்ளன. ராகு, சுக்கிரன், புதன், குரு பகவானால் நன்மைகள் ஏற்படும். பணவசதி திருப்திகரமாக உள்ளது. வீண் செலவுகள் கட்டுக்குள் அடங்கியே இருக்கும். குடும்பச் சூழ்நிலை மன அமைதியைத் தரும். மனத்தைத் தொடர்ந்து அரித்து வந்த “கொரோனா” பற்றிய அச்சம் நீங்கும். திருமண முயற்சிகள் வெற்றிபெற்று, நல்ல வரன் அமையும். மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய மாதம் இது. குழந்தைகளுடன் உல்லாசப் பயணம் ஒன்று சென்று வருவதற்குச் சாத்தியக்கூறு உள்ளதை, சுக்கிரனின் நிலை குறிப்பிட்டுக் காட்டுகிறது. “கொரோனா” அச்சம் இச்சிறு உல்லாசப் பயணத்திற்குக் குறுக்கே நிற்காது. ஆரோக்கியம் திருப்திகரமாக உள்ளது - கிரகநிலைகளின்படி!உத்தியோகம்: பல நன்மைகளை இம்மாதம் நீங்கள் எதிர்பார்க்கலாம். மேலதிகாரிகளின் போக்கில் நல்ல மாறுதல் ஏற்படும். அலுவலகச் சூழ்நிலை அனுகூலமாகவே இருக்கும். ஒருசிலருக்கு இடமாற்றம் அல்லது பொறுப்புகளில் மாற்றம் ஏற்படக்கூடும். புதிய வேலைக்கு முயற்சிக்கும் மீன ராசி அன்பர்களுக்கு மனத்திற்குப் பிடித்த வேலை கிட்டும். சிறு பதவியுயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு
உள்ளது.

“கொரோனா” தொற்று காரணமாக மூடப்பட்ட பல தொழில் நிறுவனங்கள் மீண்டும் செயல்
படத் தொடங்குவதை இம்மாதம் அனுபவப்பூர்வமாகக் காணலாம். அதனால் பலருக்கு மீண்டும் பணிகள் கிட்டும்.
தொழில், வியாபாரம்: சந்தை நிலவரம் படிப்படியாகவும், வேகமாகவும் சாதகமாகவும் மாறும். விற்பனையும், லாபமும் அதிகரிக்கும். அரசாங்க ஆதரவும், சலுகைகளும் கைகொடுக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமை, மனத்திற்கு இதமாகவே இருக்கும். உற்பத்தியை அதிகரிக்கலாம். ஏற்றுமதித் துறையினருக்கு வெளிநாட்டு ஆர்டர்கள் மீண்டும் வர ஆரம்பிக்கும்.

வேலையை விட்டுவிட்டு வெளி மாநிலங்களுக்குச் சென்றுவிட்ட தொழிலாளிகள், பணிக்குத் திரும்புவர். விற்பனை விறுவிறுப்பு அடைவதால் லாபம் உயரும். புதிய முயற்சிகளிலும் புதிய முதலீடுகளிலும் அளவோடு ஈடுபடலாம்.கலைத் துறையினர்: பல மாதங்களாகவே எவ்வித வாய்ப்புமின்றி, மனம் துவண்ட உங்களுக்கு, நம்பிக்கை துளிர்க்கும் மாதம் இந்தச் சித்திரை! அந்த அளவிற்கு ஜீவன, பாக்கிய, லாப ஸ்தானங்கள் சுப-பலம் பெற்றும், தோஷமின்றியும் உள்ளன.

அரசியல் துறையினர்: அரசியல் துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள கிரகங்கள் சுப-பலம் பெற்றுத் திகழ்வதால், அரசியல் பிரமுகர்களுக்கு உற்சாகமான மாதம் இது. தேர்தலில் நின்றால் வெற்றி உறுதி! வெற்றிபெற்றபின், செல்வாக்குள்ள பதவி ஒன்றும் கிடைக்க நல்ல வாய்ப்பு உள்ளது, கிரக நிலைகளின்படி! லாபகரமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பயன்படுத்திக் கொள்வது உங்கள் திறன்.

மாணவ - மாணவியர்: வித்யா (கல்வி) காரகரும், வித்யா ஸ்தானமும் (கல்வி உயர்வை எடுத்துக்காட்டும் ராசி) அனுகூலமாக இருப்பதால், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கும்ப ராசியில், அதிசாரகதியில் உள்ள குரு பகவான், புதனின் வீடான மிதுனத்தைத் தனது 5-ம் சுபப்பார்வையாகப் பார்ப்பதும், கல்வி உயர்வுக்கு உதவுகிறது.

விவசாயத் துறையினர்: “வசந்த மாதம்’’ எனப் போற்றப்படும் சித்திரை, விவசாயி களுக்கு ஆனுகூலமான காலகட்டமாகும். பயிர்கள் செழித்து வளரும். புஷ்பங்கள் அதிக அளவில் பூக்கும். மதுரை மல்லிகை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது பிரசித்தம். சூரியன் விதைகளுக்கும், பயிர்களுக்கும் உயிர் சக்தியை அளிக்கிறது. சந்திரன், தண்ணீர் வசதியைக் கொடுக்கிறது. செவ்வாய் வளமான விவசாய பூமியைத் தந்து உதவுகிறது. இந்த சூட்சுமத்தை ரிக், அதர்வண வேதங்கள் விவரித்துள்ளன. இந்த மாதம் நல்ல அபிவிருத்தியை உங்களுக்கு அளிக்க உள்ளது, உங்கள் பொருளாதார நிலையை சரிசெய்துகொள்ள உகந்த நேரமிது!

பெண்மணிகள்: பல அம்சங்களிலும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கவுள்ளது இந்தச் சித்தரை மாதம்! குடும்பத்தின் சூழ்நிலை மனநிறைவையும், நிம்மதியையும் அளிக்கும். கணவருக்கு அலுவலகத்தில் ஏற்படும் நன்மைகள் மகிழ்ச்சியைத் தரும். திருமண வயதிலுள்ள மங்கையருக்கு வரன் நிச்சயமாகும்.  வேலைக்கு முயற்சித்துவரும் பெண்மணிகளுக்கு நல்ல நிறுவனத்தில், மனத்திற்குப் பிடித்த வேலை கிடைக்கும்.

அறிவுரை: 1. காலம் அளிக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.2. ஜென்ம ராசியில் உச்சகதியில் உள்ள சூரியனால், உடலில் சர்ம உபாதைகள் ஏற்படக்கூடும். அவயங்களுக்கு குளிர்ச்சியளிக்கும் இளநீர் மற்றும் நுங்கு, பதநீர் குளிர்ச்சி (ஐஸ்கிரீம்களைத் தவிர்த்து), உணவு
வகைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏற்கெனவே நாங்கள் சுட்டிக்காட்டியபடி, ஜோதிடமும், ஆயுர்வேதமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த (Inter linked) கலைகளாகும்.

பரிகாரம்: 1.தினமும் சூரியனை மானஸீகமாக வணங்கிவரவும். 2. பித்ருக்களுக்கு (மறைந்த முன்னோர்கள்) தினமும் சிறிது பருப்பு, நெய், எள் சேர்த்த சாத பிண்டம் காகத்திற்கு வைப்பது, சூரிய பகவானுக்கு மிகவும் பிடித்த பரிகாரமாகும். பித்ருக்களின் ஆசி எத்தகைய கிரக தோஷமானாலும் போக்கிவிடும். 3. 24 ஞாயிற்றுக்கிழமைகள், காலையில் 7.30 மணிக்குள் கிழக்கு நோக்கி, மண்
அகலில் 2 நெய் தீபங்கள் ஏற்றி வருதல் கைமேல் பலனளிக்கும் மகத்தான பரிகாரமாகும்.  
அனுகூல தினங்கள்:

சித்திரை 3 - 5, 10 - 12, 16 - 18,  23 - 26, 29, 30
 சந்திராஷ்டம தினங்கள்:
13 நடுப்பகல் முதல் 15 பிற்பகல் வரை.