அருணகிரி உலா-118 அருவமும் உருவமும் ஆகிய அநாதி



தமது க்ஷேத்திரக் கோவைத் திருப்புகழில், அருணகிரி நாதர் அடுத்தபடியாக ‘கம்புலாவிய காவேரி சங்கமுகம்’ என்று காவிரிப் பூம்பட்டினத்தைக் குறிப்பிட்டுப் பாடுகிறார். இன்று பூம்புகார் எனப்படும். இத்தலம் வைப்புத் தலமாகவே திருப்புகழில் குறிப்பிடப்பட்டுள்ளது. [ஒருவேளை இங்கும் அவர் பாடியிருந்து நமக்கு ஓலைச் சுவடி கிடைக்காமல் போயிருக்கலாம்] பல்லவ மன்னன் வழிபாடு செய்த தலம். சம்பந்தப் பெருமான் ‘பட்டினத்துப் பல்லவனீச்சுரம் என்று குறிப்பிட்டுப்பாடியுள்ளார்.

‘‘எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான் இமையோர்
 கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்ணுதல் நண்ணும் இடம்
 மண்ணார் சோலைக் கோல வண்டு வைகலும் தேன் அருந்தி
 பண்ணார் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே’’

இறைவி சௌந்தர நாயகி. பட்டினத்தார், இயற்பகை நாயனார் ஆகியோர் அவதரித்த திருத்தலம். சிலப்பதிகாரம் காரணமாகப் பிரபலமடைந்த தலமும் கூட பல்லவனேசுரர் கோயிலில், விநாயகர், பெரிய உருவமாக வீற்றிருக்கும் முருகப் பெருமாள், பட்டினத்தார், இறைவன், இறைவி ஆகியோரின் தனிச் சந்நிதிகளைத் தரிசித்து மகிழலாம்.

க்ஷேத்திரக் கோவைப் பாடலில் இருபத்து ஐந்தாவது தலமாக அருணகிரியார் திருச்சிராப்பள்ளியைக் குறிப்பிட்டுள்ளார். நகரில் எங்கிருந்து பார்த்தாலும், கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் சிராமலை உச்சிப்பிள்ளையார் கோயிலைத் தரிசிக்கலாம். விபீஷணரிடமிருந்துரங்கநாதரைக் கவர்ந்து விட்டு மலைக்கோட்டையின் உச்சியில் சென்றமர்ந்த பிள்ளையாரால் பிரசித்தி பெற்ற தலம். மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், நடுவில் தாயுமானவராக சிவபெருமானும் உச்சியில் விநாயகரும் அமர்ந்திருக்கும் தெய்வத் திருமலை இது. இயற்கையாக அமைந்த அகழியாக விளங்குகிறது காவேரி நதி.

மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரை வணங்கிப் படியேறி மத்தியிலுள்ள தாயுமான சுவாமி சந்நிதியை அடைகிறோம். கருவறையில் மூலவர் பெரிய லிங்கத் திருமேனியாகக் காட்சி அளிக்கிறார். வடமொழியில் மாத்ரு பூதேசுவரர் எனப்படுகிறார். இவ்விறைவனிடம் பெரும் பக்தி கொண்ட ரத்னவதி எனும் பெண் மகப்பேறு வேதனை அடைந்த காலத்தில் காவிரியினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அக்கரையிலிருந்து அவள் தாய் வந்து சேர முடியவில்லை. இறைவனே தாயாக வந்து ரத்னவதிக்கு சுகப்பிரசவம் செய்வித்து மறைந்தார்.

வெள்ளம் வடிந்த பின் ரத்னவதியின் தாயார் தாமதமாக வந்து சேர்ந்த பின்னரே உண்மை தெரிய வந்தது. எனவே இறைவன் தாயுமானவர் [ தாயும் ஆனவர்] எனப் பெயர் பெற்றார்.சாரமாமுநிவர் செவ்வந்தி மரத்தினை நாகலோகத்திலிருந்து கொண்டு வந்து அதன் பூக்களால் சிவனைப் பூசித்ததால் இறைவனுக்குச் செவ்வந்தி நாதர் என்ற பெயரும் உண்டு. இறைவி மட்டுவார் குழலி என்றும் சுகந்த குந்தளாம்பிகை என்று வடமொழியிலும் குறிப்பிடப்படுகிறார்.

அருணகிரியார் சிராப்பள்ளியில் 16 பாடல்கள் பாடியுள்ளார். ஒரு சிலவற்றை இங்கு பார்க்கலாம்.‘அந்தோ மனமே’ எனத் துவங்கும் திருப்புகழில் ‘சிராப்பளி’ எனும் இத்தலப் பெயரை ஜெபிப்போர் மனமாகிய பூமியில் வீற்றிருக்க விரும்பும் பெருமாளே என்று பாடுகிறார்.

‘‘இந்தோடிதழ் நாகம காக்கடல்
கங்காளமி னார்சடை சூட்டிய
என்தாதைச தாசிவ கோத்திரனருள்பாலா
எண்கூடரு ளால்நௌவி நோக்கியை
நன்பூமண மேவிசி ராப்பளி
யென்பார்மன மேதினி நோக்கிய
பெருமாளே’’

பிறை நிலா, கொன்றை, பாம்பு, பெருங்கடல் போன்ற தங்கை, எலும்புக் கூடு இவற்றை ஒளி வீசும் ஜடையில் தரித்துள்ள என் பிதாவான சதாசிவ கோத்திரன் அருளிய பாலனே !வள்ளியின் தவத்தை மெச்சி, மான் கண்ணியாம் அவளைக் களவியல் வழியில் திருமணம் செய்தவனே ! சிராப்பளி எனும் தலப்பெயரை செபிப்போர் மனமாகிய பூமியில் வீற்றிருக்க விரும்பும் பெருமாளே ! என்கிறார்.

இறைவனுக்கு சிவம், சக்தி, நாதம், விந்து என்று நான்கு அருவத் திருமேனிகளும், மகேசன், ருத்ரன், மால், அயன் எனும் உருவத் திருமேனிகளும், சதாசிவம் எனும் அருஉருவத் திருேமனியும் உண்டு. சதாசிவ கோத்திரன் அருள் பாலா என்று பாடியுள்ளதால் முருகவேளும் தந்தையைப் போல அருவுருவத் திருமேனியன் என்று கொள்ளலாம்.

‘‘அருவமும் உருவமும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்’’
[ கந்தபுராணம்]
அப்பா பெருமான், சிராப்பள்ளிப் பதிகத்தில் தமது நெஞ்சை அழைத்து,
‘‘நெஞ்சே ஒன்று சொல்லக்கேள், திருச்சிராப்பள்ளி
என்றலுந் தீவினை தரிச்சிராது நடக்கும் நடக்குமே’’
என்கிறார். அருணகிரி நாதரும் மனத்தை அழைத்து, நக்கீரர் குறிப்பிட்டிருக்கும் ஆறுஆற்றுப்படைத் தலங்களின் பெயர்களைச் செப்பி வணங்குமாறு கந்தர் அந்தாதியில் கூறியுள்ளார்.

‘……. வானார் பரங்குன்று, சீரலைவாய் திருவாவினன்குடி, ஏரகம், குன்று தோறாடல், சென்று அதிர் உவா இனன் குடி கொண்ட தண்கார் வரை (சோலைமலை) செப்புமினே’’‘‘ஆறு திருப்பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன் கூறுமவர் சிந்தை குடிகொண்டானே’’
[கந்தர் கலி வெண்பா]
‘‘மனமே ! மைந்தா குமரா எனும் ஆர்ப்புய மறவாதே’’ என்றும் இங்கு வேண்டுகிறார் அருணகிரியார்.
‘அரிவையர்’ எனத் துவங்கும் சிராப்பள்ளித் திருப்புகழில்
‘‘சயிலமெ றிந்தகை வேற்கொடு

மயிலினில் வந்தெனை யாட்கொளல்
சகமறி யும்படி காட்டிய ...... குருநாதா’’
என வரும் வரிகளில் திருவருணையில் முருகன் காட்சி அளித்த வரலாறு குறிக்கப்பட்டுள்ளது. சம்பந்தாண்டான் என்பவனோடு அருணகிரியார் வாது செய்தபோது, ‘அதல சேடனார் ஆட’ எனும் திருப்புகழைப் பாடி, ‘மயிலும் ஆடி நீ ஆடி வர வேணும்’ என வேண்ட, முருகப் பெருமான் சபையில் ஒரு கம்பத்தில் காட்சி அளித்து மறைந்தான். சம்பந்தாண்டான், தான் கூறியபடி தேவியை வரவழைக்க இயலாது தோற்றான். இந்த வரலாறு இங்கு
கூறப்பட்டிருக்கிறது.

பாடலின் இறுதியில் ‘‘உருவளர் குன்றுடையார்க்கொரு திலதமெனும்படி தோற்றிய பெருமாளே’’ என்கிறார். ‘குன்றுடையார்க்கு’ எனும் சொல், சம்பந்தப் பெருமானின் பதிகத்தை நினைவூட்டுகிறது.

‘‘நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
 றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்
 சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
 குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே.’’
‘குவளை பூசல்’ எனத்துவங்கும் சிராப்பள்ளிப் பாடலில்
அம்பிகையை இருபத்தோரு நாமங்களால் போற்றுகிறார்.
‘‘தவள ரூபச ரச்சுதி யிந்திரை
ரதிபு லோமசை க்ருத்திகை ரம்பையர்
சமுக சேவித துர்க்கைப யங்கரி ...... புவநேசை
சகல காரணி சத்திப ரம்பரி
யிமய பார்வதி ருத்ரிநி ரஞ்சனி
சமய நாயகி நிஷ்களி குண்டலி ...... யெமதாயி
சிவைம நோமணி சிற்சுக சுந்தரி
கவுரி வேதவி தக்ஷணி யம்பிகை
த்ரிபுரை யாமளை யற்பொடு தந்தருள் ...... முருகோனே
சிகர கோபுர சித்திர மண்டப
மகர தோரண ரத்நஅ லங்க்ருத
திரிசி ராமலை அப்பர்வ ணங்கிய ...... பெருமாளே.’’

வெண்ணிறங் கொண்ட சரஸ்வதி, லட்சுமி, ரதி, இந்திராணி, கிருத்திகை மாதர், அரம்பையர்கள் முதலானோர் கூட்டத்தால் வணங்கப் படுகின்ற துர்காதேவி, பயங்கரி, புவனேசுவரி; சகல காரியங்களுக்கும் காரணமாயிருப்பவள், சக்தி, முழுமுதலாம் தேவி, இமய அரசன் மகளாம் பார்வதி, ருத்ரி, அழுக்கற்றவள், சமயங் களுக்குத் தலைவி, உருவமற்றவள், சிவனது கிரியாசக்தி, எனது தாய்;

சிவன்தேவி, மனத்தை உன்னத நிலைக்கு எழுப்புபவள், அறிவு ரூப ஆனந்த அழகி, கௌரி, வேதத்தில் சிறப்பாக எடுத்து ஓதப்பட்டவள், அம்பிகை, பிங்கலை, இடைகலை, சுழுமுனை எனும் மூன்று நாடிகளிலும் இருப்பவள், சியாமள நிறத்தவள், ஆகிய பார்வதி அன்புடன்
பெற்றருளிய முருகோனே !மலை உச்சியும் கோபுரமும் அழகான மண்டபங்களும், மகர மீன் வடிவில் அமைந்த அலங்காரத் தொங்கல்களும் , ரத்ன அலங்காரங்களும் நிரம்பிய திரிசிராமலையில் எழுந்தருளியுள்ள அப்பராம் சிவபெருமான் வணங்கிய பெருமாளே !

வள்ளி நாயகியைக் களவாடிய முருகனைப் (‘‘உரத்தோளிடத்தில் குறத்தேனை வைத்திட்டொளித்தோடும் வெற்றிக் குமரேசா’’) பின் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டு வேடர்கள் வர, அவர்களைக் கண்டு வள்ளி அஞ்சினாள், ‘கவலைப்படாதே’ என்று கூறிய முருகன் அவரைத் தமது வேைலக் கொண்டு மடிவித்தார். பின்னர் முருகவேள் கூறியபடி வேடர்களை வள்ளி எழுப்ப,உயிர் பெற்றெழுந்த வேடர்கள், வள்ளியைத் திருடியவர் தாம் வழிபடும் ஆண்டவனே என்று உணர்ந்தனர்.

கந்தபுராணமும் தணிகைப் புராணமும் சேவலின் ஆர்ப்பால் வேடர்கள் மாண்டு வீழ்ந்தனர் என்கின்றன. ஆனால் அருணகிரிநாதர் வேல் கொண்டு முருகன் வேடர்களை மடிவித்தான் என்கிறார் ‘வெருட்டி’ எனத் துவங்கும் சிராப் பள்ளிப் பாடலில்,

‘‘திருட்டு ராக்ஷதர் பொடிபட வெடிபட
எடுத்த வேற்கொடு கடுகிய முடுகிய
செருக்கு வேட்டுவர் திறையிட முறையிட ...... மயிலேறும்’’

[ உயிர் பெற்றெழுந்த வேடர்கள் முருகனிடம், ‘தாங்கள் எங்கள் ஊருக்கு எழுந்தருளி முறைப்படி வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்’ என்று முறையிட்டுக் கொண்டார்கள். இங்ஙனம் வேடர்கள் முருகனை வணங்கி முறையிட்டதை ‘வேட்டுவர் திறையிட முறையிட’ என்று பாடுகிறார்.]
பொருளின் மேல் எனத் துவங்கும் பாடலில்,

‘‘கார்முக வன்பாரன கொடிய வேட்டுவர்
கோகோ கோவென மடிய நீட்டிய கூர் வலாயுத’’என்கிறார்.
 ‘‘சோரனென நாடிவரு வார்கள்வன வேடர்விழ  
சோதிகதிர் வேலுருவு மயில்வீரா’’ என்பார்.
‘நீல முகிலான’ எனத் துவங்கும் திருப்புகழில்.

மூன்று தலைகள் கொண்ட ‘திரிசிரன்’ எனும் அசுரன் வழிபட்டதாலும் இது திரிசிராப்பள்ளி என்று பெயர் பெற்றது என்பர். மூன்று சிகரங்களை உடைய மலை ஆதலாலும் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர். ‘‘ஆதியிலே சமணத் தலைவர் ‘சிரா’ என்பவரின் பள்ளியாகிய விளங்கிய இவ்விடத்தை மகேந்திர வர்மன் எனும்பல்லவ மன்னன், சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்குத் திரும்பிய திருநாவுக்கரசரால் கவரப்பட்டு சைவ சமயத்தைத் தழுவிய போது இவ்விடத்தை சிவாலயமாக மாற்றினான் என்றும் கூறுகிறது வரலாறு ’’ என்பார் முனைவர் இரா. செல்வக் கணபதி அவர்கள். எப்படியாயினுமசரி, இவ்விடத்தின் பெயரைத் திருச்சி ’ என்று சுருக்கிவிட்டது வருத்தத்திற்குரிய விஷயம் தான்.

‘‘சிட்ட நாதா சிராமலை யப்பர் ஸ்வாமீ மகாவ்ருததெர்ப்பை யாசா ரவேதியர் தம்பிரானே.‘‘பட்டி மாடான நானுனை விட்டி ராமே யுலோகிதபத்ம சீர்பா தநீயினி வந்துதாராய்எனும் திருப்புகழ்ப் பாவைப் பாடி மகிழ்வோம்.

(உலா தொடரும்)

சித்ரா மூர்த்தி