ஆன்மிகத்தோடு வரலாற்றையும் அறிவோம்!



வணக்கம்  நலந்தானே!

நாம் எப்போது எந்த ஊருக்குச் சென்றாலும் முதலில் அந்த ஊரில் பெரிய கோயில் உள்ளதா என்று பார்ப்போம். அது வேலை நிமித்தமாக வந்தாலும் சரிதான் அல்லது கோயில்களுக்காகவே மேற்கொள்ளப்படும் ஆன்மிகச் சுற்றுலாவாக வந்தாலும் சரிதான். ஆனால், அதற்கு முன்னர் வேறு சில விஷயங்களை புரிந்து கொண்டால், அந்த ஆன்மிகச் சுற்றுலாவை நாம் அறிவார்ந்த முறையில் மாற்றிக் கொள்ளலாம்.

நாம் எல்லோரும் இறை பக்தி மிகுந்த பக்தர்கள்தான். எங்கு கோயிலுக்குச் சென்றாலும் இறைவனை நோக்கி வேண்டிக் கொண்டு சில பரிகாரங்களை மேற்கொள்ளும் பக்தர்கள்தான். அதில் எந்தத் தவறும் இல்லை. நம்பிக்கை என்பது தனிப்பட்ட விஷயமாகும். அது அந்தரங்கத்திலும் அந்தரங்கமானது. எனக்கு ஏன் இந்த விஷயங்களில் நம்பிக்கை என்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். அவற்றை மிகச் சாதாரணமாக மூட நம்பிக்கை என்று சொல்லிவிட்டு நகர முடியாது. அது முற்றிலும் என் ஆழ்மனதோடு தொடர்புடையவை.

இது இப்படியே இருக்கட்டும். இப்படி கோயில்களுக்குச் செல்லும்போது, உதாரணமாக தஞ்சாவூர் பெரிய கோயிலை பார்க்கச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அக்கோயில் குறித்த வரலாற்றுத் தகவல்களை நன்கு தெரிந்து கொண்டு சென்றால் அந்தக் கோயில் நம்முள் இன்னும் ஆழமான மாற்றத்தை உண்டு பண்ணும். அதற்கு என்ன செய்ய வேண்டுமெனில் ஆன்மிகம் சார்ந்த நூல்களான துதிகளையோ அல்லது புராணங்களையோ எப்படி படிக்கின்றீர்களோ அதுபோலவே வரலாற்று நூல்களையும் வாங்கி வைத்துக் கொண்டு படியுங்கள்.

எப்படி நம் மனதை ஆன்மிக புத்தகங்கள் படிக்கப் பழக்கமாக்கி வைத்திருக்கிறோமோ, அதுபோலவே வரலாற்று புத்தகங்களை படிக்கவும் பழக்கமாக்கிக் கொள்ளலாம். வரலாற்று ஆய்வு புத்தகங்கள் நூற்றுக் கணக்கில் உள்ளன. உதாரணமாக நீலகண்ட சாஸ்திரி, சதாசிவ பண்டாரத்தார், குடவாயில் பாலசுப்ரமணியன், இரா. கலைக்கோவன்… என்று வரலாற்று ஆய்வாளர்களின் பட்டியல் நீண்டது.

இவர்களில் தொடங்கினாலே நீங்கள் இன்னும் பலரை அடையாளம் கண்டு கொள்வீர்கள். இவர்களும், இவர்களைப்போன்ற நிறைய வரலாற்று ஆய்வாளர்களும் இந்த மண்ணின் வரலாற்றிற்கும், மரபுக்கும், கலாச்சாரத்திற்கும், கோயில்களுக்கும் எப்பேற்பட்ட அரும்பணியை செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்தால் பிரமிப்பு ஏற்படும். இன்றிருக்கும் இணைய வசதியை பயன்படுத்திக் கொண்டால் சகல வரலாற்று புத்தகங்களை குறித்தும் அறிந்து கொள்ளலாம்.   

நீங்கள் பக்தி மயமான உபந்நியாசங்களை கேட்டிருப்பீர்கள். பாடல்களை ரசித்திருப்பீர்கள். அதேசமயம் அதற்கு இணையான இந்த நாட்டின் ஆன்மிக மரபிற்கு வரலாற்று ஆய்வாளர்கள் செய்த பணியானது கொஞ்ச நஞ்சமல்ல. அதனால், வரலாற்றையும் ஆன்மிகத்தையும், கோயிலையும் நாம் பிரிக்கவே முடியாது. ஒவ்வொருமுறை கோயிலுக்குச் செல்வதற்கு முன்னர் இந்தக் கோயிலின் வரலாறு என்னவாக இருக்கும் என்று உங்களுக்குள் தேடல் உருவானாலே போதும். அது மெல்ல வரலாற்று ஆய்வாளர்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிடும். ஏனெனில், வரலாறும் ஆன்மிகமும் எப்போதும் நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும்.

- கிருஷ்ணா

(பொறுப்பாசிரியர்)