பதினோரு பாசுரங்கள் பாடி ஆழ்வார் ஆனவர்-மதுரகவி ஆழ்வார் அவதார திருநாள்: 26 - 4 - 2021



ஆழ்வார்கள் பன்னிருவர். இந்த 12 ஆழ்வார்களும் இணைந்து பாடிய பாசுரங்கள் நான்காயிரம். இந்த பன்னிரண்டு ஆழ்வார்களில் மிகக் குறைந்த பாசுரங்கள் பாடி ஆழ்வார்கள் ஆனவர்கள் இரண்டு பேர். ஒருவர் திருப்பாணாழ்வார். அவர்  பத்து பாசுரங்கள் பாடி ஆழ்வார் ஆனார். அடுத்து பதினோரு பாசுரங்களைப் பாடி ஆழ்வார் ஆனவர் மதுரகவி யாழ்வார். திருப்பாணாழ்வார் பாடிய பாசுரங்கள் அமலனாதிபிரான் என்று தொடங்குவதால், அமலனாதிபிரான் பிரபந்தம் என்று வழங்கப்படுகிறது.

மதுரகவி ஆழ்வார் பாடிய பிரபந்தம் கண்ணிநுண் சிறுத் தாம்பு என்று தொடங்குவதால், கண்ணிநுண் சிறுத்தாம்பு பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. திருப்பாணாழ்வார் பாடிய பத்து பாசுரங்கள் பெருமானைப் பற்றிய பாட்டாகும். மதுரகவியாழ்வார் பெருமாளைப்  பாடவில்லை. பெருமாளைப் பாடிய நம்மாழ்வாரின் பெருமையைப்  பாடியதால் கண்ணிநுண் சிறுத்தாம்பு ஆசாரிய பிரபந்தம் என்று போற்றப்படுகிறது.

எல்லா திவ்ய தேசங்களிலும் வைணவ வீடுகளில் நடக்கும் வழிபாடுகளிலும், திருவாய்மொழி சேவிப்பதற்கு முன் மதுரகவியாழ்வார் பாசுரங்களை பாடியே தொடங்குவார்கள். இவர் ஏன் நம்மாழ்வாரை பற்றி மட்டும் பாடி, ஆழ்வார் என்கிற உயர் நிலை அடைந்தார் என்பதை அறிய,
அவர் வாழ்க்கையை அறிய வேண்டும். செந்தமிழும், தெய்வீகமும் கலந்த பாண்டிநாடு.எல்லா இனிய வளங்களும் பெற்ற நாடு. அங்கே திருக்கோளூர் என்றொரு ஊர். அவ்வூரில் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்த அந்தணர் மரபில் ஸ்ரீவைகுண்டத்தில் நித்ய சூரியாக  எம்பெருமானுக்கு ஒழிவில் காலமெல்லாம் கைங்கர்யம் செய்து வரும் குமுதர் என்ற பக்தரின் அம்சமாக தோன்றினார், மதுரகவிகள்.

அவர் பிறந்த மாதம் சித்திரை. பிறந்த வருஷம் ஈஸ்வர வருஷம். நட்சத்திரம் சித்திரை. வெள்ளிக்கிழமை. வேதங்கள், வேதாந்தங்கள் என்று மரபுக்கே உரிய கல்வியைக் கற்று இளம் வயதிலேயே பெரிய பண்டிதர் ஆனார்.தமிழில் இனிமையான (மதுரமான) கவிகளைப் பாடுபவர் என்ற பொருளில், மதுரகவியார் என்றே  அன்புடன் அழைக்கப்பட்டார்.வயது வந்ததும், பல்வேறு திருத்தலங்களில் உள்ள எம்பெருமான்களை
தரிசிப்பதற்காகப் புறப்பட்டார்.

வடமதுரை, காசி, கயை, நைமிசாரண்யம், சாளக்கிராமம், பதரி காச்ரமம் என்று அத்தனை தலங்களையும் தரிசித்தவர் ஸரயூ நதிக் கரையில் அமைந்திருக்கும் அயோத்தி மாநகரத்தை அடைந்தார்.அங்கே அர்ச்சாவதார அழகனாக   எழுந்தருளியிருக்கும் ராம பிரானைச் சேவித்துக்கொண்டே பலநாட்கள் தங்கியிருந்தார்.ஓர் நாள் இரவு.எங்கே  இருந்தாலும் தான் பிறந்த ஊரான திருக்கோளூரின் திசைநோக்கித் தொழுவதை வழக்கமாகக் கொண்டிருந்த மதுரகவிகள், அன்றும் தென்திசை நோக்கி தியான ரூபமாகத் தொழுது நின்றபோது, வானத்தில் அதிசயிக்கத்தக்க ஓர் ஜோதியைக் கண்டு வியந்தார்.

எங்கே இருந்து இந்த ஜோதி வருகிறது என்பதை ஊகித்துப் பார்த்தார்.  சரி, ஏதோ ஓர் அதிசயம் இந்த பூலோகத்தில் நடைபெற்றிருக்கிறது.  அதனை அறிந்து வருவோம் என்று கருதி உடனே தென்திசை  நோக்கி நடக்க ஆரம்பித்தார்.பகலில் ஓய்வெடுத்துக்கொண்டு இரவில் ஜோதி தெரியும் திசையையே ஆதாரமாகக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

நாட்கள் சென்றன.  பல நாட்கள் நடையாக  நடந்து திருக்குருகூர் அடைந்தார். திருக்குருகூரை அடைந்த அவர், வானத்தைப் பார்த்தபோது அந்த ஜோதி மறைந்துபோனது தெரிந்தது.உடனே அருகில் நின்றவர்களை விசாரித்தார்.  “ஐயா!  இந்த ஊரில் ஏதேனும் அதிசயம் நடக்கிறதா?”  என்று.

“ஆமாம்” என்று கூறிய அவர்கள், காரியார், உடையநங்கை தம்பதியினரைப் பற்றியும், அவர்கள் புதல்வராக ஓர் மகாநுபாவர் பிறந்திருப்பதையும், பதினாறு வருடங்கள் உண்ணாமலும் உறங்காமலும் அவர் யோகதிசையில் திருக்குருகூர் சந்நதி புளிய மரத்தடியில் எழுந்தருளியிருப்பதையும்
கூறினார்கள்.

உடனே, திருக்கோயிலுக்குப்  புறப்பட்டார் மதுரகவிகள்.  அங்கே அழகே ஓர் வடிவாய்,  சின்முத்திரையோடு, ஆடாது அசையாது, வாடாது, வதங்காது, அமர்ந்திருக்கும் பாலகனின் எழில் தோற்றத்தைக்கண்டார்.சற்றுநேரம் இவரும் தியானதிசையில் நின்றார்.பிறகு சுயஉணர்வு வந்து பாலகனைக் கைதட்டி அழைத்தார்.இவர் அழைப்பிற்கு அவரிடமிருந்து எந்த அசைவும் இல்லை.அவருடைய பார்வை உணர்வையும், செவிப்புலன் உணர்வையும் சோதிக்க எண்ணிய மதுரகவியார், ஓர் சிறிய கல்லை எடுத்து, அவர் முன் போட்டார்.

சட்டென்று அந்த ஞானதீபம் அசைந்தது.  ஆழ்வார் கண் மலர்ந்தார்.ஆயிரம் தாமரைப் பூக்கள் ஒன்றாக மலர்ந்த மலர்ச்சியும் குளுமையும், சூரிய ஒளியை விட அதிக வீட்சண்யம் உடைய ஒளியையும் தரிசித்த மதுரகவியார், “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத்தின்று எங்கே கிடக்கும்?”  என்று மெதுவாகக் கேட்டார்.அடுத்த நொடி அந்த இனிமையான குரலினை உலகம் கேட்டது.  வகுளாபரணரான ஆழ்வார், சோதிவாய்  மெல்லத் திறந்து, “அத்தைத் தின்று அங்கே கிடக்கும் ....” என்றார்.

கூட இருந்தவர்களுக்கு எதுவும் விளங்கவில்லை.  கேட்டவர்க்கும், சொன்னவர்க்கும், இவற்றையெல்லாம் தூண்டிவிட்ட எம்பெருமானுக்கும் தெரிந்த விஷயத்தை இவர்களால் அறிய முடியுமா என்ன?செத்தது என்றால் அசேதனமான சரீரம்.  (உடம்பு) சிறியது என்றால் உள்ளே இருக்கும் ஆத்மா.  பிறந்து இறக்கும்படியான சரீரம்.

இதிலே அழியாத உயிர். (ஆத்மா)
ஆத்மா (ஜீவாத்மா) மறுபடி மறுபடி
சரீரத்தை அடைந்து கர்மவினைகளை
அநுபவித்துக்கொண்டே இருக்கிறது.

இந்த ஆத்மா, வாழ்க்கையில் நிறைவடைவதேயில்லை.  எத்தனைதான் இருந்தாலும், மண்ணுலக சுக துக்கங்களைத்  திரும்பத்  திரும்ப அநுபவித்தும் சலிக்காமல் மறுபடியும் கர்மவினையில் சிக்கி சரீரத்தில் புகுந்து கிடப்பதிலேயே காலம் கழிக்கிறது.உயிரற்றதாகிய பஞ்சபூதங்களால் ஆன உடம்பில், உயிர் புகுந்து கொண்டு, (அணு பரிமாணமுள்ள ஜீவாத்மா), அந்த உடம்பால் உள்ள உணர்வுகளை (சுவை, ஒளி, ஊறு, ஓசை , நாற்றம்) அநுபவித்துக் கொண்டு அந்த உடம்பு சாயும் வரை அதிலேயே இருக்கிறது.

சித் எனப்படும் ஜீவாத்மா, அசித் எனப்படும் (உயிரற்ற) உடம்பில் புகுந்ததால் இரண்டும் இயங்குகின்றது.  அதன் பலனாக அது ஈஸ்வரனை அடைய வேண்டும்.  மாறாக, சித்தும் அசித்தும் இணைந்து இயங்கி சிற்றின்ப போகங்களிலே காலம் கழிக்கிறது.  சித்தானது வேறு உடம்பைத் தேடி அங்கேயும் இதே உலக இன்பங்களை நுகர்கிறது.சரீர ஆத்ம சம்பந்தத்தை இத்தனை அழகாகவும், அது உண்மையில் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அற்புதமாக இந்த கேள்வி பதிலின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.இதன் மூலம் கேள்வி கேட்டவர் ஞானத்தையும், பதில் சொன்னவரின் ஞானத்தையும் ஒன்றாக அறியமுடிகிறது.

அடுத்த கணம், வயதில் மூத்தவரான மதுரகவிகள், ஞானத்தில் மூத்தவரான நம்மாழ்வாரின் திருவடிகளில் வீழ்ந்தார்.
“அடியேனை ஏற்றருள வேண்டும்” என்று பிரார்த்தித்தார்.

இப்படிப்பட்ட சீடருக்காகவன்றோ வேறு யார் தொடர்பும் இல்லாமல், இத்தனை காலம் காத்திருந்தார் அவர்.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஆழ்வார் செந்தமிழால் எம்பெருமானைப் பாட ஆரம்பித்தார்.  அவற்றை மதுரகவியாழ்வார் ஓலைப்படுத்திக் கொண்டே வந்தார்.வேதம், தமிழில் ஆழ்வாரின் வாய்மொழியாக வெளிப்பட்டது.  அதை மதுரகவியாழ்வார் எழுதிக்கொண்டே வந்தார்.செயற்கரிய இந்த செயலுக்காகவும், ஆழ்வாரின் அபிமானம் பெற்று ஆசாரியரையே தெய்வமாக எண்ணியதாலும் மதுரகவியாழ்வார், ஆழ்வார்களின் வரிசையிலே வைக்கப்பட்டார்.

மாறன் சடகோபனைத் தவிர, வேறொன்றும் நானறியேன் என்று இறுதிவரை
இருந்தார் மதுரகவியாழ்வார்.
நாவினால் நவிற்று இன்பமெய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவுமற்றறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே

ஆசாரிய அபிமானம்மிக்க மதுரகவியாழ்வர் நம்மாழ்வாரின் திரு மேனியை வடித்து அதனை நாடோறும் வணங்கிவந்தார்.அவருடைய பிரபந்தங்களைப் பாடிப்பரப்பும் பணியிலும் ஈடுபட்டார்.  நம்மாழ்வாரின் பெருமையை “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்று தொடங்கும் பதினோரு பாக்களால் பாடினார்.திருக்குருகூரில் ஆழ்வாரின் அருச்சை   வடிவினை (சிலையான திருமேனியை) எழுந்தருள்வித்து, நாள்தோறும் கிரமமான வழிபாடுகளை நடத்திவந்தார்.வெகுகாலம் ஆசாரிய கைங்கர்யம் செய்து வந்த மதுரகவியாழ்வார், அந்த ஆசாரியன் கைங்கர்யத்தை நேரில் செய்ய (பரமபதத்தில் செய்ய) ஓர் நன் நாளில் திருநாடலங்கரித்தார்.

அமுதனார் தாம் இயற்றிய ராமாநுச நூற்றந்தாதியில், மதுரகவி ஆழ்வாரைப்பற்றிப் பாடும் போது, ராமானுசருக்கும் மதுரகவி ஆழ்வாருக்கும்  உள்ள தொடர்பைக் கொண்டாடுகிறார்.

“எய்தற்கரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனை -
சிந்தையுள்ளே
பெய்தற்கு இசையும் “பெரியவர்” சீரை உயிர்
களெல்லாம்
உய்தற்கு உதவும் ராமாநுசன் எம் உறுதுணையே!
என்று பாடுகிறார்.

இதில் மதுரகவி ஆழ்வாரை,“பெரியவர்” என்று கொண்டாடுகிறார்.பெரியவர் என்னும் பதத்தை, மதுரகவி ஆழ்வார் ஒருவருக்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளார்.மதுரகவியாழ்வரை பெரியவர் என்று எதனால் அமுதனார் சொல்கின்றார் என்பதற்கு ஒரு சுவையான விளக்கம்.
நம்மாழ்வாருக்கும்  பகவானுக்கும் யார் பெரியவன் என்ற விவாதம் நடக்கிறது.நம்மாழ்வார், “பகவானே உன்னை விட நான் பெரியவன். காரணம், நீ இரண்டு உலகங்களையும் (விண், மண்) உன்னிடம் வைத்திருக்கிறாய்.அப்படி வைத்திருக்கும் உன்னையே நான் என்னுள் வைத்திருப்பதால் நானே பெரியவன் என்பதை ஒப்புக்கொள்” என்று பாடிய பாடல் இது.

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்
செவிவழி உள்புகுந்து என்னுள்ளாய்  அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை ஆர் அறிவார்
ஊன்பருகு நேமியாய் உள்ளு.”
பெருமானை விட நம்மாழ்வார் பெரியவர் என்றால்,
அவரை தன்  உள்ளத்தில் வைத்திருக்கும் மதுகவியாழ்வார் பெரியவருக்கு பெரியவரல்லவா.
இதைத்தான் ராமானுஜ நூற்றந்தாதியில் பாடுகிறார்.

பெருமாள் கோயில்களில் நம் சிரசில் வைத்து அருளப்படும்,
‘சடாரி’ என்பது பெருமாளின் திருவடி நிலைகளாகும்.
நம்மாழ்வாரே பெருமாளின் திருவடிகளில் இருப்பதால் அவரது பெயரான’ சடகோபன்’ என்னும் பெயரே சடாரி என்று மருவியது.
“மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே”என்று பாடிய மதுரகவிகள் நம்மாழ்வாரின் திருவடிகளாக இருப்பவர்.
எனவே கோயில்களில் நம்மாழ்வார் சந்நதியில், சென்னியில்,
சாதிக்கப் படும் திருவடிகள் ‘மதுர
கவிகள்’என்று போற்றப்படுகின்றன.

இவருடைய அவதாரத் திருநாள், இவ்வருடம் சித்திரை 13 ஆம் தேதி
26 - 4 - 2021 திங்கட்கிழமையன்று
சகல வைஷ்ணவ ஆலயங்களிலும் வைணவர்களின் இல்லங்களிலும் கொண்டாடப்படுகிறது. நாமும் அவர் பாசுரங்கள் பாடி  நல்லருள்
பெறுவோம்.

முனைவர் ஸ்ரீராம்