தெளிவு பெறுஓம்



ரதசப்தமி நாளில் சூரியனின் ரதம் திரும்புவதாக சொல்கிறார்கள். ஒரு சிலர்  தை மாதம் முதல் நாள் அன்றுதான் சூரியன் பயணிக்கும் திசை மாறுகிறது  என்கிறார்கள். இந்த இரண்டு நாட்களிலும் பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறோம்.  இந்த இரண்டு நாட்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை விளக்க முடியுமா?
- ராமகிருஷ்ணன், அம்பத்தூர்.

தை மாதம் அமாவாசைக்குப் பின் வரும் ஸப்தமியை ரத ஸப்தமி என்று  குறிப்பிடுவர். தை மாதம் முதல் நாள் அன்று சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலத்தை மகர சங்கராந்தி என்று அழைப்பார்கள். பூமியின் தெற்கு  மூலையில் இருக்கும் சூரியன் வடக்கு நோக்கி தனது ரதத்தினைத் திருப்பும் காலம் என்பதால் இந்த நாளை உத்தராயண புண்யகாலம் என்றும் அழைப்பர். அறுவடையை முடித்த பிறகு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதம் முதல்  நாள் அன்று பொங்கல் வைத்து சூரிய வழிபாடு நடத்துகிறோம். சூரிய பகவான் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி தனது ரதத்தினைத் திருப்பியவுடனே தனது பயணத்தைத் துவக்கிவிடுவதில்லை.

வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வண்டி தனது  திசையை நேரெதிரே ஒரு ‘யு டர்ன்’ அடித்துத் திருப்பும்போது உடனடியாக எதிர்  திசையில் வேகம் எடுக்க முடியாதல்லவா.. மெதுவாக வண்டியைத் திருப்பி தன்னை நேர்படுத்திக்கொண்டுதானே எதிர்திசை பயணத்தில் வேகமெடுக்க முடியும். அவ்வாறு சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி தனது ரதத்தினைத்  திருப்பும் நாள் தை முதல் நாள் என்றும், முழுமையாக தனது ரதத்தினை வடக்கு  நோக்கித் திருப்பி நேர்படுத்திக்கொண்டு தனது பயணத்தினைத்  துவக்கும் நாள் ரத  ஸப்தமி என்றும் பொருள் கொள்ளலாம்.

இந்த நாளிலும் சூரிய பகவானை  உற்சாகப்படுத்த வேண்டி பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்கிறோம்.  சூரியனுக்கு உரிய ஸமித்து ஆன எருக்கஞ்செடியின் இலைகளைப் பறித்து ஏழு இலைகளை  தலையில் வைத்து ஸ்நானம் செய்கிறோம். (சூரியனின் ரதத்தில்  பூட்டப்பட்டிருக்கின்ற குதிரைகளின் எண்ணிக்கை ஏழு.) எளிதில் புரியும்படியாகச் சொல்ல வேண்டும் என்றால் தைத்திருநாள் என்பது கடந்த ஆண்டு  நமக்கு குறைவில்லாமல் அன்னமிட்ட சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விழா.

ரத ஸப்தமி என்பது இந்த ஆண்டும் விவசாயம் தழைத்து குறைவில்லாமல் எல்லோரும்  வயிறார உண்ண வேண்டும் என்பதற்காக சூரியனை பிரார்த்தனை செய்து துவக்கும்  விழா என்று பொருள் கொள்ளலாம். இந்த காரணத்தினால்தான் இரண்டு நாட்களிலுமே  சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறோம்.

பணிக்குச் செல்லும் நான் அலுவலகத்தில் வேலை முடிந்து வீடு திரும்ப இரவு 9 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. அதற்கு மேல் பூஜையறையில்
விளக்கேற்றி வழிபடலாமா?
- மணிமேகலை, சேலம்.

காலை முதல் இரவு வரை அலுவலகத்தில் கடுமையாக உழைத்துவிட்டு வீடு திரும்பியவுடன் விளக்கேற்றி வழிபட விரும்பும் உங்கள் எண்ணம் பாராட்டுதலுக்கு உரியது. இறைவனை வணங்குவதற்கு காலநேரம் அவசியமில்லை என்பதால் தாராளமாக நீங்கள் வீடு திரும்பியதும் முகம், கை, கால் அலம்பி சுத்தம் செய்துகொண்டு பூஜையறையில் விளக்கேற்றி வழிபடலாம்.

இரவு பத்துமணி முதல் அர்த்தஜாமத்திற்கான காலம் துவங்கிவிடுவதால் அதற்கு மேல் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டிய அவசியமில்லை. அதேபோல் நீங்கள் உறங்கச் செல்வதற்கு முன்னால் பூஜை யறையில் எரிந்துகொண்டிருக்கும் விளக்கினை குளிரச் செய்வதும் அவசியம். பொதுவாக விளக்கேற்றுவது என்பதை பகலும் இரவும் இணைகின்ற சந்தியா காலத்தில் செய்வது உத்தமம்.

ஒரு நாளைக்கு காலை, மாலை இருவேளையும் சந்தியாகாலம் வருகிறது. தினமும் காலையில் சூரிய உதயத்திற்குள் உறக்கத்தில் இருந்து எழுந்து குளித்துமுடித்து விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள். மாலை நேரத்தில் நேரம் கிடைக்கும்பொழுது பூஜை செய்ய முயற்சியுங்கள். பணியில் இருக்கும்பொழுது மாலை ஆறு மணி சுமாருக்கு வேலையில் இருந்தவாறே மானசீகமாக இறைவனை வணங்கலாம். வீடு திரும்ப தாமதமாகிவிட்டதே, இதற்கு மேல் விளக்கேற்றி வழிபாடு செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் வேண்டாம். உண்மையான பக்தி இருந்தாலே போதும், இறைவன் ஒளிமயமான வாழ்வினை நமக்கு ஏற்படுத்தித் தருவார்.

மயானக்கொள்ளை என்றால் என்ன?
 - கலைச்செல்வி, திருமங்கலம்.

மாசி மாத அமாவாசை நாளில் மயானக் கொள்ளை என்ற திருவிழா நடைபெறுவதைக் காண இயலும். அங்காள பரமேஸ்வரி அம்மன் மயானத்திற்குச் சென்று சூறையாடுவதாக ஐதீகம். மாசிமாத அமாவாசை நாளில் கும்ப ராசியில் சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்து சஞ்சரிப்பர். கதி இல்லாமல் மயானத்தில் பேயாய் அலைவோருக்கு அம்பாள் மோட்சகதி தரும் வகையில் இந்த மயானக்கொள்ளை விழா கொண்டாடப்படுகிறது.
நகரங்களில் உள்ள ஆலய வழிபாட்டு முறைக்கும் கிராமங்களில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் வழிபாட்டு முறைக்கும் பல்வேறு வித்தியாசங்கள் காணப்படுகின்றன. ஏன் இந்த முரண்பாடு?
 - சுந்தரமூர்த்தி, திருவாண்டார்கோவில்.

நகர கோவில்களிலும், கிராமக் கோவில்களிலும் உள்ள தெய்வங்களின் உருவங்கள் மட்டுமல்ல, வழிபாட்டு முறையும் வித்தியாசப்படுகிறது. நம் கண்களுக்குப் புலப்படாத இறைசக்தியை வழிபடுவதற்கும், ஆஹூதிகள் கொடுப்பதற்கும் அக்னியைத் தூதுவனாகப் பயன்படுத்துகிறது இந்து மதம்.

‘அக்னிம் தூதம் வ்ருணீமஹே’ என்கிறது வேதம். அதனால் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலும் இந்து மதத்தில் ஹோமங்கள் செய்யப்படுகின்றன. வரலாற்றினை ஆதாரமாகக் கொண்டு காணும்போது ஆதியில் மனிதன் தனது அறிவிற்கு எட்டாத இடி, மின்னல், காற்று, மழை முதலான இயற்கை சீற்றங்களைக் கண்டு அஞ்சினான். அவற்றை வருணன் என்றும், இந்திரன், அக்னி என்றும் பெயரிட்டு வணங்கினான். நாளடைவில் தன் கண்களுக்குத் தெரிந்த சூரிய, சந்திரர்களை வணங்க ஆரம்பித்தான்.

கிரஹண காலங்களில் சூரிய, சந்திரர்களையும் விட பெரிய சக்தி ஏதோ ஒன்று உள்ளது என்று பயப்பட ஆரம்பித்தான். இவ்வாறு தனது அறிவிற்கு எட்டாத, தான் பயப்படுகின்ற சக்திகளை இறைசக்தி என்று நம்ப ஆரம்பித்தான். மனித நாகரிகம் வளர, வளர இறைவனுக்கும் தன்போலவே கை, கால்கள், தலை, என உருவகப்படுத்தி வணங்க ஆரம்பித்தான். தான் வாழுகின்ற பகுதியில் எந்தப் பொருள் அதிகமாக விளைகிறதோ அதனை இறைவனுக்கும் உணவாக அளித்து வணங்கினான்.

மனிதனுக்கு அழிவு இருந்தாலும் இறைவனுக்கு அழிவில்லை என்பதை உணர்ந்துகொண்டான். மனித நாகரிகம் வளர்ந்திருந்த காலத்திலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கூட தனது வீட்டினை சுண்ணாம்பினாலும், களிமண்ணாலும் கட்டிக்கொண்ட மனிதன், இறைவனுக்கு மட்டும் மிகவும் உறுதியான கருங்கற்களால் ஆலயங்களை எழுப்பினான். மன்னர்களின் அரண்மனைகள் அழிந்தாலும் அவர்கள் எழுப்பிய ஆலயங்கள் இன்றும் உறுதியாய் நிற்கின்றன.

மனிதனைக் காட்டிலும் இறைவன் உயர்ந்தவன் என்பதை உணர்ந்தாலும், அந்த இறைசக்தியை மனிதன் ஆதிகாலம் முதல் இன்று வரை என்றுமே தன்னிலிருந்து பிரித்துப் பார்ப்பதில்லை. தனக்கு பிடித்த உணவு வகைகளையே இறைவனுக்கும் வைத்து படையலிட்டான். தங்களுடைய பாதுகாப்பிற்காக பயன்படுத்திய கருவிகளை இறைவனின் கையிலும் கொடுத்து அந்த இறைசக்தி தங்களைக் காக்கும் என நம்பினான். இதனாலேயே கிராமப்புறங்களில் வீச்சரிவாள் முதலான ஆயுதங்களைத் தாங்கிய ஐயனார் சிலைகள் அமைக்கப்பட்டன.

நகர்ப்புறங்களில் அத்தகைய பயம் இல்லை என்பதால் வழிபாட்டு முறை மாறுகிறது. இயந்திரத்தனமான வாழ்க்கையைக் கொண்ட நகரங்களில் மன அமைதியை நாடுபவர்கள் அதிகம் என்பதால் சாயிபாபா முதலான குருமகான்களின் வழிபாட்டிற்கு மக்கள் கூட்டம் கூடுகிறது. நாம் வாழுகின்ற முறையும், கலாச்சாரக் கட்டமைப்புமே இறை வழிபாட்டினில் மாறுபாடு உண்டாவதற்குக் காரணம். மற்றபடி பரம்பொருள் ஒன்றுதான். அதில்
எவ்வித சந்தேகமும் இல்லை.