கருடனின் திருப்பெயர்கள் திகைப்பு!



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

அனைத்து மங்களங்களையும் அருளும் கருடனின் 110 திருப்பெயர்கள் படித்து பரவசமடைந்தோம். இதுவரை நாங்கள் கேள்வியுற்றிராத விஷயங்களை அளிக்கும் ஆன்மிகம் இதழுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள். சித்ரா மூர்த்தி அவர்கள் எழுதும் அருணகிரி உலா படிக்கும்தோறும் நாமே அந்தக் கோயிலுக்குள் இருக்கும் உணர்வை ஏற்படுத்துகின்றார்.
 - சுரேஷ்குமார், திண்டிவனம்.  

தனித்துவமிக்க தர்ப்பை, பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி அவர்கள் எழுதிய ஆழ்வார்கள் கண்ட கருடசேவை போன்ற கட்டுரைகள் கனமான விஷயங்களோடு இருந்தது. தொடர்ந்து இதுபோன்ற கட்டுரைகளை அளியுங்கள். நன்றி.
 - லலிதா, சென்னை - 33.

பழ தல விருட்சங்கள் கண்டேன். ஒவ்வொரு ஊரில் உள்ள திருத்தலங்களை இருக்கும் மரங்களை குறிப்பிட்டது வியப்பாக இருந்தது. அதிலும் பழமுதிர் சோலையில் இருக்கும் நாவல் மரத்தில் கந்த சஷ்டி நாட்களில் மட்டும் கனிகளை தருகிறது என்பதை கூறுவது முருகனின் அருளை நினைத்து மெய்சிலிர்ந்து போனேன்! அமாவாசையை பெளர்ணமியாக்கிய திருக்கடையூர் அபிராமி’’ சுப்பிரமணிய பட்டர்  அம்பிகையின் முகத்தை நினைத்துக் கொண்டே அமாவாசை அன்று பெளர்ணமி என்று  கூறுவது படித்தும், தன் பக்தனை மரணத்திலிருந்து காப்பாற்ற தன் காது  தோட்டை வானில் எறிந்து பெளர்ணமியாக்கியதும் படித்து அபிராமியின் கருணையை  எண்ணி பரவசமுற்றேன்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு, சென்னை-110.

ஒரே சமயத்தில் ‘‘சம்ஹார மற்றும் அனுக்கிரக மூர்த்தியை’’ தரிசிக்கலாம் என்பதும், ‘‘லட்சுமி சரஸ்வதி புடை சூழ பால சிறுமி வடிவில் பாலாம்பிகை காட்சிதரும்’’ ‘‘திருக்கடையூர் அபிராமி ஆலயம்’’ பற்றிய அதிசய செய்திகளைப் படித்து இன்புற்றேன். பழ தல விருட்சங்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு வியப்பு! அனைத்து மங்களங்களையும் அருளும் கருடனின் 110 திருப்பெயர்கள் திகைப்பு! மொத்தத்தில் ‘‘கருடாழ்வார் சிறப்பிதழ்’’ களிப்பு!
- வெ. லட்சுமி நாராயணன்.

அமாவாசையில் பெளர்ணமி காட்டி தனது பக்தரை காத்தருளிய கருணை தெய்வமாம் திருக்கடையூர் அபிராமி அன்னை கொலு வீற்றிருக்கின்ற திருத்தலம் பற்றிய மகத்துவங்களை நிலவொளியாய் வெளிச்சப்படுத்திக் காட்டிய கட்டுரை வெகு அற்புதம்.
- அயன்புரம் த. சத்திய நாராயணன்.

குறட்பாக்களில் மூன்றே மூன்று மலர்களைத்தான் வள்ளுவர் குறிப்பிட்டிருந்தாலும், மொத்த குறள்களும் தமிழன்னைக்கு அர்ச்சிக்கப்படும் 1330 பூக்கள்தான் என்றும் சமூகத்தின் அனைத்து நோய்களுக்கும் அருமருந்து திருக்குறள்தான் என்றும் திருப்பூர் கிருஷ்ணன் குறிப்பிட்ட வாஸ்தவமான வார்த்தைகள் எத்தனை சத்தியமானது. அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் தொடரில் இடம் பெற்ற பரசுராமர் மனதைக் கவர்ந்தது, ஓவியருக்கு ஸ்பெஷல் பாராட்டு. காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் தொடரில் இடம்பெறும் பாத்திரங்களோ, அதன் பெயர்களோ இதுவரை கேள்விப்படாதவையாக அரிய தகவல்களுடன் ஆச்சரிய மூட்டுகின்றன.
 - அ. யாழினி பர்வதம், சென்னை - 600078.