மோனம்



வணக்கம் நலந்தானே!

கூர்ந்து நோக்கின் மௌனத்தின் கொள்ளுப்பேரனே சொற்கள். ஆதி மூலமாகிய ஆன்மாவைப்பற்றி அதிபலவீனமான சொற்களால் என்ன கூறமுடியும். துவைதப் பிரபஞ்சத்தில் மட்டுமே சொற்கள் உதவும். அத்வைத நிலையை கூறுவதற்கு சொற்களால் கிஞ்சித்தும் இயலாது. ஆத்ம வஸ்துவானது சொற்களின் ஆளுகைக்கு அப்பாற்பட்டது. எனவே, அதன் மொழி என்பது மௌனமேயாகும். இது வாக்கினால் பேசாதிருக்கும் மௌனமல்ல. வாக்கினால் வெளிப்படுத்தாவிடினும் மனம் இயங்கிக் கொண்டேயிருக்கும். எனவே, மனம் இயங்குவதால் அதுவும் மௌனமாகாது. இந்த மோனம் என்கிற மௌனமானது இருதய ஸ்தானத்தில் தான் இருந்தபடியே அப்படியே இருப்பது.

மௌனமே உள்ளத்தில் ஆத்மாவின் விளக்கமாக பெருகியபடி இருக்கும் ஓர் ஒப்பற்ற மொழியும் ஆகும். இந்த மொழியானது மனதினால் உணரப்படும் ஸ்தூல, சூட்சும ஒலிகளை கடந்திருப்பதாகும். இவ்வாறான குருவின் மௌன மொழியானது சீடனை முதலில் விவேகத்தோடு இருக்கச் செய்யும். அதாவது மனம் முன்னிலை, படர்க்கை என்று அலையும் இயல்பை தடுத்து நிறுத்தி ஆன்மாவிலேயே ஓங்கி அமரும்படியான பூரண நிலையை எய்த வைக்கும்.

தட்சிணாமூர்த்தி சின்முத்ரை எனும் கை ஜாடையால் ஜீவனும், பிரம்மமும் ஒன்று என்று காட்டுகிறார். இப்படி முத்ரையைக் கொண்டு உயர்ந்த நிலை விளக்கப்படுவதாலேயே இதற்கு வியாக்கியான முத்ரை என்றும் பெயர் உண்டு. சித் எனும் சொல் ஞானத்தைக் குறிக்கும். இந்த முத்ரை மூலம் சீடர்களிடம் ஜீவ, பிரம்ம ஐக்கிய ஞானத்தை தட்சிணாமூர்த்தி கூறுவதால் இது சின்முத்ரை என்றும், ஞான முத்ரை என்றும் அழைக்கப்படும்.  முதலில் கட்டை விரல் என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள். கட்டை விரலை அங்குஷ்டம் என்பார்கள்.

நம்முடைய இருதய ஸ்தானத்தில் அங்குஷ்டமாத்ரராக அதாவது கட்டைவிரல் அளவுள்ளவராக ஈசன் விளங்குகிறார் என்று சுருதிகள் கூறுகின்றன. இந்த அங்குஷ்ட அளவு என்பது இருதயக் குகை என்பதையும் மறக்க வேண்டாம். கட்டை விரல் பிரம்மத்தைக் குறிக்கும். அடுத்துள்ள ஆட்காட்டி விரல் ஜீவனைக் குறிக்கும். தட்சிணாமூர்த்தி ஜீவன் என்கிற ஆட்காட்டி விரலையும், பிரம்மம் என்கிற கட்டை விரலையும் சேர்த்து வைத்திருப்பதன் மூலமாக ஜீவ பிரம்ம ஐக்கிய நிலையை வெளிப்படுத்துகிறார். ஜீவனாக தன்னை நினைத்துக்கொண்டிருக்கும் போலி அகந்தை, பிரம்மத்தோடு ஐக்கியப்பட்டுத்தான் ஆக வேண்டும்.

இந்த ஜீவன் தன்னை பிரம்மமாக உணராதபோது, அதாவது ஆட்காட்டி விரல் கட்டைவிரலோடு சேர்ந்திருக்காத நிலையில்தான் இந்த உலகிலுள்ள பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். மற்ற மூன்று விரல்களும் தெரிவிப்பது என்னவென்பதும் ஆச்சரியமானது. ஜீவன் அதாவது ஆட்காட்டி விரல் தனித்திருக்கும்போது தான் ஒரு ஜீவன் அதாவது உடம்புதான், புத்தியே நான், மனமே நான்... என்றெல்லாம் நினைத்து அபிமானித்து உலகில் உழல்கிறது. அந்த கணமே ஒரு ஜீவன் பால்யம், யௌவனம், முதுமை என்று சரீரத்தில் ஏற்படும் மூன்று அவஸ்தைகளும் தனக்கு ஏற்பட்டதுபோல் கற்பனை செய்துகொள்கிறது. இதை விடுவிப்பவரே குரு.

கிருஷ்ணா

(பொறுப்பாசிரியர்)