எங்கும் சக்தி மயம்



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

சேவடி நீழல் அடைந்தோரும் செருப்புடன் அம்பலம் புகுந்தவரும். கட்டுரை கண்டேன். படிக்க, படிக்க உடல் சிலிர்த்தது செருப்பு அணிந்து கண்ணப்பர் புகைப்படம்… அதுவும் செருப்பு காலுடன் தனியாக புகைப்படம் எடுத்து வெளியிட்டது இன்னும் சிலிர்ப்பு அதிகமாகியது! நாட்டுப்புற மரபில் ஏழு கன்னிமார் கட்டுரை கண்டேன். ஒவ்வொரு கன்னியை பற்றி விவரமாக கூறியது அருமை.

இதை இப்போது தான் படிக்கிறேன். ஏழு கன்னிமார் சிலைகளை வண்ணத்தில் படம் பிடித்து காட்டியது மட்டுமல்லாமல் கற்கால சிலைகளையும் படம் பிடித்துக் காட்டியது ரியலி தி கிரேட்.நவராத்திரியில் நவதுர்க்கை வழிபாடு.  சாதாரணமாக நவராத்திரியில் துர்க்கையை வழிபடுவோம். ஆனால் வியப்பாக இருந்தன நவதுர்க்கை.. இப்போது தான் படிக்கிறேன். அதுவும் ‘வனதுர்க்கா’ ‘தீப துர்க்கை’ இவைகளை படித்த போதும் சரி… புகைப்படங்களைக் கண்ட போதும் சரி வியப்பு ஆனந்தம் திக்குமுக்காட வைத்தன.
- வண்ணை கணேசன்,பொன்னியம்மன்மேடு - 600110

இல்லந்தோறும் ‘தெய்வீகம்’ வாசித்தேன்.‘மஞ்சள் மகிமை வெகு அருமை’ மஞ்சளின் மகத்துவம் அளவிடற்கரியது.பரணிகுமாரின் ‘நவராத்திரியில் நவதுர்க்கை வழிபாடு’ கட்டுரையும், சு. இளம் கலைமாறன் எழுதியிருந்த ‘அஷ்ட காளிகள்’ வரலாறு அறிந்தேன். அன்னையவள் திருப்புகழை அளவிட முடியாது. ‘அனந்தனுக்கு 1000 நாமங்கள்’ ஔஷதாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் அனைத்து நோய்களுக்கும் திருமாலே மருந்தாக இருந்து அவர்கள் நலம் பெறும்படி அருள்புரிவார் என்று வரிகள் அளவு கடந்த, மகிழ்ச்சியைத் தந்தது. ஜி.மகேஷ் எழுதிய ‘எல்லாம் பாலாம்பிகையே’ அருமை. பாலாம்பிகையின் அழகுத் தோற்றம் கண்களை விட்டு அகல மறுக்கிறது.  
- எஸ். வளர்மதி,கன்னியாகுமரி - 629703.

நவதுர்க்கைகளில் வண்ணப் படங்கள், சிறப்பம்சங்கள், பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள், என ‘நவராத்திரி பக்தி ஸ்பெஷல்’களை கட்டிவிட்டது.
- கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

அஷ்ட காளிகள் சாமுண்டீஸ்வரியாகி மகிஷாசூர வதம் புரிந்து மகிஷாசூரமர்த்தினியான சலிர்ப்பூட்டும் சரிதத்தோடு இன்றும் குக்கிராம வழிபாடான ஏழு கன்னிமார் சிறப்பையும், சிலாகித்து, துக்க நிவாரணியான துர்க்கையின் நவ வடிவங்கள் குமாரி பூஜை மூலம் ஜூவாத்மாவடிவில், நம் உடலில் பிரவேசித்து, அதனை உயிர்ப்பித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து சிலாகித்தோம். கெட்டதை அழித்து, நல்லதைக் காக்க, நமக்காக
தேவியர் எத்தனை தேவியரடி! என பூரித்தோம். நவராத்திரியை உணர்ந்து கொண்டாடினோம்.
- அ.யாழினிபர்வதம், சென்னை - 600078.

அனுபவிக்கவே வாழ்க்கை என்ற லௌகீகத்தில் அதற்கான பலத்தையும், பக்குவத்தையும் பெற உருவ வழிபாடு முதல் பயிற்சி
யாகும். குழந்தைகளின் விளையாட்டுப் பொருளான (கொலு) பொம்மைகளில் கூட சக்தியை உபாசிக்கும் மனம் விவேக மடைந்து மன ஒருமை கொண்டு தியானிக்கும். தியானத்தில் பிரம்மம் தோன்றி அருளும் என்பதை அரை பக்கத்தில் எளிமையாக சொல்லி நவராத்திரியை அர்த்தமுணர்ந்து கொண்டாடும் தெளிவைத் தந்த பொறுப்பாசிரியருக்கு நன்றி கலந்த வணக்கங்கள். எல்லோருக்கும் இனி, எங்கெங்கு காணினும் சக்தியடா!
- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

அஷ்ட காளிகள் ஒன்றிணைந்து சாமுண்டீஸ் வரியாக உருவெடுத்து மகிஷாசுரனின் உயிரை வதம் செய்ததை விவரித்து அஷ்ட காளிகளின் அற்புத மகிமைகளைத் தொகுத்து வழங்கப்பட்ட கட்டுரை நவராத்திரி மலருக்கு மகுடமாக மின்னி சிலிர்க்க வைத்துவிட்டது. வனதுர்க்கை முதல் அக்னி துர்க்கை வரை நவராத்திரி நவதுர்க்கை வழிபாடு செய்ய வேண்டியதன் தாத்பரியத்தை விளக்கி பரணிகுமார் வழங்கிய கட்டுரை வெகு வெகு அற்புதம், நவராத்திரியில் நவதுர்க்கைகளை தரிசித்த பரவசம் ஏற்பட்டது’
- த. சத்தியநாராயணன், அயன்புரம்.