நாகர் வழிபாடு நேற்றும் இன்றும்...



சென்ற இதழ் தொடர்ச்சி...

நாகர் வழிபாட்டில் முரண்கள்


காஷ்யப முனிவருக்கு இரண்டு மனைவிகள் மூத்தவளுக்கு கருடனும் இளையவளுக்கு கார்க்கோடகன் மற்றும் வாசுகி பிறந்தனர். இருவருக்கும் பகை தொடர்ந்தது. உலக சமய வரலாறுகளில் ஒரு தகப்பனுக்குப் பிறந்த இருவர் தம்முள் முரண்பட்டு இருவர் வழிவந்தவர்கள் இரு வேறு சமயமாக மலர்வதுண்டு. இலங்கையில் நாகர் என்றும் இயக்கர் என்றும் இரு பிரிவினர் வசித்தனர். நாகர் பூமிக்குள் இருந்து வெளியே வந்த பாம்பினை வாங்கும் பிரிவினர். இயக்கர் என்போர் வான் வழியே பயணிக்கும் யட்சன் அல்லது யட்சிகளை வணங்கும் பிரிவினர். ஆரம்பத்தில் நாகத்தை வழிபட்டோர் பின்னர் ஆகாயத்தை உயர்ந்தது எனக் கருதி தமது கடவுளரை வானத்தோடு தொடர்புடையதாக மாற்றிக்கொண்டனர்.  வானவில்லோடு பாம்புகளை  தொடர்புபடுத்தினர்.

நிமிர்ந்து நிற்கும் வானவில் பாம்பு

நாகங்களில் புணர்தலைக் கண்டு வியந்த ஆதிகுடி மக்கள் பாம்பு தரையில் ஊர்ந்து சென்று பூமிக்குள் மறைந்த போதும் பாம்பு பூமிக்கும் வானத்துக்குமாக எழும்பி நேரே நிற்க வல்லது என்பதை மக்கள் கண்டு அதிசயித்தனர். அது நேரேயும் நிற்கும் என்பதை ஏற்றுக்கொண்டனர். அதன் காரணமாக பாம்பு நேரே நிமிர்ந்து நின்று வானத்தில் மேகக் கூட்டத்தில் இருக்கும் தண்ணீரைப் பருகும். அப்போது சிந்தும் துளிகள் மழைத்துளியாகும் என்று நம்பினர். எனவே ஆப்பிரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் சில இனத்தவர் வானவில்லை பாம்பாகக் கருதி வணங்கினர். ஆப்பிரிக்காவில் எங்கும் பரவலாக பாம்பு வழிபாடு நடைபெறுவதை ஃபிரேசரும் க.ப. அறவாணனும் தமது நூலில் [SERPENT CULT] விரிவாக விளக்கினர்.

கிறிஸ்துவத்துக்கு முன்பு

இஸ்ரவேலர் மற்றும் கானானியர் வாழ்ந்த தேசங்களில் தொடக்கத்தில் பாம்பு வழிபாடு இருந்தது என்பதை உறுதி செய்யும் வகையில் அகழ்வாய்வில் பல கோயில்களில் நாகர் சிலைகள் கிடைத்துள்ளன. பாபிலோனியாவில் நாக தெய்வத்தை நாபு என்றும் சிரியாவில் நின்கிஷ் ஜித்தா என்றும் அழைத்தனர்.

எகிப்து நாட்டில் ரோமானியர் படைஎடுத்து வருவதற்கு முன்பு வரை பாம்பு வழிபடு தெய்வமாக இருந்து வந்தது. படமெடுக்கும் பாம்பு தலையோடு ஒரு பெண் தெய்வத்தையும் வணங்கினர். பாம்பு நெருப்பை உமிழும் என்ற நம்பிக்கை இங்கு இருந்தது. இதே நம்பிக்கை தான் சீனாவில் டிராகனாக உருவெடுத்தது.

குலமுதுவரான நாகராஜன்

இந்தியாவில் நாகத்தை இரு பாலாகவும் வணங்கினர். ஆண் நாகத்தை நாகா என்றும் பெண் நாகத்தை நாகி என்றும் இந்தியில் அழைத்தனர்.  பவுத்தம் செல்வாக்கு பெற்றிருந்த தென் தமிழக மாவட்டங்களில் மற்றும் கேரளாவில் அதிக எண்ணிக்கையில் நாகராஜா கோயில்கள் உள்ளன. நாகப்பட்டினத்தில் பவுத்தர்கள் மிகப்பெரிய நாகராஜா கோயில் கட்டினர்.

தென் மாவட்டத்தில் நாகர்கோவிலில் நாகராஜா கோயில் உண்டு. அந்த ஊரில் யாரையும் நாகம் தீண்டியதில்லை என்றும் மருத்துவமனை பதிவேட்டில் நாகம் தீண்டி வந்த நோயாளியைப் பற்றி பதிவு ஒன்று கூட இல்லை என்றும் கூறுவர். நாகர்கோவில், கன்யாகுமரி மாவட்டங்களில் நாகம்மாவைக் கூட நாகரம்மை என்று தான் அழைக்கின்றனர். நாகர் என்ற வலுக்கு அதன் மீது மக்கள் வைத்திருக்கும் மரியாதையை உணர்த்துகிறது.

கேரளாவில் மேற்காமேடு என்ற இடத்தில் ஆயிரக்கணக்கில் நாகங்கள் ஓரிடத்தில் உள்ளன. அவற்றை மக்கள் அதன் வசிப்பிடத்துக்குச் சென்று வழிபடுகின்றனர். மேற்கு திசை அவர்களுக்கு உயரமாக இருப்பதால் அவர்கள் அந்த மேட்டில் இறந்தவர்களைப் புதைத்து அங்கு விளக்கேற்றி வைக்கின்றனர். அங்கு பாம்புகள் தென்பட்டால் அவை இறந்தவரின் விருப்பத்தை சுட்டிக்காட்ட வருவதாக நம்புகின்றனர்.

காவல் தெய்வமான நாகம்மா

நாகத்தைப் பெண்ணாகக் கருதி வழிபடும் மரபு தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகிறது. பிற நாடுகளிலும் இம்மரபு இருந்தது. கிரிஸ் நாட்டில் வணங்கப்பட்ட நாக தேவதையின் பெயர் மினோவான் என்பதாகும். இத்தெய்வம் பாம்புகளைத் தூக்கி எறிவது போலவும் சிறுத்தைகளைத் தமது கக்கத்தில் இடுக்கியிருக்கும். எகிப்தில் படமெடுத்தாடும் பாம்பு தலையுடன் கூடிய நாகம்மாவை வழிபட்டனர். இவளை சூரியக் கடவுளின் கண்களாகவும் போற்றினர். இத்தாலியில் நோயை சுகமாக்கும் கடவுளாக நாகம்மாவை வணங்கினர். அவளுக்கு அன்கிதியா என்று பெயர்.

ஜெர்மனியில் பல குடும்பங்களுக்கு நாகம் குல தெய்வமாக இருந்து அவர்களின் ஆடு மாடுகளைப் பாதுகாத்தது.  நாகம் இங்கு ஆணும் பெண்ணும் என ஜோடியாக இருந்து தமது குடும்பங்களைக் காப்பதாக நம்பினர். ஜப்பானில் மத்சுரா யோஹிமே என்ற பெயரில் நாகம்மாவை வழிபட்டனர். கொரியாவில் இயோப்ஷின் என்ற  நாகம்மா செல்வத்துக்குரிய தெய்வமாகப் போற்றப்பட்டாள். இவள் காதுகளுடன் கூடிய பாம்பு ரூபத்தில் இருந்தாள். இவளுக்கு ஏழு மகள்கள் உண்டு. ஏழு பேரும் பாம்புகள்.  

வானமும் பூமியும் இணைந்து தோன்றிய நாகம்

நாக வழிபாட்டில் முதலில் மண்ணுக்குள் இருந்து மேலே வந்ததாய் அதிசயமாகப் பார்த்து வணங்கிய மனித சமுதாயம் அடுத்துத் தான் வியந்து போற்றும் வானத்தோடு இணைத்தது. வானம்  பூமி. தேவர் -அசுரர் என்ற முரண்கள் இணைந்து  நாக வணக்கத்தைத் தக்க வைத்துக்கொண்டன. இந்து சமய புராணத்தில் காஷ்யப முனிவருக்கும் அவரது இரண்டு மனைவிகளுள் ஒருத்தியான ஓர் அசுரப் பெண்ணொருத்திக்கும் பிறந்த பாம்புகளின் கதைகளைப் போல மற்ற நாடுகளிலும் கதைகள் உள்ளன.

கம்போடியாவில் இந்தியப் பிராமணர் ஒருவரிடம் சோமா இளவரசி என்ற நாக தேவதை போரில் தோற்றாள். அதனால் அவள் அவருடைய ஆளுமையை ஏற்றுக்கொண்டாள். அவர்களுக்குப் பிறந்தவர்கள் நாகர்கள்  இவர்களே கம்போடிய மக்கள். இதுவே அவர்களின் தோற்றமும் வரலாறும் ஆகும்.

நாகமும் சமயக்கலை இலக்கியமும்

சீனாவில் இங்கிருந்து சென்ற போதிதர்மர் தாமரை சூத்திரத்தை உபதேசித்த போது அங்கு நந்தா, உப நந்தா, சாகரா, வாசுகி, தட்சகா, அனவதப்தா, மனஸ்வின், உத்பாலகா எனப்பட்ட எட்டுப் பாம்புகள்  அவ்விடத்தில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தன.இந்து சமயத்தில் யோகக் கலையின் முன்னோடியாகக் கருதப்படும் பதஞ்சலி முனிவர் இடுப்புக்குக் கீழே பாம்பு வடிவம் கொண்டவர். இவரே நடராஜரின் நடனத்தைக் கண்டு களிக்கும் பேறு பெற்றவரும் ஆவார்.

ஆவணி மாதம் கடைசி நாள் நாக வழிபாட்டுக்கு மிகவும் ஏற்றது. ஆவணியில் வரும்  பஞ்சமி நாக பஞ்சமி எனப்படும். அன்றும் நாகங்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும் கலியன் பாம்பு யமுனை நதியை விஷமாக்கியதும் கண்ணனால் கொல்லப்பட்டதும் இந்து சமயப் புராணக் கதைகளில் ஒன்றாகும்.

நாகமும் பெண்களும்

நாகத்தைப் பெண்ணாகக் கருதி வழிபடும் சிலர் அதன் பக்தைகளாக இருந்து சாமியாடியாகி விட்டனர். நாகம்மாள் பெண்களின் மீதேறி அவர்கள் சாமியாடிகளாக இருப்பதும் அவர்கள் அருள்வாக்கு சொல்வதும் நாட்டுப்புற அம்மன் கோயில்களில் உண்டு. இவர்கள் சாமியாடும் போது பாம்பைப் போலவே நெளிந்தாடுவது பார்ப்பவர்களை நாகம்மா அவர்கள் உடம்பில் குடிபுகுந்ததை நம்புவதற்கு  ஏதுவாக அமையும். கள ஆய்வின் போது நாகம்மா சாமியாடி ஒருவரைப் பேட்டி கண்ட போது அவர் இரவில் நாகம்மா தன் மீது ஊர்ந்து உடம்பை இறுக்கும் என்றும் முகத்தைத் தடவி முத்தமிடும் என்றும் தெரிவித்தார்.

நாக ஊர்வலம்

நாகம்மா சாமியாடிகளைப்போல வடநாட்டில் நாகத்தை வணங்கும் பெண் துறவிகள்  இருக்கின்றனர். அவர்கள்  நாகத்தை கொண்டு நீண்ட ஊர்வலங்கள் நடத்துவதுண்டு. இதன் அடுத்த கட்ட வளர்ச்சி சீனாவில் பவுத்தம் பரவிய பின்பு டிராகன் நடனம் என்ற பெயரில் சிறகுகளும் காதுகளும் கொண்டு நெருப்பை பீச்சி அடிப்பது போன்ற நாக உருவங்களுடன் நடத்தப்படும் நீண்ட நடன ஊர்வலம் சீனப் புத்தாண்டு அன்று நடக்கும். தற்போது இப்பாம்பு நடனமும் ஊர்வலமும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் பரவிவிட்டது.

பாம்பு நடனம்

பாம்புகள் ஆடுவதை கண்டு அதிசயித்த மனிதன் தானும் அதுபோல ஆடினால் தனக்கும் அதன் ஆற்றல் கிடைக்கும் என்று நம்பினான். இதனை ஜேம்ஸ் பிரேசர் போலச் செய்தல் சடங்கு முறை என்றார். இவனது  நாக நடனத்தைப் பார்த்த மற்றவர்கள் இவனிடம் நாக தெய்வம் குடியிருப்பதாக நம்பி வணங்கினர்.  இதன் தொடர்ச்சியாக  இந்தியா சீனா போன்ற நாடுகளில் பாரம்பரியக் கலைகளில் பாம்பு நடனமும்  இடம் பெற்றது. சீனாவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக பாம்பு நடனம் திகழ்கிறது.

இந்தியாவில் பரதக் கலையிலும் இப்பாம்பு நடனத்தைச் சேர்த்து விட்டனர். படமெடுத்தாடும் பாம்பினைப்போல பரதம் ஆடும் பெண்களின் ஆட்ட அமைப்புத் திகழ வேண்டும் என்று ஓர் இலக்கணமும் அமைத்தனர். பரதம் ஆடும் பெண்கள் உடல் இடுப்புக்குக் கீழே பாம்பின் அடிப்பாகத்தைபோல் உறுதியாக இருக்க வேண்டும் இடுப்புக்கு மேலே அவர்களின் கைகளும் முகமும் லாவகமாகச் சுற்றி சுற்றி ஆட வேண்டும் என்பது பரதக் கலையின் இலக்கணம் ஆகும்.

பாம்பின் மேனி வண்ணத்தைப் போன்ற உடையுடன் தலையில் அதன் படம் போன்ற தலையலங்காரத்தைப் பொருத்தி நெளிந்து நெளிந்து பல்வேறு கரணங்களைப் புகுத்தி நடனம் ஆடுகின்றனர். வழிபாட்டில் ஆடப்பட்ட சடங்கியல் கலையாக [ritual art] இருந்த பாம்பு நடனம் இப்போது நிகழ்த்து கலையாக [performance art] மேடையில் ஆடப்படுகிறது.

டிராகன் டான்ஸ்

சீனாவில் புத்தாண்டு அன்று  நடத்தப்படும் பாம்பு நடனத்தால் [டிராகன் டேன்ஸ்] அங்கு மழை, வெள்ளம், புயல் போன்றவற்றின் பாதிப்பில் இருந்து நாக தெய்வம் தம்மை காப்பாற்றும் என்று நம்புகின்றனர். துணியால் பாம்பின் உருவத்தை பல மீட்டர் நீளத்துக்குச் செய்து அதனை மனிதர்கள் நீண்ட கழிகளால் துணியை உயர்த்தி பிடித்து உள்ளே இருப்பவர் தம்மை மறைத்த படி அவர்கள் ஆடும்போது  பாம்பு நெளிந்து நெளிந்து ஆடுவதாகத் தோன்றுகிறது. தாய்ச்சி, சூறாவளி, மேகக் குகை எனப் பல வகை பாம்பு நடனங்களை சீனர் ஆடுகின்றனர்.

நாகத்தின் அதீத தோற்றங்கள்

நாகத்தை வழிபடு பொருளாகத் தெரிவு செய்தவுடன் மனிதன் தனது  விருப்பத்துக்கேற்ப அதன் உருவத்தை மாற்றினான். பாம்புக்கு காது கேட்காது. ஆனால், நாகம் நமது கடவுள் அதற்கு நன்றாகக் காது கேட்கும் என நம்பினான். நமது குறைகளைக் கேட்டு நிவர்த்திக்கும் தெய்வம் அல்லவா எனக் கருதி தான் வணங்கும் நாக தெய்வத்தின் உருவத்துக்கு நீண்ட காது வைத்தான்.

நாகம் மன்னிக்கும் தெய்வம் கிடையாது; அது தண்டிக்கும் சக்தி உடையது என்று நம்பியதால் அது தனது வாயிலிருந்து நச்சை நெருப்புப் போல உமிழும். எகிப்து சீனா போன்ற நாடுகளில் வணங்கப்படும் நாக் தெய்வங்கள் நெருப்பை உமிழும் இச்செயல்பாட்டையும் நாக தெய்வத்தின் உருவத்தில் பிரதிபலித்தான். பாம்பு மெல்ல ஊர்ந்து போவது அதன் இயல்பு; ஆனால் கடவுளான பின்பு அதற்கு வேகம் முக்கியம் என்பதால் அதற்கு சிறகுகளைப் படைத்தான்.

மாயன் நாகரிகத்தில் நாகத்தை குகுல்கான் என்ற பெயரில் சிறகுள்ள பறக்கும் பாம்பாகக் கொண்டு வழிபட்டனர்.  அஜ்டேக் இனத்து மக்கள் குவேட்சால்கொஎதி என்ற பெயரில் நாகத்துக்கு சிறகுகள் வைத்து  வழிபட்டனர்.

சீனாவில் சிறகு காது என்று பாம்பின் தோற்றத்தையும் செயல்பாட்டுத் தகுதியையும் உயர்த்தினர். ஹான் வம்சத்து மன்னர்கள் தங்களை நாகத்தின் வழித்தோன்றல்களாக கருதியதால் நாகத்துக்கு அங்கு நன்மதிப்பு உண்டாயிற்று.  அங்கு நாகம் என்பது நன்மை, வளமை, விழிப்புணர்வு, மரியாதை ஆகிய பண்புகளின் உருவமாகத் திகழ்கிறது. இந்தியாவில் ஆதி மனிதன் காலத்தில் இருந்து புராணங்கள் எழுதப்பட்ட காலம் வரை நாகத்தை ஐந்து தலை நாகம் என்றும் ஆயிரம் தலை நாகம் என்றும் உருவமைத்து அதன் மிகை ஆற்றலை வெளிப்படுத்தினான். இவ்வியல்பு எல்லா நாடுகளிலும் வாழ்ந்த மனிதர்களிடம் நாக் வழிபாடு தோன்றியது முதல் இருந்தது.

நாக வழிபாடு ஆதி மனிதர் காலம் தொட்டு இன்று வரை பல மாற்றங்களை அடைந்து தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. இன்று நாகர் உருவத்தில் மோதிரம் அணிதல் தலையணி அணிதல் என்று நாகரிகமயமாகிவிட்டது. நாகர் வழிபாடு தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வட மாநிலங்களில் பூர்வ குடிகள் நாக வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றன. ஆப்பிரிக்காவில் நாக் வழிபாடு இன்றும் உள்ளது. கீழை நாடுகளில் பவுத்தம் பரவிய இடங்களில் நாக வழிபாடு செல்வாக்குடன் திகழ்கிறது.

முனைவர் செ. ராஜேஸ்வரி