விராதன்



*காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்

புரியாத தகவல்களையும் தத்துவங்களையும் மிகவும் எளிமையாக, புரியும்படிச் சொல்லித் தெளிவாக்கியவர் ‘திரு முருக கிருபானந்த வாரியார்  சுவாமிகள்’. அவர் சொல்லும் சிறு கதை!ஒரு சிறைச்சாலையில், பலர் அடைக்கப்பட்டிருந்தார்கள். ஊர் முக்கியஸ்தர் ஒருவர் சிறைச்சாலைக்கு விஜயம்  செய்தபோது, அவருக்குச் சிறைச்சாலையைச் சுற்றிக் காட்டினார்கள். முக்கியஸ்தரும் அங்கிருந்த கைதிகளிடம் நலம் விசாரித்து, அவர்கள்  சிறைச்சாலைக்கு வந்ததற்கான காரணங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு கைதி, ‘‘நான் தும்மினேன். அதற்காக என்னைப்பிடித்துக் கொண்டு வந்து, சிறையில் போட்டு விட்டார்கள்’’ என்றார்.முக்கியஸ்தர்  குழம்பினார். ‘‘என்னப்பா இது? தும்மியதற்குச் சிறையா? எப்போது நடந்தது? எப்படி நடந்தது?’’ எனக் கேட்டார். கைதி பொறுமையாகப் பதில்  சொன்னார்;‘‘ஒரு பங்களாவில் திருடிவிட்டுப் பொருட்களோடு கிளம்பினேன். அந்த நேரம் பார்த்துத் தும்மல் வந்து விட்டது. தும்மினேன். சத்தம்கேட்டு,  எல்லோரும் ஓடிவந்து பிடித்து, இங்கு கொண்டுவந்து விட்டார்கள்’’ என்றார். எப்படியிருக்கிறது? திருடியதால் உள்ளே வரவில்லையாம்; தும்மியதால்  தான், உள்ளே வந்து விட்டாராம். விராதனும் இதுபோல் தான், பதில்சொன்னான். வாரியார் சுவாமிகள் சொன்ன கதையிது. விராதன் அப்படி என்னதான்  பதில் சொன்னான்? யாரிடம் சொன்னான்?

விராதன்! அற்புதமான ஜீவன்; கருட பகவானுக்கும் ஆஞ்சநேய மூர்த்திக்கும் கிடைத்த மாபெரும் பாக்கியத்தைப்பெற்ற உத்தம ஜீவன்; ஆம்!  சீதாதேவியையும் ராம-லட்சு மணர்களையும் சுமக்கும் பாக்கியம் பெற்றவன் விராதன். அப்படிப்பட்ட விராதனைப்பற்றிப் பார்க்கலாம் வாருங்கள்!விராதன் கதை, உத்தமமான முனி தம்பதிகளிடம் இருந்து தொடங்குகிறது. வன வாசத்திற்காக வந்திருந்த சீதா -ராம-லட்சுமணர்கள், அத்திரி  மகரிஷி-அனசூயா தேவி ஆகியோரைத் தரிசித்து, அவர்களிடம் ஆசிகளைப்பெற்று, காட்டிற்குள் நுழைந்தார்கள்.

 நுழைந்த அவர்களை வரவேற்பதுபோல வருகிறான், கிலிஞ்சன் என்பவனின் மகனான விராதன்; சும்மா வரவில்லை; கையில் ஒரு பெரும் சூலம்,  அதில் யானைகள், யானைகளுக்குப் பகையான சிங்கங்கள், யாளிகள் ஆகியவற்றைக் கோர்த்துக் கொண்டு வருகின்றானாம். தலையெல்லாம் சுருண்ட  முடிகள், பெரும் புண்களைப் போன்ற இரு கண்கள், ‘‘கன்னங்கரேல்’’ எனக் கறுத்த மேனி - என வரும் விராதனைக்கண்டு, விண்ணும் மண்ணும்  நடுங்குகின்றன. வரும்போதே பெரும்பசியுடன் வந்த விராதன், சூலத்தில் அலட்சியமாகக் கோர்த்துக் கொண்டுவந்த விலங்குகளை, அப்படியே கையால்  பிய்த்து எடுத்து வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டே வந்தான். வேக வைப்பது, உப்பு-உறைப்பு என்று எந்தப் பிரச்சனைகளும் இல்லாமல், பச்சையாகவே  மென்று தின்றபடி வந்தான். ஆனால் பசி அடங்கியதாகத் தெரியவில்லை;

 ‘‘இன்னும் கொண்டு வா! இன்னும் கொண்டு வா!’’ எனக் கேட்டுக்கொண்டே இருந்தது வயிறு. அடங்காப் பசியோடு வந்து கொண்டிருந்த விராதன்,  அழகாக வந்து கொண்டிருந்த அரச குலத்தவர் மூவரையும் பார்த்தான். ஆயிரக்கணக்கான யானைகளின் பலத்தைக் கொண்ட விராதன், தன் பலத்தை  வெளிப்படுத்தும் விதமாகயானைத் தோல்களை இடுப்பில் ஆடையாகச்சுற்றி; அதன் மேல் அரைக்கச்சு ‘பெல்ட்’ போல, ஒரு நீண்ட  பாம்பைச்சுற்றியிருந்தான்; மேலாடையாகப் புலித்தோல்களை முறுக்கி அணிந்திருந்தான். விசித்திரமான கோலத்தோடு ஓலமிட்டபடி  வரும்  விராதனை, அப்படியே நேர்முக ஒலிபரப்பு செய்கிறார் கம்பர்.

செங்கண் அங்கஅர வின்பொரு வில்செம் மணிவிராய்
வெங்கண் அங்க வலயங்களும் விலங்க விரவிச்
சங்க ணங்கிய சலஞ்சலம் அலம்பு தவளக்
கங்க ணங்களும் இலங்கிய கரம் பிறழவே
  (கம்ப ராமாயணம்)

 இப்பாடலை அப்படியே, வாய்விட்டு ஒருமுறை சொல்லிப்பாருங்கள்! சத்தமிட்டபடியே வரும் ஒருவகைப் பாம்பு வருவதைப்போல இருக்கும்.  இவ்வாறு சத்தமிட்டுக்கொண்டே வந்த விராதன், சீதையைப் பார்த்ததும்,’பளிச்’சென்று அவளைத் தூக்கிக்கொண்டு, ஆகாய வழியாகச் செல்லத்  தொடங்கினான். அதைப் பார்த்ததும் ராம-லட்சுமணர்கள் அவனை அதட்டினார்கள்; ‘‘அடேய்!விடு சீதையை! வஞ்சனையாகப் போகலாம் என்று  பார்க்கிறாயா?விடு சீதையை!’’ என்று மிரட்டினார்கள். அவர்கள் மிரட்டலை லட்சியம் செய்யவில்லை விராதன்; மாறாக,‘‘பேசாமல் போய் விடுங்கள்  இருவரும்! உயிர்ப்பிச்சை தந்தேன் உங்களுக்கு’’ என்றான்.
 
 ‘‘வாயால் பேசிப் பலனில்லை இவனிடம்’’ என்ற ராமர்,வில்லை வளைத்து நாண் ஏற்றி ஓசை எழுப்பினார்.அதைக்கேட்ட விராதன், சீதையைக் கீழே  விட்டுவிட்டு ராமரின் எதிரில் வந்து நின்று, சூலாயுதத்தைச் சுழற்றி வீசினான். அம்பால் அதை, இரண்டு துண்டுகளாக்கினார் ராமர். சற்றுநேரம் போர்  நடந்தது. ‘‘இவன் கையை வெட்டித்தள்ள வேண்டும். இல்லாவிட்டால் இவன் போர்செய்து கொண்டே இருப்பான்’’ என்ற ராம-லட்சுமணர்கள்,  விராதனின் தோளில் ஏறினார்கள். தோளில் ஏறிய அவர்களைச் சுமந்தபடியே புறப்பட்டான் விராதன். அதைக்கண்ட சீதை, ‘‘அவர்களை விட்டுவிடு!  விட்டு விடு!’’ என்று துயரத்தால் கதறினாள்.

விராதனின் தோள்களில் பயணம்செய்து கொண்டிருந்த லட்சுமணன், ‘‘அண்ணா! தேவி துயரத்தால் கதறுகின்றார். இந்த நேரத்தில் விளையாட்டு  வேண்டாம். இவனைச் சீக்கி ரமாகக் கொல்ல வேண்டும்’’ என்றார்.ராமர் சிரித்தார்; ‘‘லட்சுமணா!ஏன் பதறுகிறாய்? இவன் மேல் இருந்தபடியே, நாம்  போகவேண்டிய வழியின் எல்லை வரை போவது நல்லது என்று நினைத்தேன். இவன் சாவது ஒரு பெரிய காரியமா என்ன?’’ என்றார்.
அதாவது, ராமரைப் பொருத்தவரை விராதன் ஒரு ராட்சசக்கோமாளி; அவ்வளவுதான்! அதன்பின் ராமர் தன்காலால் உதைத்து, விராதனைக் கீழே  தள்ளினார். அரக்கன் உடல் கீழே விழுந்த அதே விநாடியில், அவன் உடலில் இருந்து ஔிமயமான திவ்யவடிவம் ஒன்று வெளிப்பட்டு, ராமரை  வணங்கியது. அது வேறு யாருமல்ல; குபேர சாபத்தால் அரக்கப்பிறவி எடுத்த கந்தர்வன்தான் அவன்; இப்போது ராமர் திருவடிகளால் சாப விமோசனம்  அடைந்து, ராமரை வணங்கி நின்றான்.

வணங்கி நின்றவன், கீழே கிடந்த தன் பழைய அரக்க உடலைப்பார்த்தான்; அவனுக்கே அருவருப்பாக ஆனது; ‘‘சீய்!இந்த உடம்பிலா இவ்வளவு நாட்கள் இருந்தோம்?’’ என நினைத்தான். அதே சமயம், அந்த உடம்பில் இருந்து தனக்கு விடுதலை வாங்கித்தந்து,  சாப விமோசனம் தந்த ராமரின் திருவடிகளைத் துதித்தான். ‘‘குற்றங்களும் கள்ளங்களும் நிறைந்த மாய வாழ்வில் இருந்து எனக்கு விடுதலை  அளித்த, ஞானம் வீசும் திருவடிகள் கொண்ட வள்ளலே!’’என்று அழைத்துத் துதித்தான் ஔி வீசும் திருமேனி கொண்ட விராதன். துதித்தவன், தான்  அரக்க உருவம் எடுத்ததன் காரணத்தைக் கூறத் தொடங்கினான். அது...குபேரனின் இருப்பிடமான அனகாபுரியில், நடனக்கச்சேரி நடந்து கொண்டிருந்தது.  தேவலோகத்தைச் சேர்ந்த ரம்பை என்பவள் ஆடிக் கொண்டிருந்தாள். நடனம் அது பாட்டுக்கு வளர்ந்து கொண்டே போனது. பார்ப்பவர்களை எல்லாம்  வசீகரம் செய்யும்படியாக, ஆடிக் கொண்டிருந்தாள் ரம்பை; ஆட்டம் ஆடிய அவளே, பாட்டையும் அனுபவித்துப் பாடியபடியே ஆடினாள். அதன்  காரணமாகப் பாட்டிற்கு இசைந்த ஆட்டமும்; ஆட்டத்திற்கு இசைந்த பாட்டுமாக, இனிமையாக இருந்தது. நடனத்தை அனைவரும் பார்த்து மகிழ்ந்து  கொண்டிருந் தார்கள்.

‘‘ரம்பை பாடி-ஆடிக் கொண்டிருந்ததை, கந்தர்வர்களில் ஒருவனான  நானும் ஆர்வத்துடன்  பார்த்துக் கொண்டிருந் தேன். இந்த அரக்கப்பிறவி  வந்துவிட்டது’’ என்றான் விராதன்.திருமுருக கிருபானந்த வாரியார்சுவாமிகள் சொன்னது நினைவுக்கு வரும்; வரவேண்டும்! நடனம் பார்த்ததால்,  அரக்கப்பிறவி வந்ததாகக் கூறுகின்றான் விராதன்.

ஆடரம்பை நீடரங்கு ஊடு நின்று பாடலால்
ஊடல் வந்து கூட இக் கூடு வந்து கூடினேன்
(கம்ப ராமாயணம்)

எப்படி? நடனம் பார்த்தால் அரக்கப்பிறவி வந்து விடுமா?காரணம் தொடர்கிறது.ரம்பை, ஒரு காதல் நாடகத்தைத் தன் ஆடல்-பாடல்களால், அபிநயம்  பிடித்துக் காட்டிக்கொண்டிருந்தாள்; காதல் நாடகத்தில் ஓர் ஊடல் காட்சி; அதை ரம்பை அற்புதமாக ஆடிக்காட்டிக் கொண்டிருந்தாள். அதைப்பார்த்துக்  கொண்டிருந்த கந்தர்வன், தன்னையே காதலனாகவும்; ரம்பையைக் காதலியாகவும் கற்பனை செய்து, மையலில் தன்னை முழுமையாக மறந்து  விட்டான். அவன் மறக்கலாம்; ஆனால் குபேரன் மறக்கவில்லை; அந்நடன நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த குபேரன், கந்தர்வன் தன் நிலை  மறந்ததைக் கண்டார்; சாபம் தந்தார்.‘‘கந்தர்வனே!தன்னிலை மறந்த நீ,தன்னைமறந்து செயல்படும் அரக்கனாகப் பிறப்பாய்!’’ எனச்சாபம் தந்தார்  குபேரன்.

அந்தச் சாபத்தாலேயே கந்தர்வன், விராதன் என்னும் அரக்கனாகப் பிறந்தான்.
கரக்க வந்த காமநோய் துரக்க வந்த தோமினால் இரக்கம் இன்றி ஏவினான் அரக்கன் மைந்தன் ஆயினேன்.
(கம்ப ராமாயணம்)

- என்றான் விராதன். கந்தர்வனாக இருந்த இவன், நடனம் ஆடிய பெண்ணைக் காமப்பார்வை பார்த்தது தவறு இல்லையாம்; குபேரன்தான்  இரக்கமில்லாமல், சாபம் கொடுத்து விட்டானாம்! காமம் எவ்வளவு பெரிய கேட்டினை விளைவிக்கும் என்பதற்கு இது ஓர் உதாரணம். கந்தர்வனின்  காதல், காம நோயாகி; அவன் அறிவை மறைத்து, அவன் குணத்தையும் மறைத்து விட்டது. ராட்சச குணத்தைக்காட்டிய கந்தர்வனுக்குக் குபேர  சாபத்தால், ராட்சசப் பிறவியே வாய்த்தது. இப்போதுதான் அந்த ராட்சசப்பிறவியில் இருந்து, ராமர் அருளால் விடுதலை கிடைத்து உள்ளது. விடுதலை பெற்ற கந்தர்வன், கீழே கிடந்த தன் பழைய அரக்க உடம்பைப் பார்த்தான்; ‘‘ஐயோ! இந்த உடம்பில் இருந்து, இவ்வளவு நாட்கள் என்ன  செய்தோம்?என்ன சம்பாதித்தோம்?’’ என்று எண்ணிப்பார்த்தான்; தோன்றியதை ராமரிடம் அப்படியே சொன்னான்.

அன்று மூல ஆதியாய்! இன்று காறும் ஏழையேன்
 நன்று தீது நாடலேன் தின்று தீய தேடினேன்
 (கம்ப ராமாயணம்)

 ‘‘ஆதிப்பரம்பொருளே! சாபம் பெற்ற அந்தநாள் முதல் இன்று வரை உணவே பரம்பொருள்; அடுத்தவரை இம்சை படுத்துவதே வாழ்க்கை’’ என்று  இருந்த, அறிவற்றவன் நான்.உயர்ந்த லட்சியங்களை அறவே மறந்து, இந்தக்காட்டிற்கே சர்வாதிகாரி போலத் திரிந்து, மற்ற உயிரினங்களைக் கொன்று  தின்பதே வாழ்க்கை என்று இருந்தவன் நான். ‘‘என் தீமையெல்லாம் நீக்கிய தெய்வமே! அறிவில்லாமல் உங்களுக்குத் துன்பம் கொடுத்து விட்டேன்.  பொறுத்து அருள் புரியுங்கள்!’’ என வேண்டி, அங்கிருந்து அகன்றான் கந்தர்வன்-விராதன்.

தெறுத்து வந்த தீதெலாம்
அறுத்த உன்னை ஆதனேன்
ஒறுத்த தன்மை ஊழியாய்
பொறுத்தி என்று போயினான்
(கம்ப ராமாயணம்)

கந்தர்வனாக இருந்த ஒருவன், தான்செய்த தவறால் -குபேர சாபத்தால், விராதன் எனும் அரக்கனாக வந்து ராமரால் சாப விமோசனம் அடைந்ததைப்  பார்த்தோம். விராதனின் முற்பிறவிக் கதையாக, மற்றொரு கதையும் உண்டு. அதையும் பார்க்கலாம்! வேதியர் ஒருவர் நாள்தோறும் செண்பக மலரால்,  சிவபூஜைசெய்து வந்தார். அவருடைய வழிபாடும் நற்குணங்களும் அரசரைக் கவர்ந்தன. அதன் காரணமாக அந்த வேதியரிடம் அரசர் அன்பாகப்  பழகினார். அரசரே பழகுகிறார் என்றால் கேட்கவா வேண்டும்? பார்த்தவர்கள் எல்லாம், வேதியரிடம் நெருங்கிப் பழகினார்கள்.பெரிய இடத்துத் தொடர்பு  இருக்கிறதென்றால், பலரும் நெருங்கிவந்துப் பழகுவது இயல்புதானே! பலரும் வந்து வலுவில் பழகினார்கள். கேட்க வேண்டுமா? வேதியர் பிடிபடாமல்  அலைந்தார். அது வேறொரு நிலையில் கொண்டு போய் விட்டது.

அரசவைக்கு அவ்வப்போது, கவிஞர்கள்- புலவர்கள் எனப்பலரும் வருவார்களல்லவா? அவர்களுக்கெல்லாம் அரசர்,வாரி வழங்குவார்.அவ்வாறு தானம்  பெற்று வருபவர்களிடம், ‘‘அரசர் உங்களுக்குக் கொடுத்ததில், பாதியை எனக்குத்தர வேண்டும்’’ என்று வசூலித்து விடுவார் வேதியர். அரசருக்கு  வேண்டியவராயிற்றே! அதனால், தானம் பெற்றவர்கள், வேதியர் கேட்டதைக்கொடுத்து விடுவார்கள். ஒருநாள்... அந்தணர் ஒருவர் வந்து, அரசரிடம்  இருந்து பசுமாடு ஒன்றைத் தானமாகப்பெற்றுத் திரும்பினார். அவரை வழிமறித்தார் வேதியர்; ‘‘யாராக இருந்தாலும் சரி! அரசதானத்தில் பாதியை  எனக்குத் தர வேண்டும்’’ என்று வற்புறுத்தினார்.கோதானம் பெற்றவரும் வேறு வழியின்றி, வேதியர் கேட்டபடி, பாதியை(செல்வமாக) த்தந்து விட்டுத்  திரும்பினார்.  கோதானம் பெற்றவரின் மனைவி, விபரம் அறிந்தாள்; நேரே சிவன் சந்நதியில்போய் நின்று, சிவபெருமானிடம் முறையிட்டாள்;

‘‘சிவபெருமானே! உன்னருளால் பெற்ற உன்னதமான வாழ்வை, இப்படி வீணாக்குகிறாரே! ஏதோ அரசர் இரங்கிக்கொடுத்ததை, இரக்கமில்லாமல்  பிடுங்கும் அரக்க குணம் கொண்ட, அந்த வேதியனுக்குத் தெய்வமே! நீ தான் நற்புத்தி புகட்ட வேண்டும்’’ என வேண்டித் திரும்பினாள். அதே சமயம்  அங்கு தரிசனத்திற்காக வந்திருந்த நாரதர்,அப்பெண்மணியின் வேண்டுதலைக்கேட்டு, சிவபெருமானிடம் முறையிட்டு விட்டு, வெளியே வந்தார்.  அப்போது, மன்னர் தரும் தானங்களில் பாதிபங்கை வற்புறுத்திப் பெறும் வேதியர் எதிரில் வந்தார். அவரைப் பார்த்ததும், நாரதர் சாபம் கொடுத்தார்;  ‘‘இரக்கமில்லாமல் செயல்பட்ட நீ, அரக்கனாகப் பிறப்பாய்!’’ எனச்சாபம் கொடுத்தார். வேதியர் வெலவெலத்தார்; ‘‘சுவாமி! ஆசை வசப்பட்டுத்தவறு  செய்து விட்டேன். அதற்குத் தீர்வாக, தாங்கள் தந்த சாபத்தை ஏற்றுக் கொள்கிறேன். தயவுசெய்து, சாபம் கொடுத்த தாங்களே, சாப விமோசனம்  உண்டாகும் வழியையும் கூறியருள வேண்டும்!’’ என வேண்டினார்.

நாரதர் மனம் இரங்கினார்; ‘‘வருந்தாதே! அரக்கனாகப்பிறக்கும் நீ, ராமசந்திர மூர்த்தியால் வதம் செய்யப் படுவாய்! சாப விமோசனம் கிடைக்கும்’’  என்றார்.நாரதரால் சபிக்கப்பட்ட அந்த வேதியர்தான், விராதனாக வந்து பிறந்தார்; ராமரால் கொல்லப்பட்டு நற்கதி பெற்றார். விராதன் கதை சொல்லும்  அடிப்படை உண்மை...ஒருவருக்குக் கடுமையான நோய்வந்து விட்டது; தாங்க முடியாத துயரம்; ‘‘இறந்தாலொழிய இத்துயரம் போகாது!’’ என்று அவர்  நினைத்த வேளையில், மருத்துவர் ஒருவர் வந்தார்; தான் சரி செய்வதாகச் சொன்னார். நோயின் கொடுமை தாளாத நோயாளியோ,‘‘இந்த மருத்துவர்  எதையாவது செய்து,நோய் அதிகமாகி விட்டால் என்ன செய்வது?’’ என்று மறுத்தார். பிறகு மருத்துவர் வலுவில் வைத்தியம் பார்க்க, நோய் முற்றுமாக  நீங்கியது. மனம் மகிழ்ந்த நோயாளி உண்மை உணர்ந்து, மருத்துவரைப் புகழ்ந்தார்.இந்த நோயாளி தான்- விராதன். நோய்-காமநோய். அடுத்தவர்  சொத்தில் பங்கு கேட்பது துயரம்-விராதன் எனும் அரக்க உடல். மருத்துவர் - பிறவிப் பிணியைப் போக்கும் ராமர்.  விராதனுக்கு அருள் புரிந்ததைப்  போலவே, நம்மிடம் உள்ள தீமைகளையும் துயரங்களையும் நீக்கி, நமக்கும் அருள் புரியுமாறு ராமரிடம் வேண்டுவோம்!

(தொடரும்)

பி.என் பரசுராமன்