நடைமுறை ஆன்மிகம்



வணக்கம் நலந்தானே!

ஆன்மிக வாழ்க்கை என்பது ஒருபோதும் கோயில்களோடும் துதிகளோடும் புத்தகங்களோடும் முடிந்து விடுவதில்லை. நாம் அறிந்த ஆன்மிகம் நம்  நடைமுறை வாழ்வில் நம் வழியே செயல்பட வேண்டும். இன்னொருவருக்கு பெரிய பிரச்னை எனும்போது ‘‘ஆஹா… நல்லவேளை. நாம  தப்பிச்சிட்டோம்’’ எனும் எண்ணம் வந்தால் உள்ளே ஒரு அசுரன் இருப்பதை உணருங்கள். தேவர்களும் அசுரர்களும் சண்டை புரிந்தனர் என்பதெல்லாம்  நம்முள் நிகழ்பவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

உள்ளிருக்கும் அசுரன் எந்த ஆயுதமும் எடுக்காது இன்னொருவரின் துன்பத்தில் சுகம் காண்பதையும், ரத்தம் உறிஞ்சுவதையும் செய்கிறான்.  பாதிப்படைந்தவர்களிடம்போய் ஆறுதலாகப் பேசுவதுபோல் பேசியபடியே அவர்களின் அவஸ்தைகளை மேலும் மேலும் அறிந்து கொண்டு  நிம்மதியுறுவார்கள். அவர்களிடம் சென்று, ‘‘நிச்சயம் நீங்க இந்தப் பிரச்னையிலிருந்து வெளியே  வருவதற்கு நான் பிரார்த்தனை பண்ணிக்கிறேன்’’  என்பார்கள்.இவை அனைத்தும் ஆன்மிகம் என நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்கு எதிரானது. உண்மையான பிரார்த்தனை எப்போதும்  அந்தரங்கமானது.

உங்களைமீறி உங்களுக்குள் கருணையோடும் கண்ணீரோடும் நிகழ்வது. ஒருகாலும் அதை விளம்பரமாகக்கூட சொல்ல மனம் வராதது. ‘‘நான்  வேண்டிகிட்டேன்னா நிச்சயம் அதுக்கொரு பலன் இருக்கும். பயப்படாதீங்க’’ என்று இயந்திரத்தனமாக சொல்வதெல்லாம்  பிரார்த்தனை அல்ல.  அதன்பின்னே அகங்காரம் ஒளிந்து கொண்டிருக்கும்.

அப்போது நாம் என்னதான் செய்வது?  

பிரார்த்தனையின் அடுத்தகட்டம் என்பது செயல் வடிவமானது. இப்படிப்பட்ட எண்ணங்கள் வருவதை நீங்கள் உணர்ந்து கொண்டு இம்மாதிரியான  எண்ணங்கள் எனக்கு ஏன் வருகின்றன என்று குற்றவுணர்வும், அதிர்ச்சியும் கொண்டால் உங்கள் பார்வை ஆன்மிக மயமாகின்றது. உங்களுக்குள்  இருக்கும் சாக்கடையை அடையாளம் கண்டு தூய்மை செய்யத் தொடங்கி விட்டீர்கள் என்று பொருள். இன்னொருவரின் பிரச்னைக்கு தீர்வு சொல்லுதல்  என்பது முற்றிலும் கருணையின் அடிப்படையில் அமைய வேண்டும். பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்களிடம் தொணதொணவென்று பேசிக்  கொண்டிருக்காமல் முடிந்தால், அவர் வீட்டிற்குத் தேவையான ஒருமாத மளிகை சாமான்கள் வாங்கிப் போடுவதிலிருந்து தொடங்கலாம். ஒருவர்  சாலையில் தடுக்கிவிழும்போது கைதூக்கி எழச் செய்வதுபோல் ஒருவருக்கு உதவியை செய்துவிட்டு நகர்ந்து செல்ல வேண்டும். இதுவே  பிரார்த்தனையின் செயல் வடிவம்.   

கிருஷ்ணா
(பொறுப்பாசிரியர்)