அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள்



246. நாராயணாய நமஹ (Naaraayanaaya namaha)

சீர்காழிக்கு அருகிலுள்ள மங்கை நாடு எனப்படும் பகுதியை நீலன் என்ற குறுநில மன்னர் ஆண்டு வந்தார். மங்கை நாட்டை ஆண்டு வந்த படியால், மங்கை மன்னன் என்று அவர் அழைக்கப்பட்டார். அண்ணன் கோவிலிலுள்ள வெள்ளக்குளம் என்னும் பொய்கைக் கரையில் குமுதவல்லி என்னும் பெண்ணைக் கண்டார் மங்கை மன்னன். அவளது அழகில் மயங்கிய அவர் தமது காதலை அப்பெண்ணிடம் தெரிவித்தார்.

குமுதவல்லியோ, “நீங்கள் உங்கள் தோள்களில் திருமாலின் அடையாளங்களாகிய சங்கு சக்கரப் பொறிகளைப் பெற்று வர வேண்டும். மேலும், தினமும் ஆயிரம் திருமால் அடியார்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இவ்விரண்டு நிபந்தனைகளையும் நீங்கள் ஏற்றால் உங்களை மணப்பேன்!” என்றாள்.
குமுதவல்லியின் மேல் இருந்த மையலினால் உடனே இரு நிபந்தனைகளையும் ஏற்ற மங்கை மன்னனுக்கு, கும்பகோணத்துக்கு அருகிலுள்ள நாச்சியார்கோவிலில் நிவாசப் பெருமாளே குருவாக இருந்து அவரது தோள்களில் சங்கு சக்கர முத்திரைகளைப் பொறித்தார்.

மேலும் குமுதவல்லியின் மற்றொரு நிபந்தனையாகிய அன்னதானக் கைங்கரியத்தை நிறைவேற்றத் தமது செல்வங்கள் அனைத்தையும் செலவழித்தார் மங்கை மன்னன். தனது செல்வங்கள் அனைத்தையும் இழந்த நிலையில் வழிப்பறிக் கொள்ளையராக மாறி, கொள்ளையடித்த செல்வத்தைக் கொண்டு திருமால்அடியார்களுகு அன்னதானம் செய்தார்.

இந்நிலையில் மங்கை மன்னனின் பணியாட்களாகிய நீர்மேல் நடப்பான், நிழலில் ஒதுங்குவான், தாள் ஊதுவான், தோளா வழக்கன் ஆகிய நால்வரும் அவரிடம் ஒருநாள் வந்து, “மங்கை வேந்தரே! ஒரு பெரிய கல்யாண கோஷ்டி நம் ஊரை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அவர்களிடம் கொள்ளை அடித்தால், இன்னும் ஒரு வருட காலத்துக்கு அன்னதானம் செய்யலாம்!” என்றார்கள்.

‘ஆடல்மா’ என்று பெயருடைய தமது குதிரையில் ஏறி அமர்ந்த மங்கை மன்னன், விரைந்து சென்று அந்தத் திருமண கோஷ்டியை வழிமறித்தார். தமது வாளைக் காட்டி மிரட்டி அந்தக் கோஷ்டியிலுள்ள அனைவரின் ஆபரணங்களையும் ஒரு சாக்குப் பையில் போடச் சொன்னார். அந்த மணமகனின் காலில் ஒரு சிலம்பு அணிந்திருந்தான். அதை அவனால் கழற்ற முடியாத நிலையில், மங்கை மன்னனே தம் பல்லால் கடித்து அதைக் கழற்றினார்.

அவர் சிலம்பைக் கழற்றும் மிடுக்கைப் பார்த்த அந்த மணமகன், “நீர் கலியனோ?” என்று கேட்டான். கலியன் என்றால் மிடுக்கோடு கூடியவர் என்று பொருள்.அனைத்து நகைகளையும் மூட்டை கட்டி விட்டு அந்த மூட்டையைத் தூக்க முற்பட்டார் மங்கை மன்னன். ஆனால் அவரால் தூக்க முடியவில்லை. மணமகனைப் பார்த்து, “ஏய் மாப்பிள்ளையே! ஏதாவது மந்திரம் போட்டு வைத்திருக்கிறாயோ?” என்று கேட்டார். “ஆம்!” என்று சொன்ன மணமகன், மங்கை மன்னனை ஒரு மரத்தின் அடிவாரத்துக்கு அழைத்துச் சென்றான். எட்டெழுத்துக்களைக் கொண்ட நாராயண மந்திரத்தை அவர் காதில் சொன்னான்.

அடுத்த நொடியே மணமகன் வடிவில் வந்தவர் திருமால் என்றும், மணமகளாக வந்தவள் மகாலட்சுமி என்றும் உணர்ந்தார் மங்கை மன்னன். மேலும் தாம் நாராயணனுக்கே தொண்டன் என்பதையும், அந்த நாராயணனுக்குத் தொண்டு செய்வதே வாழ்வின் பயன் என்பதையும் உணர்ந்து திருமங்கை ஆழ்வார் என்னும் ஞானியாக மாறினார். திருமங்கை ஆழ்வாருக்கு ஒரே நொடியில் எப்படி இத்தகைய ஞானம் வந்தது?

திருமால் அவரது காதில் நாராயண மந்திரத்தைச் சொன்னாரல்லவா? அந்த மந்திரத்திலுள்ள நாராயண நாமம் ஒரு நொடியில் ஞானத்தைத் தர வல்லது. ‘நாரம்’ என்பதுஉலகிலுள்ள அனைத்து உயிர்களையும் குறிக்கிறது. ‘அயனம்’ என்றால் ஆதாரம் என்று பொருள். அனைத்துயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பவன் நாராயணன் (நாரம்+அயனம்). இத்தகைய பொருளுடைய நாராயண நாமத்தை மங்கை மன்னனின் காதில் திருமால் கூறிய மாத்திரத்தில், நாராயண நாமத்தின் பொருளையும் அவர் உணர்ந்து கொண்டார். அதாவது, திருமாலே நமக்கு ஆதாரம், நாம் அவனுக்குத் தொண்டன் என்ற அறிவு அவருக்கு உண்டானது. அதனால் அவர் திருமங்கை ஆழ்வார் என்னும் ஞானியாக மாறினார்.

நாரங்களுக்கெல்லாம் அயனமாக இருப்பதால் (உயிர்களுக்கெல்லாம் ஆதாரமாக இருப்பதால்) ‘நாராயண:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 246-வது திருநாமம். இதற்கான விளக்கவுரையில் பராசர பட்டர், “இது வரை 245 திருநாமங்களால் போற்றப்பட்ட இறைவனுக்கென்று பிரத்தியேகமாக உள்ள பெயர் தான் 246-வது திருநாமமாகிய ‘நாராயண:’ ” என்று கூறுகிறார்.

“நாராயணாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை அடியேன் சொல்லத் தேவையில்லை, திருமங்கை ஆழ்வாரே கூறிவிட்டார்:

“குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்!”

1.  நல்ல அடியார்களின் குலத்தில் பிறக்கும் பேறு
2. இறைவனுக்குத் தொண்டு செய்வதற்கேற்ற செல்வம்
3. அனைத்துத் துன்பங்களில் இருந்தும் விடுதலை
4. வைகுண்டப் பதவி
5. திருமாலின் திருவருள்
6. இறைவனுக்குத் தொண்டு செய்தலாகிய பெரும் பேறு
7. இறைவனுக்கு அனுபவிப்பதற்கேற்ற உடல்வலிமை
8. ஈன்ற தாயை விடவும் அதிக நன்மைகள்
ஆகிய எட்டு நலன்களையும் எட்டெழுத்து மந்திரம் தந்தருளும்.

247. நராய நமஹ (Naraaya namaha)

சென்னையைச் சேர்ந்த ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் பல நாடுகளுக்குச் சென்று தமது வியாபாரத்தை நன்கு விரிவு செய்துவிட்டு
வெற்றியுடன் தாயகம் திரும்பினார். ஆனால் அவருக்குத் தொடர்ச்சியான அலுவல்கள் சலிப்பைத் தந்தன. தனக்குச் சில நாட்கள் ஓய்வு தேவை என்று கருதினார். அதனால் தனக்கென்று சொந்தமாக சிம்லாவில் இருந்த பங்களாவில் ஓய்வெடுப்பதற்காகப் புறப்பட்டார்.

சிம்லாவில் உள்ள பங்களாவுக்கு ஒரு காவலாளியை அந்தத் தொழிலதிபர் நியமித்திருந்தார். அந்தக் காவலாளி, தொழிலதிபரின் முகத்தை இதுவரை பார்த்ததில்லை என்றாலும், மாதா மாதம் இவர் அனுப்பி வைக்கும் ஊதியத்தை மட்டும் தவறாமல் பெற்று வந்தார். அதுமட்டுமின்றி, சிம்லாவைச் சுற்றிப் பார்க்க வருவோர்க்கு பங்களாவை வாடகைக்கு விட்டுச் சம்பாதித்து வந்தார் அந்தக் காவலாளி.

இந்நிலையில், தொழிலதிபர் அந்த பங்களாவுக்கு வந்தார். வேறொரு குடும்பம் வாடகைக்குத் தங்கி இருப்பதைக் கண்டார். காவலாளியை அழைத்து, “எனக்குச் சொந்தமான இந்த பங்களாவில் நீ எப்படி வேறொருவரைத் தங்க வைத்தாய்?” என்று கேட்டார். ஆனால் அந்தக் காவலாளியோ அவர் முதலாளி என்பதையே ஏற்க மறுத்து விட்டார்.

பங்களா தன்னுடையது என்பதற்கு ஆதாரமாகப் பல பத்திரங்களை அந்தத் தொழிலதிபர் காட்ட, அவை எல்லாம் போலிப் பத்திரங்கள் என்று காவலாளி கூறிவிட்டார். தானே அந்தத் தொழிலதிபர் என்பதற்குச் சாட்சியாகத் தனது நண்பர்களை அழைத்து வந்து காவலாளியிடம் சொல்லச் சொன்னார் தொழிலதிபர். ஆனால் அவர்களை எல்லாம் பொய் சாட்சி என்று சொல்லி நிராகரித்து விட்டார் காவலாளி.

இறுதியாக அந்தத் தொழிலதிபர் காவலாளியிடம், “இந்த பங்களா என்னுடையது அல்ல! நான் சிம்லாவைச் சுற்றிப் பார்க்க வந்த சாதாரண பயணி என்றே வைத்துக் கொள்! நான் வாடகைக்குத் தங்க இவ்வீட்டில் ஓர் அறையாவது தர இயலுமா?” என்று கேட்டார். அவரிடமிருந்து வாடகைத் தொகையைப் பெற்றுக் கொண்ட காவலாளி, அவருக்குச் சொந்தமான பங்களாவில் உள்ள ஒரு அறையை அவருக்கே வழங்கினார்.
ஆனால் சாதாரண மனிதரைப் போல வீட்டுக்குள் நுழைந்த அந்தத் தொழிலதிபர், மெல்ல மெல்லத் தனது நடவடிக்கைகளால் தானே அவ்வீட்டின் முதலாளி என்பதை அனைவருக்கும் உணர்த்தினார்.

இது திரைப்படத்தில் நாம் பார்த்த கதை ஆயிற்றே! இதற்கும் அனந்தனின் ஆயிரம் நாமங்களுக்கும் என்ன தொடர்பு?
இக்கதையில் வரும் தொழிலதிபர் தான் இறைவன். சிம்லாவில் உள்ள பங்களா தான் நம் உடல். வீட்டின் காவலாளி தான் ஜீவாத்மாவாகிய நாம். இறைவன் என்னும் தொழிலதிபர் ஒன்பது வாயில்கள் கொண்ட வீடாகிய இவ்வுடலுக்கு ஜீவாத்மாவைக் காவலாளியாக நியமித்துள்ளார். இந்த உடலும் ஜீவாத்மாவும் இறைவனின் சொத்துக்கள்.

ஆனால் அந்தக் காவலாளி எப்படி முதலாளியையும் மறந்து விட்டு, அவர் மாதந்தோறும் வழங்கும் ஊதியத்தையும் மறந்து விட்டு, வீட்டை வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கப் பார்த்தாரோ, அதுபோலவே ஜீவாத்மாவும், தான் இறைவனுக்குத் தொண்டன் என்பதையும் மறந்துவிட்டு, இறைவன் தனக்குச் செய்த நன்மைகளையும் மறந்து விட்டு, இறைவனுக்குத் தொண்டு செய்வதற்காக ஏற்பட்ட இவ்வுடலைக் கொண்டு மற்ற அற்ப செயல்களைச் செய்கிறார்.

முதலாளி நேரில் வந்த போதும், அவரை முதலாளி என்று காவலாளி ஏற்காதது போல், இறைவனே நேரில் வந்து, “நான் தான் உனக்குத் தலைவன், நீ எனக்குத் தொண்டன்!” என்று சொன்னாலும் ஜீவாத்மா அதை ஏற்பதாகத் தெரியவில்லை. முதலாளி காட்டிய பத்திரங்களைப் போலி பத்திரங்கள் என்று காவலாளி சொன்னது போல், நாம் இறைவனுக்குத் தொண்டர்கள் என்பதற்குச் சான்றாக இறைவன் காட்டும் வேதம் என்னும் பத்திரத்தைப் போலி என்று சொல்லி ஜீவாத்மா நிராகரிக்கிறார். அந்தத் தொழிலதிபருக்காக அவரது நண்பர்கள் சாட்சி சொன்னது போல், முனிவர்களும் அடியார்களும் இறைவனின் சார்பில் வந்து ஜீவாத்மாவுக்கு எடுத்துச் சொன்னாலும், அவர்களையும் போலி சாட்சி என்று சொல்லி ஜீவாத்மா நிராகரிக்கிறார்.

இறுதியில், அந்தத் தொழிலதிபர் எப்படித் தன்னைச் சாதாரண மனிதனாகக் காட்டிக் கொண்டு வாடகைக்குக் குடியிருப்பதாகச் சொல்லி அவ்வீட்டுக்குள் நுழைந்தாரோ, அதுபோல் இறைவனும் அவருக்குச் சொந்தமான நம் உள்ளத்தில், வாடகைக்குக் குடியிருக்க இடம் கேட்டு நம் உள்ளத்துக்குள் நுழைகிறார்.

நுழைந்தபின் தானே தொழிலதிபர் என்று அவர் மெல்ல மெல்ல நிரூபித்தாற்போல், இறைவனும் தானே நமக்கு எஜமானன் என்பதை மெல்ல மெல்ல உணர்த்தி, நாம் அவருடைய சொத்து என்பதை நமக்குப் புரியவைக்கிறார். அவ்வாறு தன்னை இறைவனின் சொத்து என்று உணர்ந்த ஜீவாத்மாவுக்கு இறுதியில் முக்தியையும் அளிக்கிறார்.

‘நர:’ என்பது உலகிலுள்ள அறிவுள்ள, அறிவற்ற அனைத்துப் பொருட்களையும் குறிக்கும். அறிவுள்ள பொருட்கள், அறிவற்ற பொருட்கள் அனைத்தையும் தனது சொத்தாகக் கொண்டு விளங்குவதால் திருமால் ‘நர:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 247-வது திருநாமம். (பெரிய நிறுவனங்களுக்கு அதிபராக இருப்பவரை, அந்த நிறுவனத்தின் பெயரையே அடைமொழியாக இட்டு அழைப்பது போல், நரங்களுக்கு எல்லாம் அதிபதியான திருமாலை ‘நர:’ என்றே வியாசர் கூறுகிறார்)நராய நம என்று தினமும் சொல்லி வரும் அனைவருக்கும் உயர்ந்த அழியாத
ஞானத்தைத் திருமால் தந்தருள்வார்.

248. அஸங்க்யேயாய நமஹ (Asankhyeyaaya namaha)

ராமாநுஜர் காலத்தில் திருவரங்கத்தில் பராங்குசன் என்றொரு வைணவர் வாழ்ந்து வந்தார். அவர் சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட அனைத்து ஆசார அனுஷ்டானங்களையும் முறைப்படிப் பின்பற்றி வந்தார். ஆனால் தந்தைக்கு நேர் மாறாக அவருக்கு ஒரு தனயன். அவன் பெயர் புண்டரீகாட்சன். அவன் சூதாட்டம் போன்ற தீய பழக்க வழக்கங்களில் ஈடுபட்டு வந்தான்.

ஒருநாள் பராங்குசன் புண்டரீகாட்சனிடம், “மகனே! நீ நெற்றியில் திலகம் அணிந்துகொள்வதில்லை. கோவிலுக்குச் செல்வதில்லை. இறைவனின் நாமங்களைச் சொல்வதில்லை. ஆழ்வார்களின் பாசுரங்களை ஓதுவதில்லை. இப்படி எந்த நல்ல பழக்கமும் இல்லாமல் நீ இருக்கிறாயே! அரங்கனே கதி என்றல்லவோ நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள்? சாஸ்திர சம்பிரதாயங்களை வழுவாது பின்பற்றியவர்களின் குலத்தில் பிறந்து விட்டு நீ இப்படிச் சூதாடுவது முறையா?” என்று கேட்டார். ஆனால் தந்தையின் பேச்சுக்களை மகன் பொருட்படுத்தவே இல்லை.

பராங்குசன் தனது நண்பரிடம் தன் மகனின் நடவடிக்கைகளைப் பற்றிச் சொல்லி வருந்தினார். அப்போது அந்த நண்பர்,

“மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமாநுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணறு ஞானம் தலைக்கொண்டு நாராணற்கு ஆயினரே!

என்ற பாடலை நீங்கள் கேட்டிருக்கிறீரா?” என்று கேட்டார். “ஆம்! இது ராமாநுஜரைப் பற்றித் திருவரங்கத்து அமுதனார் இயற்றிய ராமாநுஜ நூற்றந்தாதி பாடலாயிற்றே! இறைவனே பூமியில் வந்து அவதரித்து உபதேசித்த போதும் திருந்தாத மக்கள் எல்லாம், ராமாநுஜரின் உபதேசங்களைக் கேட்டுத் திருந்தினார்கள் என்று கூறும் பாடல் அல்லவா இது?” என்றார் பராங்குசன். “உங்கள் மகனையும் ராமாநுஜரிடம் அனுப்புங்கள்! அவரது உபதேசத்தைக் கேட்டால் அவன் மனம் திருந்தி விடுவான்!” என்றார் அந்த நண்பர். பராங்குசனும் தன் மகனை ராமாநுஜரின் காலட்சேப கோஷ்டிக்கு அனுப்பி வைத்தார்.

புண்டரீகாட்சனின் நடவடிக்கைகளைப் பற்றி ஏற்கனவே பராங்குசனிடம் இருந்து அறிந்து கொண்ட ராமாநுஜர், அவனுக்கு நல்ல விஷயங்களை எடுத்துக் கூறினார். “நாம் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, அங்கு வாழும் நம்மவர்கள், நமது ஆடை மற்றும் தோற்றத்தைக் கொண்டு, இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் கண்டு கொள்கிறார்கள் அல்லவா? அதுபோலத் தான் இறைவனிடம் செல்லும் போது, நெற்றிக்குத் திலகம் அணிந்து, முறைப்படி வேஷ்டி உடுத்திச் சென்றால், இவன் நம்மைச் சேர்ந்தவன் என்று இறைவனும் நம்மை அடையாளம் கண்டுகொள்வான்! நமக்கு நிறைய அருள்புரிவான்! ஆகையால் வெளி அடையாளங்கள் தேவை இல்லை என்று எண்ணாமல், நீ நெற்றிக்குத் திலகம் அணிய வேண்டும்! முறைப்படி வேஷ்டி உடுத்த வேண்டும்!” என்றெல்லாம் அறிவுரை கூறி அவனைத் திருத்தினார் ராமாநுஜர்.

அன்று முதல் வேஷ்டி அணிந்து கொண்டு, நெற்றிக்குத் திலகம் இட்டுக் கொண்டு தினமும் ராமாநுஜரின் காலட்சேபத்துக்குச் சென்றான் புண்டரீகாட்சன். ஆனால் அவனது பழைய நண்பர்கள் திடீரென ஒருநாள் அவன் மனதை மாற்றி அவனைச் சூதாட அழைத்துச் சென்றார்கள். காலட்சேபம் கூற வந்த ராமாநுஜர், புண்டரீகாட்சன் வரவில்லை என்பதை உணர்ந்தார். அவன் சூதாடச் சென்றிருந்ததை மற்ற சீடர்கள் மூலம் அறிந்து கொண்டார். அவன் சூதாடிக் கொண்டிருந்த இடத்துக்கே அவனைத் தேடிச் சென்றார் ராமாநுஜர்.

ராமாநுஜர் வருவதைக் கண்ட புண்டரீகாட்சன், “நான் உங்களை விட்டு விலகிவிட்டேன்! இனி என்னைத் தேடி வராதீர்கள்!” என்று கூறினான். ராமாநுஜரோ, “நீ என்னை விட்டிருக்கலாம்! ஆனால் நான் உன்னை விடுவதாக இல்லை! வா! எண்ணில் அடங்காத அனைத்து உயிர்களும் இறைவனின் சொத்து. அச்சொத்துக்களை இறைவனாகிய உடையவனிடம் சேர்க்க வேண்டியது என் கடமை. அதனால் இறைவனின் சொத்துக்களுள் ஒன்று கூட வீணாவதை நான் அனுமதிக்க மாட்டேன்!” என்று சொல்லி, அவனைக் காலட்சேபத்துக்கு அழைத்து வந்தார். தொடர்ந்து ராமாநுஜரின் காலட்சேபங்களைக் கேட்டு, புண்டரீகாட்சன் அரங்கனுக்கே அடியவனாகி இறுதியில் முக்தியும் பெற்றான்.

ராமாநுஜர் கூறியபடி, எண்ணில் அடங்காத அனைத்து உயிர்களையும் தனது சொத்தாகத் திருமால் கொண்டிருப்பதால், அவர் ‘அஸங்க்யேய:’ என்றழைக்கப்படுகிறார். ‘ஸங்க்யா’ என்றால் எண்ணிக்கை என்று பொருள். ‘அஸங்க்யேய:’ என்றால் எண்ணில் அடங்காதது என்று பொருள். எண்ணில் அடங்காத சொத்துக்களை உடைய திருமால் ‘அஸங்க்யேய:’. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 248-வது திருநாமம்.
“அஸங்க்யேயாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் இழந்த சொத்துக்கள் அனைத்தும் மீண்டும் கிட்டும்படித் திருமால் அருள்புரிவார்.

249. அப்ரமேயாத்மனே நமஹ (Aprameyaathmane namaha)
சாந்தோக்யோபநிஷத் 4-ம் அத்யாயம் 10-ம் கண்டத்தில் ஒரு கதை வருகிறது. ஜாபாலர் என்று குருவிடம் பல சீடர்கள் வேதம் பயின்று வந்தார்கள். அவர்களுள் உபகோசலன் என்பவன் இறைவனைப் பற்றி அறிவதில் மிகவும் ஆர்வத்துடன் இருந்தான். மற்ற சீடர்களுக்கு அனைத்துப் பாடங்களையும் பயிற்றுவித்த ஜாபாலர், இறைவனை அறிய விழைந்த உபகோசலனுக்கு மட்டும் எந்தப் பாடமும் சொல்லித் தரவில்லை. தான் தினமும் வணங்கும் மூன்று அக்னிஹோத்திர அக்னிகளைப் பராமரிக்கும் பொறுப்பை மட்டும் உபகோசலனிடம்ஒப்படைத்திருந்தார் ஜாபாலர்.

சில வருடங்களில் மற்ற சீடர்கள் அனைவரும் வேதப் படிப்பை முடித்துக் கொண்டு வீடு திரும்பி விட்டார்கள். ஆனால் உபகோசலன் மட்டும் இன்னும் மூன்று அக்னிகளையே பராமரித்து வந்தானே ஒழிய, குரு அவனுக்கு எந்தப் பாடமும் எடுக்கவில்லை. இந்நிலையில், ஜாபாலர் வெளியூர் செல்ல நேரிட்டது. மூன்று அக்னிகளையும் உபகோசலனின் பொறுப்பில் விட்டு விட்டு ஜாபாலர் வெளியூர் சென்றார்.

தனது குரு தனக்கு இறைவனைப் பற்றி எதுவும் உபதேசம் செய்யாததை எண்ணி வருந்திய உபகோசலன், உண்ணா விரதம் இருக்கத் தொடங்கினான். அவனைக் கண்டு மனம் இரங்கிய அந்த மூன்று அக்னிகளும் அவனிடம் பேசின. “உபகோசலா! அனைத்து விதமான காற்றுக்கும் ஆதாரமாக, உயிர்மூச்சாக இருப்பவர் இறைவன். ஆகாயம் போல் எங்கும் நிறைந்தவர் அவர். அவர் எல்லையில்லாத ஆனந்தமே வடிவெடுத்தவர்!” என்றெல்லாம் அக்னிகள் அவனுக்கு உபதேசம் செய்தன.

அதன்பின் ஒவ்வொரு அக்னியும் தனித்தனியாக இறைவனைப் பற்றி உபகோசலனுக்கு எடுத்துச் சொல்லத் தொடங்கின. முதல் அக்னி, “பூமி, நெருப்பு, உணவு, சூரியன் ஆகியவற்றைத் தனக்கு உடலாகக் கொண்டு அவற்றை உள்ளிருந்து இயக்குபவர் இறைவன்!” என்று சொன்னது.
இரண்டாவது அக்னி, “தண்ணீர், திசைகள், நட்சத்திரங்கள், சந்திரன் உள்ளிட்டவற்றைத் தனக்கு உடலாகக் கொண்டு, அவற்றை உள்ளிருந்து இயக்குபவர் இறைவன்!” என்றுசொன்னது.

மூன்றாவது அக்னி, “மூச்சுக்காற்று, ஆகாயம், மேலுலகம், மின்னல் ஆகியவற்றைத் தனக்கு உடலாகக் கொண்டு, அவற்றை உள்ளிருந்து இயக்குபவர் இறைவன்!” என்று சொன்னது.“அப்படியானால் இவற்றை எல்லாம் அறிந்தால் இறைவனை அறிந்து கொண்டு விடலாமா?” என்று கேட்டான் உபகோசலன். “இல்லை! இறைவன் நமது புலன்களுக்கும் புத்திக்கும் அப்பாற்பட்டவர். அவரை முழுமையாகச் சொல்லவும் முடியாது, முழுமையாக அறியவும் முடியாது. தெரிந்த பொருளைக் காட்டித் தெரியாத பொருளைத் தெரிவிக்க முற்படுவது போல், சூரியன், தண்ணீர், காற்று போன்ற பொருட்களைச் சொல்லி, புலன்களுக்கு அப்பாற்பட்ட இறைவனை உனக்கு உணர்த்த முற்பட்டோம்.

உனது குரு இனி மேற்கொண்டு இறைவனைப் பற்றி உனக்குக் கூறுவார்!” என்று அக்னிகள் கூறின. வெளியூரிலிருந்து திரும்ப வந்த ஜாபாலர், உபகோசலின் முகத்தில் ஒரு தேஜஸ் தெரிவதைக் கண்டார். “உனக்கு யாராவது இறைவனைப் பற்றி உபதேசித்தார்களா?” என்று அவனிடம் கேட்டார். நடந்தவற்றைச் சொன்னான் உபகோசலன். ஜாபாலர், “உபகோசலா! நம் ஒவ்வொருவரின் கண்ணுக்குள்ளும் இறைவன் எழுந்தருளியிருப்பதாகத் தியானிக்க வேண்டும்! தன்னைச் சரணடைந்தோர்க்கு அனைத்து நன்மைகளையும் தருபவர் அவர். ஒளிபடைத்த திருமேனியோடு அவர் விளங்குகிறார்! நானோ, இந்த அக்னிகளோ, இன்னும் எத்தனை பேர் பேசினாலும், இறைவனைப் பற்றி முழுமையாகப் பேசி முடிக்க இயலாது. நீயும் எவ்வளவு தான் கேட்டாலும் இறைவனைப் பற்றி முழுமையாக அறிய முடியாது!” என்றார் ஜாபாலர்.

“ஞானிகள் இறைவனை முழுமையாக அறிந்திருப்பதாகச் சொல்கிறார்களே! அவர்கள் எப்படி அறிந்தார்கள்?” என்று கேட்டான் உபகோசலன். அதற்கு ஜாபாலர், “இறைவனை முழுமையாக அறிய முடியாது என்பதை யார் உணர்கிறாரோ, அவர் தான் ஞானி. இறைவனை அறிந்து விட்டதாக யாரேனும் சொன்னால் அவர் உண்மையில் அறியவில்லை என்றே பொருள்!” என்றார். இதையே நம்மாழ்வாரும்,“உணர்ந்துணர்ந்து இழிந்தகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமைஉணர்ந்துணர்ந்து உணரிலும் இறைநிலை உணர்வரிது உயிர்காள்!”என்று பாடியுள்ளார்.

இவ்வாறு நம் ஒவ்வொருவருக்குள்ளும் நிறைந்திருந்தாலும், நம்மால் முழுமையாக அறியமுடியாதபடி எல்லையற்ற பெருமையுடன் திருமால் திகழ்வதால், அவர் ‘அப்ரமேயாத்மா’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 249-வது திருநாமம்.“அப்ரமேயாத்மனே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குப் புரியாதவை யாவும் புரியும் படி திருமால் அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை

டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்