சுவாமியே சரணம் ஐயப்பா!



இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-40

அடியார் திருக்கூட்டத்தில் ஒரு அங்கமாக ஒவ்வொருவரும் இணைவது தான் நம்மை மேல் நிலைக்கு அழைத்துச் செல்லும்.

‘அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்’ என்று  மாணிக்கவாசகரும்.
 ‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவுவேண்டும்’ என்று ராமலிங்க அடிகளும்
 ‘ஞான நெஞ்சினர் பால் இணங்கிடு கூர்மை தந்து’ என்று அருணகிரி நாதரும் பாடுகின்றார்.

ஐயப்ப விரதம் மேற்கொண்டு சபரிமலை யாத்திரை செய்வது அப்படியொரு மேலான ‘ஸத்சங்கத்தை’ அனைவருக்கும் அமைத்துக் கொடுக்கிறது.

‘ஒரே ஒரு லட்சியம் சபரிமாமலை
ஒரே ஒரு மோகம் திவ்ய தரிசனம்
ஒரே ஒரு மார்க்கம் பதினெட்டாம்படி
ஒரே ஒரு மந்திரம் ‘சரணம் ஐயப்பா’
   
சுவாமியே சரணம் ஐயப்பா! என பக்தர்கள் எழுப்பும் கோஷம் அனைவர்க்குள்ளும் ஒரு ஆன்மிக எழுச்சியைத் தோற்றுவிக்கிறது! கார்த்திகை முதல் நாள் மாலை  அணிந்து தை முதல் நாள் மகர ஜோதி தரிசனத்தை சபரிமலையில் இருந்து காண திசைகள் பலவற்றிலும் இருந்து அன்பர்கள் திரள்கிறார்கள். கூட்டு வழிபாடு,  காட்டு வழிப்பயணம், கடும் விரதம், அன்னதானம் என அற்புதமான பல அம்சங்களைக் கொண்டது ஹரிஹரசுதனின் ஆராதனை. சைவ வைணவ ஐக்கிய  சொரூபமாகவே விளங்குகிறார் ஐயப்பன்.
    
‘‘மிடல் இறை விறல் அரி விமலர்கள் தருசுதன்’’ என அருணகிரி நாதர் சிவனும், திருமாலும் இணைந்து பெற்றெடுத்த புதல்வன் ஹரிஹர சுதன் எனப்  போற்றி மகிழ்கிறார்.

கச்சியப்பர் தன் கந்த புராணக் காவியத்திலும்

‘‘செய்ய சடைமேல் சிறந்த மதிக்கோடு புனை
துய்யவனும், வேலை துயின்றோனும் சேர்த்து
அளித்த   ஐயன் நமக்கு இங்கோர் அரண்’’

என ஐயப்பனே ஆருயிர்கட்கெல்லாம் காப்பு என்பதைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

மோகினி அவதாரம் எடுத்த திருமாலை ‘‘ஐயை’’ என்ற சொல் குறிக்கிறது. ‘‘அப்பன்’’ என்ற சொல் சிவபிரானைக் குறிக்கிறது. ஐயை, அப்பன் இரண்டும்  சேர்ந்தே ‘‘ஐயப்பன்’’ என்கிற திருநாமமாய்த் திகழ்கிறது.

ஸ்ரீராமபிரானின் பக்தையான சபரியின் திருநாமம் கொண்டு திருமாலை நினைவூட்டுவது சபரிமலை. சிவபிரானை எண்ணச் செய்வது எதிரே உள்ள பொன்னம்பல  மேடு. அங்குதான் ஜோதி தரிசனம் தை முதல் நாள் தோன்றுகிறது.

தர்ம சாஸ்தாவாய் யோக பட்டயம் கட்டி அமர்ந்த நிலையில் விளங்கும் சபரிமலை ஐயப்பனின் திருவுருவம் ‘‘சிவ விஷ்ணு ஐக்கியம் நான்’’ என்பதைத்  தெளிவாகத் தெரிவிக்கிறது. கல்லாலின் புடை அமர்ந்து வல்லார்கள் நால்வருக்கு தட்சிணாமூர்த்தியாய் உபதேசம் செய்தார் சிவபெருமான் என்பதை நாம்  அறிவோம். அப்போது அவர் புரிந்த மௌன உபதேசமே சின்முத்திரைத் தத்துவம்.

வலப்பக்கம் அச் சின்முத்திரையோடு கை விளங்க அம்பிகைக்கே உரிய இடப்பக்கம் பெண்மையின் நளினத்தோடு அழகுமிளிர அற்புதமாக அணிகள் சூடிப்  பொலிகின்றார் ஐயப்பன். நெய்தனில் நீராடி, நீலப் பட்டு உடுத்தி, நெற்றியில் திருநீறு அணிந்து, சந்தனக்களபம் சார்த்தி, குங்குமத் திலகம் தீட்டி, காதினில்  குண்டலம் ஜொலிக்க, மார்பினில் வீரமணிமாலை திகழ வைர முடிசூட்டி யோக பீடாதிபதியாய்த் திகழும் பதினெட்டாம் படி நாயகனைக் காண கண்கள் இரண்டு  போதுமா ?

‘‘ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள’’ சிவபெருமானைத் தரிசித்தார்கள் நாயன்மார்கள்.
‘‘நீலமேனி ஐயோ என் நெஞ்சினை நிறை கொண்டதே’’

என ஆழ்வார்கள் திருமால் அழகில் ஆழ்ந்தார்கள்!

இரு கடவுளர்களும் இணைந்த வடிவமான ஐயப்பன் அழகைச் சொற்களால் சொல்ல முடியுமா ? மார்கழி மாதம் பஞ்சமி திதி சனிக்கிழமை, உத்தர நட்சத்திரம்,  விருச்சிக லக்னத்தில் மகிஷிமுகி என்னும் அரக்கியான அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட ஹரிஹரசுதன் அவதரித்தார்.

சிவவிஷ்ணு சக்திகளின் திருப்புதல்வனுக்கு சகல கலைகளையும் வழங்கினார் நான்முகக் கடவுள் . ‘‘தர்மசாஸ்தா’’ எனப்பெயரும் சூட்டினார். மகிஷியை  அழிக்க மண்ணுலகம் வந்தார் மணிகண்டன்.

பம்பா நதி தீரம் குழந்தையாகத் தவழ்ந்த ஐயப்பனை கேரள மன்னன் ராஜசேகரன் வளர்த்தான். வளர்ப்புத் தாயின் தலைவலிக்கான மருந்தாக புலிப்பாலைக்  கொண்டுவரக் கானகம் சென்றார் ஐயப்பன். பின்னர் இந்திரபுரி சென்று அங்கு கொடுமைகள் புரிந்து மகிஷிமுகியை வதைத்தார் என்பதும் சாஸ்தாவின் வாழ்க்கைச்  சம்பவங்கள்.

நோயிலிருந்து தாயைக் காத்தருளினார் என்பது காத்தற் கடவுளாகிய திருமாலின் அம்சம். ‘‘மகிஷிமுகி சங்காரம்’’ என்பது சிவனின் அழித்தல் செயல்.  இவ்வாறு தெய்வீக நுட்பங்கள் பல பொதிந்துள்ள ஐயப்பன் சரித்திரம் போலவே சபரிமலை யாத்திரையும் தனிச்சிறப்புகள் பலவற்றை உள்ளடக்கியுள்ளது.
    
சபரிமலையை தரிசிக்க வேண்டும் என எண்ணும் பக்தர்கள் முதலில் குருமுகமாக மாலை அணிய வேண்டும் என்பது விதி. குருவருள் மூலமாகவே திருவருள்  என்பதை இது உறுதிப்படுத்துகிறது. பரிபூரண சரணாகதி என்பது தான் பக்தியின் மேலான நிலை.

‘‘சுவாமியே சரணம் ஐயப்பா’’  என்னும் சரண கோஷம் இதைக் குறிப்பிடுகிறது.

பெரியவர், சிறியவர், பணக்காரர், ஏழை, முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடின்றி அனைவரையும் ‘‘சாமி! சாமி!’’ என்று அழைப்பதில் அனைவரும் சமம்  என்கிற மேலான ஒருமைநிலை தத்துவத்தை உபதேசிக்கிறது.

புலனடக்கம், உணவுக்கட்டுப்பாடு, அனைவரும் இணைந்து பஜனை செய்யும் கூட்டு வழிபாடு. இத்தகைய மேலான ஆன்மிக ஒழுக்கங்கள் நிறைந்துள்ள ஐயப்ப  வழிபாட்டின் போற்றத்தக்க மேலும் ஒரு அம்சம் அன்னதானம்.

‘‘அன்னதானப் பிரபுவே சரணம்’’  என ஆடிப்பாடி பக்தியில் மேலோங்கும் சபரிமலை யாத்ரிகர்கள் மலைக்குப் போவதற்கு முன்பே இல்லத்தில்  அன்னதானத்திற்கு அவசியம் ஒருநாள் ஏற்பாடு செய்கிறார்கள்.

‘‘தானமும் தவமும் தான் செய்வராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே’’

என்பதுதானே ஔவையாரின் திருவாக்கு.
 
பின்முகச்சிறப்புகள் பாங்குற அமைந்ததே இந்த மதக் கடவுளர்களின் வழிபாடு என்று அறிந்து மகிழ்வோம். சபரிமலை போலவே ஐயப்பன் எழுந்தருளியுள்ள அச்சங்  கோயில் ஆரியங்காவு, குளத்துப்புழை, எரிமேலி தலங்களும் அவசியம் பக்தர்கள் தரிசிக்க வேண்டியவை.

பகவத் கீதையின் 18 அத்தியாயங்கள் போல, பதினெட்டு புராணங்கள் போல விளங்குகிற பதினெட்டுப் படிகள் கடந்து சபரிமலைப் பதியில் பதியாக விளங்கும்  பந்தளத்து பாலகனைத் தொழுகின்ற பக்தர்கள் நெய்த் தேங்காயை நிவேதனமாக செலுத்துகிறார்கள்.

முக்கண்கள் உடைய தேங்காய் சிவபிரானின் அம்சம். அதில் கொண்டு வரும் நெய் திருமாலின் அம்சம். ஹரிஹரசுதனுக்குப் பொருத்தமான ஆராதனையாக நெய்த்
தேங்காய் பொலிகின்றது.

பொய் இன்றி மெய்யோடு நெய்கொண்டு போனால்
ஐயனை நாம் காணலாம் !-  சபரியில்
ஐயனை நாம் காணலாம்!
பால்எனச் சொல்வது உடலாகும் ! - அதில்
தயிர் எனக் கண்டதெங்கள் மனமாகும் !
வெண்ணெய் திரண்டது உந்தன்
அருளாகும்
இந்த நெய் அபிஷேகம் எங்கள் அன்பாகும்
என்று பாடினார் கவியரசர் கண்ணதாசன்.
   
பால் ஒரிரு நாளில் கெட்டுப் போய்விடும். அதில் இருந்து வரும் தயிர் சில நாட்களில் கெட்டுப் போய்விடும். தயிரில் இருந்து வரும் வெண்ணெய் ஒருவாரம்  வரை இருக்கும். ஆனால் வெண்ணெய் நெய்யாக மாறினாலும் பல மாதங்கள் கெட்டுப் போகாமல் பயன் அளிக்கும். ஹரிஹரன் மைந்தன் நெய் அபிஷேகம் ஏற்று  மானுடர்களை மகான்களாக ஆக்குவான் என்பது உறுதி!

(தொடரும்)
திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்