என்ன செய்யும் அருணாசலம்?



வணக்கம் நலந்தானே!!

அருணாசலத்தைக் குறித்த விஷயங்களை மிகச் சாதாரண லௌகீக தளத்தில் வைத்து கூறிவிட்டு அரோகரா... என்று பாவனையாக வணங்கி விட்டு நகர முடியாது. ‘‘நான் வேதாந்த வழியில் ஈடுபாடு உடையவன். சாதாரணமான ஜனங்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு வருவதற்காக மலையையே சிவமாகச் சொல்லி சுற்றச் சொல்லியிருப்பார்கள். மலையை வலம் வருதல் என்பது மிகவும் அடிப்படையானது’’ என்றும் போகிற போக்கில் பேசிவிட முடியாது. மேலும், ‘‘மன அமைதிக்காக நான் திருவண்ணாமலை போகிறேன்’’ போன்ற வார்த்தைகள் தற்போது தேய்ச் சொற்களாக மாறிவிட்டன.

ஏனெனில், இதுபோன்ற வார்த்தைகளெல்லாம் தேய்ச் சொற்களாக உபயோகப்படுத்தப்பட்டு ஆன்மிகத்தின் உண்மையான இலக்கையே அறியவிடாது ஆகியிருக்கிறது. அமைதி, நிம்மதி போன்ற வார்த்தைகளை கூறும்போது மிகச் சாதாரணமான பொருளில் அது தொணிக்கிறது. மனஅமைதி என்பதே மிகவும் தற்காலிகம்தான். மனதை வைத்துக் கொண்டு அமைதி என்பது ஆன்மிகத்தின் உயர்தளத்தில் சாத்தியமில்லை. அதனால்தான் ஞானிகள் பூர்ணத்துவம், ஜீவன் முக்தி, அத்வைதானுபவம் என்றெல்லாம் பல பெயர்களில் ஞானமடைதலை கூறுகிறார்கள்.

லௌகீக தேவைகளால் ஏற்படும் நிறைவும், போதுமென்ற மனப்பான்மையால் ஏற்படும் தெளிவு மட்டுமே வாழ்வின் இறுதியான குறிக்கோள் அல்ல. அதேபோல இன்பங்களால் உங்கள் வாழ்க்கை நிறைவடைவது இல்லை. எல்லாவற்றுக்குமான மூலமான கேள்வியை கேட்டு நான் யார் என்று அறிவதே ஒட்டுமொத்த வாழ்க்கையின் குறிக்கோள். இந்த குறிக்கோள் திடப்படுவதற்குத்தான் அருணாசலம். அதனாலேயே, அருணாசலம் என்ன தரும் எனும்போது ஜீவன் முக்தியை அளிக்கும். மனம் என்கிற மாயையை அறுத்து மனோநாசத்தை கொடுத்து உங்களின் சொந்த சொரூபமான ஆத்ம சொரூபத்தை தரிசிக்கச் செய்யும் என்றே அதை உச்சியில் வைத்து ஞானியர் பேசியிருக்கிறார்கள்.

வாழ்க்கையின் அடிநாதம் எது? ஏன் வாழ்கிறோம்? எதற்காக இந்த வாழ்க்கை? என்னால் பார்க்கப்படும் உலகம் என்பது என்ன என்று சற்றே ஆழமாகக் கொண்டு செல்லும் தலம் இது. வாழ்க்கையைப்பற்றி பலநூறு முறை பல்வேறு நபர்களால் தொடுக்கப்பட்ட வினாவிற்கு தட்டையான பதில்களும் கொடுக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன. ஆனால், வாழ்க்கையை யார் வாழ விரும்புகிறார். வாழ்க்கையை பற்றி யார் வினா தொடுக்கிறார்? ஏன் இவர் வாழ்க்கையை வாழ வேண்டுமென்று விரும்புகிறார்? அப்படி விரும்பும் இந்த நபர் யார் என்பதன் ஊடாக பல்வேறு கேள்விகளை தோற்றுவித்து பதில்களை அளித்து பின்னர் அவை இரண்டையும் ஒருசேர எரித்துவிடும் ஞானமலை.

*கிருஷ்ணா (பொறுப்பாசிரியர் )