எத்தனை எத்தனை கங்கைகள்...



கங்கையில் நீராடுவது, கங்கைக் கரையில் வாசம் செய்வது, கங்கா என்று உச்சரிப்பது, கங்கை ஜலம் பருகுவது, கங்கையை நினைப்பது ஆகிய அனைத்தும்  பாவங்களைப் போக்கும். வாமன அவதாரத்தில் மகாவிஷ்ணுவின் இரண்டாவது அடி மேலுலகை அளக்க முற்பட்டபோது, அவரது திருவடிக்கு பிரம்மா அபிஷேகம்  செய்தார். அந்த நீர்தான் மேலுலகத்தில் விஷ்ணுபதி என்ற பெயரில் பாய்ந்தது.

பகீரதன் தலம் செய்து கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்ததால் பாகீரதி என்றும், ஜஹ்னு மகரிஷியின் ஆசிரமத்தில் புகுந்து பிறகு அவர் காது வழியாக  வெளிவந்ததால் ஜாஹ்னவி என்றும் பெயர் பெற்றது. ‘கம்’ என்ற கணபதி பீஜமந்திரத்தை உச்சரித்துக்கொண்டு செல்வதால் ‘கங்கா’ என்று பெயர் பெற்றது.  கங்கை இமயமலையில் கோமுக் பனிமலையில் உற்பத்தியாகி மேற்கு வங்காளத்தில் உள்ள கங்கா சாகரில் வங்கக்கடலுடன் சங்கமிக்கிறாள். கங்கை பல  பெயர்களைப் பெற்றிருப்பதுபோல் பல்வேறு இடங்களில் பலவித அமைப்புகளையும் பெற்றுள்ளாள்.

1. அமர் கங்கா: இது 12,000 அடிக்குமேல் உயரத்திலுள்ள அமர்நாத் குகையின் அருகே பாய்கிறது. அமர்நாத் தரிசனம் ஜூலை பௌர்ணமி முதல் ஆகஸ்ட் மாத  பௌர்ணமி வரைதான் கிடைக்கிறது. அமர் கங்கை எப்போதும் குளிர்ச்சியுடனிருக்கும்.
2. நீலகங்கா: ஒருமுறை பார்வதி சிவனுடன் விளையாடும்போது அவளின் கண்மை சிவனின் முகத்தில் ஒட்டிக்கொண்டது. அவர் கங்கையில் முகம்  கழுவும்போது கங்கை நீர் கருப்பாக மாறியது. அன்று முதல் கங்கைக்கு நீலகங்கா என்று பெயர் ஏற்பட்டது. இக்கங்கையைத் தொட்டாலே பாவம் தொலைந்து  போகிறதென்று அமர்நாத் தலபுராணம் கூறுகிறது.
3. காளி கங்கா: இது அமைதியின்றி குதித்து கும்மாளம் போடும் நதி. அலைகள் 30/40 அடி வரை பாய்கின்றன. கைலாஷ்-மானசரோவர் யாத்திரை போகும்  வழியெல்லாம்  நம் கூடவே வருகிறது. இதன் உற்பத்தியாகும் இடம் காலாபாணி ஆகும்.
4. ராம் கங்கா:  இது உத்திரப்பிரதேசத்தில் காசிப்பூர் என்ற இடம் தாண்டிப்பாய்கிறது.

5. ஜடகங்கா: இது உத்திரப்பிரதேசத்தில் குமாயூன் மண்டலின் பித்தோராகர் என்ற ஜில்லாவில் பாய்கிறது.
6. கோரி கங்கா: குமாயூன் மண்டலின் தார்சூலா/முன்ஸியாரி கிராமத்தை அடுத்து ஓடுகிறது. வெண்மையாக நீர் கொண்டு வருவதால் கோரி (வெள்ளை) கங்கா  எனப்பெயர்.
7. கருட கங்கா: இது உத்திரப்பிரதேசத்தில் அல்மோரா ஜில்லாவில் பைஜ்நாத் க்ஷேத்திரம் அருகே பாய்கிறது.
8. பாண கங்கா: இது ஜம்மு தாண்டி வைஷ்ணவி கோயில் அருகே பாய்கிறது. அம்பாள் அனுமாருக்குத் தரிசனம் தந்தபோது அனுமன் மானசீகமாக வரவழைத்த  பாணத்தைக் கொண்டு அம்பாள் கங்கையை ஊற்றாகப் பெருக்கும்போது பாணகங்கை என்ற பெயர் ஏற்பட்டது.
9. பால் கங்கா: தன் கூந்தலை வைஷ்ணவி தேவி இதில் அலசியதால் இப்பெயர் உண்டாயிற்று. ஹிந்தியில் ‘பால்’ என்றால் கூந்தல். இது கட்ரா  பகுதியிலுள்ளது.
10. ஆகாச கங்கா: கைலாய மலையை பரிக்ரமா செய்யும்போது (கிரிவலம்) அங்கு காணப்படும் நதியே ஆகாச கங்கை.
11. பாதாள கங்கா: இது ஆந்திரப் பிரதேசத்தில் சைலம் என்ற சிவக்ஷேத்திரத்துக்கு அருகே பாய்கிறது. நீர் மடிப்பு மடிப்பாகச் சுருள் சுருளாகப் பாய்கிறது.
12. தேவ கங்கா: இது மைசூர் சாம்ராஜ்யத்தில் சாமுண்டி மலைக்கு கிழக்கே பாய்கிறது.
13. துக்த கங்கா: வடமொழியில் துக்தம் என்றால் பால். இது கேதார் நாத் என்ற ஜ்யோதி லிங்க க்ஷேத்திரத்தின் அருகே பாய்கிறது.
14. வாமன் கங்கா:  வாமன் என்றால் குள்ளம் என்று பொருள். மத்திய பிரதேசத்தில் ஜபல்பூரில் பேடாகாட் என்ற சலவைக்கல் பாறைகள் உள்ள இடத்திலுள்ளது.  பிருகு முனிவர் தவம் செய்த இடத்தில் வாமன் கங்கை, நர்மதை நதியுடன் கலக்கிறது.
15. கபில் கங்கா:  நர்மதை பரிக்ரமா செய்யும்போது ‘தம் கட்’ என்ற ஊர் வருகிறது. அங்கிருந்த 3 மைல் தூரத்தில் கபில் கங்கை பாய்கிறது. பிரம்மாவின்  புத்திரன் அக்னி, தக்ஷன் மகள் ஸ்வாஹாவை மணக்கிறான். அவனது 3 பிள்ளைகள் ஆஹ்வனீயா, தக்ஷிணாக்னி, கார்கபத்தியாக்னி, கடைசி பிள்ளையின் இரு  புதல்வர்கள் சங்கு நாசன் மற்றும் சதாக். சதாக் நர்மதைக் கரையில் பல வருடங்கள் தவம் புரிந்து சிவதரிசனம் பெற்றான். நர்மதை ஆறு தோழிகளுடன் தன்  மனைவியாக வேண்டுமென சிவனிடம் வேண்டினான். நர்மதையின் புத்திரனான தீஷ்ணேந்திரன் பயஸார் மற்றும் தாரகாசுரனை வதம் செய்து, தேவர்களுடன்  நர்மதையை அடைந்து ஸ்நானம் செய்யும்போது கபிலா கங்கையில் மூழ்கி எழுந்ததும் அவனுக்கு யுத்தத்தில் ஏற்பட்ட காயம் நீங்கியது.
16. கரா கங்கா:  சோண பத்திரை நதியின் உற்பத்தி ஸ்தானத்துக்கு தெற்கில் பிருகு கமண்டலம் என்ற இடமுள்ளது. பிருகு முனிவரின் கமண்டலத்திலிருந்து ஒரு  சிறிய நதி பாய்ந்து நர்மதையுடன் கலக்கிறது. இது கரா கங்கா எனப்படுகிறது.
17. மோக்ஷ கங்கா:  நர்மதை நதியை வலம் வரும்போது சூலபாணேஸ்வர் என்ற தலம் வரும். அங்கிருந்து 3 மைல் தூரத்தில் மோக்கடி என்ற கிராமம் உள்ளது.  இங்கு மோக்ஷ கங்கா என்ற ஜலப்ரவாஹம் நர்மதையுடன் கலக்கும் காட்சி கண்களுக்கு விருந்தாகும்.

ஆதிசங்கரர் கங்கா அஷ்டகத்தில் இவ்வாறு கூறுகிறார்.

தவதட நிகடே யஸ்ய நிவாஸ:
கலு வைகுண்டே தஸ்ய நிவாஸ:

எவன் கங்கைக் கரையில் வாழ்கிறானோ, அவனுக்கு வைகுண்டத்தில் சுலபமாக ஓர் இடம் கிடைத்து விடுகிறது. கங்கை நதி யமுனை நதியுடன் கலக்குமிடமான  திரிவேணி சங்கமம் அலகாபாத்திலுள்ளது. கங்கை நதி கடலுடன் கலுக்குமிடமான கங்கா ஸாகர் வடகிழக்கு இந்தியாவிலுள்ளது. விஷ்ணுவின் அவதாரமான  கபில முனிவர் நிரந்தரமாகத் தங்கிய இடம் கங்காஸாகர். கபில முனிவருக்கு அங்கு ஒரு கோயிலும் உள்ளது.

ஹரஹர கங்கே! ஜய மா கங்கே!
கங்கா மாதா கீ ஜெய்!

ஒடிஸாவில் தீபாவளி: தீபாவளியன்று ஒடிஸாவில் புத்தாடைகள் அணிந்து, வாசலில் அகல் விளக்குகள் ஏற்றி பட்டாசு வெடித்து, இனிப்புகளைப்  பகிர்ந்துகொள்கின்றனர். அந்திப் பொழுதில் தங்கள் இறந்த மூதாதையர்களுக்குப் பூஜை செய்கின்றனர். அதாவது வாசலில் வண்ணப்பொடிகள் கொண்டு பெரிய  படகு வரைகின்றனர். அதை 7 பாகங்களாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் கடுகு, உப்பு, பஞ்சு, கீரை, மஞ்சள் எனப்படைக்கின்றனர். மையப்பகுதியில் நிவேதனம்  படைத்து, அதன்மீது ஒரு சணல் குச்சியில் சிறு துணி சுற்றி விளக்கேற்றி பூஜையை ஆரம்பிக்கின்றனர். கடைசியில் சணல் குச்சி விளக்கை எடுத்து வானத்தை  நோக்கிக் காட்டுகின்றனர். அந்த வெளிச்சத்தில் முன்னோர்க்ள மீண்டும் சொர்க்கம் செல்வதாக நம்புகின்றனர்.

R.சாந்தா