ஐப்பசி சதுர்த்தியும் நாகலு சவிதியும்



இந்து மதத் தெய்வங்கள் அனைவருமே நாகத்தோடு சம்பந்தப்பட்டவர்தாம். சிவன் உடலெங்கும் நாகாபரணமாக அணிந்தவர். அவர் பெயரே நாகபூஷணன்.  திருமாலுக்கு ஆதிசேஷன் படுத்தால் படுக்கை, உட்கார்ந்தால் இருக்கை, நின்றால் குடை. விநாயகரின் புரிநூலே பாம்புதான். அன்னை பார்வதியின் கையில்  கங்கணமாக நாகம் இருக்கும். மயிலேறும் வெற்றி வேலனுக்கோ காலடியில் பாம்பு என்றும் உண்டு.

நாகப்பாம்பை தமிழ்நாட்டில் அம்மன் உருவாக வணங்குவோர் அதிகம். தமிழகத்தில் எல்லா அம்மன் கோயில்களிலும் நாகப்புற்று நிச்சயமாக இருக்கும். ஆனால்  முருகன் கோயில்களில் இந்த வழிபாடு கிடையாது. நாகம்தான் முருகன் என்பதில் இன்றைக்கு தமிழர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை விட ஆந்திரர்களுக்கு  நம்பிக்கை அதிகமாக உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் ஆறு வாரம் முருகனுக்கு செவ்வாயன்று அபிஷேகம் செய்து வந்தால் அந்த தோஷம் நிவாரணம் ஆகும்  என்பது ஆந்திரா-கர்நாடகா பிராந்தியத்தில் இப்போதும் பிரபலம். நாகபஞ்சமி கர்நாடகத்தில் விசேஷம் என்றால் ஆந்திரத்தில் நாகசதுர்த்தி மிகவும் விசேஷம்.

தீபாவளி அமாவாசையை அடுத்து நான்கு நாட்களில் வரும் ‘நாகலு சவிதி’ இங்குள்ளோருக்கு பண்டிகை தினம். அரசாங்க விடுமுறை தினம் கூட. இன்றும்  கூட ஆந்திரத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாயன்று முருகனுக்கு (எங்கெல்லாம் முருகன் சந்நதிகள் உள்ளதோ அங்கெல்லாம்) காலை வேளையிலிருந்து  மதியம் வரை அபிஷேக ஆராதனைகள்  நடந்து கொண்டிருப்பதை சகஜமாகக் காணலாம். வாரத்தின் மற்ற நாட்களில் முருகனுக்கு இந்த விசேஷ பூஜையை  இவர்கள் செய்வதில்லை என்றும் சொல்லலாம். கிருத்திகை நட்சத்திரத்தில் அத்தனை பரபரப்பு காட்டுவதில்லை. ஆனால் சஷ்டி திதி தோறும் முருகனுக்கு சிறப்பு  வழிபாடு உண்டு.

- அபிநயா