சுகமான வாழ்வருளும் சயன நரசிம்மர்



*திருவதிகை, பண்ருட்டி, கடலூர்
*நலம் தரும் நரசிம்மர் தரிசனம் 16

பள்ளிகொண்ட கோலத்தில் அரங்கனை தரிசித்துள்ளோம். வக்ராசுரனை சம்ஹாரம் செய்த நரசிம்மமூர்த்தியும் களைத்துப் போய் சயன கோலத்தில் காட்சி அளிப்பதை திருவதிகை (பண்ருட்டி அருகில்) சரநாராயண திருத்தலத்தில் தரிசிக்கலாம். ஸ்ரீ நரசிம்மரின் சயனக் கோலக்காட்சியை இக்கோயிலில் மட்டுமே காணலாம். திருமாலின் திவ்வியத்திருத்தலங்களில் இக்கோயிலில் தான் நரசிம்மர் சயன திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார். இது ஒர் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும். மேலும் தாயாரும் உடன் எழுந்தருளியிருப்பதால் இது போக சயனம் ஆகும். இந்த சயன நரசிம்மர், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்து விட்டு, அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார்.

எழுநூறு ஆண்டுகளுக்கு முன் வேதாந்த தேசிகர் திருவஹீந்திரபுரம் செல்லும் போது இந்த சயன நரசிம்மரை வழிபட்டதாக கூறப்படுகிறது. இந்த சயன நரசிம்மருக்கு ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.பிரபஞ்சத்தை ஆளும் மும்மூர்த்திகளும் இந்த அகிலத்திற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் சேர்ந்து போரிட்டு தர்மத்தை நிலைநாட்டுவார்கள். அப்படி மும்மூர்த்திகளும் ஒருங்கிணைந்து நிகழ்த்தியதுதான் திரிபுர சம்ஹாரம். அந்த சம்பவம் நிகழ்ந்த தலமே திருவதிகை. அங்கு ஈசனைத் தவிர பெருமாளுக்கும் சர நாராயணப் பெருமாள் ஆலயம் ஒன்று உள்ளது. வைகுந்தனுக்கு சர நாராயணப் பெருமாள் எனும் திருநாமம் எப்படி ஏற்பட்டது?  

தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய அசுரர்கள் தங்களின் கடுந்தவத்தால் நான்முகனை தகித்தனர். கொஞ்சம் உக்கிரமாக தவமிருந்தாலும் போதும், நான்முகன் வந்துவிடுவார் என்ற அலட்சியம் அவர்களிடத்தில் பரவியிருந்தது. அதேபோல நான்முகன் அதிவேகமாக அவர்கள் முன்பு பிரசன்னமானார். அவரிடம் அசுரர்கள் மூன்று வரங்களை கேட்டார்கள். அதில் சாகாவரம் தன் தகுதிக்கு மீறியது என்று முதலிலேயே மறுத்தார், நான்முகன். எவராலும் வெல்ல முடியாத பலம் கொடுத்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, விசித்திரமான முப்புரமும் பறந்து பாய்ந்தோடும் மூன்று கோட்டைகள் வேண்டும் என்றனர். அவைகள் பொன், வெள்ளி, செம்பு உலோகங்களால் குழைத்துச் செய்யப்பட்டிருக்க வேண்டுமென கேட்டனர். அவர்கள் தலைவிதி தான் எழுதியதுபோலவே முடியப்போகிறது என்பதை உணர்ந்து நான்முகன் வரங்கள் தந்தார். கோட்டைகள் கோடி சூரியப் பிரகாசமாய், பிரமாண்டமாய் நின்றன. மூவரும் ஏறி அமர்ந்துகொள்ள, அவை வெகு உயரத்தில் பறந்தன.
அசுரர்களின் புஜபலம் கூடியது. அந்தக் கணத்திலேயே தேவர்களை இம்சித்து துவம்சம் செய்யத் துவங்கினர்.

காற்றைவிட வேகமாக அந்தப் பெருங்கோட்டைகள் தேவலோகத்தை மோதியது. தேவர்கள் அலறினார்கள். அசுரர்கள் அவர்களைச் சுற்றிவளைத்து தம் கோட்டைக்குள் ஏற்றிக் கொண்டார்கள். அப்படியே அந்தரத்தில் தூக்கிப்போட்டு அட்டூழியம் செய்தார்கள். தேவேந்திரன் திக்கு முக்காடிப் போனான். அசுரர்களின் தொல்லை பூலோகத்தையும் விட்டுவைக்கவில்லை. பூலோகத்தை ரணகளமாக்கினார்கள். மக்கள் நெருப்பில் எறியப்பட்ட புழுவாய் நெளிந்தார்கள். முக்கோடி தேவக் கூட்டமும் முக்கண் நாயகனான ஈசனை நாடினார்கள். துன்பம் தாங்காது கருணை வடிவினரான ஈசனின் சந்நதியை தங்கள் கண்ணீரால் நனைத்தனர். அவரும் அவர்கள் துயரம் கேட்டு உருகினார்.

திரிபுரத்தையும் எரித்துவிட உறுதி பூண்டார். ஈசன் கண்களைத் திறந்தார். அகிலத்தின் மூல புருஷர்களான திருமாலையும், நான்முகனையும் திரிபுர சம்ஹாரத்திற்கு அழைத்தார். திருமாலின் அளவிலா சக்தி வேறொரு உருவில் வெளிப்பட தயாரானது. வக்ராசுரனை அழிக்க எப்படி சக்ராயுதம் தேவைப்பட்டதோ, அதுபோல திரிபுரத்தையும் பிய்த்தெறிய மிகக் கூர்மையான சக்தியான சரம் எனும் அம்பாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள தயாரானார். ஈசன் முதலில் சூரிய - சந்திரர்களை தேரின் சக்கரங்களாக்கி சுழலவிட்டார்.

கீழ் ஏழு உலகங்களை தேரின் கீழ் தட்டாக்கினார். எட்டு திக்கு மலைகளை தட்டின் தூண்களாக்கி நிற்க வைத்தார். மேல் ஏழ் உலகங்களை மேல் தட்டாக்கி தூணின் மீது கவிழ்த்தார். அதன் மீது இமயத்தையே வெண் கொடியாக்கி பறக்க விட்டார். நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கினார். பிரம்மாவை சாரதியாக்கி அமர்த்தினார். மேருவை வில்லாய் வளைத்துக் கொடுத்தார். ஆதிசேஷனை வில்லின் நாணாக்கி இழுத்துக் கட்டினார். திருமால் அதிகூர்மையான அம்பாக மாறி திரிபுரத்தை சிதறடிக்கும் பெரு வலிமையோடு காத்திருந்தார். ஈசன் மிகக் கூர்மையாய் திரிபுரத்தின் திசை பார்த்து நின்றார். அந்த பிரமாண்டமான தேரை, யாராலும் முழுவதுமாக பார்த்துவிட முடியாத அந்த ரதத்தை தேவர்கள் அண்ணாந்து பார்த்து தொழுதனர். சரமாக காட்சி தந்த நாராயணனை பார்த்து கண்களில் நீர் சொரிந்தனர். நாராயணனின் கருணை அவர்களை நெகிழ வைத்தது.

தேர் அசைந்தது. பறக்கும் கோட்டைகள் மெல்ல அதிரத் தொடங்கியன. மூன்று அசுரர்களையும் பயம் சூழ்ந்தது. ஈசனின் குழுவினரை, விநாயகர் சிறிய சோதனைக்குள்ளாக்கி பிறகு தன் முழு ஆசியுடன் முப்புரத்தையும் அழிக்க அவர்களுக்கு உதவினார். அம்பாக மாறிய நாராயணர் முப்புரத்தையும் சிதறடித்தார். அந்த சரத்தின் சக்தியைத் தாங்க முடியாத அசுரர்கள் தலை தெறிக்க ஓடினர். ஈசன் கோபக்கனலினூடே திருமாலின் அற்புத வீரத்தை பார்த்து புன்னகைக்க அந்த மெல்லிய புன்முறுவலில் நாராயணரின் மாபெரும் சக்தி அக்னியாகக் கலக்க, அந்த பறக்கும் கோட்டைகள் பற்றி எரிந்தன. அசுரர்கள் தூக்கியெறியப்பட்டார்கள். தேவர்களும், மானிடர்களும் தாங்க முடியாத மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். ஈசன் திரிபுர சம்ஹாரமூர்த்தியானார். மகாவிஷ்ணு சர நாராயணப் பெருமாளாக காட்சி தந்தார்.

வியாசரால் இயற்றப்பட்ட பிரமாண்ட புராணத்தில் திரிபுரசம்ஹாரம் பற்றி  மிக விரிவாக சொல்லப்பட்டுள்ளது. இத்தனை சிறப்புபெற்ற சரநாராயண பெருமாள் எழுந்தருளியுள்ள இடம்தான் திருவதிகை. திரிபுர சம்ஹார காலத்தில் ருத்ரனுக்கு (சிவன்) சரம் (அம்பு) கொடுத்ததால் சரம் தந்த பெருமாள் என்றும், அதுவே சரநாராயண பெருமாள் என்றும் மறுவியது. இத்தல பெருமாள் உப்பிலியப்பன் ஸ்ரீநிவாசனைப்போல் மார்க்கண்டேய மகரிஷியின் புத்திரியை திருமணம் செய்து கொண்டு நின்ற கோலத்தில் திவ்ய தம்பதிகளாக எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.

அருகில் மார்க்கண்டேய மகரிஷியும் வீற்றிருக்கிறார். தேவி தாயார் அருட்பாலிக்கிறார். இங்கு ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் ஒவ்வொரு அலங்காரம் நடைபெறுகிறது. அப்போது உற்சவர் சரநாராயணன் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி சேவை சாதிப்பார். அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகையில் பெருமாளுக்கு நடைபெறும் பூஜைகளைக் காணக் கண்கோடி வேண்டும். இங்குள்ள மூலவர் சரநாராயண பெருமாள் முழுவதும் சாளக்கிரமத்தால்  ஆனவர். சித்திரை விசேஷ திருமஞ்சனம், வைகாசி வசந்த உற்சவம், ஆடி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஊஞ்சல் சேவை, ஆவணி ஜெயந்தி உற்சவம், புரட்டாசி பெருமாள் புறப்பாடு, ஐப்பசி தீபாவளி உற்சவம், கார்த்திகை திருக்கார்த்திகை உற்சவம், மார்கழி மாத சிறப்பு வழிபாடு, பங்குனி உத்திர திருமஞ்சனம் என மாதந்தோறும் ஒரு விழா நடக்கிறது.

இந்த திருக்கோயிலில் பெருமாளுக்கு புரட்டாசி மாதம் நடைபெறும் ஏகதின பிரம்மோற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அப்போது ஒரேநாளில் பலவகை வாகனங்களில் பெருமாள் சேவை சாதிப்பார். காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். பிறகு 8 மணிக்கு அம்ச வாகனம், 9 மணிக்கு சிம்ம வாகனம், 10 மணிக்கு அனுமந்த வாகனம், 11 மணிக்கு சேஷ வாகனம், மதியம் 12 மணிக்கு கருட வாகனம் மாலை 3 மணிக்கு யானை வாகனம் என்று ஊர்வலம் வரும் பெருமாள், 4 மணிக்கு மஞ்சள் பொடியில் சூர்ணோற்சவம் காண்கிறார். மீண்டும் மாலை 5 மணிக்கு குதிரை வாகனத்திலும், 6.30 மணிக்கு திருத்தேரிலும் சேவை சாதிப்பார். 7.30 மணிக்கு கொடி இறக்கம் நடைபெறும். ஒரேநாளில் சுவாமியை இப்படி பல வாகனங்களில் தரிசிக்கும் அனுபவம் அற்புதமானது.  

இக்கோயிலின் மற்றொரு பிரதான சிறப்பம்சம் இங்கு எழுந்தருளியுள்ள சயன நரசிம்மர்தான். தெற்கு நோக்கி சயனித்துள்ளார் இவர். தாயாரும் உடன் எழுந்தருளியுள்ளதால் இந்த நிலையை போக சயனம் என்கின்றனர், ஆன்றோர்கள். திருவக்கரையில் வக்ராசுரனை சம்ஹாரம் செய்தபிறகு ஓய்வு எடுக்கும் கோலமாக இப்படி சயனித்துள்ளார் என்றும் ஓர் கருத்து நிலவுகிறது. வேறெந்த தலத்திலும் இப்படி நரசிம்மர் சயனக் கோலத்தில் கிடந்து அருள்வதை காண முடியாது என்கிறார்கள். நரசிம்மர் வேண்டியதை உடனே அருளும் வரப் பிரசாதி. அதிலும் போக சயனத்தில் இருப்பதால் இகலோக சுகங்கள் அனைத்தையும் வேண்டுபவர்களுக்கு உடனே அருள்கிறார் என்கின்றனர்.

பாற்கடலில் மகாவிஷ்ணுவாக பள்ளி கொண்டிருந்தவன், நரசிம்ம உருவில் பள்ளி கொள்ள மாட்டானோ என்று பக்தர்களின் ஆசைக்காக இங்கு சயன கோலத்தில் நரசிம்மர் பள்ளி கொண்டிருக்கிறாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. சங்கு சக்கரக்கங்களோடு சயனிப்பதை பார்க்கும்போது வியப்பும், அந்த சந்நதியில் நிலவும் சாந்நித்தியமும் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன. கோயில் கோபுரத்தில் தேவி, பூதேவி சமேதராக சிங்கப் பெருமாள் காட்சி தருவதைப் பார்க்கும்போது நரசிம்ம ஸ்வாமிக்கான தனிப் பெரும் புகழ் இத்தலத்திற்கு உள்ளது புரிகிறது. பிரதி மாதம் பிரதோஷ காலத்தில் நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. மனஅமைதிக்காக நரசிம்மர் இங்கு சயனகோலத்தில் இருப்பதால், இங்கு தரிசித்தவர்க்கு மன அமைதி உண்டாகும். விசேஷமாக பானக ஆராதனம் நடக்கிறது.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் அவதரித்த வேதாந்த தேசிகர் எனும் ஆச்சார்யார் திருவஹிந்தபுரத்திற்கு யாத்திரையாக வந்தபோது திரிவேதி என்னும் ஊரில் மந் நாராயணன் கோயிலில் தங்கினார். வேதாந்த தேசிகர் இயற்றிய தயாசதகம்  ஸ்தோத்திரத்தில் மூன்றாவது ஸ்லோகத்தில் திருவதிகை சரநாராயண பெருமாளை குறிப்பிட்டு வணங்கினார். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தாயார் ஹேமாம்புஜ நாயகி, செங்கமலத்தாயார் என்று அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு மாதமும் உத்திர நட்சத்திர தினத்தில் இவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

இக்கோயிலிலுள்ள கருடாழ்வார் ஆச்சரியமான கோலத்தில் சேவை சாதிக்கிறார். திரிபுரசம்ஹாரத்திற்கு பெருமாள் எழுந்தருளும்போது சங்கு சக்கரங்களை கருடனுக்கு அளித்ததாக கூறப்படுகிறது. எல்லா திருக்கோயில்களிலும் கருடன் கைகூப்பி அஞ்சலி ஹஸ்தனாக இருப்பார். ஆனால் இக்கோயிலில் கைகட்டிக்கொண்டு சேவை சாதிக்கிறார். அனுமன், தும்பிக்கை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், மணவாள மாமுனிகள், பாண்டுரங்கன் - ரகுமாயி தாயார் ஆகியோரும் திருவருட்பாலிக்கின்றனர். திருமணமாகாத பெண்கள் அமாவாசை தினத்தன்று இங்குள்ள ஆதிசேஷன் பாண்டுரங்கனுக்கு சரடுகட்டி பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமண பாக்கியம் கிட்டும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. அவ்வாறு திருமணமான பெண்கள் தம்பதியராக வந்து ஆதிசேஷன் பாண்டுரங்கன் சந்நதியில் தாங்களே பூஜை செய்து வழிபட்டு செல்வதை காண முடியும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் இத்தல பெருமாளை வழிபட்டுச் சென்றால் நிச்சயம் குழந்தை பிறக்கும் என்று நம்புகிறார்கள். காக்கும் கடவுளான திருமால், அறுகோணத்திற்கு நடுவே சக்கர வடிவினனாய், சக்கரத்தாழ்வாராக எழுந்தருளும் தத்துவத்தை பாஞ்சரார்த்த ஆகமம் விரிவாக விளக்குகிறது. ஒரு முறை நான்முகனுடைய சிரசை ஈசன் கொய்ததினால் ஏற்பட்ட பாதகத்தை நிவர்த்தி செய்ய ஈசன் திருமாலை வேண்ட, திருமால் ஈசனுக்கு பத்திரகாசிரமத்தில் சுதர்சன வழிபாட்டை விளக்கி சக்கரத்தாழ்வாரை வழிபடும்படி அருளினார்.

அதன்படி ஈசனும் கயிலாயத்தில் முறைப்படி சக்கரத்தாழ்வாரை வழிபட பாவங்கள் நிவர்த்தியாயின. தேவர்கோன் முதலான சகல தேவர்களும் ஈசனிடம் இருந்து சுதர்சன வழிபாட்டை அறிந்து சக்கரத்தாழ்வாரை வழிபட்டு திருவருளை பெற்றார்கள். சக்கரத்தாழ்வாரை முறையோடும், நெறியோடும் வழிபடுகின்றவர்கள் நல்ல உடல் நலமும், நீங்காத செல்வமும், குறையாத ஆயுளும்,  வேண்டுவன எல்லாமும் பெறுவார்கள் என சுதர்சன சதகம் நூல் குறிப்பிடுகிறது. இத்தலத்தில் சக்கரத்தாழ்வாருக்கான வழிபாடுகள் அனைத்தும் அது குறைவற நடைபெறுகிறது.

சயன நரசிம்மருக்கு சுவாதி நட்சத்திரத்தில் விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். ஸஹஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெறுகிறது. இத்தலம், பண்ருட்டியிலிருந்து 5 கி.மீ. தூரத்திலும், கடலூரிலிருந்து 27 கி.மீ. தொலைவிலும், உள்ளது.

(தரிசனம் தொடரும்)

ந.பரணிகுமார்