செருக்கு எனும் பெருமிதம்!



*குறளின் குரல் 111

செருக்கு என்ற சொல், ஆணவம், பெருமிதம் என இரண்டு பொருள்களில் பழந்தமிழில் ஆளப்பட்டுள்ளது. தற்காலத்தில் அச்சொல் அதிகம் ஆளப்படுவதில்லை. குறைவாகப் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களிலும் ஆணவம் அல்லது கர்வம் என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பாரதியார் இந்தச் சொல்லைப் பெருமிதம் என்ற பொருளில் பயன்படுத்தியிருக்கிறார்.
‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்.’ வள்ளுவர் இச்சொல்லை ஆணவம், பெருமிதம் என்ற இரண்டு பொருள்களிலும் பயன் படுத்துகிறார். ஓர் அதிகாரத்தின் தலைப்பிலேயே ‘செருக்கு’ என்னும் சொல் இடம்பெற்றுள்ளது. ‘படைச்செருக்கு’ என்ற அந்த எழுபத்தெட்டாம் அதிகாரத்தில் படையின் பெருமிதம் என்ற பொருளில் அச்சொல் ஆளப்பட்டுள்ளது. பெருமிதப் பொருளில் ‘செருக்கு’ எனும் சொல் பல அதிகாரங்களில் பல குறட்பாக்களில் காணக் கிடைக்கிறது.

‘இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு’ (குறள் எண் 180)

பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஒருவன் அடுத்தவர் பொருளைக் கவர விரும்பினால் அந்த விருப்பமே அவனுக்கு அழிவைத் தந்துவிடும். அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதிருத்தல் என்கிற பெருமிதம் தோன்றினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். உள்ளதைக் கொண்டு வாழ வேண்டும். பிறர் பொருள் நமக்கு எதற்கு என்னும் செருக்கு நம்மிடம் இருப்பது நல்லது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஓய்வு பெற்றுக் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து வெளியேறினார். அப்போது தமக்குப் பதவியில் இருந்தபோது கிடைத்த ஏராளமான பரிசுப் பொருட்களை, அவை பதவிக்காகக் கிடைத்தனவே அன்றித் தமக்காகக் கொடுக்கப்பட்டவை அல்ல என்ற கண்ணோட்டத்தில், மாளிகையிலேயே விட்டுவிட்டுச் சென்றார். அவரது செய்கையைப் பார்த்து உலகம் வியந்தது. வேண்டாமை என்னும் செருக்கு அவரிடம் இருந்ததே அவரது அத்தகைய செயலுக்குக் காரணம்.

‘உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு.’ (குறள் எண் 598)

மன ஊக்கம் இல்லாதவர்கள் இவ்வுலகில் தாங்கள் கொடை வள்ளல் என்று பாராட்டப் பெறுவதால் கிடைக்கும் பெருமித உணர்வை அடைய மாட்டார்கள். ‘ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்? ’என்று இன்னோர் இடத்தில் கேட்கிறார் வள்ளுவர். கொடுப்பதால் ஓர் இன்பம் கிடைக்கிறது. அந்த இன்பம் பெருமிதத்தைத் தருகிறது. கடையெழு வள்ளல்களான பாரி, அதியமான் போன்றவர்களும் வள்ளல் சீதக்காதியும் கொடுப்பதால் விளைந்த பெருமிதத்தை உணர்ந்தவர்கள். அண்மைக் காலத்தில் நகைச்சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்ணன் வாழ்நாள் முழுவதும் வாரிவாரிக் கொடுத்து அதுகுறித்த பெருமிதத்தோடு வாழ்ந்தார்.

‘தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு.’ (குறள் எண் 613)

இடைவிடா முயற்சி என்னும் உயரிய தன்மையில்தான் பிறருக்கு உதவுவதால் கிட்டும் பெருமித உணர்வை ஒருவர் அடைய முடியும்.

‘இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.’ (குறள் எண் 660)

பகையுணர்வு காட்டி வாழ்பவர்க்கு துன்பம் தொடர்ந்து வரும். அனைவருடனும் நட்புணர்வோடு வாழ்பவர்களால்தான் பெருமிதத்துடன் வாழ முடியும்.

‘வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநர் என்னும் செருக்கு.’
(குறள் எண் 1193)
காதலனால் விரும்பப்படுகின்ற காதலிக்குத்தான் ‘நாம் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றோம்’ என்ற பெருமித உணர்வு தோன்றும். நாராயண பட்டத்திரி எழுதிய சம்ஸ்கிருதக் காவியம் நாராயணீயம். அதில் கண்ணனின் ராசலீலை குறித்து அழகு கொஞ்சும் கவிதைகளை எழுதியுள்ளார் பட்டத்திரி. ஒரு கோபிகைக்குக் கண்ணன் தனக்குத்தான் சொந்தம் என்ற கர்வம் தோன்றிவிட்டது. அது தவறல்லவா? பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ? அவள் ஆணவத்தை அழிக்க நினைத்த கண்ணன், அவளை விட்டு மறைந்துபோனான். யமுனைக் கரையெங்கும் கண்ணனைத் தேடிக் கரைந்தாள் அவள். அவளது கர்வம் முற்றிலும் அழிந்த பின்னர் அவள்முன் காட்சி தந்து அவளைப் பரவசப்படுத்தினான் என எழுதுகிறார், பட்டத்திரி. பக்தியாலும் கூடச் செருக்குக் கொள்வது தவறு என்பதை வலியுறுத்துகிறது நம் ஆன்மிகம்.   செருக்கு என்னும் சொல்லைப் பெருமிதம் என்ற பொருளில் அல்லாமல், ஆணவம் என்ற பொருளில் வள்ளுவர் ஆளும் இடங்கள் திருக்குறளில் பல உண்டு.

‘வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.’ (குறள் எண் 844)

புல்லறிவு என்பது யாது என்றால், நாம் அறிவுடையோம் என்று தன்னைத்தானே ஒருவன் உயர்வாக மதித்துக் கொள்ளும் ஆணவமே. தமிழில் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் இருந்தார். அவரை இன்னோர் எழுத்தாளர் வானொலியில் பேட்டி கண்டார். ‘நீங்கள் விரும்பிப் படிக்கும் பிற எழுத்தாளர்கள் யார் யார் என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.’  அதற்கு அவர் சொன்ன பதில்:

‘தமிழில் என்னைத் தவிர வேறு யாராவது எழுதுகிறார்களா என்ன?’ எது குறித்தும் கர்வம் கொள்வது தவறு. கர்வம் மனத்தில் ஒரு துவாரத்தை ஏற்படுத்துகிறது என்றும் அந்த துவாரத்தின் வழியாக பகைச்சக்தி மனத்தின் உள்ளே புகுந்து அந்த கர்வத்திற்குக் காரணமான ஆற்றலை அழித்துவிடும் என்றும் எழுதுகிறார் புதுச்சேரி அன்னை. தற்பெருமையுடனும் அகங்காரத்துடனும் பேசிவந்த அந்த மிகச் சிறந்த எழுத்தாளர், வாழ்வின் கடைசிப் பத்தாண்டுகளில் எழுத இயலாமல் எழுத்தாற்றல் வற்றிப்போய் பின் மரணமடைந்தார். அடக்கம் போன்ற உயர்ந்த நற்குணங்களை நாம் பின்பற்றுவது நம் நலத்தின் பொருட்டுத்தான் என்பதை அவரது மரணம் நிரூபித்தது.

‘செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.‘  (குறள் எண் 431)

ஆணவமும் கோபமும் சிறுமைக் குணமும் இல்லாதவருடைய வளர்ச்சி எல்லோராலும் மதிக்கப்படும் பெருமையை உடையது. எழுத்தாளர் வல்லிக்கண்ணன் கர்வமோ பொறாமையோ அற்றவராக இறுதிவரை வாழ்ந்தார். ஆரம்பகால எழுத்தாளர்களுக்குக் கூட வாழ்த்துக் கடிதங்கள் எழுதி ஊக்குவித்தார். அவரது பெரும்புகழைக் கண்டு யாரும் பொறாமை கொள்ளவில்லை. அவர் மறைந்த பின்னரும் கூடத் தமிழ் வாசகர்கள் தொடர்ந்து அவரைப் போற்றி வருகிறார்கள். ஆணவமும் கோபமும் சிறுமைக் குணமும் இல்லாதவரின் வளர்ச்சி எல்லோராலும் மதிக்கப்படும் என்ற வள்ளுவக் கருத்துக்கு வல்லிக்கண்ணன் ஒரு நிரந்தரச் சாட்சி.

‘வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.’ (குறள் எண் 878)

போர்செய்யும் வகையறிந்து தன்னை வலிமைப் படுத்திப் பாதுகாத்துக் கொண்டால், எதிரியின் ஆணவம் தானாகவே அழிந்துவிடும். புறநானூற்றில் ஔவையார் எழுதிய பாடல் ஒன்று இந்தத் திருக்குறளுக்கு விளக்கம் தருகிறது. அதியமான் நெடுமான் அஞ்சியின் மேல் போர் தொடுக்க எண்ணிய தொண்டைமானிடம் செல்கிறார் அதிகமான் மேல் அதிகமான அன்புடைய அவ்வையார். போரை நிறுத்த வேண்டும் என்பது அவர் எண்ணம். தொண்டைமான் தன் படைக்கலக் கொட்டிலை அவருக்குக் காட்டுகிறான்.

அங்குள்ள படைக்கருவிகளைப் பார்த்து முறுவல் பூக்கிறார் அவ்வை. மயில் பீலி அணிவிக்கப்பட்டு மாலை சூட்டி நெய்தடவி புத்தம் புதிதாக வைக்கப்பட்டுள்ளன தொண்டைமானின் படைக் கருவிகளான வேல் வாள் போன்றவை. அவ்வை சொல்கிறார், ‘அதியமானின் படைக்கருவிகள் இப்படிப் புத்தம் புதிதானவை அல்ல. அவை பகைவர்களைக் குத்தி அழித்ததால் நுனி சிதைந்திருக்கும்.’ என்கிறார். அவ்வையின் கருத்து தொண்டைமானுக்குப் புரியாதா என்ன? போர் அதியமானுக்குப் பழக்கமானது என்றும் வெற்றியும் அவனுக்குப் பழகிய ஒன்று என்றும் அவனிடம் போர் புரிவது ஆபத்தானது என்றும் புரிந்துகொள்கிறான். தொண்டைமானின் செருக்கு அழிகிறது.

‘இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்து கடியுடை வியன்நக ரவ்வே, அவ்வே பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து கொல்துறைக் குற்றில மாதோ, என்றும் உண்டாயின் பதம் கொடுத்து இல்லாயின் உடன் உண்ணும் இல்லோர் ஒக்கல் தலைவன் அண்ணல்எம் கோமான் கைந்நுதி வேலே.’ அரசன் தன்னை வலிமைப்படுத்திக் கொண்டால் எதிரியின் ஆணவம் தானாய் அழிந்துவிடும் என்பதற்கு சங்க காலச் சான்று இந்தப் பாடல்.

‘செய்க பொருளை, செறுநர் செருக்ககற்றும்
எஃகதனில் கூரியது இல்!’  (குறள் எண் 759)

ஒருவன் பொருளைச் சம்பாதிக்க வேண்டும். பகைவரின் கர்வத்தை அடக்கும் வாள், செல்வத்தைத் தவிர வேறொன்றில்லை. பகைவர்களை ஒன்றுமே செய்ய வேண்டாம். நீங்கள் நல்வழியில் நிறையப் பொருளீட்டுங்கள். பகைவர்களின் செருக்கு தானாய் அடங்கிவிடும் என்கிறது வள்ளுவம். ‘பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லாகி யாங்கு’ என மற்றொரு குறளிலும் பொருட்செல்வத்தின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்துகிறாரே வள்ளுவர்? தலைவியை விட்டுத் தலைவன் வாழ்க்கைக்குப் பொருளீட்டும் பொருட்டாகப் பிரிந்து செல்வதைப் பொருள்வயின் பிரிவு என்கிறது சங்க இலக்கியம். ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு!’ என ஔவை சொன்னதும் இதனால் தான். பகைவர்களின் செருக்கை அடக்குவதற்கு நாம் வாளைத் தேட வேண்டிய அவசியமே இல்லை. வங்கியில் நம் செல்வத்தைக் கொஞ்சம் அதிகம் சேமித்து வைத்துக் கொண்டாலே போதும். பகைவர்களின் ஆணவம் தானாய் அடங்கிவிடும்.

‘தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.’ (குறள் எண் 201)

தீவினை செய்வதற்குக் காரணமாகிய ஆணவத்தை உடையவர் தீய செயல்களைச் செய்ய பயப்பட மாட்டார்கள். உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள் தீவினை செய்ய அச்சப்படுவார்கள். ‘தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்!’ என இன்னொரு குறளில் தீயவை செய்ய அஞ்ச வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

‘யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.’ (குறள் எண் 346)    

நான் அல்லாத உடம்பை நான் எனவும், தனக்கு உரிமையில்லாத பொருளைத் தன்னுடையது எனவும் எண்ணுகின்ற ஆணவத்தை அறுத்தெறிந்து வாழ்பவர்கள் வானோர்க்கு உரிய உயர்ந்த உலகை அடைவார்கள் என ஆன்மிகத் தளத்தில் நின்று பேசுகிறார் வள்ளுவ மகரிஷி. பகவான் ரமண மகரிஷியும் நான் யார் என்று ஆராயச் சொல்கிறார். அப்படி ஆராய ஆராய சத்தியமான நித்திய வஸ்து எது என்பது புலப்படும் என்கிறார் அவர். ஒரு குருவிடம் உபதேசம் பெற விரும்பினார் ஓர் அன்பர். ‘உபதேசம் பெற நான் எப்போது வரட்டும்?’ என்று பக்தியோடு வினவினார். ‘நான் செத்த பின்னர் வா!’ என்றார் குரு. வந்தவர் திகைத்தார். குரு விளக்கினார். ‘உன்னிடமுள்ள நான் என்ற அகங்காரம் செத்தபின் என்னை வந்து பார் என்று சொன்னேன்!’ என்றார்.

    கண்ணன் அரசாண்ட துவாரகையில் வசித்த ஓர் ஓவியனுக்கு தன்னால் வரைய முடியாதது எதுவும் இல்லை என்ற கர்வம் இருந்தது. நாரதர் செருக்கை அழிக்க எண்ணினார். கண்ணனை உன்னால் வரைய முடியுமா என்று வினவினார். ஏன் முடியாது என எதிர்க்கேள்வி கேட்டான் ஓவியன். அவனைக் கண்ணனிடம் அழைத்துச் சென்றார் நாரதர். அவன் பலமுறை கண்ணனைப் பார்த்துப் பார்த்து உள்ளது உள்ளவாறே வரைந்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் கண்ணனை வரைந்து முடித்த பின்னர் கண்ணனைப் பார்த்தால் கண்ணன் திருமுகம் ஓவியத்தில் உள்ளது மாதிரி இல்லாமல் வேறு மாதிரி இருந்தது! ‘இது நான் இல்லையே!’ என்றான் கண்ணன்! ருக்மிணியும் சத்யபாமாவும் கலகலவென நகைத்தார்கள். கிருஷ்ணனுக்கா லீலை செய்யத் தெரியாது!

ஓவியன் கைசோர்ந்து ‘என் ஆணவம் அழிந்தது‘ என நாரதரைச் சரணடைந்தான். கண்ணனை உள்ளது உள்ளவாறு எப்படிக் காட்டுவது என்ற சூட்சுமத்தைச் சொல்லித்தர வேண்டினான். நாரதர் அவன் செவிகளில் கிசுகிசுத்தார். ஓவியனின் முகம் மலர்ந்தது. அவன் பக்தியோடு முகம்பார்க்கும் கண்ணாடி ஒன்றைக் கண்ணனின் முன்பாக நீட்டினான். ‘இதோ உங்களைப் போன்ற உருவத்தை நான் கொண்டு வந்திருக்கிறேன்!’ என்றான். அவன் யுக்தியைக் கண்ணன் மெச்சினார். அவன் ஆணவம் அழிந்ததை உணர்ந்து அவனுக்கு ஆசி வழங்கினார் என்கிறது ஒரு மகாபாரதக் கிளைக் கதை.

மன நிம்மதி வேண்டுமானால் செருக்கே இல்லாமல் வாழப் பழக வேண்டும். அதை யாரிடமிருந்து கற்பது? மாபெரும் தமிழ்க் கவிஞர் ஒருவர், ‘தாம் அத்தகைய பெரும் பெருமை படைத்தவர்’ என்ற செருக்கே இல்லாமல் வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவரது உலகப் புகழ்பெற்ற கவிதைகளில் ஓர் இடத்தில் கூட ஒருதுளிச் செருக்கின் சாயலும் கிடையாது. அவரை நாம் பின்பற்றலாம். அவர் யார்? வேறு யார்? திருவள்ளுவர்தான்!

(குறள் உரைக்கும்)
திருப்பூர் கிருஷ்ணன்