திருமங்கை ஆழ்வாரைக் காத்திட்ட தேவப்பெருமாள்சோழப் பேரரசின் அரசவை. நடு நாயகமாக அமர்ந்திருந்தான் சோழ மன்னன். அப்போது மெல்ல ஒரு தூதுவன் பயந்த படியே அவைக்குள் நுழைந்தான். சோழப் பேரரசிற்கு தக்க மரியாதையை செலுத்தி வணங்கி நின்றான் அவன். அவனைக் கண்டதும் மன்னன், ‘‘என்ன தூதுவனே இந்த முறையாவது அந்த நீலன் கப்பம் கட்டினானா இல்லையா?’’ என்று கேட்டான்.  ‘‘இல்லை பிரபு! வரும் மாதம் திருவோண நட்சத்திரம் அன்று தருகிறாராம். தாமதத்திற்கு வருந்துவதாகவும் சொன்னார்.” என்று தூதுவனிடமிருந்து பதில் வந்தது. இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது அந்த தூதுவன் பயத்தில் இருந்தான் என்பது அவனது குரலில் அப்பட்டமாகத் தெரிந்தது. பலமுறை இதே தூதுவனை கப்பம் கேட்டு நீலனிடம் அனுப்பியும் கப்பம் வந்தபாடில்லை. பல நாட்கள் இன்று நாளை அடுத்த மாதம் என்று நீலன் அந்த தூதுவனை அலைக்கழித்தது தான் மிச்சம்.

முன்பெல்லாம் நீலன் இப்படி இல்லை. சோழப் பேரரசின் மாபெரும் விஸ்வாசி அவன். பல போர்களில் சோழப் பேரரசின் சேனையை நடத்திச் சென்று வெற்றிவாகை சூடியவன். சோழப் பேரரசின் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவன். அவர்களைப் பல போர்களில் ஓட ஓட விரட்டி தோல்வியடையச் செய்தான்.  இதனால் நீலனுக்கு “ பரகாலன்” என்ற திருநாமம் ஏற்பட்டது. அதாவது எதிரிகளுக்கு எமன் போன்றவன் என்று பொருள்.  நீலனின் அசாத்தியபோர்த் திறமையையும் புகழையும் விஸ்வாசத்தையும் அறிந்து அகமகிழ்ந்தான் சோழ வேந்தன். சோழ மன்னன்  பரகாலனின் திறமையை பாராட்டி அவனை அலி நாடு என்னும் குறுநிலத்திற்கு மன்னனாக்கினார்.  

நீலனும் திருமங்கை என்னும் நகரை தலை நகராகக் கொண்டு ஆட்சியை குறைவற நடத்தி வந்தான். சோழனுக்கு கப்பத்தையும் நேரத்திற்கு செலுத்தி வந்தான். ஆனால், பிரச்னையே நீலன் திரு வெள்ளக்குளம் என்ற ஊருக்குச் சென்றபோது தான் வந்தது!. வெள்ளக்குளத்தில் அவர் குமுதவல்லி என்னும் ஒரு அழகிய நங்கையைக் கண்டார். கண்டவுடன் இதயத்தைப் பறி கொடுத்தார். ஊரில் இருந்தவர்களிடம்  அந்தப் பெண்ணைப் பற்றி  விசாரித்ததில் உண்மையில் அந்த நங்கை ஒரு தேவப்பெண்மணி என்பதையும் இவ் ஊருக்கு ஜலக் கிரீடை செய்ய வந்தவள் இங்கேயே தங்கிவிட்டாள் என்பதையும் குமுதவல்லி என்ற பெயருடைய அந்த நங்கை ஒரு வைணவப் பெரியவரின் அரவணைப்பில் இருப்பதையும் அறிந்தார்.உடனே, அவளது இல்லத்திற்குச் சென்று பெண் கேட்டார். அந்த வைணவப் பெரியவரோ  குமுவல்லியின் விருப்பமே என் விருப்பம் என்று சொல்லி விட்டார். நீலன் அடுத்து குமுதவல்லியிடம் சென்றார்.  தன் விருப்பத்தை தெரிவித்தார்.  

 நீலனை ஏற இறங்கப் பார்த்த குமுதவல்லி அவரது திருவுடலில் திருமண் ஜொலிக்க வேண்டிய இடத்தில் போர் வடுக்கள் மின்னுவதைக் கண்டாள். அவளுக்கு சுருக்கென்று இருந்தது. ‘‘முதலில் நீங்கள் முறையாக ஸ்ரீ வைஷ்ணவ தீக்ஷை பெறுங்கள். பிறகு தினமும் ஆயிரத்து எட்டு  வைஷ்ணவப் பெரியவர்களுக்கு, ஆயிரத்து எட்டு நாட்கள் அமுது செய்வித்து அவர்களது பாத தீர்த்தத்தை அருந்தி வாருங்கள். அப்போதுதான் போரில் பல ஜீவனைக் கொன்ற பாவம் உங்களை விட்டுத் தோலையும். பிறகு நீங்கள் தாராளமாக வந்து என்னை மணக்கலாம்’’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டாள்.

நீலன் மறுவார்த்தை பேசாமல் அங்கிருந்து கிளம்பினார். திருநரையூர் (நாச்சியார் கோவில்) எம்பெருமானிடம் பஞ்ச சம்ஸ்காரம் வாங்கிக் கொண்டார். மறுநாளிலிருந்து வெகு விமர்சையாக அடியவர்களுக்கு அமுது செய்விக்க ஆரம்பித்தார். திருவரங்கம் முதலிய கோயில்களுக்கு திருப்பணிகளையும் கூடவே செய்தார். இதனால் அரசாங்க கஜானா கரைய ஆரம்பித்தது. எனவே, சோழனுக்கு நேரத்தில் கப்பம் கட்ட முடியாமல் போனது. சோழனும் பலமுறை தூதுவனை அனுப்பி கப்பம் கேட்டுப் பார்த்து விட்டான். ஒரு வராகன் கூட வரவில்லை. இன்றும் திருவோண நட்சத்திரம் அன்று தருவதாகவும் தாமதத்திற்கு வருந்துவதாகவும் சொல்லி அனுப்பிய பரகாலனின் இறுமாப்பு சோழனுக்கு கடும் கோபத்தைத் தந்தது. உடன் தனது படையைத் திரட்டிக் கொண்டு நீலனை எதிர்க்க திருமங்கைக்கு விரைந்தான் சோழன்.  

சோழனை வெகு நேர்த்தியாக எதிர்கொண்டார் பரகாலன். நீலனின் போர் திறமையால் சோழனின் படை சிதறி ஓடியது. அதைக் கண்ட சோழன் நொடியில் ஒரு யுக்தியைக் கையாண்டான். ‘‘சபாஷ் பரகாலா சபாஷ்! உன் போர் திறமையை மெச்சுகிறேன்’’ என்று கூறிக் கொண்டே திருமங்கை மன்னன் அருகில் வந்தான். மரியாதை நிமித்தமாக போர் செய்வதை நிறுத்தி சோழனைக் கண்டு வணங்கினான் நீலன். சமயம் பார்த்து காத்திருந்த சோழனும் “கைது செய்யுங்கள் இந்த பரகாலனை.” என்று கர்ஜித்தான். திருமங்கை மன்னன் கைது செய்யப் பட்டான்!  மறுநாள் சோழப் பேரரசின் சபை கூடியது. பரகாலனின் கைகளில் விலங்கு பூட்டப்பட்டு நிறுத்தி வைக்கப்
பட்டான்.

அரியணையில் அமர்ந்திருந்த சோழன், ‘‘கப்பம் கட்டுவாயா மாட்டாயா’’ என்று கொக்கரித்தான். ‘‘சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் மன்னா! என்னிடம் இப்போது கப்பம் கட்ட ஒன்றுமில்லை’’ தெளிவாக வந்தது நீலனின் பதில்.  ‘‘ஓ... தினமும் ஆயிரம் அன்னக் காவடிகளுக்கு உணவளிக்க மட்டும் பணம் இருக்கிறதா?’’ சோழன் கொதித்தெழுந்தான். ‘‘எனது உண்மை நிலை இதுவே! நம்புவதும் நம்பாததும் தங்கள் விருப்பம்.’’ சளைக்காமல் பதில் சொன்னார் நீலன்.  ‘‘என்ன திமிர்! இதோ பார் நாளை காலை சூரியன் உதயமாகும் வரை தான் உனக்கு சமயம். அதற்குள் எனக்கு என்னுடைய கப்பம் வந்தாக வேண்டும்’’ பொறிந்து தள்ளிவிட்டு ஒரு நொடி கூட நில்லாமல் அங்கிருந்து நீங்கினான் சோழன். நீலன் சிறையில் அடைக்கப்பட்டார்.  

‘‘மாதவா... கஜானாவை ஊதாரித்தனமாகவா நான் செலவழித்தேன் உன் அடியவர்களுக்காக அல்லவா செலவழித்தேன். என்னை நீயே கை விட்டால் யார் என்னைக் காப்பார்கள். பரம்பொருளே! வைகுண்டவாசா! சற்று எனக்காக தயை செய்யக் கூடாதா.’’ மாதவனிடம் கதறினார் திருமங்கை மன்னன். அப்படியே கண்ணயர்ந்தும் விட்டார்.  சொப்பனத்தில் நீல மேக சியாமளனாக காட்சி தந்தான் காஞ்சி வரதன். ‘‘பரகாலா! நீ படும் அவஸ்தை காஞ்சியில் இருக்கும் என்னை பாடாய்ப் படுத்துகிறது. என்னையே நினைத்து உருகும் உனக்கு அருளவில்லை என்றால் நான் எப்படி சரணாகத ரட்சகனாவேன்! நாளை விடிந்தவுடன் அனைவரையும் அழைத்துக் கொண்டு காஞ்சி மாநகருக்கு வா! உனக்காக நான் காத்திருக்கிறேன். நீ நிச்சயம் வர வேண்டும்!’’ என்றபடி மறைந்தான் காஞ்சிக் கண்ணன்.

கனவு கலைந்து திடுக்கிட்டு எழுந்தார் நீலன். ‘‘காஞ்சி மாநகருக்கு  வந்தால் கப்பம் தருகிறேன்’’ என்று மன்னனுக்கு சொல்லி அனுப்பினார் திருமங்கை ஆழ்வார். மன்னனும் அவரது கைகளுக்கும் கால்களுக்கும் விலங்கு பூட்டி காஞ்சிக்கு அழைத்துச் சென்றார். காஞ்சியில் வரதராஜப் பெருமானின் சந்நதியில் நிறுத்தப்பட்டார், திருமங்கை ஆழ்வார். ‘‘பிறவி என்னும் விலங்கை அறுப்பவனே மாலவா! உன் சொற்படி காஞ்சிக்கு வந்து விட்டேன். இனி இந்த ஜீவனும் உடலும் உன் அபயம். என் தலை அறுபடுவது தான் என் விதி என்றால் அது உன் சக்ராயுதத்தால்  நிகழட்டும். இல்லை என்னை காக்க வேண்டும் என்று நீ சித்தம் கொண்டால் எனக்கு கப்பம் கட்ட மட்டும் இல்லை உனக்கு திருப்பணி செய்யவும் சேர்த்து பொருள் தந்து அருள். இல்லையேல் உன் சக்கரத்தால் என் சிரத்தை அறுத்துவிடு” கைகுவித்து கண்ணீர் மல்க வேண்டினார் திருமங்கை ஆழ்வார்.  

அதைக் கேட்ட மாயவன் அடியவரை மேலும் வருத்த விரும்பவில்லை போலும். ‘‘திருமங்கை மன்னா! வேகவதி ஆற்றங்கரையில் ஒரு மலைக் குகையில் பெருமளவு பொன்னும் பொருளும் உள்ளது அவை அனைத்தையும் நீயே எடுத்துக்கொள். மன்னனுக்கு கப்பம் கட்டு நீ செய்ய விரும்பிய திருப்பணிகளை செவ்வனே செய். அப்படியே தீந்தமிழ் சொற்களால் என்னைப் பாட மட்டும் மறக்காதே’’ என்று அசரீரி வாக்காக பேசினான்.  இதை எல்லாவற்றையும் கேட்ட மன்னன் அதிர்ந்து போனான். இப்படிப்பட்ட ஒரு மகானையா கைவிலங்கு பூட்டி தண்டித்தோம் என்று எண்ணி குற்ற உணர்வில் வெந்து போனான்.

உடனே திருமங்கை மன்னன் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினான். திருமங்கை ஆழ்வாரது விலங்கை அவிழ்த்து, அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு, ‘‘எனக்கு நீங்கள் கப்பம் கட்ட வேண்டாம் பரகால முனிவரே. நான் செய்த பெருங் குற்றத்தை பொறுத்தருளுங்கள்’’ என்று அழுதபடியே மன்றாடினார் சோழ வேந்தன். அதைக் கண்ட பரகாலர் பெரிய சிக்கலை நொடியில் தீர்த்து வைத்த வரதனை பெருமிதத்தோடு நோக்கினார். அவன் என்றும் மாறாத புன்னகையோடு நான் இருக்க பயமேன் என்று குறிப்பால் உணர்த்தியபடி சந்நதியில் நின்று கொண்டிருந்தான்.
 

ஜி.மகேஷ்