அனந்தனுக்கு 1000 நாமங்கள்181. அமேயாத்மனே நமஹ: Ameyaathmane namaha)

(‘அதீந்த்ரிய:’ என்ற 171-வது திருநாமம் தொடங்கி, ‘அமேயாத்மா’ என்ற 181-வது திருநாமம் வரையிலான 11 திருநாமங்கள் வைகுண்டநாதனின் திருக்கல்யாண குணங்களை விளக்கவந்தவை.) திருவரங்கநாதனைத் தரிசித்த பராசர பட்டர், “அன்று ராமாவதாரத்தில் சமுத்திர ராஜனிடம் சரணாகதி செய்து, திருப்புல்லாணியில் கடலை நோக்கி நீ கம்பீரமாகச் சயனித்திருந்தாய். ‘கருணையங்கடல் கிடந்தனன் கருங்கடல் நோக்கி’ என்பதற்கேற்ப, ஒரு கடல் மற்றொரு கடலை நோக்கிச் சயனித்திருந்தாற்போல் அமைந்திருந்தது அக்காட்சியின் அழகு. அக்காட்சியைக் காலத்தால் பிற்பட்டவர்களான நாங்களும் காணும் வண்ணம் கடல் போன்ற காம்பீர்யத்தோடு இன்று நீ திருவரங்கத்தில் சயனித்திருக்கிறாய் போலும்!” என்று கூறினார்.

“திடீரென என்னைக் கடலோடு ஒப்பிடுகிறீர்களே!” என்று கேட்டான் திருவரங்கநாதன். “ஆம்! நீ கடலுக்குச் சமமானவன் அல்லவா? அதனால் தானே ஆழ்வார்கள் உன்னைக் ‘கடல்வண்ணன்’ (கடல் போன்றவன்) என்று பாடினார்கள்?” என்றார் பட்டர். “எதை வைத்து நான் கடல் போன்றவன் என்கிறீர்கள்?” என்று கேட்டான் திருவரங்கநாதன். அதற்குப் பராசர பட்டர், “எல்லாவற்றுக்கும் முன்னே தோன்றிய நீர் என்பதால் கடலுக்கு ‘முன்னீர்’ என்று பெயர். நீ அனைவருக்கும் முன்னே தோன்றியவனாதலால் ‘முன்னவன்’ என்றும் ‘முனைவன்’ என்றும் போற்றப்படுகிறாய்.

சிறிய மீன் முதல் பெரிய திமிங்கலம் வரை பலவித உயிர்களும் கடலைச் சார்ந்தே வாழ்கின்றன. அது போல், சிறிய ஈ எறும்புகள் முதல் தேவர்கள் வரை அனைவரும் உன்னைச் சார்ந்தே இருக்கிறார்கள். கடல் தேவர்களுக்கு அமுதைத் தந்தது. நீயே உன் பக்தர்களுக்கு உன் அழகாகிய ஆராவமுதைத் தருகிறாய். கடலுக்கு அளவில்லை. அதுபோல உனது காம்பீர்யத்துக்கும் அளவில்லை. மேகம் மழை பொழிந்து தான் கடலுக்குப் புதிதாகத் தண்ணீர் வரவேண்டும் என்ற அவசியமில்லை. அதுபோல, நாங்கள் வஸ்திரங்களோ மாலைகளோ சமர்ப்பித்துத் தான் உனக்குப் புதிதாகப் பெருமை ஏற்பட வேண்டும் என்றில்லை.

இந்திரனுக்கு அஞ்சிய மைநாக மலைக்குக் கடல் தான் புகலிடமாக இருந்தது. அதுபோல, பிறவிப் பெருங்கடலைக் கடக்கும் வழியறியாது அஞ்சும் எமக்கெல்லாம் ‘அஞ்சேல்’ என்று புகலிடம் அளிப்பவனாக நீ இருக்கிறாய். கடல்நீரை நேராகப் பருகினால் உப்புக் கரிக்கும். அதுவே மேகத்தின் வாயிலாக மழையாக வரும்போது இனிக்கும். அவ்வாறே உன்னையும் நேரடியாக அநுபவிப்பதை விட, ஆசார்யன் என்னும் மேகத்தின் மூலம் அநுபவித்தால் தான் முழுமையான இனிமை கிடைக்கும்.

கடல் மதியைக் (சந்திரனைக்) கண்டால் மகிழ்ச்சியில் பொங்கும். நீ மதியுடைய ஞானிகளைக் கண்டால் மகிழ்ச்சியில் பொங்குகிறாய். கடலை எத்தனை தடவை பார்த்தாலும் அலுப்பே ஏற்படாது. அதுபோல நீயும் எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாக இருக்கிறாய். கடலைப் பல பேர் கடப்பார்கள். ஆனால் அவர்களுக்குக் கடலின் ஆழம் தெரியாது. அதுபோல் உன்னையும் பலர் துதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருக்குமே உன் பெருமையின் எல்லை தெரியாது.

நல்ல கப்பல் கிடைத்தால் கடலை எளிதில் கடக்கலாம். அதுபோல பக்தி என்னும் கப்பலைக் கொண்டு உன்னையே எளிதில் கடந்துவிடலாம். கடலில் அலையோசை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். அதுபோல நீயும் ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ (என்னை நம்பு; காப்பாற்றுகிறேன்!) என முழங்கிக் கொண்டே இருக்கிறாய். கடல் ஒருநாளும் வற்றாது. உனது கருணையும் என்றுமே வற்றாது. அதனால்தான் வால்மீகி, கம்பர், ஆழ்வார்கள், ஆசார்யர்கள் எல்லோரும் உன்னைக் கடலோடு ஒப்பிட்டுள்ளார்கள்!” என்று கூறினார் பராசர பட்டர். அதைக் கேட்டு ரசித்தான் திருவரங்கநாதன்.

கடல் போன்ற காம்பீர்யத்துடன் திருமால் விளங்குவதால், ‘அமேயாத்மா’ என்றழைக்கப்படுகிறார். ‘அமேய’ என்றால் கடல் போல் அளவில்லாத என்று பொருள். அளவில்லாத காம்பீர்யத்தை உடைய திருமால் ‘அமேயாத்மா’ என்று போற்றப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 181-வது திருநாமம். “அமேயாத்மனே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல கம்பீரமான தோற்றத்தைத் திருமால் அருள்வார். (அமேயாத்மா என்னும் திருநாமம் ஸஹஸ்ரநாமத்தில் 2 முறை வருகிறது. 103-வது திருநாமமான அமேயாத்மாவுக்குக் கடல் போன்ற அளவில்லாத கருணை உடையவன் என்று பொருள். 181-வது திருநாமமான அமேயாத்மா என்பதற்குக் காம்பீர்யத்தில் கடல் போல் அளவில்லாதவனாக இருப்பவன் என்று பொருள். எனவே 103-வது திருநாமம் காருண்யத்தையும், 181வது திருநாமம் காம்பீர்யத்தையும் காட்டுகின்றன.)

182. மஹாத்ரித்ருதே நமஹ (Mahaadhridhruthe namaha)(கூர்மாவதாரம்)

திருமாலின் அறிவுரைப்படி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையத் திட்டமிட்டார்கள். அதைக் கடைவதற்குரிய சரியான மத்தைத் தேடி அவர்கள் அலைந்த போது, மந்தர மலையை மத்தாகப் பயன்படுத்தலாம் எனத் திருமால் ஆலோசனை வழங்கினார். அதன்படி, சில தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையின் அடிவாரத்துக்குச் சென்று, அதைப் பெயர்த்து எடுத்தார்கள். அதன்பின் அம்மலையைத் தங்கள் முதுகில் சுமந்தபடி அந்தத் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை நோக்கி நடந்து வந்தார்கள்.

ஆனால் அவர்களால் அம்மலையின் பாரத்தைத் தாங்க முடியவில்லை. வரும் வழியிலேயே மலையுடன் கீழே விழுந்து மாண்டார்கள். இச்செய்தியைக் கேள்வியுற்ற மற்ற தேவர்களும் அசுரர்களும் திருமாலின் உதவியை நாடினார்கள். திருமால் கருட வாகனத்தில் சென்று, மந்தர மலையை எடுத்துக் கருடனின் முதுகில் வைத்து, தானும் கருடன் மேல் அமர்ந்தபடி மலையைப் பாற்கடலுக்குக் கொண்டு வந்தார். அதன்பின் அம்மலையில் வாசுகி எனும் பாம்பைக் கயிறாகச் சுற்றிப் பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடையத் தொடங்கினார்கள். ஆனால் மந்தர மலை நேராக நில்லாமல், பாற்கடலுக்குள் அழுந்திக் கொண்டே போனது. அதைத் தூக்கி நிறுத்தத் தேவர்களும் அசுரர்களும் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் பயனில்லை. அதனால் மந்தர மலையை நிலைநிறுத்துமாறு தேவர்கள் திருமாலிடம் பிரார்த்தித்தார்கள்.

அப்போது திருமால் ஆமை வடிவம் ஏற்றுப் பாற்கடலுக்குள் சென்று, மந்தர மலையைத் தம் முதுகில் தாங்கி நிலை நிறுத்தினார். ஆமையாகத் திருமால் எடுத்த இந்த அவதாரத்தைக் ‘கூர்மாவதாரம்’ என்று சொல்கிறோம். வடமொழியில் ‘கூர்மம்’ என்றால் ஆமை என்று பொருள். இந்தக் கூர்மாவதாரத்தைத் தமது தசாவதார ஸ்தோத்ரத்தில் துதி செய்யும் வேதாந்த தேசிகன்,

“அவ்யாஸு: புவன த்ரயீம் அநிப்ருதம் கண்டூரணை: அத்ரிணா
நித்ராணஸ்ய பரஸ்ய கூர்ம வபுஷோ நிச்வாஸ வாதோ: மய: |
யத் விக்ஷேபண ஸம்ஸ்க்ருத உததி பய: ப்ரேங்கோல பர்யங்கிகா
நித்ய ஆரோஹண நிவ்ருதோ விஹரதே தேவ: ஸஹைவ ச்ரியா ||”

என்று பாடுகிறார். இதன் பொருள்: பாற்கடலைக் கடைகையில், திருமாலின் முதுகின்மேல் இருந்த மந்தர மலையாகிய மத்து முன்னும் பின்னும் அசைந்தது. அந்த மலையின் அசைவு கூர்ம மூர்த்தியின் முதுகுக்கு மசக்குதல் (massage செய்வது) போல் இதமாக இருந்தது. அவ்வாறு அவரது முதுகை மந்தர மலை வருடியதால், அந்த ஆனந்தத்தில் கூர்ம மூர்த்தி அப்படியே உறங்கிவிட்டார். அவர் உறங்கும் போது எழுப்பிய குறட்டை ஒலி, பாற்கடலில் அலைகளை உண்டாக்கியது. அந்த ஒலி நம் அனைவரையும் காக்கட்டும்.

கூர்ம பீடத்தில் அமர்ந்தபடி உலகுக்கு மிகச் சிறந்த தர்மங்களைத் திருமால் உபதேசித்தார். அந்த தர்மங்களின் தொகுப்பே ‘கூர்ம புராணம்’ என்ற புராணமாக உருவெடுத்தது. இந்தக் கூர்மாவதாரத்தை மத் பாகவதத்தில் விளக்கும் சுகப்ரம்மம்,

“ததார ப்ருஷ்டேன ச லக்ஷயோஜன
ப்ரஸ்தாரிணா த்வீப இவாபரோ மஹான்”

என்றார். அதாவது, “கூர்ம மூர்த்தியே ஒரு மலைபோல் விளங்கினார். அவர் தமது முதுகில் மந்தரம் என்ற மலையைச் சுமந்ததைக் காண்கையில், ஒரு மலையே மற்றொரு மலையைச் சுமப்பது போல் இருந்தது” என்கிறார்.
‘அத்ரி’ என்றால் மலை என்று பொருள். ‘மஹாத்ரி’ என்றால் பெரிய மலை. ‘த்ருத்’ என்றால் தாங்குபவர். மலைபோன்ற வடிவம் கொண்ட கூர்ம மூர்த்தியாய் அவதரித்து, பெரும் மலையான மந்தர மலையைத் தன் முதுகில் தாங்கியபடியால், திருமால் ‘மஹாத்ரித்ருத்’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 182-வது திருநாமம். “மஹாத்ரித்ருதே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குப் பாரமில்லாத நிம்மதியான வாழ்வு அமையும்படித் திருமால் அருள்புரிவார்.

183. மஹேஷ்வாஸாய நமஹ (Maheshvaasaaya namaha)

கோயில் நகரமான கும்பகோணம் 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்று. திருவரங்கத்தை 11 ஆழ்வார்களும், திருவேங்கடத்தை 10 ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்துள்ளார்கள். அடுத்தபடியாக, கும்பகோணத்தை 7 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளார்கள். எனவே மங்களாசாசனம் செய்த ஆழ்வார்களின் எண்ணிக்கைப்படி கும்பகோணம் 3-வது திவ்யதேசமாகக் கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் கோமளவல்லித் தாயாரின் கேள்வனாக சார்ங்கபாணிப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். அவர் கையில் ‘சார்ங்கம்’ என்ற வில்லை ஏந்தியுள்ள படியால், ‘சார்ங்கபாணி’ என்று பேற்றப்படுகிறார். அந்த சார்ங்கவில்லின் அம்சமாகத் தோன்றியவர் திருமங்கையாழ்வார். அதனால் இயற்கையாகவே திருமங்கையாழ்வாருக்கு சார்ங்கபாணிப் பெருமாள் மீது தனி ஈடுபாடுண்டு. தாம் இயற்றிய ஆறு பிரபந்தங்களிலும் சார்ங்கபாணிப் பெருமாளை அவர் துதித்துள்ளார்.

திருமங்கையாழ்வாரின் மறு அவதாரமாகத் தோன்றியவர் ஆசுகவி ஸ்ரீநிதி சுவாமிகள். இவர் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வடமொழிக் கவிஞராக விளங்கியவர். திருமங்கையாழ்வாரைப் போலவே நிதி சுவாமிகளும் கார்த்திகை மாதம் கார்த்திகை நாளில் அவதரித்தார். திருமங்கையாழ்வார் தமிழில் நாலுகவிப் பெருமாளாக விளங்கியது போல், நிதி சுவாமிகள் வடமொழியில் ஆசுகவி ஸார்வபௌமராக விளங்கினார். இதுபோன்ற பல ஒற்றுமைகள் இருவருக்கும் உண்டு.

அந்த வகையில், திருமங்கையாழ்வாரைப் போலவே கும்பகோணம் சார்ங்கபாணிப் பெருமாளிடம் விசேஷ ஈடுபாடு கொண்ட நிதி சுவாமிகள், சார்ங்கபாணிப் பெருமாளைக் குறித்து அம்ருத சார்தூலம், அபர்யாப்தாம்ருத விம்சதி உள்ளிட்ட பல துதிகள் இயற்றினார். ஸ்ரீநிதி சுவாமிகள் கும்பகோணத்தில் வாழ்ந்த காலத்தில் ஒரு பக்தர் அவரிடம் வந்து, “சுவாமி! இவ்வூரில் சார்ங்கபாணிப் பெருமாள் கையில் சார்ங்க வில் ஏந்தி இருக்கிறார். ஆனால் அந்த வில்லில் பூட்டுவதற்கான பாணங்கள் எதுவுமே அவரிடம் இல்லையே! இந்தப் பெருமாளிடம் வில் மட்டும் தான் உண்டா? அம்புகள் கிடையாதா?” என்று கேட்டார்.

புன்னகைத்த ஸ்ரீநிதி சுவாமிகள், “அவரிடத்தில் பாணங்கள் உண்டு!” என்றார். “நம் கண்களுக்கு அது தெரியவில்லையே!” என்றார் பக்தர். “பாணங்களை ஒரு இலக்கை நோக்கிப் பெருமாள் எய்திருக்கிறார். அதனால் அவை இப்போது பெருமாளின் கைகளில் இல்லை!” என்றார் ஸ்ரீநிதி சுவாமிகள். “அது என்ன இலக்கு?” என்று கேட்டார் பக்தர். “நம் பாபங்கள் தான் இலக்கு. நம் பாபங்களை எல்லாம் போக்கி நமக்கு நற்கதியை அருள விழையும் சார்ங்கபாணிப் பெருமாள், தன் சார்ங்க வில்லில் பாணங்களைப் பூட்டி நம் பாபங்கள் மீது எய்கிறார். நம் பாபங்கள் மிகவும் அதிகமாக இருப்பதால், அவர் ஏவிய அம்புகள் இன்னும் அவற்றை முழுமையாக அழிக்கவில்லை. நம் அனைவரின் பாபங்களையும் அழித்தபின் அம்புகள் அனைத்தும் சார்ங்கபாணியின் கைக்குத் திரும்பிவரும். இக்கருத்தை வேதாந்த தேசிகன் தயா சதகத்தில்,

“கருணே துரிதேஷு மாமகேஷு ப்ரதிகாராந்தர துர்ஜயேஷு கிந்ந: |
கவசாயிதயா த்வயைவ சார்ங்கீ விஜயஸ்தானம் உபாச்ரிதோ வ்ருஷாத்ரிம் ||”

என்ற ஸ்லோகத்தில் தெரிவித்துள்ளார்!” என்று விடையளித்தார் ஸ்ரீநிதி சுவாமிகள். மேலும், “பொதுவாக நாம் ஒருவர் மீது எய்கிற அம்பு அவருக்குத் தீங்கு தான் செய்யும். ஆனால் திருமால் நம் மேல் எய்கிற அம்பு, நம் பாபங்களைப் போக்கி நமக்கு நன்மை செய்கிறது. இதுவே மற்றவர்களின் அம்புக்கும் திருமாலின் அம்புக்கும் உள்ள வித்தியாசம்! ராமாயணத்தில் சமுத்திர ராஜன் மேல் ஏவுவதற்காக ராமன் அம்பைப் பூட்டினான். ஆனால் முடிவில், அந்த அம்பு சமுத்திர ராஜனை ஒன்றும் செய்யவில்லை. அவனது எதிரிகளை அழித்து அவனுக்கு நன்மையையே செய்தது!” என்றார் ஸ்ரீநிதி சுவாமிகள்.

‘இஷு’ என்றால் அம்பு என்று பொருள். ‘மஹேஷு’ (மஹா+இஷு) என்றால் மிகச்சிறந்த அம்பு என்று பொருள். நம் பாபங்களைப் போக்கி நம் அனைவருக்கும் மங்களங்களை அள்ளிச் சொரியும் மிகச்சிறந்த அம்புகளை உடையவராகத் திருமால் விளங்குவதால், ‘மஹேஷ்வாஸஹ’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 183-வது திருநாமம். “மஹேஷ்வாஸாய நமஹ” என்று தினமும் சொல்லி வருபவர்கள் மேல், சார்ங்கபாணிப் பெருமாள் தன் அன்பு மழையை அம்பு மழையெனப் பொழிவார்.

184. மஹீபர்த்ரே நமஹ (Maheebharthre namaha)

கருடனுக்கு ருத்ரா, சுகீர்த்தி என இரண்டு மனைவிகள். அவர்களுள் ருத்ரா ஒருநாள் கருடனிடம், “உங்கள் அலகு இவ்வளவு கூர்மையாக உள்ளதே! இந்தக் கூரிய அலகு இருப்பதால், உங்கள் அருகில் வருவதற்கே பயமாக இருக்கிறது!” என்று சொன்னாள். “சுவாமி! உங்கள் அலகு இவ்வளவு கூர்மையாக இருப்பதற்கு என்ன காரணம்?” என்று கருடனிடம் கேட்டாள் சுகீர்த்தி. “எந்த ஒரு பொருளும் நன்றாகச் சாணை பிடித்தால் தான் கூர்மையாக இருக்கும். ஒரு விவசாயி எப்படி அறுவடைக்குச் செல்லும் முன் தனது அரிவாளைப் பாறையில் தேய்த்துச் சாணை பிடிப்பாரோ, அது போல் நான் எனது அலகை ஒரு சரியான உரைகல்லில் தேய்த்துச் சாணை பிடிக்கிறேன்!” என்றார் கருடன்.
“அது என்ன உரைகல்?” என்று கேட்டாள் ருத்ரா.

“அன்று மந்தர மலையைத் தன் முதுகில் சுமப்பதற்காகத் திருமால் கூர்மாவதாரம் எடுத்தார். பாற்கடலைக் கடைந்து முடித்தபின், மந்தர மலையைத் தம் முதுகில் இருந்து இறக்கி வைத்த கூர்ம மூர்த்தி, அதன்பின் பூமியைத் தமது முதுகில் சுமக்கத் தொடங்கினார். இன்றும் பாதாள லோகத்தில் பூமியைத் தாங்கிய வண்ணம் கூர்ம மூர்த்தி எழுந்தருளியுள்ளார். நான் அவ்வப்போது பாதாளத்துக்குச் சென்று அவரைச் சந்தித்து அவருடன் உரையாடிக் கொண்டிருப்பேன். அவ்வாறு உரையாடும் போது, ஆமை வடிவிலுள்ள அவருடைய ஓட்டில் என் அலகைத் தேய்த்துச் சாணை பிடிப்பேன்! அதனால் தான் எனது அலகு மகாபாரதத்தில் துரோணர் பயன்படுத்திய கத்தி போல் கூர்மையாக உள்ளது!” என்றார் கருடன்.
“நீங்கள் இப்படி அவர் முதுகில் உங்கள் அலகைத் தேய்த்தால் அவருக்கு வலிக்காதா?” என்று கேட்டாள் ருத்ரா.

“இல்லை! நான் என் அலகைக் கூர்மையாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் முதுகில் அதைத் தேய்க்கவில்லை. அவர் முதுகை இதமாக வருடி விடுவதற்காகத் தான் என் மூக்கை அவரது முதுகில் தேய்ப்பேன். ஆனால் திருமாலுக்குச் செய்யும் கைங்கர்யத்தின் ஏற்றம் யாதெனில், நாம் அவரிடம் எதையுமே பிரார்த்திக்காமல் அவருக்குத் தொண்டு செய்து கொண்டே இருந்தால், நமக்கு எது தேவை என்பதைத் திருமாலை ஆராய்ந்து, அவை அனைத்தையும் நமக்கு அவரே அருளி விடுவார். எனவே நான் கேட்காமலேயே எனது அலகினை அவரது ஓடு கூர்மையாக்கி விடுகிறது!” என்றார் கருடன்.

இந்த விஷயத்தை வேதாந்த தேசிகன் கருடனைக் குறித்துத் தாம் இயற்றிய ஐம்பது ஸ்லோகங்களின் தொகுப்பான கருட பஞ்சாசத்தின் 31-வது ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார்:

“ப்ரத்யக்ராகீர்ண தத்தத் பணிமணி நிகரே சங்குலாகோடி வக்ரம்
துண்டாக்ரம் ஸங்க்ஷுவான: குலகிரி கடினே கர்ப்பரே கூர்மபர்த்து: |
பாதாள க்ஷேத்ர பக்வத்விரஸன ப்ருதனா சாலி விச்சேத சாலி
சைலீம் நஸ்ஸப்த சைலீ லகிமதரஸப: ஸௌது ஸாத்வீம் ஸுபர்ண: ||”

“ஆதிசேஷன் தானே பாதாளத்திலிருந்தபடி உலகைத் தாங்குகிறார். கூர்ம மூர்த்தி தாங்குகிறார் என்று சொல்கிறீர்களே!” என்று கேட்டாள் சுகீர்த்தி. “ஆதிசேஷன் பூமியைப் பாதாளத்தில் இருந்து தாங்குவது உண்மை தான். ஆனால் அந்த ஆதிசேஷனுக்குக் கீழே இருந்து கொண்டு, ஆதிசேஷனோடு சேர்த்து உலகையும் தாங்குபவர் கூர்ம மூர்த்தி தான். அதனால் தான் இன்றும் கோயில்களில் சேஷ வாகனத்தின் கீழே ஆமை வடிவில் கூர்ம மூர்த்தி இருப்பதைக் காணலாம்!” என்றார் கருடன்.

“அந்தக் கூர்ம மூர்த்தியை நாங்களும் தரிசிக்க விரும்புகிறோம்!” என்றார்கள் ருத்ராவும் சுகீர்த்தியும். “வாருங்கள்!” என்று அவர்களையும் பாதாளத்துக்கு அழைத்துச் சென்றார் கருடன். ‘மஹீ’ என்றால் பூமி என்று பொருள். பூமியைத் தாங்கும் கூர்ம மூர்த்தி ‘மஹீபர்த்தா’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 184-வது திருநாமம். “மஹீபர்த்ரே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களின் அறிவாற்றல், கருடனின் அலகைப் போல் கூர்மையாகும் படித் திருமால் அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)
திருக்குடந்தை உ.வே.வெங்கடேஷ்