சக்தி பிரவாகம்ஆடிச் சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதம்தான் இது. அவளின் அருட் சுழலுக்குள் சிக்குபவர்கள் மேன்மையுறுகிறார்கள். நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியை வேப்பிலை முதல் விக்கிரகங்கள் வரை எல்லாவற்றினுள்ளும் கண்டு வணங்குகிறார்கள். பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதம். பெண்ணின் தாய்மையாகவும், வீறு கொண்டெழும் காளியாகவும், பாம்பின் புற்றினூடேவும், சிலுசிலுக்கும் பச்சை மரங்களினூடேயும், நட்டு வைத்த கல்லுக்குள்ளும் என்று அம்பாள் லட்சம் விதமாக தன்னை வெளிப்படுப்படுகின்றாள்.

‘‘நீ எனக்கு கோயில் கட்டும் முன்பே அதோ அந்த புற்றினுள் நான் தவமிருக்கிறேன். அங்கு வந்து என்னைப் பார்’’ என்று கருணை பொங்க கனவில் பேசியிருக்கிறாள். அண்டி வணங்கி அவளின் அருளில் நனைந்தோர் புற்றைச் சுற்றி சுவர் எழுப்பி கோபுரம் நிமிர்த்தி வணங்கினர். எந்த பிரச்னை ஆனாலும் அம்மா.... தாயே... மகாசக்தி... தயாபூரணி... என்று கைகூப்பி கண்ணீர் மல்கி கருணையில் நனைந்தெழுந்தனர். பக்தர்கள் பால்குடம் சுமந்தும், மஞ்சள் பூசியும், குங்குமம் சாற்றியும், பொங்கல் வைத்தும், வேப்பிலை சேலை அணிந்தும் என பல விதங்களில் தங்கள் பக்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

ஆடியின் அடிப்படை தத்துவமே ‘உன்னை இயக்கும் அதே சக்திதான், ஆங்காங்கு ஆலயங்களில் வெளிப்பட்டிருக்கிறாள். வெளியே தரிசித்த சக்தியை உனக்குள் காண்பதே பிறந்ததன் பயன்’ என்று கூறுகிறது. நமக்குள் சக்தி சுழல வேண்டுமானால் நாம் அதைச் சுற்ற வேண்டும். அல்லது நமக்குள் அது சுழன்று கொண்டிருக்கிறது என்பதை நாம் அதை சுற்றும்போது தெரிந்து கொள்கிறோம். சக்தி வழிபாடு என்பதன் அடிப்படையே எதனால் நான் இயக்கப்படுகிறேன் என்கிற இடையறாத தேடலேயாகும். எது என்னை இயக்குகிறது என்கிற தவிப்பு. அதை நான் அறிய வேண்டும் என்கிற முயற்சிதான் வேப்பிலையிலிருந்து தொடங்கி சக்ர வழிபாடு வரை எண்ணற்ற தேவதைகள், உபதேவதைகள் என்று பெரும் வழிபாடாக இங்கு தொடர்ந்து கொண்டிருக்கின்றது.  

எனவே, நீக்கமற நிறைந்துள்ள சக்தியைக் குறித்து தீவிரமாக சிந்திப்பதற்கென்றே இந்த மாதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இயக்கம் அத்தனையையும் எப்படி இங்கு சக்தியாக உருவகித்துள்ளனர் என்று கூர்ந்து பார்த்தால் புரியும். அன்பு, கோபம், கருணை, ஆக்ரோஷம், வீரம், வியப்பு, அலட்சியம் என்று அனைத்தையுமே சக்தியின் வெளிப்பாட்டுணர்வாக வைத்து மக்கள் வழிபடுவார்கள். எதிலெல்லாம் சக்தியின் பிரவாகம் இருப்பதாக காண்கிறார்களோ அதையெல்லாம் வணங்குகின்றனர். ஏனெனில், இங்குள்ள அனைத்துமாக அவளே வெளிப்பட்டிருக்கின்றாள் என்பதின் தத்துவார்த்தம் இது. வணங்க வணங்க வணங்குபவனின் அகங்காரம் குறுகும். அகங்காரம் அற்ற இடத்தில் சக்தி பிரவாகமாகப் பாய்வதை அனுபூதியில் அறியலாம்.

கிருஷ்ணா(பொறுப்பாசிரியர்)