ஆனித் திருமஞ்சனத்தில் ஆதிசிவனை போற்றி நிற்போம்!



* சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சனம் 7-7-2019

ஒளிவளர் விளக்கே! உவப்பிலா ஒன்றே! உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே!
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே! சித்தத்துள் தித்திக்குந் தேனே!
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே! அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே.

எனப்படும்  ஒன்பதாம் திருமுறை கோயில் திருப்பதிகம், உயிர்களுக்கு இறைவனது காட்டும் உபகாரமே இன்றிக்  காணும்  உபகாரமும்  இன்றியமையாதது  என்பதை விளக்கி நிற்கும். ‘அறிவிக்க அன்றி  அறியா  உளங்கள்’ (சிவஞானபோதம் சூ.8.அதி.2)  என்றபடி, உயிர்களின் அறிவு,  அறிவிக்கும் பொருளின்றி ஒன்றை  அறியும்  தன்மையைப்பெறாது.  ஆகவே, உயிரினது  அறிவு, பிறிதோர்  ஒளியின்றித் தானே உருவத்தைக் காண இயலாத கண்ணின் ஒளிபோன்றதாகும்.  அதனால்,  கதிரவன்  ஒளி கண்ணொளியில் கலந்து உருவத்தைக்  காணச்  செய்யும்  தன்மைபோல,  இறைவன்  உயிரறிவில் கலந்து   பொருள்களை  அறியச்  செய்வான்.  

இவ்வாறு   செய்வதே ‘காட்டும் உபகாரம்’ எனப்படும். இனிக்    கதிரவன் ஒளி கலந்தமையால் விளக்கம் பெற்ற பின்னும் கண்ணொளி  தானே சென்று உருவத்தைக் காணாது, அதனோடு ஆன்மாவினது    அறிவும்   உடன்சென்று   அறிந்தால்தான்,   கண் உருவத்தைக் காணும். அதுபோல இறைவனது  கலப்பால் விளக்கம்  பெற்ற பின்பும்   உயிரினது அறிவு, தானே  சென்று  ஒன்றனை  அறியாது.  அதனோடு   இறைவனும் உடன் சென்று  அறிந்தால்தான்  உயிர்  பொருளை  அறியும். ஆகவே, உயிர்கள்  அங்ஙனம்  அறிதற்பொருட்டு  அவற்றோடு இறைவன் தானும் உடன் நின்று   அறிதலே ‘காணும்   உபகாரம்’   எனப்படும். அத்தகைய உபகாரத்தினை உலக உயிர்களுக்குச் செய்யும் பொருட்டே இறைவன் தில்லையில் அருள் நடனம் செய்கிறார்.

இது ‘தெய்வக் கூத்து’ எனப்படும். தெய்வக் கூத்து என்பது அருள்  நடனம் ஆகும். அதாவது, உயிர்கட்கு ‘பெத்தம்’, ‘முத்தி’ என்னும்  இருநிலைகளிலும்  ஏற்றதன்மையால்  அருள்புரியும் நடனம். இவ்விருவகை நடனங்களின் இயல்பினையும்,

‘‘தோற்றம் துடியதனில் தோயும் திதிஅமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தே உற்ற திரோதம் முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு’’

எனவும்,

‘மாயை தனை உதறி, வல்வினையைச் சுட்டு, மலம்
சாய அமுக்கி, அருள் தானெடுத்து - நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
தான் எந்தை யார் பரதந் தான்
 - எனவும்   அமைந்த   உண்மை  விளக்கப் பாடல்கள் முறையே  உணர்த்தி நிற்கும். இத்தகைய திருநடனத்தினைக் கண்டால், மனித்த பிறவியும் வேண்டும் என்னும் எண்ணம் தோன்றும் என்பார் திருநாவுக்கரசர். இதனை,
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே

என்ற பாடல் விளக்கி நிற்கும். இத்தகைய இறைவனின் திருக்கோல அழகினை மானுட சமூகம் கண்டு பயன்பெற வேண்டும் என்பதற்காகவே நடராஜப்பெருமான் தான் உறைந்துள்ள திருக்கோயில் கர்ப்பக்கிரகத்தில் இருந்து வெளிவந்து அருள் புரியும் திருவிழாக்கள் இரண்டேயாம். அவற்றுள் ஒன்று மார்கழி ஆருத்ரா தரிசனம், மற்றொன்று ஆனித்திருமஞ்சனம் ஆகும். சிதம்பரம் நடராஜருக்குத் தினந்தோறும் ஆறுகாலப் பூஜைகள் நடைபெறுகின்றன. அவை காலைசாந்தி, இரண்டாம்காலம், உச்சிகாலம், சாயங்காலம், ரகசியபூஜைக்காலம், அர்த்தசாமம் என்பனவாகும். அதே போன்று இறைவனுக்கு வருடத்தில் ஆறுமகா அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

இது இந்துசமயத் தொன்மத்தின்படி அமைந்ததாகும். தொன்மவியல் கணக்கின்படி ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஓர் நாளாகும். ஓர்நாளில் மனிதர்கள் இறைவனுக்குச் செய்யும் ஆறு காலப் பூஜைகளைப் போல் தேவர்களும் இறைவனுக்கு ஆறுகாலப்பூஜைகள் செய்கின்றனர். ஆனால் தேவர்களின் ஒரு நாள் மனிதர்களின் கணக்கின் படி ஓர் ஆண்டாய் அமைவதால் அது வருடத்திற்கு ஆறுகாலப் பூஜையாக அமைகின்றது. அத்தகைய ஐதீகத்தின் அடிப்படையிலே சிதம்பரம் நடராஜருக்கு வருடத்திற்கு ஆறு மகாபூஜைகள் நடைபெறுகின்றன. அவை முறையே சித்திரை மாதம் திருவோணநட்சத்திரத்தில் சிதம்பரத்தின் கனகசபையில் மாலையில் நடைபெறும் அபிஷேகம். ஆனிமாதம் உத்திரநட்சத்திரத்தில் ராஜசபையில் நடைபெறும் அபிஷேகம்.

ஆவணிமாதம் பூர்வபட்ச சதுர்த்தியில் கனகசபையில் மாலையில் நடைபெறும் அபிஷேகம். புரட்டாசி மாதம்; பூர்வபட்ச சதுர்த்தியில் கனகசபையில் மாலையில் நடைபெறும் அபிஷேகம். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் இராஜசபையில் நடைபெறும் அபிஷேகம். மாசிமாதம் பூர்வபட்ச சதுர்த்தியில் கனகசபையில் மாலையில் நடைபெறும் அபிஷேகம் என்பவையாகும் இவற்றுள் மார்கழித் திருவாதிரையும் ஆனித் திருமஞ்சனமும் குறிப்பிடத்தக்கதாகும். ஆனித் திருமஞ்சனம் ஆனி மாதம் உத்திரத் திருநாளில் நடைபெறும். இவ் உத்திர நட்சத்திரம் துருவ நட்சத்திரம் என்று சொல்லப்படுகிறது. வேனிற்காலம், ஆனி இலை ‘அசங்க’ என்றொரு சொல் வழக்கு உண்டு. அதன் பொருள் ஆனி மாதத்தில் மழை வளம் சிறக்கும் என்பதாகும். அத்தகைய மாதத்தில்தான் நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். மேலும், பன்னிரு மாதங்களில் நீண்ட பகல்பொழுதினைக் கொண்ட மாதமும் ஆனி மாதமே ஆகும். இம்மாதத்தில் சிதம்பரத்திலும், திருவாரூரிலும் விழா சிறப்பாக நடைபெறும்.

தில்லையில் இறைவன் சந்நதிக்கு வலது புறத்தில் சிதம்பர ரகசியம் உள்ளது. திருவாரூரில் தியாகராஜப் பெருமானின் திருமேனியே ரகசியம் ஆகும். இந்த இரண்டு பெருமான்களின் திருநடனத்தையும் பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனிவரும் கண்டு வழிபடுவதாய்ப் புராணங்கள் உரைக்கும். நடராஜருக்கு ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் (மாலை வேளை)  சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்வதுதான் ஆனித் திருமஞ்சனம் எனப்படும். ஆனித் திருமஞ்சனத்தன்று சிதம்பரத்தில் எழுந்தருளி அருட் பாலிக்கும் ஆதிமூலவர் சந்திர மௌலீஸ்வரர்க்கு ஆறுகால வழிபாடு மிகச் சிறப்பாய் நடைபெறும்.

அந்த நிகழ்வின் போது கனகசபையில் சிறப்பு வழிபாடும் அபிஷேகமும் நடைபெறும். அது நிறைவு பெற்றவுடன் சிவகாமி அம்மை உடனாய தில்லை நடராஜருக்கு பதினாறு வகைத் தீபங்களால் ஆராதனை காட்டப்படும். இத்தகைய ஆனி திருமஞ்சனத் திருவிழாவினைத் தில்லையில் தொடங்கி வைத்தவர் பதஞ்சலி முனிவர் ஆவார். இவர் ஆதிசேஷனின் அவதாரம் என்று கருதப்படுகிறார். இவர் அத்ரி முனிவரின் கற்புடைய மனைவியாகிய அனுசூயாவிடம் அவதாரம் செய்தவர். ஒருமுறை சிவபெருமானின் திருத்தாண்டகத்தைக் கண்டு மகிழ்ச்சியால் திளைத்தார் பெருமாள்.

அதனைக் கண்ட ஆதிசேஷன் காரணம் வினவ சிவபெருமானின் ஆனந்தத் திருத்தாண்டவம் கண்டமையால் விளைந்தது என்று விடையளித்தார். உடன் அத்திருத்தாண்டகத்தை தானும் காண ஆவல் கொண்டார் ஆதிசேஷன். அதற்காகத் தவம் புரிந்தார். அவரைச் சோதிக்கத் திருவுளம் கொண்ட சிவபெருமான் பிரம்மதேவன் வடிவில் தோன்றினார். பிரம்மன் வடிவில் வந்த சிவபெருமானை பிரம்மன் என நினைத்த ஆதிசேஷன் உங்களிடம் நான் பெறுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறித் தன் தவத்தினைத் தொடர்ந்தார். அதனைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் யாது வேண்டும்? என வினவ நான் தங்கள் திருநடனத்தைக் காணும் பேறு வழங்கவேண்டும் என வேண்டி நின்றார்.

சிவபெருமான் அனுசூயாவிடம் மகவாய்த் தோன்றி சிதம்பரத்தினை வந்தடைவாயாக! அங்கு எம்முடைய நடன தரிசனம் காண தவம் மேற்கொண்டிருக்கும் வியாக்ரபாத முனிவருடன் சேர்ந்திருந்தால் உமக்கும் நடன தரிசனம் தருவோம் என்றார். இத்தகைய வரத்தினைப் பெற்ற ஆதிசேஷன் சிவபெருமானை வழிபாடு செய்து கொண்டிருந்த அனுசூயாவின் கையில் விழ அனுசூயா பாம்பென்று கருதி கையை உதறினாள். அதனால் அக்குழந்தை அவளின் பாதத்தில் விழுந்தது. பாதத்தில் விழுந்தமையாலும் அனுசூயா இறைவனை அஞ்சலித்து நின்ற கரங்களில் விழுந்தமையாலும் ‘பதஞ்சலி’ எனப்பட்டார்.பின் சிதம்பரத்தினை அடைந்து இறைவனின் திருநடனம் கண்டு மகிழ்ந்தார். தில்லையில் நடனம் செய்யும் பெருமானைத் தரிசிப்பதற்கு உடல் முழுவதும் கைகள் இல்லையே? அவர் பெயரைச் சொல்ல மேனியெங்கும் வாய்கள் இல்லையே, என்று நம்பியாண்டார் நம்பி கண்டு ஏங்கி நின்றதனை,

தன்னார் புனல்தில்லைச் சிற்றம்பலந்தன்னில் மன்னிநின்ற
விண்ணாளனைக் கண்ட நான்விரும்பாய் என் உடல் முழுதும்
கண் ஆங்கு இலோ! தொழக் கை ஆங்கு இலோ! திருநாமங்கள் கற்று
எண்ணாம் பரிசு எங்கும் வாய்ஆங்கு இலோ!
எனக் கிப்பிறப்பே  

- என்ற பாடல் விளக்கி நிற்பதனைப் போன்று இறைவன் திருநடனத்தில் உள்ளம் பறிகொடுத்த பதஞ்சலி முனிவரும் உலகம் உய்யும் பொருட்டு ஆனித் திருமஞ்சன விழாவினை ஏற்பாடு செய்தார். இத்திருவிழா சிதம்பரத்தில் பத்து நாட்கள் மிகச் சீரும் சிறப்புமாக நடைபெறும். இவ்விழாவில் முதல்நாள் காலை நடராஜருக்கு முன்னால் உள்ள தங்கக் கொடி மரத்தில் கொடி ஏற்றப்படும். அப்பொழுது முழுமுதற் கடவுளாகிய விநாயகர் உள்ளிட்ட முப்பது முக்கோடி தேவர்களுக்கும் ஆராதனை நிகழ்வுறும். கொடியில் சிவனின் கொடிச் சின்னமாகிய நந்தி வரையப்பட்டு ஏற்றப்படும்.அன்று இரவு அட்டதிக்பாலகர்களுக்கும் வழிபாடு நிகழ்த்தப் பெற்று அவர்களை அவர்களுக்கு உரிய திசைகளில் அருள் செய்யுமாறு வேண்டப்படும்.

இரண்டாம் நாள் உலக உயிர்களுக்கு எல்லாம் குளிர்ச்சியைத் தந்து உலக உயிர்கள் இயங்குதற்குக் காரணமாகிய ஆற்றலைத் தருகின்ற ‘சந்திர பிரபை’ என்னும் வாகனத்தில் இறைவன் வீதியுலா வந்து அருட் பாலிப்பார், மூன்றாம் நாள் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியாய் அருள் வழங்கும் சிவபெருமான் உலகின் புற இருள் போக்கும் சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்து அருள் செய்வார். சிவபெருமானுக்கு அமைந்த முக்கண்கள் சந்திரனும் சூரியனும் அக்னியும் ஆகும். இதினுள் சந்திர வாகனத்திலும் சூரிய வாகனத்திலும் ஜோதி வடிவமான இறைவன் காட்சி தருவதால் இம்மூன்றினையும் வழிபட்ட பலன் ஒருங்கே வந்தமையும். நான்காம் நாள் மானுட உயிர்களின் இயக்கத்தினைத் தடுத்து நிறுத்தி அவர்களின் செயல் வேகத்தினைக் குறைக்கும் ஆணவம் முதலான மலங்களைக் கொன்றழிக்கும் ஆற்றல்பெற்ற  இறைவனின் பூதகணங்களுள் ஒன்றாகிய பூதவாகனத்தில் சிவபெருமான் நகர் வலம் வருவார்.

 ஐந்தாம்நாள் ‘தடமதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ’ என்று திருவாசகத்தில் குறிக்கப்பெற்ற இடப வாகனத்தில் தோன்றுவார் சிவபெருமான். ஆறாம் திருநாள் சிவபெருமான் யானை வகனத்தில் வந்து அருள்புரிவார். ஏழாம்நாள் கைலாய வாகனக்காட்சி நடைபெறும். சிவபெருமான் மகிழ்ந்துறையும் இடம் கைலாயம் ஆகும். எனவே அத்தகைய திருக்கோலத்தில் இறைவனைக் காண்பது சிறப்பு ஆகும். எட்டாம் நாள் உலக உயிர்களின் அஞ்ஞானத்தினை நீக்கி மெய்ஞானம் தந்தருளும் பிட்சாடன வடிவத்தில் இறைவன் குதிரை மீது நகர்வலம் வந்து அருள் செய்வார். முதல்நாள்  தொடங்கி எட்டாம் நாள் வரை பஞ்சமூர்த்திகள் எனப்பெறும் விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டிகேஸ்வரர் ஆகியோர்  வீதியுலா வருவர்.

ஒன்பதாம் நாள் தேரோட்டம் மிகச் சிறப்புப் பெற்றதாகும். அதில் பஞ்சமூர்த்திகள்  தேர்களில் வீதி வலம் வருவர். நடராஜப்பெருமான் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்த பின் இரவில் ராஜசபை எனப்பெறும் ஆயிரங்கால் மண்டபத்தில் தங்குவார். ஆனி உத்திரத் திருநாளான பத்தாம் திருநாள் அன்று வைகறைப்  பொழுதில் இறைவனுக்கு ஆனித் திருமஞ்சனம் நடைபெறும். பகல் ஒருமணிக்கு நடராஜரும் சிவகாமி அம்பாளும் ஆனந்த நடனத் திருக்கோலத்தில் ஞானாகாச சிற்சபையில் எழுந்தருள்வர். இறைவனும் இறைவியும் நடனம் செய்தவாறு சிற்சபைக்கு எழுந்தருளும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும். அக்காட்சி அருமையான அனுக்கிரக தரிசனக் காட்சியாகும். அன்றிரவு  சிற்சபையில் கடாபிஷேகம் நடைபெறும். மறுநாள் விடையாற்றி உற்சவம் முடிந்தவுடன் கொடியிறக்கம் கண்டு திருவிழா இனிதே நிறைவுறும்.

இத்திருநாளில் இறைவனுக்கு நடைபெறும் ஆனித் திருமஞ்சன விழாவினைத் தரிசனம் செய்தால் ஒருவருக்குத் தான் செய்யும் தொழிலில் உள்ள போட்டி நீங்கி  வெற்றி கிடைக்கும். திருமணம் ஆகாத பெண்கள் வழிபாடு செய்தால் திருமணம் கூடிவரும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புகள் அமைந்த ஆனித்திருமஞ்சனத்தினைக் காணலே இப்பிறவி எடுத்ததன் பெரும்பயனாகும். அவ்வாறு வணங்கும் பொழுது,

கண்பனி அரும்பக் கைகள் மொட்டித் (து) என்
களைகணே ஓலம் என்று ஓலிட் (டு)
என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத் (து)
என்னையும் புணர்ப்பவன் கோயில்
பண்பல தெளிதேன் பாடி நின்றாடப்
பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பில்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம்பலமே

- எனக் கருவூர்த்தேவர் தில்லை நடராஜப்பெருமானை பாடிப் பரவி பணிந்து போற்றியதுபோல் போற்றி நின்று அருள் பெற்று உய்வோமாக!

பவள மால் வரையைப் பனிபடருந் தனையதோர் படரொளிதரு திருநீறும்
குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும் துன்று பொற் குழல் திருச்சடையும்
திவள மாளிகை சூழ்தரு தில்லையுள்
திருநடம் புரிகின்ற
தவள வண்ணனை நினைதொறும் என்மனம் தழல்மெழுகு ஒக்கின்றதே

- திருவாலி அமுதனார்

முனைவர் மா. சிதம்பரம்

படங்கள் சுவாமிநாதன் நடராஜன்