முத்திரை பதித்தது சித்திரை சிறப்பிதழ்



* ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி பன்றி வடிவில் இருப்பதால், இங்கு கோரைக்கிழங்கு, அரிசி மாவு, பூரா சர்க்கரை, ஏலக்காய், நெய் சேர்த்து தயாரிக்கும் முஸ்தாபி சூரணம் ஒரு அரிய பிரசாதமாக எம்மதத்தார்க்கும் விளங்குவதை ஆன்மிக பலன் உணர்த்தியது. - முனைவர். இராம.கண்ணன், சாந்தி நகர், திருநெல்வேலி.

* சம்பிரதாயங்களை தவறவிட்டு லௌகீகத்தளங்களில் பயணிக்கும்போது, ஞானியர்கள் தோன்றி நம் பாதையை செப்பனிடுகிறார்கள் என்ற பொறுப்பாசிரியர் கருத்துப்படி, சமீபகாலமாக தோன்றிய உண்மை ஞானிகள் அடையாளம் தெரியாமல், விளம்பர வெளிச்சத்தில் கார்ப்பரேட் சாமியார்கள், ஆன்மிகத் தொழில் செய்து, அவர்களும் லௌகீகப் பாதையில் பயணிப்பது, கலியுக களங்கம் என்றாலும் முன்னோர்கள் சொன்ன உபதேசங்களை மனதில் நிறுத்தி, அவ்வழியில் வாழ்ந்து, சொத்தாக அதை நம் வாரிசுகளுக்கும் வழங்கினால் நாமும் மகான்தான் என்று உணர்த்தியது, தலையங்கம். - அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

* ராமநவமி நடைபெற உள்ள இத்தருணத்தில் கோயிலில் ராமன் அழகு தரிசனம் படம் வெளியிட்டு திருப்புட்குழி திருப்புளியம்பூதங்குடி, திரு அயோத்தி, திருப்புல்லாகி வரலாற்றுடன் தக்க படங்களுடன் வெளியிட்டு வாசகர்கள் வீட்டிலிருந்தே ராமபிரானின் தரிசனம் பெற்றுயரச் செய்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டீர்கள். வாசகர்கள் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். - K.சிவகுமார், சீர்காழி.

* தமிழ்ப்புத்தாண்டு பரிசாக கோபுரம் மஞ்சள் தூள் மற்றும் குங்குமம் நிறுவனம் வழங்கிய ‘விகாரி பஞ்சாங்கம்’ மிக்க பயன் உடையது. ஆன்மிகத்திற்கு பாராட்டுகள். திருச்சி சமயபுரம் கட்டுரையும், படங்களும் அம்மனை நேரில் தரிசித்து வணங்கி மகிழ்ந்த பரவச உணர்வைத் தந்தது. அம்பாளின் பெருமையே பெருமை. - ப. கதிரவன், திருவண்ணாமலை.

* விகாரி வருட நட்சத்திரப் பலன்கள் அனைத்துமே துல்லிய அலசல். ஆன்மிகம் இதழ் மீது பாசம், நேசம் அதிகரிக்க வைத்தது. - ஆர்.ஜி.பாலன், திசையன்விளை.

* ‘மாமதுரையே மணக்கும் மீனாட்சி கல்யாணம்’ என்ற தொகுப்பில் ஜொலிப்பது மங்களம். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் குறித்த படங்களும், விவரங்களும் சிறப்பு தரிசனம் என்றாகி மனதில் செழிப்பாக மங்களம் பொங்கிட வைத்தது. - ஆர்.விநாயகன்,திசையன்விளை, நெல்லை.

* தெய்வமான ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமிகள் தொகுப்பு நெஞ்சமெல்லாம் பூரிப்பு. சேர்மன் சுவாமியின் ஈர்ப்பு ஏரல் மூலம் எங்கள் மனசெல்லாம் தேறல் என்று திருப்தி பெற வைத்தது. - ஆர்.மஹாமர், ஸ்ரீலட்சுமிபுரம்.

* புராணங்களின் மூன்று அடுக்கு நிலைப்பாடுகளை விளக்கி ‘திருக்கண்ணோக்கம்’ என்று தரப்பட்ட தலையங்கம் இதழின் தலையாய அங்கம் என்பதோடு இரு கண்களையும் அகல விரியச் செய்து விஷயத்தை விவரத்தை வந்தையாகச் சிந்தையில் பதிவு செய்தது. - ஆர்.கே.கல்யாணி, மணலிவிளை.

* அழகரின் உலா அழகாக அட்டையில் தரிசனமாகப் பெற்றது ஆன்மிக வாசகர்களின் பாக்கியம்! சித்திரைக்கு முன்னால் கிட்டிய முத்திரை என்பதால் இதழ் பத்தரை மாத்து. மொத்தத்தில் ஆன்மிக அன்பர்களின் மனதில் முத்திரை  பதித்தது சித்திரை சிறப்பிதழ். - ஆர்.இ.மணிமாறன், இடையன்குடி.

* வணக்கம். ஆன்மிகம் ஏப்ரல் 1-15 இதழ் கண்டேன். அருமை. ‘ராசி’ பலனுக்குப் பதிலாக ‘நட்சத்திர’ பலன்களைத் தந்தது சிறப்பாக இருந்தது. - பத்ம.சிவாஜி, கோயம்புத்தூர்.

* கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் தெய்வீகக் காட்சிகளை அட்டையில், பிரபலமான ஓவியர்களின் தூரிகைகளில் எழுந்தருளியதை கண்டு பக்தி பரவசம் அடைந்த நிலையில் பக்கங்களைப் புரட்டினால், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண(ம்) காட்சி வர்ணங்களும், தொடர்ந்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் படித்தது மகிழ்ச்சி. ஒரே இதழில் இருபத்தேழு நட்சத்திரக்காரர்களுக்கும் ஒரு வருட வி(கா)ரி போட நிறைவான பலன்கள் சரியான அசத்தல். எந்த கோயில்? எந்த பிரசாதம்? - பகுதி சிறப்பாக உள்ளது. தேர்ந்து எடுத்துச் சொல்லும் தெய்வீக கோயில் பிரசாதங்களை வீட்டில் தயாரித்து உண்ணலாமா? என்ற பயமும் எழுகிறது. விடை கிடைக்குமா? - சிம்ம வாஹினி, வியாசகர் நகர்.