வணக்கம் நலந்தானே!கலைவெளி கற்பிப்போம்!

இன்னும் சில நாட்களில் குழந்தைகளுக்கு பள்ளி இறுதித் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கி விடும். உடனேயே அடுத்த ஆண்டிற்கான படிப்பை சிலர் தொடங்கி விடுவர். விடுமுறை நாட்களில் கூட பெற்றோர் குழந்தைகளை சிறப்பு வகுப்புகள் என்று அனுப்பிக் கொண்டிருப்பார்கள். மீதி நேரம் முழுவதும் செல்போனை கையில் வைத்துக் கொண்டு வெற்றுக் கேளிக்கைகளில் மூழ்கியபடி இருப்பதை பார்க்கிறோம்.

வேறென்ன செய்வது என்கிற கேள்வி எழுகிறதா?

இம்மாதிரியான நீண்ட விடுமுறை நாட்களில் நம்முடைய மரபு, கலாச்சாரம், ஆன்மிக நூல்கள் சம்பந்தப்பட்ட அறிமுகத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்தலாம். தீம் பார்க், திரையரங்குகள் என்று அழைத்துப் போகும் நாம் மிக நிச்சயமாக ஆயிரம் வருட பழமையான கோயில்களுக்கும் அழைத்துச் செல்லலாமே! வெறுமே குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்துச் செல்லாமல் அந்தக் கோயில்கள் குறித்த ஒரு வரலாற்றுச் சித்திரத்தை பெற்றோர் படித்துவிட்டு அங்கு அழைத்துச் சென்று குழந்தை களுக்கு அழகாக விளக்கிச் சொல்லலாம்.

குழந்தைகளுக்கு எளிமையான கதைகளாக மன்னர்களைப்பற்றிச் சொல்லும்போதே சொல்பவரின் கற்பனை வளமும் சேருகின்றது. அந்தக் கணத்தில் குழந்தையினுள் ஒரு படைப்பாளிக்கான விதையையும் சேர்த்தே ஊன்றுகிறீர்கள். பெற்றோரே கூட ஒரு கோயிலின் அடிப்படையிலிருந்து அதாவது எந்த நூற்றாண்டில் இக்கோயில் எடுப்பிக்கப்பட்டது என்று அறிவதிலிருந்து தொடங்கினால் மெல்ல அந்த மாவட்டத்தின் வரலாற்றையே ஓரளவு பருந்துப் பார்வையில் பார்த்துவிட முடியும்.  அக்காலத்தில் கோயில்களில்தான் மரபு, கலாச்சாரம், இசை, நாட்டியம், புராணம், தத்துவம் என்று வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் பதித்து வைத்தார்கள்.

கோயில் என்றாலே தானாக புகைப்படக் கலையும் வந்துவிடும். ஒரு சிற்பத்தை ஓவியமாகவும், புகைப்படம் எடுப்பதும் மாபெரும் சவாலான விஷயம். புகைப்படக் கலையில் கோயில் புகைப்படக்கலைக்கு என்றுமே சிறப்பு அந்தஸ்து உண்டு. முதலில் நாம் வசிக்கும் மாவட்டத்திலுள்ள முக்கிய பெருங் கோயிலுக்கு அழைத்துச் சென்று கல் கல்லாக பார்க்க வையுங்கள். மெல்ல அது குறித்த வரலாற்று தகவல்களை நீங்கள் திரட்டியவாறு சொல்லிக் கொடுங்கள். புராணக் கதைகளை கூறி அதற்குள் பொதிந்துள்ள தத்துவத்தை விளக்க முடியுமா என்று பாருங்கள்.

அதிலும் பாடல் பெற்ற தலமெனில் பதிகங்களையும் ஆழ்வார்களின் பாசுரங்களையும் படிக்கச் சொல்லிக் கொடுங்கள். அந்த ஈரத் தமிழ் பாடல்களின் மேன்மையான ருசியை அறியச் செய்யுங்கள். ஒவ்வொரு விடுமுறையையும் கேளிக்கைகளோடு மட்டுமல்லாது கோயில்களோடு சேர்ந்து கொண்டாடுங்கள். கேளிக்கை கண நேரத்தில் குமிழாகி மறையும். கோயில்களோ ஆயிரம் ஆண்டுகட்கு முன்னால் உங்களையும் பிள்ளைகளையும் நகர்த்திச் செல்லும். காலத்தின் முன்பு நாம் இப்போது என்னவாகி நிற்கிறோம் என்கிற தெளிவு பௌர்ணமி நிலவாக அவர்களுக்கும் திரண்டெழும்.

கிருஷ்ணா (பொறுப்பாசிரியர் )