காதற்ற ஊசியும் கடைவழிக்கு வருமா?



இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் -21

பணம் ஒருவரிடம் அதிகப்படியாக இருந்து அவர் கோடீஸ்வரராகத் திகழ்ந்தால் போதும், இனிப்புப் பண்டத்தில் மொய்க்கின்ற ஈக்கள் போல அவரை இந்திரன் சந்திரன் என்று துதிபாட ஒரு கூட்டமே சேர்ந்து விடும். அதனால் தான் ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்றும் பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும்’ என்றும் ஏழை சொல் அம்பலம் ஏறுமா?’ என்றும் பல பழமொழிகள் வழக்கத்தில் உள்ளன. அதே சமயத்தில் பணம் ஒருவரிடம் சேரச் சேர தீண்டக் கூடாத தீய பழக்கங்கள் பலவும், மேலும் மேலும் பணம்சேர்க்க வேண்டும் என்ற அடங்காத ஆசையும் அவரை எளிதாக தானாகவே பற்றிக் கொள்கிறது.

அதனால் தான் இன்றைய கவிஞர் ஒருவர் இவ்வாறு பாடுகின்றார். வாழ்வதற்குப் பொருள் வேண்டும் தான். ஆனால் வாழ்வதிலும் பொருள் வேண்டாமா? அறிஞர் ஒருவர் கூறுகின்றார். பணம் இல்லாவிட்டால் உலகில் உன்னை யாருக்கும் தெரியாது. பணம் இருந்து விட்டால் உன்னை உனக்கே தெரியாது.

அறன் நிரம்பிய அருளுடை அருந்தவர்க்கேனும்
பெறலரும் திருபெற்றபின் சிந்தனை பிறிது ஆம்!

என்பது கம்பரின் காவியத்தில் காணப்படும் ஒரு அரிய தொடர். அதாவது அறமும், அருளும் நிரம்பிய தவசீலர்களையும் அதிகப்பணம் திசைமாற்றி விடும்.  எனவே நிலையற்ற இவ்வாழ்வில் ஒருவர் தனக்கு சேர்ந்துள்ள நிலையற்ற செல்வத்தின் தன்மை உணர்ந்து ‘தாமரை இலைத் தண்ணீர் போல’ வாழ முயல வேண்டும். ஆசைகளை அறவே துறந்து பற்றற்று வாழ்வது மிகமிகக் கடினம். பெயரளவில் துறவியாக பலபேர் வலம் வருவதைக் கண்கூடாகவே நாம் காண்கின்றோம். மகாகவி பாரதியார் பாடிய மகா பாரத குறுங்காவியமான பாஞ்சாலி சபதத்தில் அஸ்தினாபுரம் நகர்பற்றி பாடும் போதும் அங்கு துறவிகள் போல ‘வெறும் வேடங்கள் பூண்டவர் பலரும் உண்டாம்’ என்று பாடுகின்றார். உண்மையான துறவியின் இலக்கணத்தை சேக்கிழார் பெரிய புராணத்தில் கவி நயம்பொருந்த கச்சிதமாகக் கூறுகிறார்.

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொன்னும் ஏக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.

பாரதம் பல துறவியர்களைப் பெற்றிருந்த போதும் மெய் ஞானத் துறவியாகவும், மிகச்சிறந்த கவிஞராகவும்.

‘பார் அனைத்தும் பொய் எனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல்
ஆரும் துறக்கை அரிது! அரிது!

என்று ஞானியர்களே வணங்கிப் போற்றிய மகானாகவும் விளங்கிய பெருமைக்குரியவர் பட்டினத்தாரே ஆவார்.  சோழமண்டலத்தில் காவிரி கடலோடு கலக்கும் காவிரிப் பூம்பட்டினத்தில் பிறந்த பட்டினத்தார் வணிகம் செய்து பெரும் செல்வத்திற்கு அதிபதியாக விளங்கினார். நவநிதியமும், மாடமாளிகையும் கொண்ட அவர் ‘பூலோக குபேரர்’ என்றே போற்றப்பட்டார்.  செல்வத்தின் சிகரத்திலே இருந்த அவர் ‘காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே!’ என்ற ஒற்றை வரி உபதேசத்தை உணர்ந்த மறுநொடியில் அனைத்து வசதிகளையும் உதறித் தள்ளி, தன் செல்வம் எல்லாவற்றையும் தானமாக ஏழையர்க்குத் தந்துவிடச் சொல்லி கோவணத்தோடு புறப்பட்டார். துறவியாகி தெய்வ அனு பூதியில் ஒன்றினார்.

அதற்குப் பிறகு அவர் எப்படி இருந்தார் என்பதை அவரின் ஒரு பாடல் மூலமாகவே நாம் அறியலாம்.

பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சை எல்லாம்
நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கையரைத்
 தாய் போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லிச்
 சேய் போல் இருப்பர் கண்டீர்! உண்மை ஞானம் தெளிந் தவரே!

பட்டினத்தடிகளின் துறவுக்கோலம் பற்றிக் கேள்விப்பட்ட அவ்வூர் அரசர் அவர் இருந்த பொது மண்டபத்திற்குச் சென்று அவரைப் பார்த்தார்.

குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடை மெலிந்த ஓர் ஊர் நண்ணினும் நண்ணுவர்
என்ற பெரியோரின் வாசகத்திற்கு இணங்க
 எல்லாவற்றையும் வினாடி நேரத்தில் வீசி எறிந்துவிட்டு
 அம்மண்டபத்தின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அடிகளைக் கண்டார் வேந்தர்.

 அவரைப் பார்த்துக் கேட்டார்  ‘மண்ணுலகில் இந்திரனாக மாட மாளிகைகளோடு செல்வச் செழிப்பில் விளங்கிய தாங்கள் இத்துறவு நிலையை அடைந்ததால் பெற்ற பயன் என்ன? பட்டினத்தார் பதில் பொருள் பொதிந்த தாக இருந்தது.  ‘இந்நிலையில் யாம் அடைந்துள்ள பயன் உமக்குத் தெரியவில்லையா. இது வரையில் நீர் உட்காரவும் நாம் நிற்கவுமாய் இருந்தது. இப்பொழுது நீர் நிற்கவும், நாம் உட்காரவும் ஆயிற்று என்றார்.

‘துறவிக்கு வேந்தன் துரும்பு’ என்பதைத் தான் நாமெல்லாம் அறிவோமே!
’பட்டினத்தார் நல்ல நல்ல பாடல் செய்யும்
பாட்டினத்தார்’

என்று உவமைக்கவிதர் சுரதா அவரை உளமாரப் பாராட்டி மகிழ்கின்றார்.  ஆம்! அற்புதமான வாழ்வியல் தத்துவங்களை, அனுபூதி அனுபவங்களை, உலகினர்க்கு தேவையான உபதேசங்களை, இறைவனின் இணையற்ற பெருமைகளை எல்லாம் இதயம் கவரும் இலக்கிய நடையில் விவரித்துள்ளார்  பட்டினத்தடிகள்.

மற்ற நாட்டு பெருமக்கள் ஞானம் பெற்றதோடு தன் அளவில் நின்று விட்டார்கள்.  ஆனால் நம் நாட்டிலோ ஞானிகள் கவிஞர்களாகவும் விளங்கிய  காரணத்தால் தங்களின் மெய்ஞான உணர்வுகளை அமுதத் தமிழில்  அழகுக் கவிதைகளாக ஆக்கிக் கொடுத்துள்ளார்கள்.

‘‘என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்
 தன்னை நன்றாய் தமிழ் செயுமாறே!
என்பது தானே அவர்களின் பெருமிதம்!

 பட்டினத்தார் மனித குலம் முழுமைக்கும் அவர்கள் வாழ்நாள் முழுமைக்கும் ஆன ஒரு உபதேசத்தைத் தந்துள்ளார். நறுக்குத் தெறிக்காற் போல் நான்கே வரிகளில் தெரிவித்துள்ள அந்த பட்டினத்தாரின் உபதேசம் நம் செவிகளிலும், சிந்தையிலும் பட்டால் போதும்! நமக்கு ஞானம் துளிர்விடத் தொடங்கும்! ‘காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே!’ என்ற ஒற்றை வரியில் அவர் உயர்ந்த ஞானச் சிகரத்தை அடைந்தது போல அவரின் நான்கே வரிகளை நாம் வாழ்வில் கடைப்பிடித்தால் போதும்.

 அர்த்தமுள்ள வாழ்க்கை வாழலாம். எடுத்துக்காட்டு மனிதராக வரலாற்றில் நாம் இடம் பெறலாம். வாழ்வில் இன்பமும் வரும். துன்பமும் வரும் ஒளியும் இருளும்  பனியும் வெயிலும் மாறிமாறி வந்தாலும் அனைத்தையும் ஒரே மனப்  பக்குவத்துடன் நாம் எதிர்கொள்ள வேண்டும் இன்பம் வந்தால் எகிறிக் குதிப்பதும், துன்பம் வந்தால் துவண்டு போவதும் இல்லாமல் சம நிலையில் எதுவாக இருந்தாலும் எதிர் கொள்ளவேண்டும். அனைத்தும் ஆண்டவனின் திருவிளையாடலே! அவனின்றி ஒரேணுவும் அசையாது என்பதை பரிபூரணமாக நாம் உணர வேண்டும் என்று பாடலின் ஆரம்ப வரி உணர்த்துகின்றது.

‘ஒன்றென்றிரு ! தெய்வம் உண்டென்றிரு!’
 பிறக்கும் போது நாம் செல்வத்தை
எடுத்துக் கொண்டு வந்தோமா?

 இறக்கும் போது நம்மிடம் உள்ள பணத்தை எடுத்துக் கொண்டு செல்கிறோமா இடை நடுவில் சேர்கின்ற செல்வத்தை நம்முடையது என்று எண்ணி  சேர்த்து வைக்காமல்
அறச் செயல்களில் ஈடுபடு! அன்னதானம் செய்! உத்தமசீலர்களோடு உறவு வைத்துக் கொள் என்கிறது பாடலின் அடுத்தவரி.

‘உயர்செல்வம் எல்லாம் அன்றென்றிரு!
பசித்தோர் முகம் பார்!
நல்லறமும் நட்பும் நன்றென்றிரு.

பாடலின் இறுதி, உபதேசமாக பட்டினத்தார் பகர்வதை இப்போதைய மக்கள் இதயத்தில் பதிக்க வேண்டும்.

‘நடு நீங்காமலே நமக்கு இட்ட படி
என்றென்றிரு!

முன் வினையின் பாவ புண்ணியங்களின் படி இறைவன் நமக்கு தந்துள்ள வாழ்க்கை, வளம், வசதி இவ்வளவே என்ற மன நிறைவுடன் நடு நிலை பிறழாமல் அநீதியான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அமைதியாக வாழ்வினை மேற் கொள்வாய்! என்கிறார் அடிகளார்.

உபதேச ரத்தினமாகத் திகமும் பட்டினத்தாரின் இப்பாடலை ஒவ்வொருவரும் வாழ்வின் உறுதிமொழியாக ஏற்றால் போதும் ! புதுயுகம் பூத்துவிடும்!

ஒன்றென்றிரு! தெய்வம் உண்டென்றிரு!
உயர்செல்வம் பூத்துவிடும்
அன்றென்றிரு! பசித்தோர் முகம் பார்!
நல் அறமும் நட்பும் நன்றென்றிரு!
நடு நீங்காமலே நமக்கு இட்ட படி என்றென்றிரு!
 மனமே! உனக்கே உபதேசம் இதே!

(இனிக்கும்)
திருப்புகழ்த்திலகம்
மதிவண்ணன்