பக்தியா? பயமா?



வணக்கம் நலந்தானே!

வாழ்வின் ஏதோவொரு தருணத்தில் இறைவனைக் குறித்த கேள்வி எழுகின்றது. இறை எனும் சக்தி நிச்சயம் இருக்கின்றது எனும் எண்ணம் திடப்படுகின்றது. நம் அன்றாட வாழ்வு மற்றும் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையாலும், வாழ்வு என்னாகும் என்கிற மெல்லிய பயத்தினாலும், எந்தக் காரியத்தை தொடங்கினாலும் இறைவனை வேண்டிக் கொண்டே தொடங்குகின்றோம்.

இறைவன் எனும் மகாசக்தி நினைத்தால் நம்முடைய இந்த வாழ்வினை எவ்வளவு உயரத்திற்கு வேண்டுமானாலும் தூக்கிச் சென்று அமர வைக்கும். இல்லையெனில் தலைகுப்புற கவிழ்த்தும் போடும் எனும் மனோநிலையை ஒருவர் எய்தும்போது தம் வாழ்க்கை எப்படிச் செல்லுமோ எனும் பேரச்சம் கவிழ்கிற தருணங்களில் இறைவனை நோக்கி பயத்தோடு கைகூப்புகின்றோம். எந்த நேரத்தில் தனக்கு என்ன ஆகுமோ என்கிற அடிப்படை உயிர் பயமும் சேர்ந்து கொள்ளும்போது இன்னும் இறைவனை இறுக்கப் பற்றிக்கொள்கிறோம். நம்முடைய அகங்காரத்தை நம்பாமல் நமக்கும் மேலே ஒரு சக்தி உள்ளது எனும் திடநிச்சயத்தால் பயமானது மெல்ல மறைந்து வியப்பும் பிரமிப்பும் கலந்த பக்தியை நாம் கைகொள்ளத் தொடங்குகின்றோம்.

வாழ்வில் நம்முடைய தேவைகளைக் குறித்த பிரார்த்தனைகள், ஒரு காரியம் நிறைவேற வேண்டுமென மேற்கொள்ளும் நேர்த்திக் கடன்கள் என்று பிரியத்தோடும், பயத்தோடும், ஒரு பாதுகாப்பு உணர்வோடும் பக்தி நம்மிடையே வளரத் தொடங்குகின்றது. இதையே காம்ய பக்தி அல்லது காம்யார்த்த பக்தி என்று நூல்கள் கூறுகின்றன. இந்தவிதமான பக்தியையே இன்று பெரும்பாலோர் கைக்கொண்டு வருகின்றனர். ஆனால், இதோடு பக்தி நின்று விடுவதில்லை. அதுமட்டுமல்ல. இந்த பக்தி என்னும் சொற்றொடருக்குண்டான பொருளை அறிந்தோமானால் நாம் எங்கு நின்று கொண்டிருக்கிறோம். எங்கு செல்ல வேண்டும் என்று புரியத் தொடங்கும். பக்தி எனும் சொல்லே விபக்தி எனும் வடமொழிச் சொல்லிலிருந்து வந்ததுதான்.

விபக்தி எனும் சொல் வேற்றுமை உருபுகளை குறிக்கும். அதாவது நான், என்னிலிருந்து, என்னுடைய, எனக்காக... என்று ஆறுவிதமாக இந்த நான் எனும் அகங்காரம் சஞ்சலிப்பதை உணர்த்துவதாகும். இதில் வி என்பது சஞ்சலத்தை குறிக்கும் எழுத்தாகும். இந்த வி எனும் எழுத்தை நீக்கினால் மிஞ்சுவதுதான் பக்தி. அதாவது நான் எனும் அகங்காரம் எழாமல், சஞ்சலிக்காமல் தன் இருப்பிலேயே சென்று ஒடுங்கும் நிலையையே பக்தி எனும் சொல் உணர்த்துவதாகும். எனவே, இறைவனை நோக்கி நகரும் பயணத்தில் நம்முடைய நான் எனும் அகங்காரத்தை அழிப்பதே பக்தி எனும் சொல்லின் உண்மையான தாத்பரியமாகும்.

நானெனும் அகங்காரத்தை அழிக்க வேண்டி, மெல்ல தன்னை இறைவனிடம் சமர்ப்பணம் செய்யும் வழியையே பக்தி மார்க்கமென்கின்றோம். இறுதியில் நான் எனும் அகங்காரம் அழியும்போது மிச்சமிருக்கும் நிலையே பக்தியாகும். பக்தி எனும் மலையேற்றத்தில் அதன் சிகரத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம். அதில் தொடக்கத்தில் பயமாகவும், நேர்த்திக் கடன்களாகவும், பரிகாரமாகவும், பிரியமாகவும் தொடங்கி வெவ்வேறு பரிணாமங்களில் பக்தி முதிர்ச்சியடைந்து கொண்டே வருகின்றது.

இறுதியில் அனைத்தையும் நீயே நடத்திக் கொண்டிருக்கும்போது நான் என்ன கேட்பது என்றொரு நிலை வரும். அப்போது தன்னுடைய இயலாமையை அகங்காரம் ஒப்புக்கொண்டு தலைதாழ்த்தி விடுகின்றது. அப்போது பக்தி இலக்கற்றதாக மாறுகின்றது. எதையும் எதிர்பார்க்காத அந்த அன்பில் அகங்காரம் எழாத நிலையில் ஆத்ம வஸ்து தெளிவாக ஒரு ஜீவனால் உணரப்படுகின்றது. அங்கு பயம் என்பதே இல்லை. ஏனெனில், எங்கு நான் உள்ளதோ அங்கு எப்போதும் பயமிருக்கும். பக்தி பயத்தினில் தொடங்கினால் கூட இறுதியில் பயத்தை பக்தி உண்டுவிட்டு பேரன்பாக ஓங்கி நிற்கும். அந்நிலையை எவராலும் விவரிக்க இயலாது.

- கிருஷ்ணா (பொறுப்பாசிரியர்)