அபூர்வ ஸ்லோகம்



ஆதிசங்கரரின் காசநோயை தீர்த்த  சுப்ரமணிய புஜங்கத்தின் தமிழாக்க சில துதிகள்

சதாபாலன் ஆனாலும் வினைவெற்பு டைப்பான்
பெருயானை ஆனாலும் சிவச்சிங்கச் செல்வன்
சதாநான் முகன் இந்திரன் தேடுசோதிக்
கதிர்மா கணேசக் கரி என்னுள் வாழி.
மயில்ஏறு செல்வன் மறைசொல்லு முதல்வன்
மனம் ஈர்க்கும் மேனி மகான்போற்று மானி
அயிற்செங்கை வேலன் அரன்தந்த பாலன்
அரும்வேதசீலன் குகன்பாதம் போற்றி.
இம்மானுடர் என்றும் எம்முன்னே வந்தால்
இமைப்போதில் மாந்தர் கரையேறி உய்வார்
கைம்மான் பரன் தந்த அம்மான் குகன்தான்
சொல்வான் கடல்மோது கோவில் வளர்ந்தே.
அலைமோதி மோதி அடங்கும் அதேபோல்
நிலைகெட்டு மாந்தர் தறிகெட்டு ஓட
அலைபோல ஆட்டும் விதி என்முன் மங்கும்
மலைமங்கை பாலன் இதைச் சொல்வான்  போலும்.
சகம்தந்த வெற்பில் சுகந்தப் பொருப்பில்
உவந்தேறினால் கீர்த்தி சிலம்பேறுவார்கள்
குகன் சொல்லவென்றே அவன் வாழும்வெற்பே
சுகந்தபிராட்டி மகன் கந்த வெற்பே.
வினைக்காடு மாய்க்கும் இருட்பாடு தேய்க்கும்
தனைத்தான் விளக்கும் தனிப்பேறளிக்கும்
முனிக்கூட்டம் மொய்க்கும் மூதறிவாளர் துய்க்கும்
பனிக்காட்டுப் பௌவத் தனிக் கோயில் வாழ்வான்
மணிக்கோயில் மாட்டுவரைக் கோயில் பாட்டுத்
தனிக்காட்டு மத்தி விளங்கும்பொற்கட்டில்
அணிப்பட்டுப் போர்த்தி அரும்பூக்கள் சார்த்தி
அதன்மீதிருப்பான் குகன் கந்த வெற்பான்.
சலங்கை பொற்றண்டை சரம் முத்து வெண்டை
குலுங்கும் சிலம்போ புலம்பும் புலம்பும்
இலங்கும் நலங்காத் துளங்கும் விளங்கும்
பொலம்பூ மலர்பொற் கழல்போற்றி போற்றி.
பொன்வண்ணப் பட்டு புரண்டாடு கட்டு
நிறைந்தாடு மேகலை மணிமுத்து விட்டே
அனந்தாடு காஞ்சி அதன்மேல்பொன் கத்தி
திகழ்ந்தாடு கந்தன் இடைபோற்றி போற்றி.
வேடர் தலைவன் மகள்வள்ளி கும்ப
பாரத் தனங்குங்கு மச்சாந்து தோய்ந்த
ஆடப்பொன் னணியின் னகல் மார்பு கந்தன்
நாடாண்டு நமைகாக்கும் பீடொன்றே போற்றி.
மறையோனைக் குட்டிவெம் மதயானை முட்டிச்
சிறைமீட்டுத் தேவர் குறைகேட்டு வாட்ட
முறையீட்டை ஈட்டி எதிரிதலை வீட்டி
நிறை உன் ஈராறு கரம் போற்றி.
சரத்கால சந்திரன் இருப்பானேல் ஆறு
குறையாது தேயாது நிற்பானேல் வானில்
பதினாறு கலையோடு பகற்பொழுதுகூட
உரைப்பேன்யான் கந்தா உன் முகங்களுக்கு   வமை.
முத்தாடு மூரல் முகிழ்த்தெங்கும் சோதி
முத்தத் திருக்கோவை நித்தம் பழிக்கும்
புத்தம் புதுச்சோதி பூங்குமுதச் செவ்வாய்
நித்தம் நிலா எறிஉன் ஆறுமுகம் போற்றி.
மலர்ச் சேவடிக்கென் வணக்கம் வணக்கம்,
உடல் பூமி தோய விழுந்தே எழுந்தேன்
யமன் வந்தபோதில் உரைசெய்ய ஆற்றேன்
அவன் வந்து நின்றால் மயில்மீது தோன்று.

 ந.பரணிகுமார்