வணக்கம் நலந்தானே!



பிரம்ம முகூர்த்த சூட்சுமம்

தியானம், தவம், பூஜை என்கிற வரிசையில் அதிகாலை எழுதல் என்பதும் வைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே மார்கழி மாதத்தை வைத்துள்ளனர். இதற்கு முன்பு தூக்கம் என்பதை குறித்து கொஞ்சம் பார்ப்போம். ஞானிகள் நித்திரை என்கிற தூக்கத்தை நித்யப் பிரளயம் என்பார்கள். மனம் நிலைகொள்ளும் மூன்று நிலைகள் உள்ளன.
ஒன்று ஜாக்ரத். அதாவது இந்த உடம்போடு கூடிய, மனதோடு கூடிய பிரபஞ்சம் தெரிகின்ற நிலை. இரண்டாவது சொப்னம். இந்த நிலையில் உங்கள் உடல் பற்றிய பிரக்ஞையும், காலம் தேசம் குறித்த தெளிவுகள் இருப்பதில்லை. இந்த நிலையில் நாம் நம்மை வெவ்வேறான சூழ்நிலையில் கற்பனை செய்து கொண்டு அங்கு நிஜமாகவே அனைத்தும் நடப்பதாக கற்பனை செய்து கொள்கின்றோம். மூன்றாவது நிலையானது சுஷுப்தி என்கிற நனவும், கனவும் அற்ற நிலை. இந்த நிலையில் உடல் பற்றிய பிரக்ஞை இருப்பதில்லை.

கனவும் இருப்பதில்லை. ஆனால், எங்கேயோ ஓரிடத்தில் மனம் சென்று ஒடுங்கி பெரும் ஆனந்தத்தை அனுபவிக்கின்றது. அப்படி அனுபவிப்பதற்கு உடலையோ மனதையோ இந்தப் பிரபஞ்சத்தில் எதெல்லாம் உங்களுக்கு சந்தோஷம் என்று நினைக்கின்றீர்களோ எதையுமே பற்றிக் கொள்ளாமல்  ஆனந்தமாக இருக்கின்றோம். இதையே ஞானிகள் உன்னதமான நிலை என்கிறார்கள். உண்மையில் அதுதான் நீங்கள்.

ஏனெனில், மனம் எங்கிருந்து உற்பத்தியானதோ மீண்டும் அங்கு சென்று ஒடுங்குகின்றது. எந்த எண்ணமுமற்று இருப்பதாலேயே ஆனந்தமாக இருக்கின்றோம். அதனால்தான் மறுநாள் எழுந்து நான் சுகமாகத் தூங்கினேன். ஆனந்தமாக இருந்தது என்று சொல்கிறோம். வேறொன்றுமில்லை... உங்களின் சொந்த சொரூபமாக உள்ள ஆத்மாவில் மனம் ஒடுங்கிய நிலையே அது.

அப்படி ஆத்ம ஸ்தானத்தில் ஒடுங்கிய மனம் கர்ம வாசனையால் மீண்டும் உடலை பற்றிக்கொள்வதையே விழிப்பு என்கிறீர்கள். அப்படி ஆத்ம ஸ்தானத்திலிருந்து விடுபட்டு உடம்பைப் பற்றும் அந்தக் கணத்தை, அந்தத் தருணத்தை, எங்கிருந்து வந்து இந்த உடலை பற்றுக்கின்றது என்கிற சூட்சுமத்தை நீங்கள் உணர வேண்டும் என்பதற்காகவே ஞானிகள் சூட்சுமமாக அதிகாலையில் எழுங்கள் என்றனர். அந்த நேரத்தையே பிரம்ம முகூர்த்தம் என்று ஏற்றம் கொடுத்தனர்.

பிரம்மத்தோடு சேர்ந்திருந்த ஜீவன் மெல்ல விடுபட்டு சரீரத்தையும், மனதையும் பிடித்துக் கொள்ளும் தருணம் என சொல்லாமல் சொன்னார்கள். எண்ணங்களால் அலைகழிக்கப்படாது மனம் சுத்த ஸ்படிகமாக நிம்மதியாக இருக்கும் இந்த அற்புதமான அதிகாலை நேரத்தில் மந்திர ஜபமோ, தியானமோ இயன்றோர்கள் பூஜைகளையோ செய்யும்போது பெரும் சக்தி சேகரம் உருவாகின்றது. சூரியன் எழுவதற்கு முன்பு எழுந்தால் விழிப்போடுள்ள உங்கள் உடம்பையும் மனதையும் அந்தக் கிரணங்கள் ஊடுருவும்போது புத்தி சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.

சூரியனின் பேரருள் ஜீவனுக்குள் செல்லச் செல்ல மகத்தான காரியங்களை ஒருவர் அநாயசமாகச் செய்து முடிப்பார். அதிகாலை எழுவோர் அனைவரும் பிற்காலத்தில் பெருந் தலைவர்களாகவும், தனித்துவம் மிக்கவர்களாகவும், ஆளுமை பொருந்தியவர்களாகவும் இருப்பதைப் பார்க்கலாம். அதிகாலை எழுதலும் சூரியனை துதித்தலும் ஒரே நேர்க்கோட்டில் நிகழ்கின்ற விஷயங்கள். எழுந்து பாருங்கள். உலகம் உங்களை வியக்கும் பாருங்கள்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்

கிருஷ்ணா (பொறுப்பாசிரியர்)