நன்னடத்தையாலே புகழ் பெறுகிறான்!



மகாபாரதம் - 97

எப்படி இருந்தது ஸ்ரீகிருஷ்ணருடைய யாத்திரை என்ற வர்ணனையும் மகாபாரதத்தில் சொல்லப்படுகிறது. பெரிய காற்று, மரங்களின் கிளைகளை உடைத்து முன்னே நகர்ந்தது. மேகமே இல்லாமல் மழை பொழியலாயிற்று. வாசனை மிகுந்த மலர்கள் அவர் தேர் மீது விழுந்தது. மழைத்துளிகள் வெப்பத்தை தணித்தன. வழி நெடுக அவரை மக்கள் வரவேற்றார்கள். பெண்கள் நறுமண மலர்களை தூவினார்கள். அந்தணர்கள் மது வர்க்கத்தை அர்பணித்து பூஜித்தார்கள்.

இரண்டு பக்கமும் செழுமையும், சம்பத்தும் நிறைந்த கோதுமை பயிர்களை பார்த்தவாறு பல கிராமங்களையும், நகரங்களையும் கவனித்தவாறு அவர் முன்னேறினார். உபப்லவ்ய நகரத்திலிருந்து வரும் ஸ்ரீகிருஷ்ணனை தரிசிக்க மக்கள் பெரும் ஆவல் காட்டினார்கள். வ்ருகஸ் என்ற இடத்தை அடையும்போது சூரியன் மறையத் துவங்கினான். இங்கே தங்கி அஸ்தினாபுரம் போவோம் என்றார்.

அந்த உத்தரவை கேட்ட அவருடைய வீரர்கள் உடனடியாக அங்கு கூடாரம் அமைத்தனர். ஸ்ரீகிருஷ்ணர் நீராடி வேறு உடை தரித்து மாலை நேர சந்தியை செய்து அமர, அவருடைய வீரர்கள் உணவும், பானமும் அவருக்கு தயாராக வைத்தார்கள். அந்த இடத்தில் வாழும் சான்றோர்கள் கிருஷ்ணனை தரிசிக்க வந்தார்கள். தங்கள் வீடுகளுக்கு வரும்படி வேண்டினார்கள். அங்குள்ளோர் பலரின் வீடுகளுக்கு ஸ்ரீகிருஷ்ணர் போய் வாழ்த்தி விட்டு திரும்பி வந்தார்.

தன் கூடாரத்திற்கு திரும்பி வந்தார். அந்த கிராமத்து மக்களுக்கு உணவு தரச்சொல்லி அவர்களோடு உலக விஷயம் பேசியபடியே இரவு உணவை முடித்தார். அனைவருக்கும் விடை கொடுத்து சுகமாக தூங்கத் துவங்கினார். ஸ்ரீகிருஷ்ணனுடைய வருகையைத் தெரிந்து திருதராஷ்டிரன் பரபரப்புற்றார். ‘‘ஸ்ரீகிருஷ்ணரை மரியாதையுடன் வரவேற்க வேண்டும். அவர் தர்மாத்மா. நமது நன்மைக்காகத் தான் இங்கு வருகிறார். அவரை மதிக்கப்படாதது நம்மை நாமே அவமானப்படுத்திக் கொள்வது போல. துரியோதனா, கிருஷ்ணர் வரும் வழியில் ஓய்விடங்களுக்கு ஏற்பாடு செய். அவரோடு வரும் வீரர்கள் எத்தனை என்று கணக்கிட்டு அத்தனை பேருக்கும் சுகமாக ஓய்வெடுக்கும் வசதியை செய்து கொடு.

பிருகஸ்தலம் என்கிற கிராமத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருக்கிறாரா. இது தகாது. உண்மையான அன்போடு மனப்பூர்வமாக அவரை வரவேற்பதற்குண்டான வசதிகளைச் செய். உன் மீது அன்பு தோன்றும்படியாக செயல்களைச் செய். பீஷ்மரே, என் உத்தரவு சரிதானா’’ என்று திருதராஷ்டிரன் கேட்க, பீஷ்மர் சந்தோஷம் அடைந்து சம்மதம் தெரிவித்தார்.

துரியோதனன் மறுபேச்சின்றி பிரகஸ்தல நகரத்திலிருந்து அஸ்தினாபுரம் வரை பல ஓய்விடங்களை அமைத்தான். விசித்திரமான ஆசனங்கள், நறுமணப் பொருட்கள், பலவகை போஜனங்கள், புதிய துணிகள், உபசரிப்பு பெண்கள் என்று ஏற்பாடு செய்திருந்தான். ஸ்ரீகிருஷ்ணர் அந்த ஓய்விடங்களில் தங்காமல் எந்த சுக சௌகரியமும் தேவைப்படாதவர் போல அஸ்தினாபுரியை நோக்கி விரைவாகச் சென்றார். ஸ்ரீகிருஷ்ணர் அஸ்தினாபுரம் நோக்கி வருகிறார் என்பதை தெரிந்து கொண்டு திருதராஷ்டிரன் பரபரப்பானார்.

‘‘என் இடத்திற்கு வந்த ஸ்ரீகிருஷ்ணரை பூஜிப்பேன். விதம் விதமான பரிசுகளை கொடுத்து என் பணிவை தெரிவிப்பேன். தங்கமயமான தேர்களை பரிசளிப்பேன். மலைஜாதி மக்கள் ஆட்டு ரோமத்தால் செய்த பெரிய கம்பளங்களை கிருஷ்ணருக்கு பரிசளிப்பேன். இரவும், பகலும் சுயமாய் ஒளிவிடும் நிர்மலமான மணி ஒன்று உள்ளது. அதை கிருஷ்ணருக்கு பரிசளிப்பேன். என் புத்ர பௌத்ரர்களை வரிசையாக நிற்க வைத்து அவரை வரவேற்கச் செய்வேன்.

ஸ்ரீகிருஷ்ணரை வரவேற்க அவர்கள் நடந்து செல்வார்கள். நமது மக்கள் சூரியனை தரிசிப்பது போல ஆண், பெண், குழந்தைகள் அனைவரும் மதுசூதனை தரிசிக்கட்டும். அவர் படை வருகையில் தூசு கிளம்பாமல் இருக்க அஸ்தினாபுரத்து தெருவெங்கும் நீர் தெளிக்கப்படட்டும். துச்சாதனன் மாளிகை துரியோதனன் மாளிகையை விட சிறந்தது. எனவே ஸ்ரீகிருஷ்ணரை அங்கு தங்க வைக்கலாம்’’ என்று பரவசத்துடன் திருதராஷ்டிரன் பலதும் பேசினார்.

‘‘துச்சாதனன் வீட்டில்தான் நமது பரம்பரை ரத்தினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவைகளை ஸ்ரீகிருஷ்ணர் பார்வையிடட்டும். வேண்டுபவனவற்றை எடுத்துக் கொள்ளட்டும்’’ என்று வழங்கியது போல் சிரித்தார். துரியோதனன் முகம் சுருங்கியது. அவன் கோபத்தோடு திருதராஷ்டிரனை பார்த்தான். அந்த ரத்தினங்களை ஸ்ரீகிருஷ்ணருக்கு கொடுக்க நான் சம்மதிக்கவில்லை. பரிசளிப்பதற்கென்று தேச கால வர்த்தமானமுள்ளது. இந்த நேரத்தில் கிருஷ்ணருக்கு நம்முடைய செழுமையான ரத்தினங்களை தருவது பயன் தராது. நான் பயந்து போனதாய் அவர் நினைத்துக் கொள்வார்.

ஸ்ரீகிருஷ்ணர் ஒரு அவதாரம். மூவுலகிலும் அவர் மிகப்பெரியவர் என்று பலர் என்னிடம் சொல்லியிருந்தாலும் இந்த நேரம் அவருக்கு அந்த பரிசு அளிப்பதை நான் விரும்பவில்லை. இது கலகமான நேரம். அதிதிக்கு பிரேமை காட்டுவது கோழைத்தனமாகத் தோன்றும்.’’ அப்பொழுது விதுரர் குறுக்கே பேசினார். ‘‘திருதராஷ்டிரா, என்ன உளறல் இது. நவரத்தினங்களை வாங்குவதற்காகவா ஸ்ரீகிருஷ்ணர் அஸ்தினாபுரம் வந்து கொண்டிருக்கிறார். அதன் மீதா நாட்டம் கொள்ளப் போகிறார். அவருக்காகவா வருகிறார், நீ பயந்து போய் வஞ்சனையாகத்தான் பேசுகிறாய்.

பஞ்ச பாண்டவர்களுக்கு தூதராய் அவர் வருகிறார். பஞ்ச பாண்டவர்கள் ஐந்து கிராமத்தை மட்டுமே உங்களிடம் கேட்கிறார்கள். செல்வத்தை கொடுத்தோ வேறு வகையாக புகழ்ந்தோ அர்ஜுனனிடமிருந்து ஸ்ரீகிருஷ்ணனை பிரிக்க முடியாது. ஸ்ரீகிருஷ்ணனுக்கு அர்ஜுனன் என்றால் உயிர். உன்னுடைய நவரத்தினங்களை திரும்பிக்கூட பார்க்க மாட்டார். ஒரு நீர் கலசம், அதில் கை, கால் கழுவுவதற்கான நீர் உங்களின் நலச் செய்தி. இதைத் தவிர வேறு எந்தப் பொருளையும் கிருஷ்ணர் ஏற்கப் போவதில்லை. நீங்கள் வயதானவர். பாண்டவர்களுக்கும் தந்தை. அந்த அன்போடு ஸ்ரீகிருஷ்ணரிடம் பேசுங்கள். அந்தப் பேச்சு பலன் அளிக்கும்.’’

பீஷ்மர் எழுந்து நின்றார். ‘‘கிருஷ்ணருக்கு பரிசு கொடுங்கள். அல்லது கொடுக்காமல் இருங்கள். மரியாதை செய்யுங்கள். செய்யாமல் இருங்கள். எந்த மனோநிலைமையில் அவர் வருகிறார் என்று உங்களுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. அவரை அவமானப்படுத்த முடியாது. புத்தி இருப்பின் கிருஷ்ணர் எதைச் சொன்னாலும் அதை உடனடியாக ஏற்க வேண்டும். ஸ்ரீகிருஷ்ணரை நடுவராக்கி கௌரவ பாண்டவர்களுக்கு நடுவே சமாதானம் ஏற்படுத்துங்கள். அதன் பொருட்டு பிரியமாக பேசுங்கள்.’’

துரியோதனன் பலமாக தலையசைத்தான். ‘‘பிரியமாகப் பேசுவதா, பாண்டவர்களோடு சமாதானம் செய்து கொள்வதா, அது ஒருபோதும் நடக்காது. நான் என்ன செய்யப் போகிறேன் என்பதைக் கேளுங்கள். நாளை கிருஷ்ணர் இந்த சபைக்கு வந்ததும் அவரை கைது செய்யப் போகிறேன். அப்படி கைது செய்தால் யாதவ குலமும், பாண்டவர்களும் என்னுடைய ஆணைக்கு கட்டுப்படுவார்கள். என்னிடம் பயப்படுவார்கள். ஆனால் ஸ்ரீகிருஷ்ணருக்கு இந்த விஷயம் முன் கூட்டி தெரியாமல் இருக்கின்ற உபாயத்தை எனக்குச் சொல்லுங்கள். எனக்கு உதவி செய்யுங்கள்.’’

நிமிர்ந்து உட்கார்ந்திருந்த திருதராஷ்டிரன் துவண்டு சரிந்தார். என்ன சமாதானம் சொன்னாலும் தன் பிள்ளை இப்படி பேசுகிறானே என்று முகம் பொத்தி அழுதார். அவர் மந்திரிகளும், சேனாபதிகளும் தலைகுனிந்து கலங்கினார்கள். ‘‘துரியோதனா, என்ன இப்படி பேசுகிறாய். ஸ்ரீகிருஷ்ணர் தூதனாக இங்கு வருகிறார். அவர் நமது அன்புக்கு உகந்தவர். நமது சம்பந்தி. அவர் கௌரவர்களுக்கு எந்த குற்றமும் செய்யவில்லை. என்னவென்று அவரை கைது செய்வாய். கைது செய்து என்ன காரணம் கூறுவாய். ஏன் இப்படி வெட்கமில்லாதவனாக இருக்கிறாய்.’’

‘‘திருதாராஷ்டிரா’’, பீஷ்மர் எழுந்து உரக்க கத்தினார். ‘‘ஒரு வார்த்தையில் உன் பிள்ளையை அடக்காமல் ஏன் அழுது கொண்டிருக்கிறாய். மந்த அறிவுடைய உன் புதல்வன் யார் பேச்சையும் கேட்காது தான்தோன்றியாய் அலைந்து கொண்டிருக்கிறான். இவன் தன் கூட்டத்தாரோடு ஸ்ரீகிருஷ்ணர் கையால் ஒரு நொடியில் அழியப் போகிறான். மகாபாவியும், கொடியவனுமான இந்த துரியோதனன் பேச்சை நான் தொடர்ந்து கேட்க விரும்பவில்லை.’’

வயதானவராக இருந்தாலும் கம்பீரம் குறையாத பீஷ்மர் அந்தச் சபையை விட்டு புயல் போல வெளியேறினார். ஸ்ரீகிருஷ்ணர் தன் இரண்டு சக்கரத் தேரோடு, அவரை பாதுகாக்கும் வலுவான படையோடு அஸ்தினாபுரத்தை நெருங்கினார். அவர் வருகையை அறிந்த மக்கள் வீடுகளை விட்டு தெருவில் இறங்கி கை கூப்பி வணங்கினார்கள். மண் தரையில் விழுந்து நமஸ்கரித்தார்கள். எழுந்து ஆரவாரம் செய்தார்கள். அந்தத் தேருக்கு பின்னே ஓடினார்கள். அதன் வேகத்திற்கு தொடர முடியாமல் கை அசைத்து விடை கொடுத்தார்கள். அஸ்தினாபுரத்து வாசலைத் தாண்டி ஒரு அகலமான தெருவில் பீஷ்மர் முன் வந்து வரவேற்றார்.

பிறகு விதுரர், பிறகு துரோணர், பிறகு கிருபர் என்று மகாரதிகள் பலரும் மாளிகை விட்டு வெளியே வந்து வரவேற்றார்கள். தேரை பிடித்து நடந்தபடியே மாளிகை வாசலுக்குப் போனார்கள். மாளிகைக்கு உள்ளே போய் வாசற்புறத்தில் நிற்கின்ற திருதராஷ்டிரனை கை பிடித்து அழைத்து வந்தார்கள். ‘‘கேசவா, கேசவா, கேசவா’’ திருதராஷ்டிரன் திசை தெரியாது கை கூப்பினான். மந்திரிப் பிரதானிகள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அரசவையின் உள்ளே மலர்ந்த முகத்தோடு கிருஷ்ணர் நுழைந்தார். யாரெல்லாம் குழுமியிருக்கிறார்கள் என்று கவனித்துக் கொண்டே வந்தார்.

அவருக்கு உட்கார தங்க சிம்மாசனம் போடப்பட்டது. கால் அலம்பப்பட்டது. நீர் தரப்பட்டது. எல்லா வித உபசாரங்களும் நிறைவேறின. கிருஷ்ணர் அவற்றை ஏற்றுக்கொண்டு மாளிகை விட்டு வெளியே வந்தார். துச்சாதனன் வீடு தங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னதும் மறுத்தார். விதுரருடைய வீட்டிற்குப் போனார். விதுரருக்கு நிலை கொள்ளாத சந்தோஷம். ‘‘நீங்கள் என் வீட்டிற்கு வந்ததாக நான் கருதவில்லை. நீங்கள் எல்லா உயிரிலும் அந்தர்யாமியாக இருக்கிறீர்கள். உங்களுக்கு வீடு என்பது ஏது. ஆயினும் வருக. உங்கள் வரவு நல்வரவாகுக.’’

‘‘விதுரா, நீ அறிவில் சிறந்தவன். பாண்டவர்களைப்பற்றி உனக்குச் சொல்கிறேன் கேள்’’ என்று பாண்டவர்களின் மனோநிலைமையை விவரித்தார். விதுரர் மௌனமாக கேட்டுக் கொண்டதும் ஸ்ரீகிருஷ்ணர் குந்தியை சந்திக்கும் ஆவலைச் சொல்ல, விதுரர் அவரை குந்தி இருக்கும் அரண்மனைக்கு அழைத்துப் போனார். குந்தி அவரைப் பார்த்து இரண்டு கைகளையும் விரித்து ‘ஹே கிருஷ்ணா’ என்று வாய் விட்டு அலறினாள். ஸ்ரீகிருஷ்ணர் அவள் தோள்களை அணைத்து சமாதானம் செய்தார்.

‘‘எதற்காக என் குழந்தைகளுக்கு இவ்வளவு துயரம். என்ன பாவம் செய்தோம். ஒன்றல்ல இரண்டல்ல. பதினான்கு வருடமா ஒரு குடும்பம் கொடுமையை அனுபவிக்கும். என் புருஷன் பாண்டு நல்லவன். மகாத்மா. ராஜ்ஜியத்தில் இருப்பதைவிட வனவாசத்தில் ஈடுபாடு கொண்டவன். அவர் குழந்தைகளை அருமையாக வளர்த்தார். அவர் இழப்புக்குப் பிறகு நான் அஸ்தினாபுரம் வந்தேன். அரண்மனையில் தங்கினேன். குழந்தைகள் பல்வேறு சுகங்களை அனுபவித்தார்கள். உயர்ந்த மாளிகையில் தோலாலான மிருதுவான படுக்கையில் அயர்ந்து தூங்கினார்கள். விரும்பியதும் பலதும் சாப்பிட்டார்கள். வேலையாட்களும், பணிப் பெண்களும் சூழ வளர்ந்தார்கள்.

அந்தணர்களால் நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டார்கள். தர்மத்தில் பற்றுள்ள மனிதன் என் மகன் யுதிஷ்டிரன் சத்திய பிரதிக்ஞன், தர்ம சாஸ்திர ஞானம் அறிந்தவன், பார்ப்பதற்கே பிரியமானவன். எப்படி இருக்கிறான். மகாபலசாலியான பத்தாயிரம் யானைகளுக்கு சமமான புஜத்தை உடைய கீசகனை வதைத்த பீமசேனன் எப்படி இருக்கிறான். இயல்பாகவே கோபமானவன். ஆனால் சகோதரனின் பிரியத்திற்கு கட்டுப்பட்டவன். பார்ப்பதற்கு பயங்கரமானவன்.

ஆனால், அளவற்ற தேஜஸ்வி. அந்த பீமன் நலமாக இருக்கிறானா. வில்வித்தையில் கார்த்த வீர்யார்ஜுனனுக்கு இணையாக உள்ள புலனடக்கம் உள்ள இந்திரனுக்கு சமானமான அந்த அர்ஜுனன் எவ்விதம் இருக்கிறான். எவராலும் வெற்றி பெற முடியாத அந்த வீரன் எப்படி இருக்கிறான். எல்லா பிராணிகளிடமும், இரக்கமுடையவனும், வெட்கமுடையவ, அஸ்திர வித்தை தெரிந்தவனும், தார்மீகமானவனும், சுகுமாரனுமாக இருக்கிற சகாதேவன் எப்படி இருக்கிறான். அந்த மாத்ரி குமாரனைப் பற்றி எனக்குச் சொல். வாலிபனும், வீரனும், என்னால் அதிகம் கொண்டாடப்பட்டவனுமான நகுலன் எப்படி இருக்கிறான். விசித்திரமான கலைகள் தெரிந்தவனும், சிறந்த வில்லாளியுமான அவனைப் பார்க்காமல் என்னால் இருக்க முடிந்ததில்லை. ஆனால் பதினான்கு வருடம் பிரிந்திருக்கிறேன் பார், நான் எப்பேர்பட்ட தாய்.

ஸ்ரீகிருஷ்ணா, திரௌபதி எங்ஙனம் இருக்கிறாள். கிருஷ்ணைக்கு கிடைத்தது சாபமா, வரமா. புத்திர லோகத்தை விட பதி லோகம் தான் சிறந்தது என்றும் தெளிவாக யோசித்து குழந்தைகளை அரண்மனையில் விட்டுவிட்டு கடுமையான காட்டிற்கு நடுவே புருஷர்களோடு வாழ்ந்திருக்கிறாள். இது யாருக்கும் கிடைக்கக்கூடியது அல்ல. ஆனால், இது யாருக்கும் வரவும் வேண்டாம். நான் என் புதல்வர்களின் பிரிவால் எப்படி துயறுகிறேனோ அப்படித்தானே திரௌபதியும் தன் குழந்தைகளை நினைத்து ஏங்கியிருப்பாள். அவள் வயிறு கலங்குவது அவ்வப்போது நன்கு தெரிந்தது.

யுதிஷ்டிர பீம அர்ஜுன நகுல சகாதேவர்களைவிட இங்கு அதிக துயருற்றவள் திரௌபதிதான். நிறைந்த சபையில் ஒற்றை ஆடையுடன் மாமனார்களுக்கு எதிரே நிற்க வைக்கப்பட்டாள். இதற்கு என்ன நியாயம் கற்பிக்க முடியும். அவள் இழுத்து வரப்பட்டாள். இதை அந்தச்சபை தட்டிக் கேட்கவில்லை. விதுரரைத் தவிர. ஒரு மனிதன் செல்வத்தாலும் வீரத்தாலும் புகழ் அடைவதில்லை. நன்னடத்தையாலே புகழ் அடைகிறான். விதுரரின் புகழ் அப்படிப்பட்டது. என் மனதிற்குள் பாண்டவ திருதராஷ்டிர புதல்வர்களில் பேத பாவம் இருந்ததில்லை. ஆனால் வரப் போகும் போரில் பாண்டவர்கள் நிச்சயம் ஜெயிப்பார்கள். நான் துரியோதனனை தவறு சொல்ல மாட்டேன். பதிலுக்கு என் தந்தையை நிந்திக்கிறேன். என்னை குந்தி போஜன் கையில் வழிப்போக்கருக்கு பெரும் செல்வத்தை கொடுப்பது போல கொடுத்து விட்டார்.

அப்பொழுது நான் சிறுமியாக இருந்தேன். பந்து விளையாடிக் கொண்டிருந்தேன். தங்களுடைய நட்பை உறுதிபடுத்திக் கொள்ள இவர்கள் என்னை பகடையாக்கினார்கள். அர்ஜுனன் பிறந்த போது நான் இருந்த அறைக்குள் ஒரு அசரீரி ஒலித்தது. உன்னுடைய இந்த மகன் வில் வித்தையினால் புவி அனைத்தையும் வெல்வான். பெரும் புகழ் பெறுவான். பிறகு கௌரவர்களை கொன்று அஸ்வமேத யாகம் செய்வான் என்று சொன்னது. அந்த அசரீரி உண்மையென்றால் இந்தப் பிரிவும், துயரமும் நடந்துதானே ஆக வேண்டும். ஒரு க்ஷத்திரியப் பெண் வீரம் மிக்க புதல்வர்களை எதற்கு பெறுகிறாளோ அந்த விஷயம் நடந்தாக வேண்டும்.

இல்லையெனில் அவர்களை நான் மனதால் துறந்து விடுவேன். போரின் அழிவு பற்றி நான் அறிவேன். ஆனால் அது நடந்துதான் ஆக வேண்டும். எந்தப் பக்கம் யார் இறந்தாலும் ஒரு பெண்ணின் அவமானம் தீர்க்கப்பட வேண்டும். இந்த அவமானம் நடக்கக்கூடாது என்றும்,  நடந்தால் நடத்தியவன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் உலகம் அறிய வேண்டும். என் புதல்வர்கள் சூதில் தோற்றதில் எனக்கு வெட்கமில்லை. வனத்திற்கு அனுப்பப்பட்டனர், அதிலும் துயரம் இல்லை. ராஜ்ஜியம் பிடுங்கப்பட்டது.

அதிலும் வேதனையில்லை. ஆனால் என்னுடைய சிறந்த அழகிய மருமகள் ஒற்றை ஆடையாய் சபைக்கு இழுத்து வரப்பட்டதும், துஷ்டர்களின் கடுமையான வார்த்தையை கேட்டதும் மறக்க முடியாத விஷயம். மன்னிக்க முடியாத குற்றம். கிருஷ்ணை--- ரஜஸ்வலையாக (மாத விலக்கு) இருந்தாள். அந்த நேரம் ஒரு பெண்ணை அவமானப்படுத்துவது காட்டுத்தனம். இது தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். அதுதான் தர்மம். மிகப் பெரிய வீரர்கள் கணவர்களாக இருந்தும் அங்கு வாய் மூடி மௌனமாக இருந்தார்கள். என்ன காரணம் என்பது முக்கியமில்லை. இனிதான் அந்த பழி துடைக்கப்படும்.’’

ஸ்ரீகிருஷ்ணர் ஆதூரத்துடன் பொங்கிப் பொங்கிப் பேசிய குந்திதேவியின் தலையை வருடினார். ‘‘அத்தை, நீ சௌபாக்கியசாலி. உயர்ந்த குலத்தில் பிறந்து உயர்ந்த குலத்தில் வாழ்க்கைப்பட்டாய். உன் கணவரால் அதிகம் மதிக்கப்பட்டாய். நீ வீர ஜனனி. வீர பத்தினி. வீர தாய். உன் சுக துக்கங்களைப் பற்றி உன்னைப் போன்றவர்கள் பேசாது இருக்க வேண்டும். உன் புதல்வர்கள் கிராம சுகத்தை துறந்து வனங்களுக்குள் விருப்பத்துடன் புகுந்தார்கள். சாதாரண மனிதனுக்கு சிறிதளவு செல்வமும், போகமும் பெரும் திருப்தியைத் தரும். ஆனால் வீரனுக்கோ எந்த துக்கம் வந்தாலும் தன் கடமையைச் செய்வதே மிகப்பெரிய போகமாக இருக்கும். உன்னுடைய புதல்வர்கள் உங்களுக்கு தங்கள் குசலத்தைச் சொன்னார்கள். பிணியற்று திடகாத்திரமாய் உங்கள் முன் தோன்றப் போவதாக சொல்லியிருக்கிறார்கள்.’’

‘‘ஸ்ரீகிருஷ்ணா, நீ பாண்டவர்கள் பக்கம் இருக்கிறாய். அவர்களுக்கு எது உசிதமோ, அதை நீ செய்வாய். இந்த க்ஷத்திரிய குலத்திற்கு நீயே சத்தியம். நீயே தர்மம். நீயே ரட்சகன். நீயே பரப்பிரம்மா பரமாத்மா. உன்னிடமே அத்தனையும் நிலைபெற்றிருக்கிறது. ஸ்ரீகிருஷ்ணா, உன்னை நான் அறிவேன்’’ என்று திடமாக கூறினாள். ஸ்ரீகிருஷ்ணர் குந்தியை வலம் வந்து துரியோதனன் மாளிகை நோக்கி--- தேர் செலுத்தினார். துரியோதனனுடைய மாளிகை இந்திரனுடைய சபை போல அழகு நிரம்பியதாய் இருந்தது. அவர் அந்த மாளிகைக்குள் பிரவேசித்தார். எவரும் கவனிக்கவில்லை.

மூன்று வாயில்களை கடந்து உள்ளே நுழைய ஒரு பெரிய கூடத்தில் துரியோதனன் அரியணையில் அமர்ந்திருக்க, மற்றவர்கள் அவனுக்கு அருகே அமர்ந்திருப்பதைக் கண்டார். ஸ்ரீகிருஷ்ணரை துரியோதனன் நமஸ்கரித்து பசு, மதுவர்க்கம், வீடு போன்றவைகளை கொடுத்தான். கிருஷ்ணர் அவைகளை ஏற்றுக் கொண்டார். துரியோதனன் அவரை உணவுக்காக அழைத்தான். கிருஷ்ணர் அதை தலையசைத்து மறுத்தார். ‘‘ஸ்ரீகிருஷ்ணா, இருபக்கமும் நன்மை ஏற்படுவதற்குத்தான் இங்கு வந்திருக்கிறீர்கள். அப்பொழுது எங்கள் உணவை மறுத்து எங்களை அவமானப்படுத்துவதின் காரணம் என்ன? நீங்கள் என் தந்தையான திருதராஷ்டிரனுக்கும் தானே சம்பந்தி. எங்களுக்கும் தானே உறவு. பிறகு எதற்கு மறுக்கிறீர்கள்?’’ கண் அசைக்காமல் அவரை பார்த்தபடி கேட்டான்.

அதற்கு இரண்டே வாக்கியங்களில் ஸ்ரீகிருஷ்ணர் பதில் அளித்தார். அது உத்தமமான பதில். ‘‘ஒரு தூதன் அவன் வருகை சித்தியானதும்தான் அந்த இடத்தில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். என் மந்திரிகளுக்கும், படை வீரர்களுக்கும் அவ்விதமே உபசாரம் நடத்தப்பட வேண்டும்’’ என்று பதில் அளித்தார். ‘‘நீங்கள் இவ்வளவு பேதத்தோடு நடக்கக் கூடாது ஸ்ரீகிருஷ்ணா, உங்கள் உசிதம் நீங்கள் வந்த காரியம் வெல்லுமோ இல்லையோ நாங்கள் எங்கள் மரியாதைக்கு முயற்சி செய்கிறோம். நாங்கள் அன்போடு செய்யும் பூஜையை ஏற்காததற்கு என்ன காரணம் என்றுப் புரியவில்லை. உங்களோடு எங்களுக்கு எந்தப் பகையும் இல்லை. பிறகு ஏன் இந்த பேதமை?’’

ஸ்ரீகிருஷ்ணர் அவன் ஆதங்கத்துக்கு நிதானமாக பதில் சொன்னார். ‘‘ஒரு வீட்டில் பிரேமையினால் அன்னம் வைக்கலாம். அல்லது ஆபத்து காலத்தில் அன்னம் வைக்கலாம். ஆனால் உனக்கு என் மீது நவலேசம் கூட பிரேமை இல்லை. நான் எந்த ஆபத்தில் சிக்கவும் இல்லை. பிறகு எதற்கு இங்கே அன்னத்தை ஏற்பது. பாண்டவர்கள் மீது ஏன் துவேஷத்தை வைக்கிறாய். எதன் பொருட்டு ராஜ்ஜியம் தர மறுக்கிறாய். பாண்டவர்கள் தர்மத்திற்குட்பட்டவர்கள். அதனால் பாண்டவர்களுக்கு எதிரி எனக்கும் எதிரி. எவன் துவேஷம் வைக்கிறானோ அவன் வீட்டில் அன்னம் எடுத்துக் கொள்ளக்கூடாது. உன்னுடைய உணவு கலங்கமுற்றது. இந்த அஸ்தினாபுரத்தில விதுரருடைய அன்னம் மட்டுமே உண்ணத் தகுந்தது. நான் அங்கே போய் உணவு எடுத்துக் கொள்கிறேன்.’’ அவர் எழுந்து நின்று விடை பெறாமல் வெளியேறினார்.

(தொடரும்)