புவனம் முழுதும் நிறைந்த பேரருளே....முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

* அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் 31


மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்தபின்னே
                                       
 (பாடல் எண் - 24)

ஸ்ரீவித்யா உபாசகர்கள் வழிபடும் சில கோயில்களில் உமையம்மைக்கு சக்ர தாடங்கம் சாத்தப்படுகிறது. அதன் பின்னணி என்ன என்பதை  இப்பாடல் நமக்கு வலியுறுத்துகின்றது. இதுபோன்று வலியுறுத்தும் தகவல் பகுதிக்கு தந்திர சாரம் என்று பெயர்.  வித்யா உபாசகர்கள்  மட்டுமே புரிந்து கொள்ளத்தக்க வகையில் சங்கேத சொற்களை இப்பாடலில் பயன்படுத்தி இருக்கின்றார்.

உடைமை பொருட்கள் இருவகைப்படும். உயிர் உள்ளவர்கள், உயிரற்றவர்கள். உயிரற்றவை அதில் உயிரற்ற அணியை ‘அணியே’ என்று  விளி வேற்றுமையில் அறிவுள்ள பொருளை அழைத்துக் கூறுவதுபோல் இப்பாடலில் ‘அணியே’ என்று உமையம்மையின் அணியையே  அழைத்திருக்கின்றார். அப்படி அழைப்பது சாதாரணமாக பொருள் குற்றத்தைத் தரும். ஆனால், ஆன்மிக நோக்கில் உமையம்மையின்  ஒவ்வொரு ஆபரணங்களிலும் ஒவ்வொரு தேவதை எழுந்தருளி அருட்பாலித்துக் கொண்டிருக்கிறது என்கிறது மந்திர சாஸ்திரம்.

அந்த அடிப்படையிலேதான் இச்சொல்லை பயன்படுத்தியுள்ளார். பொதுவாக உபாசனை நெறி நூல்கள் வழிபடு தெய்வம் மற்றும்  வணங்குவதால் ஏற்படும் பலன், வணங்காததால் வரும் தீமை, எப்படி வணங்க வேண்டும் என்கின்ற விளக்கம் போன்றவற்றை மிகத்  தெளிவாகவே விளக்குகிறது. அந்த வகையில் அபிராமி பட்டர் ஸ்ரீவித்யா பத்ததியில் (முறையில்) உமையம்மைக்கு செய்யப்படும் ஸ்ரீசக்ர  தாடங்கம் சாற்றுவது, வணங்கி நோய் தீர்த்துக் கொள்வது உமையம்மைக்கு அலங்காரம் செய்யப்படும் அணிகலன் இவற்றைப்பற்றி  குறிப்பாக சூட்டுகிறார்.

இப்பாடல் வரிகளைப் புரிந்துகொள்ள வித்யா நவாவர்ண பூஜை. அதில் செய்யப்படும் சில செயல்கள் அதற்குத் தேவையான சில  பொருள்கள், இவற்றை அறிவுறுத்துவதாக அமைத்திருக்கிறார்கள். சொல் நயம் கருதி எழுதியதோடு மட்டுமல்லாமல் சாஸ்திர  கருத்துக்களை பறைசாற்றுவதாக அமைத்திருப்பது அதைப் படிப்போருக்கு தகவல்களை
வலியுறுத்துவதேயாகும். நகையே, அணியே, அழகே, அழகுக்கு சுந்தரி இதுபோன்ற சொற்கள் அனைத்துமே சில தெய்வங்களின் பெயரை  அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. ‘அணியே’ திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி, நகையே காஞ்சி காமாட்சி, அழகே-மதுரை  மீனாட்சி, அழகுக்கு - அராளகேசி, சுந்தரி-சிவகாம சுந்தரி அணியை குறிப்பதோடு சங்கேத வார்த்தையால் மேற்கண்ட தேவைகளைக்  குறிக்கும். இதை மனதில் கொண்டு இனி பாடலுக்குள் நுழைவோம்.

‘மணியே’ மணி என்ற சொல்லை அபிராமி பட்டர் பத்துக்கும் மேற்பட்ட பொருளில் பயன்படுத்துகின்றார். 1. மணி என்பது ஐம்பத்தொரு  எண்ணிக்கையுடைய உருத்திராட்சம் கட்டப்பட்ட கழுத்தணியைக் குறிக்கும். இந்த மணியானது அபிராமி அம்மையின் மேற்கரத்தில்  உள்ளதை இன்றும் காணலாம். இது சிற்ப நோக்கில் ஜபம் செய்ய உதவும் கருவியாகும். இது இறைவியை அழைக்கும் ஒலியை குறிக்கும்.  எழுத்தோ, சொல்லோ, வாக்கியமோ ஆன ஜபத்தை குறிக்கும். எந்த ஜபத்தை அபிராமி பட்டர் சொல்கிறார்? உமையம்மையின் உபாசனை  மந்திரங்களுள் தலையாயதான நினைத்ததையெல்லாம் தரவல்ல சிந்தாமணி மந்திரத்தை மணி என்றார்.

மணி என்பது நீர் கலசத்தையும் குறிக்கும். நீர் என்பது அமுதத்தையும் குறிக்கும். ‘அமிருத மா போ’ என்பதை வேதவரி உணர்த்துகிறது.  அதன் வழி மணி என்ற வார்த்தையால் அமிர்த கலச வடிவத்தில் தோன்றிய அமிர்தகடேஸ்வரர் என்ற சிவபெருமானையே குறிக்கும்.  ‘மணி’ என்பதற்கு முத்துமாலை என்பது பொருள். அந்த முத்து மாலையையே உமையம்மையாக வழிபடுவர். அபிராமி பட்டரும் ‘முலை  மேல் முத்துமாலையுமே’ (பாடல் - 85) என்ற வார்த்தையால் அந்த அணியை அணிந்திருக்கக்கூடிய அபிராமி அம்மையை குறிக்கிறார்.

‘மணி’ என்பது நன்மையை குறிக்கும், எல்லா உயிர்களும் நலன் பெறுவதற்கு பிறப்பு, மூப்பு, மரணம், பிணி, இவையில்லாமல் காக்கும்  அமுதத்தை மணி என்ற வார்த்தையால் குறிப்பிட்டார். ‘மணி’ என்பது மாணிக்கம் போன்ற நவரத்தினங்களைக் குறிக்கும்.  திருக்கடையூரிலுள்ள மரகதலிங்கத்தையே ‘மணி’ என்று குறிப்பிடுகிறார்.

வாழ்வில் சிறப்பதற்கு வழிபாடே சிறந்தது, அந்த வழிபாட்டையே சிறந்தது என பொருள் படும் ‘மணி’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்.  ‘மணி’ என்ற வார்த்தையால் சூரியனில் உள்ள உமையம்மையைக் குறிப்பிடுகிறார். ‘பானு மண்டல மத்தியஸ்தா’ என்கிறது லலிதா  ஸஹஸ்ர நாமம். ‘மணி’ என்பது கண்மணியாகிற விழியைக் குறிக்கும். இந்த இடத்தில் எவரும் காண முடியாத இறைவனைக் காணும்  சிறப்பு பெற்ற தன் கண்களை அபிராமி பட்டர் ‘மணி’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார்.

‘கண்களிக்கும்படி கண்டு கொண்டேன்’ (பாடல் எண் - 76) ‘விழிக்கே அருளுண்டு’ (பாடல் - 79) என்ற வார்த்தையால் இறைவியின்  கண்மணியையும் ‘மணி’ என்ற வார்த்தையால் குறிக்கிறார். செவிக்கு கேட்காத ஒவ்வொருவர் இதயத்துடிப்பில் தோன்றும் ‘ஹம்சம்’ என்ற  மந்திர ஓசையை ‘மணி’ என்ற வார்த்தையால் குறிப்பிட்டார்.

‘மணி’ என்று குறிப்பிடாமல் ‘மணியே’ என்று அழைப்பொலியாக உமையம்மையையே ‘மணி’ என்ற பெயர் சொல்லியழைக்கிறார்.  இவையனைத்தையும் மனதில் கொண்டுதான் ‘மணியே’ என்ற வார்த்தையை அபிராமி பட்டர் பயன்படுத்தியிருக்கிறார். மணியின் ஒளியே  சாக்த உபாசகர்கள் வழியில் ‘மணியின் ஒளியே’ என்பது நவரத்தினங்களைக் குறித்தது. இந்த இரத்தினங்கள் ஒன்பது என்று  எண்ணிக்கையை சூட்ட சிற்ப சாஸ்திரங்கள் பயன்படுத்தும் கலைச்சொல். இவை இரண்டையும் இணைத்தே பட்டர் கூறியுள்ளார்.

சக்ரத்தில் உள்ள ஒன்பது கோணங்களில் ஐந்து சிவனும், நான்கு சக்தியைக் குறிக்கும். ‘‘ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி  உறைபவளே’’ (பாடல் எண் - 19) இந்த சிவசக்தியானது யோகத்தில் ஒன்பது வண்ண ஒளியாக மிளிரும். இதையே சாதகர்கள் ‘மணியின்  ஒளியே’ என்று அழைக்கின்றனர். இந்த ஒளி ஒவ்வொன்றும், ஒன்றன்பின் ஒன்றாக யோகத்தில் ஒளிர்வதனால் அதைப் பயிற்சி செய்யும்  சாதகனுக்கு எட்டு விதமான சித்தியும், ஒன்பதாவதாக உமையம்மையின் அருளும், பத்தாவதாக சிவபெருமானுடன் இணைந்த  உமையம்மையின் திருக்காட்சியினால் முக்தியும் கிடைக்கும்.

அத்தகைய மந்திர சித்தியையே ‘மணியின் ஒளியே’ என்று குறிப்பிட்டார். ஸ்ரீவித்யா வழிபாட்டில் நவசக்தி வழிபாடு என்பது நவசித்தாந்தம்  என்ற பெயரில் வழங்கப்படுகின்றது. வாமா, ஜேஷ்டா, ரெளத்ரி, கால்நீ, கலவிகரணி, பாலா, பலப்பிரதமனி, சர்வபூத தமனி, மனோன்மணி  இந்த சக்திகளை ஒன்பது முக்கோணத்திலும், எழுந்தருளச் செய்து நவரத்தினங்களைப்போல ஒளியுடன் கூடியவர்களாக, ஒத்த வடிவத்தைக்  கொண்டவர்களாக ஒன்பது விதமான மாறுதல்களுடன் தியானிக்கப்படுகிறார்கள். அவ்வாறு தியானம் செய்வது என்பது தியானிப்பவர்களுக்கு  மோகன, (மயக்குதல்) ஸ்தம்பன (நிறுத்துதல்) மாரண (அழித்தல்) உச்சாடன (விரட்டுதல்) வஸ்ய (தன்வயப்படுத்துவது) ஆகர்ஷண  (கவர்வது) வித்வேஷண (துன்புறுத்துவது) பேதன (பிரிப்பது) சர்வ சித்தி (அனைத்தையும் தருவது) என்று உபாசிப்பவர் தன்னுடைய  தேவையைக் கருதி உமையம்மையை மேற்கண்ட ஒன்பது வடிவங்களில் ஏதேனும் ஒன்றை அப்பயனை பெறும் வரை தொடர்ந்து  தியானிப்பர்.

ஒன்பது சக்தியின் வடிவங்கள் ஒரே ஆயுதங்கள் உடையதாகத் தோன்றினாலும், நிறத்தால் மட்டுமே மாறுபட்டவர்களாக இருப்பர். நிறம்  மாறுபடும்போது பூசனை முறை பூசிக்கப்படும் காலம், பெறப்படும் பயன் இவைகளும், மாறுபடும். ஒரே மந்திரத்தைக் கொண்டு ஒன்பது  விதமான பயனைப் பெறுகின்ற இம்முறையை ‘மணியின் ஒளியே’ என்று கூறுகின்றார் அபிராமி பட்டர். இதையே ‘ஒளி செம்மை’ (பாடல்  எண் - 73), ‘பச்சை வண்ணமும்’, (பாடல் எண் - 70), ‘மின்னாயிரம்’ (பாடல் எண் - 55), ‘பொன்னனையாளைப்’ (பாடல் எண் - 91) ‘நீலி’  செய்யாள் (பாடல் எண் - 21), காளி (பாடல் எண்- 77) ‘வெளியாள்’ (பாடல் - 21) என்பன போன்ற உமையம்மையின் நிறத்தையே  மையப்படுத்தி சூட்டியிருப்பதால் அறியலாம். லலிதா ஸஹஸ்ர நாமமும் ‘ரக்த வர்ணா’ சிவப்பு வர்ணம் உடையவள் என்றும், வேதத்தில்  ‘ஹிரண்ய வர்ணாம் (பொன் நிறமானவள்) என்றும் ‘கெளரிம்’ என்றும் குறிப்பிட்டுள்ளதைக் கொண்டு இதை மேலும் உறுதி செய்யலாம்.  இதை மறைமுகமாகவே மனதில் கொண்டு உமையம்மையை ‘மணியின் ஒளியே’ என்று விளிவேற்றுமையில் குறிப்பிடுகின்றார், அபிராமி  பட்டர்.

‘‘ஒளிரும் மணி புனைந்த அணியே’’ ஒளிரும் அணி என்பது நவரத்தின கற்கள் பதிக்கப்பெற்ற அணிந்துகொள்கின்ற அணி கலன்களைக்  குறிக்கும். உமையம்மையின் அணிகலன்கள் என்பது நாற்பத்தி மூன்று எண்ணிக்கையுடைய அணிகலன்களாகும். ஸ்ரீவித்யா வழிபாட்டு  முறையில் அணிகலன்கள் தேவதைகளாகவே கருதி வழிபடப்படுகின்றது. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு தேவதையை குறிப்பதோடு  அவற்றின் அருளையும் பெற்றுத்தர வல்லது.

1. சூர்ய பிரபை      
2. சந்திர பிரபை   
3. நெத்திச்சுட்டி   
4. உச்சி பில்லை   
5. ஜடை அணி   
6. குஞ்ஜம்   
7. வலது தோடு   
8. இடது தோடு   
9. வலது மூக்குத்தி   
10. இடது மூக்குத்தி   
11. புல்லாக்கு   
12. கழுத்தணி   
13. மார்பணி   
14. ஹாரம்   
15. தோள்வளை (வலது)   
16. தோள்வளை (இடது)   
17. கைவளை (வலது)   
18. கைவளை (இடது)   
19. மோதிரம் (வலது)   
20. மோதிரம் (இடது)   
21. நாக வங்கி (வலது)   
22. நாக வங்கி (இடது)
23. மோதிரக் கோர்வை (வலது)
24. மோதிரக் கோர்வை (இடது)
25. தாடங்கம் (வலது)   
26. தாடங்கம் (இடது)
27. காஞ்சி (இடுப்பணி)   
28. மேகலை (இடுப்பணி)
29. கால் கொலுசு (வலது)
30. கால் கொலுசு (இடது)
31. சிலம்பு (வலது)
32. சிலம்பு (இடது)
33. இடுப்பரணை
34. அரசிலை
35. மாட்டல் (வலது)
36. மாட்டர் (இடது)
37. சாவிக்கொத்து
38. சதபத்ரம்
39. உருட்டு (வலது)
40. உருட்டு (இடது)
41. பதக்கம்
42. காசு மாலை
43. மங்களாபரணம்.  
             
திருக்கடையூரின் தலவரலாறில் உமையம்மை என்பவள் நாராயணனின் நகைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழிபட்டதில்  நகையிலிருந்து தோன்றியவளே அபிராமியம்மை ஆவாள். இதை பில்வ வனப் புராணமானது அபிராமியை ஆபரண நாயகி என்றே  குறிப்பிடுகின்றது. ‘‘நகையே இஃதிந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகி’’க்கு இந்தக் கருத்ைத மையப்படுத்தியே (பாடல் எண் - 93)  உலகியல் சார்ந்து அணி வேறு, அதை அணிபவர் வேறு என்று புரிந்து கொள்கிறோம். மூக்குத்தி மூக்காகி விடாது. மூக்கை அழகு  செய்வதற்கு மட்டுமே உள்ளது. அந்த வகையில் அபிராமி பட்டர் வெறும் அணியாகக் கூறாமல் அணியே அபிராமி என்று கூறுவதிலிருந்து  அணிக்கும் அபிராமிக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை என்பதை நமக்கு அறிவுறுத்தவே ‘ஒளிரும் மணி புனைந்த அணியே’  என்று குறிப்பிடுகின்றார்.

நகையானது இரண்டு வகையாக அமைந்துள்ளது. ஒன்று கல் பதித்தது (நவரத்தின கற்கள்) செய்யப்பட்ட அணிகலன், மற்றொன்று  உலோகத்தினால் மட்டுமே ஆனது என்று இருவகையில் ஒன்றை நீக்கி கல்பதித்த நகையையே அபிராமி பட்டர் ‘ஒளிரும் மணி புனைந்த  அணியே’ என்று குறிப்பிடுகின்றார். சிற்பத்தில் மணி என்பது ஒன்பது என்ற எண்ணிக்கையைக் குறிக்கும். உமையம்மையானவள் ஒன்பது  ரத்தினங்களுக்கு அதிதேவதையான ஒன்பது கோள்களையும் தன்வசப்படுத்தி ஆன்மாக்களுக்கு அறிவுறுத்த நவகிரகங்களைக் கொண்டு  மாயையாகின்ற இவ்வுடலை பிறப்பித்து, வளர்த்து, உடலோடு சேர்ந்து உள்ளத்தையும் வளரச் செய்து ஆன்மாக்கள் முக்தியடைவதற்கு  உண்டான அடிப்படை தகுதிகளை உடல் என்ற யாக்கையின் மூலம் சிவஞானம் பெற உதவுகின்றாள்.

‘‘பூத்தவளே புவனம் பதினான்கையும்’’ (பாடல் எண் - 13)  - என்பதன் மூலம் இதையறியலாம். இந்தக் கருத்தை வலியுறுத்தியே  ‘‘ஒளிரும் மணி புனைந்த அணியே’’ என்கிறார். ஆன்மாவாகிற உயிருக்கு நவரத்தினமாகிற ஒன்பது துவாரமாகிற உடலை பதித்த அணியை  உமையம்மையானவள் சிவன் என்று அழகுபெற அணிவிக்கிறாள். மணி என்பது ஒளியைக் குறிக்கும். உள்ளேயுள்ள ஆன்மா எனும்  தங்கத்தில் உடல் துவாரமான ஒன்பது நவரத்தின கற்கள் பதித்த ‘அணி’ என்று ஆன்மாவை தங்கமாகவும், உடலை அதை ஒளிர்விடச்  செய்கின்ற மணியாகவும் சூட்டி ‘‘ஒளிரும் மணி புனைந்த அணியே’’ என்று சூட்டுகின்றார். இதே கருத்தையே தங்கத் துகள்களால்  ஆன்மாவினிடத்திலிருந்து தோன்றிய ‘‘ஸ்வர்ண ரஜ தஸ்ரஜாம்’’ என்கின்றது, வேதம்.

‘‘அணியும் அணிக்கழகே’’ பொதுவாக அணி என்பது எவர் அணிகின்றாரோ அவர்களுக்கு மேலும் அழகூட்டுவதாக அமைகிறது. ஆனால்,  அபிராமிக்கோ அவள் அணிவதனால் அந்த அணி அழகு பெறுவதாக குறிப்பிடுகிறார். அணியைவிட உமையம்மையே அழகானவள் என்பதை  நமக்கு வலியுறுத்துகின்றார். அந்த அழகு எப்படிப்பட்டது என்பதை ‘‘அழகுக்கு கொருவரும் ஒவ்வாத வல்லி’’ (பாடல் எண் - 71) என்ற  வாக்கியத்தால் அறியலாம்.

-(தொடரும்)