ராஜராஜ சோழன் வழிபட்ட க்ஷேத்திரபாலதேவர்* கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்

திருவலஞ்சுழி


கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் தாம் இயற்றிய தக்கயாகப் பரணி எனும் அருந்தமிழ் நூலில் காப்புச் செய்யுளாக முதலில் பாடியுள்ளது  வைரவக் கடவுளின் காப்பேயாகும். அதில் பைரவர் எனப்பெறும் சிவனாரின் அம்சமாகத் திகழும் தெய்வத்தின் தோற்றப் பொலிவினைப்  பின்வருமாறு கூறியுள்ளார்.

உரக கங்கணம் தருவன பணமணி
உலகு அடங்கலும் துயில்எழ வெயில் எழ
உடைதவிர்த்து தன் திரு அரை உடை மணி
உலவி ஒன்றோடு ஒன்று அலமர
விலகிய
கரதலம் தரும் தமருக சதிபொதி
கழல் புனைந்த செம்பரி சதிபொதி
கழல்புனைந்த செம்பரி புர ஒலியொடு
கலகலன் கலன் கலன் என வரும் ஒரு
கரிய கஞ்சுகன் கழலினை கருதுவாம்

பாம்பினை கையில் கங்கணம் எனும் அணிகலனாகத் தரித்துள்ளதால் அதன் மணி வீசும் ஔியால் ஔிவீச, அனைவரும் துயில் எழ,  ஆடையணியாமல் தன் இடுப்பில் உள்ள மணிகள் ஒன்றோடொன்று மோதி ஒலி எழுப்ப, கரத்தில் உள்ள டமருகம் ஒலிக்க, காலில் உள்ள  கழல்களும் ஓசை எழுப்ப கலன் கலன் என்ற பெருவோசையோடு கருமையான சட்டையைப் போர்த்தியுள்ள வைரவக் கடவுளின்  திருவடிகளை நாம் தியானிப்போம் என்பதே ஒட்டக்கூத்தரின் வாக்காகும்.

கூத்தர் போற்றும் இந்த வைரவக் கடவுள் ஒவ்வொரு சிவாலயத்தின் வடகிழக்கு திசையில் பைரவர் என்ற திருநாமத்தோடு காட்சி நல்கும்  கடவுள் ஆவார். சிவபெருமானின் அம்சமாகத் திகழும் இத்திருக்கோலம் நாய் வாகனத்துடன் ஆடையின்றிக் காணப்பெறும். சில  ஆலயங்களில் சட்டை போர்த்தியவராக சட்டைநாதர் என்ற பெயரோடு விளங்குவார். மத்தியப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு ஆகிய  மாநிலங்களில் பண்டு வட்ட வடிவில் யோகினிகளின் ஆலயங்கள் திகழ்ந்தன. அவற்றில் பைரவமூர்த்தி நடுவே திகழ 64 யோகினிகளின்  திருவுருவங்கள் திகழும்.

நீலகண்ட பைரவர் எனும் திருநாமத்தில் தொடங்கி தக்ஷிணா பிஸ்தித பைரவர் வரை அறுபத்து நான்கு திருநாமங்களோடு அறுபத்து நான்கு  பைரவர்களையும் ஜயா என்ற திருநாமத்தில் தொடங்கி விஷலங்க்யா என்ற யோகினி வரை அறுபத்து நான்கு யோகினிகளையும் சிற்ப  ஆகம நூல்கள் குறிக்கின்றன.அறுபத்து நான்கு பைரவ வடிவங்கள் கூறப்பெற்றாலும் பொதுவாக அசிதாங்க பைரவர், உருபைரவர், சண்ட  பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் என்று எட்டு வகை மூர்த்தங்களையே  சிவாலயங்களில் நாம் தரிசிக்க இயலும். பைரவரின் தேவியாக பைரவி குறிக்கப் பெறுவாள்.

பைரவரை சேத்ரபாலர் என்ற பெயரில் குறிப்பிட்டு ஒவ்வொரு ஊரையும் அங்கு திகழும் திருக்கோயிலையும் தீமைகளிலிருந்து காக்கும்  கடவுளாக இவர் வணங்கப் பெறுகின்றார். எட்டுக் கரங்களுடன் திகழும் பைரவ வடிவமே சேத்திரபாலர் திருமேனிகளில் உத்தமமானதாகும்.  தீமைகளை அழிக்க சிவபெருமான் தன் இடபத்தை நாய் வடிவெடுக்கச் செய்து, தாம் சேத்ரபாலராகத் திகழ்வதாக பூர்வகாரணாகமம்,  அஜிதாகமம், மகுடாகமம் போன்ற ஆகம நூல்கள் குறிக்கின்றன. சிவமூர்த்தியாம் “க்ஷேத்திரபாலர் பூசையைவிட நல்வினைச் செயல்  இதுவரை இருக்கவும் இல்லை. இனி வரப்போவதுமில்லை என அறிக’’ என்று மகுடாகமம் உரைக்கின்றது.

க்ஷேத்திர பாலரின் மகிமை அறிந்த மாமன்னன் ராஜராஜனின் பட்ட மகிஷியான தந்தி சக்திவிடங்கி எனும் லோகமாதேவியார்  க்ஷேத்திரபால தேவரை தங்கள் குலதெய்வமாகக் கொண்டு அவருக்கென ஒரு தனி கற்றளியை திருவலஞ்சுழியில் எடுப்பித்தார். அதில்  அப்பெருமானை மாமன்னனின் குடும்பத்தவர் அனைவரும் எவ்வாறெல்லாம் போற்றி
வழிபட்டனர் என்பதை கல்வெட்டுச் சாசனங்களாகப் பொறித்துள்ளனர். சோழர் வரலாற்றில் ஒரு தனிச் சிறப்புடையதாக இவ்வாலயம் பண்டு  விளங்கிற்று.

கும்பகோணம் தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் திகழும் திருவலஞ்சுழி எனும் ஊரிலிருந்து சுவாமிமலை செல்லும் சாலையின் பிரிவிலேயே  கபர்தீசுவரர் திருக்கோயில் எனும் தேவாரப் பாடல் பெற்ற திருக்கோயில் உள்ளது. இச்சிவாலயத்தில்தான் வெள்ளை விநாயகர்  திருக்கோயிலும், மேலே குறிப்பிட்டுள்ள க்ஷேத்திரபாலர் திருக்கோயிலும் உள்ளன. திருக்கோபுரம் கடந்து கோயிலினுள் நுழையும்போது  வலப்புறம் தீர்த்தக் குளமும், இடப்புறம் க்ஷேத்திரபாலர் ஆலயமும் உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை க்ஷேத்திரபாலர் திருக்கோயில் இடிபாடுற்று சிதிலமடைந்த நிலையிலேயே காணப்பெற்றது.  இவ்வாலயத்தில் இடம்பெற்றிருந்த சிற்பங்களெல்லாம் சிதைந்து சுற்றிலும் தரையில் கிடந்தன. இக்கோயிலில் இடம்பெற்றிருந்த  கல்வெட்டுச் சாசனங்களை இந்திய கல்வெட்டுத் துறையினர் 1902ஆம் ஆண்டில் படி எடுத்து நகல்களைக் காப்பாற்றி உள்ளனர்.

மாமன்னன் ராஜராஜசோழனின் 25ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1010இல்) பொறிக்கப்பெற்ற கல்வெட்டுச் சாசனமொன்று இவ்வாலயத்தின்  வடபுற சுவரில் இடம் பெற்றுள்ளது. இவ்வாண்டில்தான் தஞ்சைப் பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அவ்வாண்டில்  ராஜராஜ சோழனின் இளைய மகளும் விமலாதித்த தேவரின் மனைவியுமான குந்தவை நங்கையாரும் நங்கையார் மாதேவடிகள் எனும்  மாமன்னனின் நடுப்பெண்ணும் (நடுவிற் பெண்பிள்ளை) தங்கள் தந்தையார் ராஜராஜ தேவர் தன் மகுடாபிஷேகத்தின்போது அவருக்கு  அபிடேகம் செய்யப்பெற்ற பொன்னின் ஒரு பகுதியை தங்களுக்கு வழங்கியதாகவும், அப்பொன்கொண்டு பல ஆபரணங்களைச் செய்து  க்ஷேத்திரபால தேவருக்கு அளித்ததாகவும் கூறுகின்றது. இக்கல்வெட்டில் “ஸ்ரீராஜராஜ தேவர் மகாதேவியார் தந்தி சக்தி விடங்கியாரான  ஸ்ரீஒலோகமாதேவியார் உய்யகொண்டார் வளநாட்டுப் பாம்பூர் நாட்டுத் திருக்குடமூக்கின்பால் திருவலஞ்சுழி நாம் எடுப்பித்த திருக்கற்றளிப்  பிள்ளையார் க்ஷேத்திரபால தேவர்க்கு....” என்ற வாசகம் காணப்பெறுவதால் இவ்வாலயம் ஒலோகமாதேவியாரால் தான் கற்கோயிலாக  எடுக்கப்பெற்றது என்பது அறிகிறோம்.

இவ்வாலயத்து தென்புற சுவரில் உள்ள ஒரு கல்வெட்டால் ராஜராஜ தேவரின் இருபத்து நான்காம் ஆட்சியாண்டின் இருநூற்று  ஐம்பத்தெட்டாம் நாளில் க்ஷேத்திரபால தேவர்க்கு வரியில்லாத தேவதான நிலம் அம்மன்னவனால் வழங்கப் பெற்றதை விவரிக்கின்றது.  இதே க்ஷேத்திரபாலதேவர் கோயிலில் காணப்பெறும் மற்றொரு கல்வெட்டுச் சாசனம் ராஜேந்திர சோழ தேவரின் மூன்றாம் ஆண்டு (கி.பி.  1015) குறிக்கப்பெற்று அதில் ராஜராஜ தேவரின் 29ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1014இல்) தந்தி சக்தி விடங்கியாரான ஒலோகமாதேவியார்  திருவிசலூர் சிவாலயத்தில் ஹிரண்யகர்ப்பம் புகுந்தபோது பயன்படுத்தப் பெற்ற பொன்னின் ஒரு பகுதியிலிருந்து செய்யப்பெற்ற இரண்டு  பொற்பூக்களை தாம் திருவலஞ்சுழியில் கட்டுவித்த கோயிலில் எழுந்தருளியிருக்கும் க்ஷேத்திரபால தேவர்க்கு சாத்தி அருள  கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இத்தேவி திருவிசலூர் கோயிலில் ஹிரண்யகர்ப்பம் புகுந்து தானம் அளித்ததையும், அவர்தம் கணவர் ராஜராஜசோழர் துலாபார தானம்  (எடைக்கு எடை தங்கம் அளித்தல்) அளித்ததையும் திருவியலூர் ஆலயத்துக் கல்வெட்டு எடுத்துரைக்கின்றது. இத்தான நிகழ்வு ராஜராஜ  சோழனின் அந்திமக் காலத்தில் நிகழ்ந்ததாகும். அம்மாமன்னர் மறைந்த மறு ஆண்டில் அவர் தேவியார்  க்ஷேத்திரபாலதேவரை  பொற்பூக்கள் கொண்டு வழிபட்டதை இச்சாசனம் விளக்குகின்றது.

இதே ராஜேந்திர சோழ தேவரின் மூன்றாம் ஆட்சியாண்டின் இருநூற்று இருபத்தொன்றாம் நாளில் (கி.பி. 1015இல்) பொறிக்கப்பெற்ற  இம்மன்னவனின் கல்வெட்டுச் சாசனம் திருவலஞ்சுழி க்ஷேத்திரபாலர் கோயிலின் வடபுற சுவரில் உள்ளது. அதில் ஸ்ரீராஜேந்திர சோழதேவர்  எள்ளினை மலையாகக் குவித்து (திலபர்வதம்) தானம் செய்தபிறகு க்ஷேத்திரபால தேவர்க்கு பன்னிரண்டு பொற்பூக்களைத் திருவடியில்  சமர்ப்பித்து வீழ்ந்து வணங்கினான் என்று கூறுகிறது. ராஜேந்திர சோழதேவரின் மூன்றாம் ஆட்சியாண்டின் இருநூற்று இருபத்தொன்றாம்  நாள்தான் ராஜராஜ சோழனின் தலை திவச நாள் என்பதை நாம் ஊகித்து உணர முடிகிறது. திலதானம் (எள்தானம்) பிதுர்க்கு அளிக்கும்  வழிபாடாகும் என்பதால் இதனை உறுதி செய்ய முடிகிறது.

இவ்வாறு இந்த க்ஷேத்திரபாலர் ஆலயம் ராஜராஜன் மற்றும் ராஜேந்திரனின் குடும்பத்தவர் சிறப்பாக வழிபட்ட அரச குடும்ப ஆலயமாகத்  திகழ்ந்துள்ளது. இவ்வாலயத்தில் வேறு எந்த தனிநபரின் கல்வெட்டு சாசனமும் கிடையாது. அமரர் ஓவியர் சில்பி அவர்கள் 25.07.1949ல்  திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலுக்குச் சென்று அவ்வாலயத்தை பல்வேறு கோணங்களில் ஓவியமாகத் தீட்டினார். அவற்றுள் ஒரு அரிய  படமாக அவர் அன்று கண்ட திருவலஞ்சுழி க்ஷேத்திரபாலர் கோயிலை வரைபடமாகப் பதிவு செய்துள்ளார்.

ஆலயத்தின்மேல் மரங்கள் முளைத்து கோயில் சிதிலமடைந்துள்ளது. கருவறை மேல் விமானத்தோடு காணப்பெறுகின்றது. சில கோஷ்ட  தெய்வங்கள் மாடங்களில் உள்ளன. துவாரபாலகர்கள், கணபதி, ஆலமர்ச்செல்வர், தேவியுடன் ஒய்யாரமாக நிற்கும் சிவபெருமான்,  அகத்தியர், கங்காளர், பைரவர், அர்த்தநாரி, பிட்சாடனர் போன்ற தெய்வ உருவங்கள் (கற்சிற்பங்கள்) கோயிலைச் சூழ்ந்து  காணப்பெறுகின்றன.

கருவறையில் இருந்த க்ஷேத்திரபாலரின் உருவத்தை அவர்தம் ஓவியத்தில் தனித்துக் காட்டியுள்ளார். எரிசுடர்கள் (ஜ்வாலாமகுடம்)  பிறைச்சந்திரன் ஆகியவை தலைமேல் திகழ எட்டுக் கரங்களுடன் க்ஷேத்திரபாலர் திகழ்கின்றார். திரிசூலம், வாள், வில், அம்பு, டமருகம்,  மணி (காண்டா), கேடயம் ஆகியவற்றைத் தரித்த இந்த அற்புத திருமேனியின் முன் கரங்கள் உடைக்கப்பெற்றுள்ளன. ஆடையின்றி  இடுப்பிலும் கரங்களிலும் பாம்புகளை ஆபரணமாகப் பூண்டுள்ளார். தோளிலிருந்து நீண்ட மணிமாலை கணுக்கால் வரை காணப்பெறுகின்றது.  அரிய இக்காட்சியைக் காட்டியுள்ள ஓவிய மாமேதை சில்பி அவர்கள், ஆலயச் சுவரில் காணப்பெறும் கல்வெட்டுகளைக்கூட துல்லியமாகப்  பதிவு செய்துள்ளார்.

இன்று நாம் திருவலஞ்சுழி சென்று ராஜராஜனும் ராஜேந்திரனும் குடும்பத்தோடு வழிபட்ட அவர்கள் தம் ஆத்மார்த்த க்ஷேத்திரபாலர்  தெய்வம் உறைந்த கோயிலைக் காண முற்பட்டால் ஓவியத்தில் காணும் ஒரு தெய்வத்தைக்கூட காண முடியாது. பத்தாண்டுகளுக்கு முன்பு  வரலாற்று ஆர்வம் கொண்ட சுந்தர் பரத்வாஜ் போன்ற அன்பர்களின் முயற்சியால் அவ்வாலயத்தை இயன்ற மட்டும் புதுப்பித்து புதிய  பைரவரை அங்கு பிரதிட்டை செய்துள்ளனர்.

அங்கிருந்த கலைச்செல்வங்கள் எங்கே என்று தேடினோமானால் தஞ்சாவூரில் உள்ள ராஜராஜன் மணி மண்டபத்திற்குக் கீழே உள்ள  (பாதாள) கலைக்கூடத்தில் ஒரு மூலையில் ராஜராஜன் வழிபட்ட க்ஷேத்திரபாலர் கவனிப்பாரின்றி நின்றுகொண்டு இருக்கிறார். சில்பி  அவர்கள் ஓவியத்தில் திகழும் பல சிற்பங்கள் தஞ்சாவூரில் உள்ள அரண்மனைக் கலைக்கூடத்தில் உரிய விளக்கமின்றி ஒதுங்கி  நிற்கின்றன. சில சிற்பங்கள் எங்குள்ளன என்பதை அறிய இயலவில்லை. ராஜராஜ சோழனின் குடும்பம் பற்றியும், அவன் மகன் செய்த  பிதுர் கைங்கர்யம் பற்றியும் கூறும் ஒரு மாதேவி எடுத்த கோயிலையும் அங்கு திகழ்ந்த கலைச்செல்வங்களையும் நாம் எவ்வாறு  போற்றுகிறோம் என்பதற்கு இக்கோயிலே ஒரு சான்று.

- முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்