கலைகளை அருளும் சரஸ்வதியும் வித்யா தேவியர்களும்



இந்து மதம் போலவே கல்விக்கு மிகுந்த ஏற்றம் கொடுத்துப் போற்றி வரும் சமயங்களுள் தலையானது சமண சமயமாகும். இந்து மதமும், சமணமும், பௌத்தமும் தமக்குள் உரையாடியதன் விளைவே இந்து மதத்திற்குள் இத்தனை தெய்வ வடிவங்கள் உள்ளன எனில் அது மிகையில்லை. விவேகானந்தர் இந்து மதத்தின் அழகான நிறைவு என்று பௌத்தத்தையும் சமணத்தையும் குறிப்பிடுகின்றார். சரஸ்வதி ஸ்ருதிதேவி என்று அழைக்கப்பட்டாள். இவள் ‘வாக்கு’ என்னும் சொல்லாக விளங்குவதால் வாக்தேவி எனவும் அழைக்கப்படுகிறாள். காலப்போக்கில் கலைகள் வளர வளர சரஸ்வதி வழிபாடும் வளர்ந்தது.

கலைகள் பின்னாளில் பதினாறாகப் பிரிக்கப்பட்டன. சரஸ்வதியை வைத்து ஆன்மிகம் சார்ந்து பதினாறு கலைகளும் பதினாறு தேவியராகப் பாவித்து வணங்கப்பட்டன. மந்திரம், தந்திரம், யோகம், செல்வம் போன்ற பதினாறு கலைகளின் வடிவமாகத் திகழும் இவர்கள் வித்யா தேவியர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களை, ஷோடஸ வித்யா தேவியர் எனவும் அழைக்கின்றனர். இவர்களின் தலைவியாக மகா சரஸ்வதி தேவி விளங்குகின்றாள். மகா சரஸ்வதியையும், பதினாறு வித்யா தேவியரையும் ஒன்றாக வைத்துச் செய்த ‘சமஸ்த ஷோடஸ வித்யா தேவியருடனான மகா சரஸ்வதி’ சிற்பங்கள் வடநாட்டில் பல இடங்களில் கிடைத்துள்ளன.

தென்னிந்தியக் கோயில்களில் சரஸ்வதியை அமைத்திருப்பதுபோல வித்யா தேவியர்களை அமைக்கும் வழக்கம் காணப்படவில்லை. வடநாட்டில் பல இடங்களில் வித்யா தேவியரின் வனப்பு வாய்ந்த சிற்பங்களைக் காண்கிறோம். இனி, தொடர்ந்து சரஸ்வதி மகா தேவியையும், வித்யா தேவியர்களையும் கண்டு மகிழலாம். சரஸ்வதி ஜினவாணி என்றழைக்கப்படும் சரஸ்வதியானவள் திகம்பர நூல்களின்படி சரஸ்வதிதேவி தனது கரங்களில் தாமரை, வரத முத்திரை, புத்தகம் ஆகியவற்றை ஏந்தி, மயில் வாகனத்தில் பவனி வருபவளாகச் சித்தரிக்கப்படுகின்றாள். எனினும், தென்னிந்தியச் சமணத் திருக்கோயில்களில் காணும் சரஸ்வதி மேற்கரங்களில் பாசம், அங்குசம் ஏந்தி, கீழ்க்கரங்களில் ஜபமாலையும் புத்தகமும் கொண்டவளாகவே அமைக்கப்பட்டுள்ளாள்.

எண்ணற்ற கோயில்களில் இவள் அன்ன வாகனத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கிறாள். சரஸ்வதி வெண்மையான நிறம் கொண்டவள். வீணையை ஏந்தியிருப்பவள். வெள்ளை ஆடையை உடுத்தி, வெள்ளைக்கல் பதித்த ஆபரணங்களைப் பூண்டு, புத்தகங்களை ஏந்திச் சிங்காசனத்தில் வீற்றிருப்பவள். இவள் மூலசரஸ்வதி, மகாசரஸ்வதி என்றும் மயிலை வாகனமாகப் பெற்றிருப்பதால் ‘வர்ஹிவாகினி’ என்றும் பலவாறு அழைக்கப்படுகிறாள். இவளே பதினாறு வடிவங்களைத் தாங்கி வித்யா தேவதைகளாகவும் காட்சியளிக்கின்றாள். இனி வித்யா தேவிகளைக் காணலாம்.

1. ரோஹிணி

கலைகளின் நுட்பமான ஆற்றலை அறிவுக்கு வழங்கி, அதன் மூலம் ஆன்மாவுக்குப் பலத்தை அளித்து இன்பம் ஊட்டும், ஞானதேவியரில் முதன்மையாக விளங்கும் வித்யாதேவி ரோஹிணி ஆவாள். திகம்பரர்களின் பிரதிஷ்டா சாரோதரம் இவளை கலசம், தாமரை, கனி ஆகியவற்றை ஏந்தித் தாமரை மலரில் வீற்றிருக்கிறாள் என்று கூறுகிறது. சுவேதாம்பரர்களின் ஆசார்ய தினகரம், இவள் கரங்களில் சங்கு, வில், ஜபமாலை ஆகியவற்றை ஏந்திப் பசுவின்மீது பவனி வருகிறாள் என்று குறிக்கிறது. திகம்பர நூல்கள் சரியான பாதையில் மனிதர்களைச் செலுத்தும் தேவதையாகவும் சுவேதாம்பர நூல்கள் இசையின் இறைவியாகவும் இவளைக் குறிப்பிடுகின்றன.

2. பிரக்ஞப்தி


எப்போதும் அறிவை விழிப்பு நிலையில் வைத்துக் கொள்ளும்படி அருள்பவளாக இருப்பதால் இவளுக்கு இப்பெயர் உண்டாயிற்று. இந்தப் பெயருக்குச் சரஸ்வதி என்றும் பொருள் கூறுவர். திகம்பர நூல்களில் இவள் கத்தியும் சக்கரமும் ஏந்தியவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். இவளுடைய வாகனத்தைப் பற்றிய குறிப்புகள் இல்லை என்றாலும், பின்னாளில் வந்த நூல்கள் குதிரை வாகனம் கொண்டவள் என்று கூறுகின்றன. மேலும், இவளை நான்கு கரங்களுடன் அமைக்கும்போது கத்தி, சக்கரம் ஆகியவற்றுடன் கனி, தாமரை ஏந்தியவளாகவும் சூட்டப்படுகிறாள். வேதாம்பரர்களின் ஆசார்யர் அசார்ய தினகரம் என்னும் இவள் கத்தியும், தாமரையும் ஏந்தியுள்ளதாகக் குறிப்பிடுகிறது. நிர்வாண கலிகா என்னும் நூல்களை மயில் வாகனத்தில், மேற்கரங்களில் சக்தி. தங்களோடு கீழ்க்கரங்களில் கனி, வரதமுத்திரையோடும் இருப்பவளாகக் குறிப்பிடுகிறது.

3. வஜ்ரச்ருங்கலா

மூன்றாவது வித்யா தேவியாகப் போற்றப்படும் வஜ்ரஸ்ருங்கலா. இவள் வைரங்களாலான சங்கிலிகளை ஆடைகளாக அணிந்து கையில் வஜ்ரமயமான சங்கிலிகளைக் கொண்டிருப்பவள் என்று சமய நூல்கள் கூறுகின்றன. இவள் வஜ்ரமயமான சங்கிலிகள் அணிந்திருப்பவள் வைராக்கிய சிந்தனைகளையும்  சுயக்கட்டுப்பாட்டு நல்ல பழக்க வழக்கங்களையும் அருளும் தேவியாக வழிபடப்படுகிறாள். (வஜ்ரம் - வைரம்; ஸ்ருங்கலம் - சங்கிலிகள், வைரத்தாலான சங்கிலிகளை அணிந்தும் ஏந்தியும் இருப்பதால் இந்தப் பெயர் பெற்றாள்) பின்னாளில் இவள் வடிவில் கைகளிலே சங்கிலியுடன் தாமரை, சங்கு, கனி ஆகியவற்றை இணைத்துச் சிலைகளை அமைக்கும் வழக்கம் உண்டானது. சுவேதாம்பர நூலான ஆசார்ய தினகரம் இவள் சங்கிலிகளையும் தண்டாயுதத்தையும் ஏந்தி தாமரையில் வீற்றிருப்பதாகக் குறிக்கிறது. நிர்வாண கலிகா என்னும் நூல் தாமரையின் மீது சங்கிலிகள், தாமரை, அபயமுத்திரை ஏந்தி அமர்ந்திருப்பதாகக் குறிப்பிடுகின்றது.

4. வஜ்ராங்குசா


வஜ்ரமயமான அங்குசத்தை ஏந்தியிருப்பதால் இவள் இப்பெயர் பெற்றாள். திகம்பரர்களின் பிரதிஷ்டாசாரோத்தரம். இவளை அங்குசம், வீணையுடன் கத்தி, கேடயம், வஜ்ராயுதம், ஈட்டி ஆகியவற்றை ஏந்திப் புஷ்பக விமானத்தில் வருபவளாகவும், வரத முத்திரை, எலுமிச்சம்பழம், அங்குசம் ஏந்தியவளாகவும் குறிப்பிடுகின்றன. இவளுடைய வஜ்ரமயமான அங்குசங்கள் புலன்களை அடக்குவதையும், வீணை சுதந்திரமான சிந்தனைகளையும் குறிப்பிடுகின்றன என்பர்.

5. அப்ராதிகாரா (அ) ஜம்புநாதா

இவள் ஐந்தாவது வித்யாதேவியாவாள். இவள் அழகிய கருநீல (நாவல்பழம்) நிறத்தை உடையவள். திகம்பர நூல்களின் படி இவளுடைய வாகனம் மயில். திகம்பர நூல்களில் இவளுடைய பெயர் ஜம்புநாதா என்றே குறிக்கப்பட்டுள்ளது. பிரதிஷ்டா சாரோத்தரம் என்ற நூலில் இவள் கத்தியும் ஈட்டியும் கொண்டவளாகக் கூறப்படுகிறாள். பின்னாளில் கத்தி, ஈட்டியுடன் தாமரையும் கனியும் ஏந்தியவளாக இவளை அமைக்கின்றனர். சுவேதாம்பரர்களின் ஆசார்ய தினகரம் என்னும் நூல் இவளைக் கருடவாகனம் கொண்டவள் என்றும், நான்கு கரங்களிலும் சக்ராயுதங்களைத் தாங்கியவள் என்றும் குறிப்பிடுகிறது.

6. புருஷதத்தா

ஆறாவது வித்யாதேவி புருஷதத்தா ஆவாள் பிரதிஷ்டாசாரோத்தரம் இவளை தாமரையும் வஜ்ராயுதமும் ஏந்தி, மயில் மீது வீற்றிருப்பவளாகச் சித்தரிக்கிறது. பின்னாளில் இவளுடைய வடிவத்தில் சங்கையும் கனியையும் இணைத்துள்ளனர். இவள் வெண்ணிறம் கொண்டவள். ஆசார்ய தினகரம் இவளைக் கத்தி, கேடயம் ஏந்திய வளாகவும், நிர்வாண கலிகா வரத முத்திரை, கனி, கேடயம் ஏந்தியவளாகவும் குறிக்கின்றன. எருமை இவளுடைய வாகனமாகும்.

7. காளி

காளிதேவி ஏழாவது வித்யாதேவியாவாள். இவளை கருநிறம் உடையவள் என்றும், பொன்னிறம் உடையவள் என்றும் இருவிதமாகக் குறிப்பிடுகின்ற பிரதிஷ்டாசாரோத்தரம் இவளைக் கத்தியுடன் உலக்கை ஏந்தியவளாகக் குறிப்பிடுகிறது. பின்னாளில் தாமரையும் கனியையும் இணைத்து இவள் வடிவைச் செய்துள்ளனர். வரத முத்திரையுடன் கதாயுதம் ஏந்தியவளாக ஆச்சார்ய தினகரமும், ஜபமாலை, தண்டம், வஜ்ரம், அபய முத்திரை ஏந்தியவளாக நிர்வாண கலிகாவும் குறிப்பிடுகின்றன. மான், தாமரை ஆகியவை முறையே இவளுடைய வாகனம் - ஆசனமும் ஆகும். மான் இவளுடைய விரைந்து இயங்கும் ஆற்றலைக் குறிக்கிறது.

8. மகாகாளி

எட்டாவது வித்யாதேவி மகாகாளியாவாள். இவள் வாழ்வில் ஜீவன் வாழும் முறைகளை விளக்கும் ஜீவகலைகளின் இருப்பிடமாகத் திகழ்கிறாள் என்பர். மனத்தை அமைதியாக வைக்க உதவும் தேவியாவாள். இவள் கருநிறத்தைக் கொண்டுள்ளாள். பிரதிஷ்டா சாரோதரம் இவள் கருநிறத்தவளென்றும், வில், கத்தி, கனி, அம்பு ஏந்தியவளென்றும் குறிக்கிறது. சுவேதாம்பர நூலான ஆசார்ய தினகரம் இவளை ஜபமாலை, கனி, மணி, வரத முத்திரை ஏந்தியவளாகவும், நிர்வாண கலிகா என்னும் நூல் ஜபமாலை, வஜ்ரம், அபயமுத்திரை, மணி ஆகியவற்றை ஏந்தியவளாகவும் குறிப்பிடுகின்றன. இந்த இரண்டு நூல்களும் இவள் நரவாகனம் (மனிதனை வாகனமாகக்) கொண்டவள் என்று குறிக்கின்றன.

9. காந்தாரி


காந்தாரி ஒன்பதாவது வித்யா தேவியாவாள். பிரதிஷ்டா சாரோத்தரம் இவள் நீல நிறம் கொண்ட ஆமை வாகனத்தில் கத்தியையும், சக்கரத்தையும் ஏந்திப் பவனி வருபவள் என்று குறிப்பிடுகிறது. இந்திய மரபில் ஆமை மந்திர சாஸ்திரங்களின் குறியீடாக விளங்குகிறது. மந்திரங்களை ஜபிப்போர் ஆமை வடிவில் அமைந்த கூர்மாசனத்தில் அமர்ந்து ஜபம் செய்தால் அது விரைவில் பலன் அளிக்குமென்பது நம்பிக்கை. இவள் பெயர் அனைவரையும் வசியப்படுத்துவதைக் குறிப்பிடுகிறது.

ஆமை வாகனம் மந்திரமாகிய ஓடுக்கள் நாம் பத்திரமாக இருப்பதையும், கத்தி தீயசக்திகளிலிருந்து நம்மை காத்துக் கொள்வதையும், சக்கரம் நாம் ஓயாது திரும்பத் திரும்ப மந்திரங்களை உச்சரிப்பதையும் குறிப்பிடுகின்றன என்பர். இவளை மந்திர சாஸ்திரத்தின் தலைவியாகக் குறிக்கின்றனர். சுவேதாம்பர நூலான ஆசார்ய தினகரம் இவள் வஜ்ராயுதமும் கோலும் ஏந்தியவளாகவும், மற்றொன்று வரத முத்திரை, உலக்கை, அபய முத்திரை, வஜ்ரம் ஏந்தியவளாகவும் குறிப்பிடுகின்றன. இந்த நூல்களில் இவள் தாமரையில் வீற்றிருப்பவளாகக் குறிப்பிடப்பட்டுள்ளாள்.

10. கெளரி

பத்தாவது வித்யாதேவியாகப் போற்றப்படுபவள் கெளரிதேவி. இவளைத் திகம்பர நூல் தங்கத்தாமரைகளை ஏந்தி முதலை வாகனத்தில் வருபவளாகக் குறிப்பிடுகிறது. சுவேதாம்பர ஆசார்ய தினகரம் இவளை வரதமுத்திரை, ஜபமாலை, உலக்கை, நீரல்லி ஆகியவற்றை ஏந்தியவளாகக் குறிக்கிறது. இரு நூல்களிலும் இவள் முதலை வாகனத்தில் வருபவளாகவே சித்தரிக்கப்படுகிறாள். நீர் சம்பந்தமான ஆற்றலைப் பயன்படுத்தும் கலைகளின் தேவியாக இவள் போற்றப்படுகிறாள்.

11. மகாஜ்வாலா (எ) ஜ்வாலாமாலினி

ஜ்வலிக்கும் (ஒளி வீசும்) மாலைகளை அணிந்திருப்பதால் இவள் ஜ்வாலாமாலினி எனவும், ஒளி பொருந்திய மேனியள் ஆனதால் மகாஜ்வாலா எனவும் அழைக்கப்படுகிறாள் இந்தப் பதினோராவது வித்யாதேவி. பிரதிஷ்டா சாரோத்தரம் இவளை வில், கேடயம், கத்தி, சக்கரம் ஏந்தி எருமை வாகனத்தில் வருபவளாகச் சித்தரிக்கிறது. ஆனால், பின்னாளில் மேற்குறித்த ஆயுதங்களுடன் சங்கு, அம்பு, தாமரை, கனி ஆகியவற்றையும் இணைத்து எட்டுக் கரங்களுடன் இவளுடைய திருவுருவங்கள் செய்யப்பட்டுள்ளன. வெற்றியைத் தரும் விஜயதேவியாக இந்த வித்யாதேவியை வணங்குகின்றனர். ஆசார்ய தினகரம் பூனை வாகனத்தில் எண்ணற்ற ஆயுதங்களை ஏந்திப் பவனி வருகிறாள் என்று குறிக்கிறது. நிர்வாண கலிகா இவள் எண்ணற்ற படைக்கலன்களை ஏந்தி, ஆண் காட்டுப் பன்றியின் மீது அமர்ந்து வருபவளாகக் குறிப்பிடுகிறது. பெயருக்கு ஏற்பச் சிரசின் மீது தழல் முடி உள்ளது.

12. மானவி


பன்னிரண்டாவது வித்யாதேவியான மானவி நீலநிறம் கொண்டவள். எனவே நீல சரஸ்வதி என்று அழைக்கப்படுகின்றாள். பிரதிஷ்டா சாரோத்தரம் இவள் சூலாயுதம் ஏந்திப் பன்றியின் மீது பவனி வருகிறாள் என்று குறிப்பிடுகிறது. பின்னாளில், திரிசூலத்துடன் கத்தி, தாமரை, மீன் ஆகியவற்றையும் ஏந்தியவளாக அமைத்தனர். மீன் செல்வத்தின் அடையாளமாகும். செல்வத்தை அடையும் கலைகள், அதைக் காக்கும் கலைகள் மற்றும் நிலையாக அனுபவிக்கும் கலைகளின் தேவியாகவும் இவள் கருதப்படுகிறாள்.

13. வைரோடி


பாம்புகளுடன் காணப்படும் வைரோடி யோக சாத்திரங்கள் தொடர்பான கலைகளின் தேவியாகக் கருதப்படுகிறாள். இந்திய மரபில் பாம்புகள் யோகத்தினைக் குறிக்கும் சின்னம் என்பது இங்கே கருதத்தக்கது. பிரதிஷ்டா சாரோத்தரம் இந்தத் தேவியை சிங்க வாகனத்தில் பாம்புகளை ஏந்தி அபைய முத்திரையோடு விளங்குகிறாள் என்று குறிக்கிறது. சில நூல்களில் மேல் இரண்டு கைகளில் பாம்புகளையும் முன்னிரண்டு கைகளைக் குவித்து அஞ்சலி செய்து கொண்டு இருக்கிறாள் என்று கூறுகின்றன. இவள் இளங்கறுப்பு வண்ணம் உடையவள். நிர்வாணகலிகா இவளைப் பாம்பு வாகனத்தில் மேற்கரங்கள் இரண்டில் பாம்புகளும், கீழ்க்கரங்களில் கத்தியும், கேடயமும் கொண்டவளாக குறிப்பிடுகிறது.

14. அச்யுப்தா

அச்யுப்தா பதினான்காவது வித்யாதேவி ஆவாள். திகம்பர, சுவேதாம்பர இரு நூல்களிலும் இவளுக்குக் குதிரை வாகனம் கூறப்பட்டுள்ளது. பிரதிஷ்டா சாரோத்தரம் இவள் வாளாயுதம் ஏந்தியுள்ளதாகக் குறிப்பிடுகிறது. பின்னர் குறித்த பிரதிஷ்டா நூல்களில் இவள் கத்தி, வஜ்ரம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கிக் கீழ்க் கரங்களைக் கூப்பியுள்ளவளாகக் குறிக்கப்பட்டுள்ளாள். சுவேதாம்பர நூலான ஆசார்ய தினகரம் வில், கத்தி, கேடயம், அம்பு ஏந்தியவளாக இவளைச் சித்தரிக்கிறது. வீரம், தைரியம், செல்வம் ஆகியவற்றின் தேவதையாக இவள் விளங்குகிறாள்.

15. மானசி

மானசி பதினைந்தாவது வித்யா தேவியாவாள். மானசிக்கு ஆயுதங்கள் குறிக்கப்படவில்லை. பாம்பு வாகனம் கொண்டவள் என்று குறிக்கப்படுகிறாள். சுவேதாம்பர நூல்களில் இவளுக்கு இரண்டு வகையான வடிவங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆசார்ய தினகரம் இவள் வரத முத்திரையும், வஜ்ராயுதமும் கொண்டு அன்னவாகனத்தில் வருபவளாகக் கூறுகிறது. நிர்வாண கலிகா இவள் சிங்க வாகனத்தில் மேற்கரங்களில் வஜ்ராயுதங்களோடு கீழ்க்கரங்களில் வரத முத்திரை - ஜபமாலை கொண்டவளாகத் தெரிவிக்கிறது.

16. மகாமானசி

பதினாறாவது வித்யாதேவியாகப் போற்றப்படுபவள் மகாமானசி. இவளைப் பிரதிஷ்டா சாரோத்தரம், ஜபமாலை, வரதமுத்திரை, அங்குசம், மலர் மாலை ஏந்தி அன்னவாகனத்தில் வலம் வருபவளாகக் கூறுகிறது. நிர்வாண கலிகா. இந்தத் தேவி வெண்மை நிறத்துடன் சிங்க வாகனத்தில் வரத முத்திரை, கத்தி, கமண்டலம், கலப்பையை ஏந்தி வருபவளாகக் குறிப்பிடப்படுகிறது.  சரஸ்வதியுடன் பதினாறு வித்யாதேவிகளும் மிகவும் சிறப்புடன் போற்றப்பட்டு வந்துள்ளனர். தென்னாட்டுப் பூஜை முறைகளிலும் வித்யாதேவிகளைப் பூஜிக்கும் மந்திரங்கள் உள்ளன. உருவமற்ற நிலையில் சரஸ்வதியுடன் வித்யாதேவிகளைச் சக்கர வடிவங்களாகவும் அமைத்து வழிபடுகின்றனர். இத்தகைய வித்யாதேவிச் சக்கரங்களைத் தென்னாட்டுக் கோயில்களில் காண்கிறோம். சரஸ்வதியை மனதில் நிறுத்தி தியானிப்போம். கலைகளை கைமேல் நெல்லிக் கனியாகப் பெறுவோம்.

- பூசை.ச. அருணவசந்தன்
ஓவிய வண்ணம்: வெங்கி