ஞானத் திரளாய் நின்ற பெருமான்



கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள் : திருவண்ணாமலை

பெரும்பாலான சிவாலயங்களின் கருவறை அமைந்திருக்கும் விமானத்தின் பின்புறம் திகழும் கோஷ்டம் எனப்பெறும் மாடத்துள் அண்ணாமலையார் திருவுருவம் இடம் பெற்றிருக்கும். சோதிச் சுடர்களுடன் லிங்கபாணம் திகழ அதன் மையப்பகுதியில் முழங்கால் வரை மட்டுமே தெரியும் வண்ணம் மான், மழு ஏந்தியவராக அருட்பாலிக்கும் சிவபெருமானின் திருவுருவம் காணப்பெறும். அதே பாணத்தின் கீழே பன்றி முகமும் மனித உடலும், சங்கு சக்கரங்கள் ஏந்திய நிலையில் பூமியை அகழ்ந்து செல்லும் கோலத்தில் வராகராக திருமாலும், மேலே நான்முகன் விரிந்த சிறகுகளுடன் திகழும் மனித உருகொண்டோ அல்லது

அன்னத்தின்மீது நான்முகனாக அமர்ந்தவாரோ அல்லது முழு அன்ன வடிவமாக மட்டுமே பறந்து செல்வதாக அமைந்த உருவங்களில் ஒன்று காணப்பெறும். சில சிற்பங்களில் லிங்க பாணத்தின் உச்சியில் மலர் மாலை சூட்டப் பெற்றிருக்கும். சில காட்சிகளில் பறக்கும் அன்னத்திற்கு மேலாக விண்ணிலிருந்து கீழே இறங்கும் தாழம்பூ காணப்பெறும். இவ்வாறு பல வகைகளில் கோஷ்ட மூர்த்தம் திகழ சில ஆலயங்களில் பக்கச் சுவர்களில் ஒருபுறம் பிரமனும், ஒருபுறம் திருமாலும் தங்கள் முழு வடிவத்துடன் நின்றவாறு சோதி வடிவாகத் திகழும் நெடுந் தூணாகிய லிங்கபுராண தேவரைப் போற்றித் துதித்து நிற்பர். லிங்க புராண தேவர் காட்சி கொடுத்த திருத்தலம்தான் திருவண்ணாமலை.

அண்ணா என்ற சொல் நெருங்க இயலாதது எனப் பொருள்படும். மாயவனும், நான்முகனும் நெருங்க முடியாதவாறு அனற்பிழம்பாய்,  அடிமுடி காண முடியாத பெருந்தூணாய் பெருமான் காட்சி கொடுத்ததால்தான் லிங்கபுராணத் தேவரை அண்ணாமலையார் எனக் குறிப்பிடுகின்றனர் பதினெண் புராணங்களுள் ஒன்றாகிய சிவமகாபுராணத்தின் ஞானசம்ஹிதையில் முதலாவதாக ஜோதிலிங்கம் தோன்றிய புராணம் கூறப்பெறுகின்றது. பிரமனும் திருமாலும் தம்முளே யார் பெரியவர் என வாதம் செய்தபோது அவர்களையும் தாண்டி மூன்றாம் ஒரு பரம்பொருள் உளது என்பதை அவர்கள் அறிய முற்பட்டபோது அதன் அடிமுடிகாண பிரமன் அன்னமாகவும்,

திருமால் சுவேத வராகமாகவும் (வெண் பன்றி) விண்ணிலும் மண்ணிலும் தேட முயன்றபோது, அவர்கள் முயற்சி தோல்வியுறவே சிவபெருமான் அவர் முடி காண முடியாத சோதி வடிவப் பெருந்தூணில் தன் உரு காட்டி அவர்களுக்கு அருளிய திறத்தைத்தான் இப்புராணம் உரைக்கின்றது. திருஞானசம்பந்தப்பெருமானார் தம் பதிகங்கள் தோறும் ஒரு பாடலில் இப்புராணம் பற்றி சுட்டியுள்ளார். அப்பரடிகளும் சுந்தரரும் தம் பனுவல்களில் ஆங்காங்கே அடிமுடி தேடிய படலத்தின் சிறப்புரைக்கின்றனர். குறிப்பாக திருநாவுக்கரசு பெருமானார் லிங்கபுராண திருக்குறுந்தொகை எனப் பாடிய பதிகத்தின் பதினொராம் பாடலில்,

செங்கணானும் பிரமனும் தம்முளே
எங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலார்
இங்கு உற்றேன் என்று லிங்கத்தே
தோன்றினான்
பொங்கு செஞ்சடைப் புண்ணிய
மூர்த்தியே

என இப்புராணத்தின் பிழிவினைத் தந்துள்ளார். எல்லா மரபு அரசர்களும் தாங்கள் எடுத்த கோயில்களில் அண்ணாமலையாரின் வடிவத்தை கல்லில் வடித்து அழகு பார்த்து போற்றியுள்ளனர். ஆனால், ராஜராஜ சோழனின் தேவியான அபிமானவல்லி என்பார் தஞ்சைப் பெரியகோயிலில் லிங்கபுராண தேவரை செம்பில் வடித்து போற்றி பரவினாள். அது பற்றிய தஞ்சைக் கோயில் கல்வெட்டு பின்வருமாறு உரைக்கிறது. ஸ்வஸ்திஸ்ரீ உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் தேவியார் அபிமானவல்லியார் உடையார் யாண்டு இருபத்தொன்பதாவது வரை எழுந்தருள்வித்த செப்புத் திருமேனி உடையார் கோயிலில் முழத்தால் அளந்தும் ரத்னங்கள் சரடு நீக்கி தக்ஷிணமேரு விடங்கன் என்னும் கல்லால் நிறை எடுத்துங் கல்லில் வெட்டின,

பீடத்துக்கு மேல் சிரோவர்த்தனை யளவுஞ்செல்ல இருபத்தொரு விரலேய் ஆறு தோரை உசரத்து ஒரு முழமேய் பதினொரு விரலே இரண்டு தோரை சுற்றில் எழுந்தருள்வித்த லிங்கபுராணத் தேவர் திருமேனி ஒருவர். இவரொடுந் தோற்றமாகச் செய்து நின்ற ஜங்கைக்கு மேல் கேசாந்தத்தளவுஞ் செல்ல பன்னிரு விரலே நாலு தோரை உசரத்து நாலு ஸ்ரீஹஸ்தம் உடையராகக் கனமாகச் செய்த திருமேனி ஒருவர். லிங்கத்தோடுங் கூடச் செய்த ஏழுவிரல் உசரத்து நாலு ஸ்ரீஹஸ்தம் உடையராகக் கனமாகச் செய்த பிரமர் ஒருவர். லிங்கத்தோடுங் கூடச் செய்த ஏழு விரல் உசரத்து நாலு ஸ்ரீஹஸ்தம் உடையராகக் கனமாக வராக முகத்தோடுஞ் செய்த விஷ்ணுக்கள் ஒருவர்.

இருமுழமே பதினால் விரலே நான்கு தோரை சுற்றில் அறுவிரலே நான்கு தோரை உசரத்து பத்மபீடம் ஒன்று. இதனோடுங்கூடச் செய்த மூவிரலே நான்கு தோரை நீளத்து ஒருவிரலேய் நான்கு தோரை அகலத்து ஒருவிரல் உசரத்து கோமுகம் ஒன்று. இவர்க்கு குடுத்தன. தாழ்வடம் ஒன்றிற் கோத்த புஞ்சை முத்து நானூற்றி முப்பத்தினால் நிறை கழஞ்சரையே இரண்டு மஞ்சாடியுங் குன்றிக்கு விலை காசு கால், தாழ்வடம் ஒன்றிற்கோத்த புஞ்சை முத்து எண்ணூற்றெண்பத்தேழினால் நிறை முக்கழஞ்சரைக்கு விலை காசு அரை என்பதே கல்வெட்டு வாசகமாகும். கச்சிப்பேட்டு திருவேகம்பத்தில் திருப்பதிகம் பாடிய திருஞானசம்பந்தர்,

பேணி ஓடு பிரமப் பறவையே
பித்தன் ஆன பிரமப் பறவையே

என்று பிரமனைப் பறவையாகவே சுட்டிக் காட்டியுள்ளார். மாமன்னன் ராஜராஜ சோழன் எடுத்த தஞ்சை ராஜராஜேச்சரத்து ஸ்ரீவிமானத்து மேற்கு திசை கோஷ்டங்கள் ஒன்றினுள் லிங்கபுராணத் தேவரின் திருமேனி கற்சிற்பமாக இடம்பெற்றுள்ளது. சோதி வடிவான லிங்கத்தூணின் நடுவே நான்கு திருக்கரங்களுடன் அடிமுடி காட்டா வண்ணம் சிவபெருமான் நின்றருள லிங்க பாணத்தின் மேற்பகுதியில் நான்முகன் முழு மனித உருவில் இரு சிறகுகளுடன் பறந்து மேலே செல்லும் வண்ணம் காணப் பெறுகின்றார். லிங்க பாணத்தின் கீழ்ப்பகுதியில் மனித உடலும் பன்றித் தலையும் கொண்ட நாரணன் பூமியை தன் இரு கரங்களால் அகழ்ந்த வண்ணம் கீழ்நோக்கிச் செல்கின்றார்.

இந்த லிங்க புராண சிற்பத்தில் அயன் பிரமப் பறவையாகக் காணப் பெறுகின்றார். அரிசிற்கரைபுத்தூர் போன்ற சிவாலயங்களில் பறந்துசெல்லும் அன்னத்தின் (வாத்து) முதுகின்மேல் ஒரு முகத்துடன் பிரம்மன் அமர்ந்துள்ளார். கீழாகப் பன்றி முகத்துடனும் மனித உருவத்துடனும் திகழும் மால் தன் இரு கரங்களால் பூமியை அகழ்ந்து செல்கின்றார். இங்கு அன்னம் பிரமன் ஏறிய பறவையாகக் காட்சி நல்குகின்றது.

திருமுருகன்பூண்டி, அவிநாசி போன்ற பல கோயில்களில் பிரமன் அன்னப்பறவை வடிவிலேயே காட்சி நல்குகின்றார். திருஞானசம்பந்தப் பெருமானார் தம் திருப்பதிகப் பாடல்கள் மூன்றில் மிக அரிதான ஒரு செய்தியைப் பதிவு செய்துள்ளார். திருமறைக்காட்டில் அப்பரடிகளின் திருப்பதிகத்தால் மறைக்கதவம் திறக்கப்பெற்ற பின்பு மீண்டும் அக்கதவினை அடைக்க திருஞானக் குழந்தையார் பாடிய சதுரம் மறைதான் எனத் தொடங்கும் பதிகத்தின் ஒன்பதாம் பாடலில்,

கோன் என்று பல்கோடி உருத்திரர் போற்றும்
தேன்அம் பொழில்சூழ் மறைக்காட்டு உறைசெல்வா
ஏனம் கழுகு ஆனவர் உன்னை முன்என்கொல்
வானம்தலம் மண்டியும் கண்டிலா ஆறே

- என்று பாடி பிரமன் கழுகு உருவம் எடுத்த திறம் உரைத்துள்ளார். மீண்டும் திருமுதுகுன்றத்தில் பாடல் பத்தும் உரைக்கும்போது

பூ ஆர்பொன் தவிசின்மிசை இருந்தவனும்
பூந்துழாய் புனைந்தமாலும்
ஓவாது கழுகு ஏனம் ஆய் உயர்ந்து ஆழ்ந்து
உறநாடி உண்மை காணாத்
தே ஆரும் திருவுருவன் சேரும்மலை
செழுநிலத்தை மூட வந்த
மூவாத முழங்கு ஒலிநீர் கீழ்தாழ
மேல் உயர்ந்த முதுகுன்ற(ம்)மே

- என்ற பாடலை உரைத்து பிரமன் கழுகு உருவம் எடுத்து லிங்கபுராணனின் திருமுடியைத் தேடினார் என்பதை வலியுறுத்தியுள்ளார். மீண்டும் திருவையாற்றில்,

பருத்து உரு அது ஆகிவிண் அடைந்தவன்ஓர் பன்றிப்
பெருத்த உரு அது ஆய் உலகு இடைந்தவனும் என்றும்
கருத்து உரு ஒணா வகை நிமிர்ந்தவன் இடம்கார்
வருத்துவகை நீர் கொள்பொழில் வண் திரு ஐயாறே

எனப்பாடி பிரமன் பருத்துஉரு (பருத்து = கழுகு) எடுத்து விண் அடைந்தான் என்பதையும் பதிவு செய்துள்ளார். திருநள்ளாற்றையும், திருஆலவாயையும் இணைந்து வினாவுரைப் பதிகமாகப் பாடிய சம்பந்தப் பெருமானார் ஒன்பதாம் பாடலில்,

பணி உடை மாலும் மலரினோனும்
பன்றியும் வென்றிப் பறவையாயும்
நணுகல் அரிய நள்ளாறு உடைய
நம்பெருமான் இதுஎன்கொல் சொல்லாய்

- என்ற வினாவினை எழுப்பியுள்ளார். இங்கு வென்றிப்பறவை என அவர் சுட்டுவது வெற்றி தரக்கூடிய கழுகையே குறிப்பதாகும். தாராசுரத்து ஐராவதீஸ்வரர் திருக்கோயிலின் (ராசராசேச்சுரம்) ஸ்ரீவிமானத்து மேற்குப்புற கோஷ்டத்தில் லிங்கோத்பவர் திருமேனியும், பக்கச் சுவர்களில் திருமாலும் பிரமனும் கைகூப்பி வணங்கும் கோலத் திருமேனிகளும் காணப்பெறுகின்றன.

சோதி வடிவாய் லிங்கத் தூணின் நடுவே நான்கு திருக்கரங்களுடன் ஈசனார் நிற்க மேற்புறம் ஒரு பகுதியில் பறந்து வரும் கழுகின் வடிவம் காணப்பெறுகின்றது. கீழே ஒருபுறம் திருமால் வராக முகத்தோடும் நான்கு திருக்கரங்களுடனும் பூமியை அகழ்ந்து செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது. சம்பந்தப்பெருமான் அரிதினும் அரிதாகச் சுட்டிக்காட்டும் கழுகு வடிவெடுத்த பிரம்மனின் கோலத்தை அரிதினும் அரிதாகிய இச்சிற்பத்தில் மட்டுமே காண இயலுகின்றது.

- முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்