பெரிதிற்கும் பெரிதானவன்...!



கங்கை கொண்ட சோழபுரம்

இந்தப் பிரபஞ்சமே கடவுள்தான். அதில் மாற்றுக் கருத்து ஏதும் சொல்ல முடியாது. பிரபஞ்சத்தை கடவுளாக எல்லாரும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்குமென்றால் அது கேள்விக் குறிதான். பிரபஞ்சத்திற்குள்  அடங்கும் அனைத்திற்கும் அழிவு உண்டு. ஒன்று அழிந்து மற்றொன்றை உருவாக்குகிறது. படைப்பும், அழிவும் பிரபஞ்சத்தின் இயல்பு. அதற்குள்தான். அத்தனைக்கும் இயக்க சக்தியை யார் கொடுப்பது? எங்கிருந்து அது பெறுகின்றது என்பது பெரும் புதிர்.  புரிந்தவருக்கு எவ்விடத்திலும் நிறைந்திருக்கும் காற்றைப்போல் அந்தப் பரம்பொருளின் சக்தியை உணர முடியும்.

புரிந்தும் புரியாமலும் ஒரு குழப்பத்திலேயே பலர் அவரைப் பார்த்துவிட்டு நகர்ந்து விடுகின்றோம். சரி, எத்தனை பிரமாண்ட கோயில்களை உருவாக்கினாலும் அந்தப் பிரமாண்டத்தை விட பிரமாண்டமாய் அவர் இருப்பார். நாம் அப்பெரும் அருவுருவான சக்தியையே  அழகூட்டி, ஆராதித்துத் கொண்டிருக்கிறோம்.  அதாவது, மனதால் வரையறுக்க முடியாததை நம் மனதிற்குள் கொண்டு வந்து பக்தி புரிகின்றோம். அப்பேற்பட்ட  இப்பெரும் சக்தியை எவ்வாறு வரையறை செய்வது என்பதைத்தான் இந்தச் சிற்பங்கள் நமக்குச் சொல்கின்றன.

இறைவன் எப்பேற்பட்ட சக்தி பொருந்தியவர், எப்படிப்பட்ட உருவம் கொண்டவர் என்பதை இந்த சிற்பத்தின் காலில் இருந்து உற்றுப் பார்த்தால் நமக்கு எச்சரிக்கையோடு கதை சொல்லி உள்ளே அனுப்புவார், இந்த கங்கை கொண்ட சோழபுரத்து துவாரபாலகர். நாம் வாழும் பூமியில் மிகப்பெரிய அதுவும் உருவத்திலும். தன் பலத்திலும் பிரமாண்டமாய் இருக்கக் கூடிய விலங்கு யானைதான்/ அதை விழுங்கக் கூடிய பாம்பு அதை விடப் பன்மடங்கு பெரிதாக இருக்கிறது. நாம் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாத அந்த விலங்கானது யானையை விழுங்குகிறது. அந்த பாம்பைத் தாங்கி நிற்கும் மரம் அதை விடப் பன்மடங்கு பெரியது.

கற்பனையில் கூட நம் வாய் பிளக்க வைக்கும் உருவமும் அதனைத்  தாங்கும் சக்தியும். அந்த மரத்தை தன் காலடியில் வைத்திருக்கும் வாயில் காவலரின் கால் அதை விடப்  பன்மடங்கு பெரியது. அந்தக் காலின் கீழ் நடக்கும் நிகழ்வு ஒரு சிறியது போன்று வடித்து துவாரபாலகரின் உருவத்தைப் பன்மடங்கு பெருக்கி வடித்துள்ளனர். நாம் அவரின் காலின் கீழிருந்து நடக்கும் சம்பவங்களை கவனித்து கொஞ்சம் கொஞ்சமாக நம் பார்வையை மேல்நோக்கி நகர்த்தினால்  நம் புருவத்தை உயர்த்தும் அளவிற்கு அவர் விஸ்வரூபமாய் இருப்பார்.

இதையெல்லாம் கவனித்து முடித்தபிறகு நம் மனதில் இருக்கும் ஆணவம், தலைக்கனம் எல்லாம் அழித்துவிட்டு நிற்பார் அவர். அதன் பிறகு உருவாகும் பணிவு, பக்தி என்னால் எதுவும் இல்லை எல்லாம் உன்னால் என்று எண்ணம் பிறக்கும். அதுவே அன்பின் இருப்பிடம். பக்திக் கதவிற்கான திறவுகோல்.  அப்பெரும் நாயகனே உள்ளே இருப்பவன்.  அவன் ஒருவனே.  அவனே இந்த பிரபஞ்சம் முழுதும் விஸ்வரூபமாக வியாபித்திருக்கிறான் என்று துவாரபாலகர் உள்ளிருக்கும் ஈசனை பணிவோடு வணங்கச் சொல்லி தம் இரு விரல்களால் சுட்டுகின்றார்.

- ரமேஷ் முத்தையன்