நந்தி என்பது ரிஷபமல்ல, சிவபெருமானே!கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள் : கோனேரிராஜபுரம்

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அருளாளர்களான திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், காவிரியின் தென்கரைத் தேவாரத் தலங்கள் வரிசையில் ஒன்றெனத் திகழும் திருநல்லம் எனும் திருத்தலத்திற்குச் சென்று இரு பதிகங்களைப் பாடிப் பரவியுள்ளனர். நாவுக்கரசர் எனும் அப்பர்பெருமான் அவர்தம் பதிகத்தில் “உமைக்கு நல்லவன் தான் உறையும்பதி நமக்கு நல்லது நல்லம் அடைவதே” என்றும்,
   
    அல்லலாக ஐம்பூதங்கள் ஆட்டினும்
    வல்லவாறு சிவாயநம என்று
    நல்லம் மேவிய நாதன் அடிதொழ
    வெல்லவந்த வினைப்பகை வீடுமே
 
என்றும், “நல்லம் நல்லம் எனும் பெயர் நாவினால் சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே” என்றும் பாடிப் பரவியுள்ளதை நோக்கும்போது திருநல்லம் எனும் அப்பதியின் பெருமையை நாம் அறிவோம்.
    
    அந்திமதியோடும் அவரச் சடைதாழ
    முந்தி அனல் ஏந்தி முதுகாட்டுஎரி ஆடி
    சிந்தித்து எழவல்லார் தீராவினை தீர்க்கும்
    நந்தி நமை ஆள்வான் நல்லம் நகரானே
 
என்பது சீகாழிப் பிறந்த ஞானக் குழந்தையின் திருவாக்கு. நந்தியாகிய நமசிவாயம் உறைகின்ற நல்லம் எனும் திருவூரின் நலமாற் சிறப்புகளை இனிக் காண்போம். சிவாலயங்களுக்குச் செல்லுகின்ற நாம் திருக்கோயில்களின் முன்றிலில் கிடக்கும் சிவபெருமானின் ஊர்தியாகிய காளையை ‘நந்தி’ என்று குறிக்கின்றோம். தமிழ்நாட்டு மரபுப்படி, இது பிழைபடும் கூற்றாகும். ‘நந்தி நாமம் நமசிவாய’ என்பது திருஞானசம்பந்தரின் வாக்கு. நக்கன், நந்தி என்ற சொற்கள் சிவபெருமானைக் குறிப்பிடுபவை. திருக்கயிலாயத்து வாயிலைக் காத்து நிற்பவர் அதிகாரநந்தி என்பவராவார்.

அவர் சிவனாரை ஒத்த தோற்றத்துடன் கைகளில் மான், மழு ஆகியவற்றை தரித்தவராக, மார்பில் உடைவாளை அணைத்த வண்ணம் இரு கரங்களையும் கூப்பியவராகத் திகழ்வார். சிவாலயங்களின் வாயிற் கோபுரங்களில் அவருக்கென தனித்த கோஷ்ட மாடம் திகழும். அதில் தன் தேவியோடு திகழும் அவரை வணங்கி, அனுமதி பெற்ற பின்புதான் கோயிலுக்குள் நுழைவது பண்டைய ஆலய வழிபாட்டு நெறியாகும். பின்னாளில் இம்மரபை மறந்த பலர் இடப தேவரை நந்தி என்ற பெயரால் குறிக்கத் தொடங்கியதோடு காளையாகத் திகழும் அவரை வழிபட்டு ஆலயத்திற்குள் நுழையும் வழக்கத்திற்கு உட்பட்டனர்.

எந்த ஒரு ஆகம நூலும், சிற்ப சாத்திர நூலும் இடபத்தை நந்தி என்ற பெயரால் குறிக்கவில்லை. திருமந்திரத்தில் திருமூலரும், தேவார மூவரும் சிவபெருமானையும், அதிகார நந்தியையும் மட்டுமே நந்தி எனக் குறிப்பிட்டுள்ளனர். திருநல்லத்து தேவாரப் பாடலும் இதற்கு சான்று பகர்கின்றது. திருநல்லம் எனும் இத்தேவாரத் தலம் தற்காலத்தில் கோனேரிராஜபுரம் என்ற பெயரால் குறிக்கப்பெறுகின்றது. சோழநாட்டில் கோனேரிராஜபுரம் என்ற பெயரில் இரண்டு ஊர்கள் உள்ளன. செந்தலைக்கு அருகில் கருப்பூர் கோனேரிராஜபுரம் எனும் சிற்றூரும்,

கும்பகோணம்காரைக்கால் சாலையில் திருநாகேஸ்வரத்தை அடுத்துத் திகழும் எஸ். புதூர் எனும் ஊரிலிருந்து பிரியும் சாலையில் ஒரு கி.மீ. தொலைவில் நல்லம் என அழைக்கப்பெற்ற இக்கோனேரிராஜபுரமும் உள்ளன. கி.பி. 15ம் நூற்றாண்டில் சோழநாட்டையும், தொண்டை மண்டலத்தையும் ஆட்சிபுரிந்த வைத்தியநாத காளிங்கராயன் எனும் கோனேரிராயன் என்ற மன்னவனின் பெயரால் இவ்விரு ஊர்களும் பெயர் மாற்றம் பெற்று நிலைபெற்றன. ராஜராஜ சோழன் காலத்தில் காவிரிக்கும் அரிசிலாற்றுக்கும் இடைப்பட்ட உய்யக்கொண்டார் வளநாட்டில் திகழ்ந்த வேணாட்டுப் பகுதிக்குள் திருநல்லம் திகழ்ந்தது.

இவ்வூரினை மேற்குறித்த எஸ். புதூரிலிருந்தும், திருவீழிமிழலைக்கு அருகிலுள்ள வடமட்டத்திலிருந்து செல்லும் சாலை வழியும் அடையலாம். ஊரின் நடுவே, பிரம்மதீர்த்தம் எனும் குளக்கரையில் உள்ள தலவிருட்சமான அரச மரத்தின் அருகே மேற்கு நோக்கியவாறு உமாமகேஸ்வரர் திருக்கோயில் என்ற தற்காலப் பெயரில் திருநல்லமுடைய மகாதேவர் கோயில் இடம்பெற்றுத் திகழ்கின்றது. இக்கோயில் காரணாகம வழி பூஜை நிகழும் ஆலயமாகும். அரச மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள் மிகு சிறப்புடையவையாகும்.

போதி எனப்பெறும் அரச மரம் உண்மையிலேயே மரங்களுக்கெல்லாம் அரசனாகத் திகழும் தகைமை பெற்றதாகும். திருவாவடு துறையில் போதி மரத்தின் கீழிருந்து சிவஞானம் பெற்ற திருமூலர், சேர்ந்திருந்தேன் சிவபோதியின் நிழலில் சேர்ந்திருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே என திருமந்திரத்தில் குறிப்பிடும் பாங்கால் சிவ போதிமரத்தின் சீர்மையை நாம் உணரலாம். அத்தகு சிவபோதியின் நீழலில்தான் திருநல்லமுடையார் திருக்கோயில் விளங்குகின்றது. கருவறையில் மூலவர் லிங்க வடிவில் சதுர பீடத்தின் மேல் காணப்பெறுகின்றார்.

இவரை 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப் பாடல்களும், சோழர் கல்வெட்டுகளும் நல்லம் நகரான், நல்லமுடையார், திருநல்லமுடைய மகாதேவர், ஆதித்தேஸ்வரமுடைய மகாதேவர் எனப் பல பெயர்களில் குறிப்பிடுகின்றன. பிற்கால மரபில் உமாமகேஸ்வரர், பூமீஸ்வரர், பூமிநாதர் என்ற பெயர்களால் குறிக்கப்பெறுவதோடு இறைவி தேகசௌந்தரி, அங்கவளநாயகி என்ற திருநாமங்களால் அழைக்கப்பெறுகின்றாள். அம்பிகையின் தனித்த ஆலயம் வடபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் திருக்கோயில் கோஷ்டங்களில் ஆலமர்செல்வர், திருமால்பிரம்மனோடு லிங்கோத்பவர்,

பிரம்மன் ஆகியோரின் எழிலார்ந்த சிற்பங்களும், அர்த்த மண்டப கோஷ்டங்களில் அகத்தியர், கணேசர், நடராஜர், பிட்சாடணர், துர்க்கை, அர்த்தநாரி ஆகிய அழகுத் திருமேனிகளும் கலைக்கருவூலமாகக் காட்சி நல்குகின்றன. முதல் திருச்சுற்று, இரண்டாம் திருச்சுற்று ஆகியவற்றில் எல்லா பரிவாராலயங்களும் காணப்பெறுகின்றன. இரண்டாம் திருச்சுற்றின் வடபுறம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வைத்தியநாதர் திருக்கோயில் எனப்பெறும் தனித்த சிவாலயம் கல்வெட்டுகளில் மதுராந்தக ஈஸ்வரம் எனக் குறிக்கப் பெற்றுள்ளது. நல்லமுடையார் திருக்கோயிலின் மகாமண்டபத்தின் வடபுறம்,

தெற்கு நோக்கியவாறு அமைந்த தனி அறையில் மிகப் பிரமாண்டமான ஆடல்வல்லான் திருமேனியும், சிவகாமசுந்தரியின் திருமேனியும் இடம்பெற்றுள்ளன. சோழர் கலையின் உச்சத்தைக் காட்டிடும் இவ்வழகிய திருமேனிகள் உலக கலை வல்லோரால் உச்சிமிசை வைத்துப் போற்றப்பெறும் தகைமை உடையவையாம். 1500 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவப் பேரரசர்கள் காலத்திலிருந்தே திகழ்ந்த பழம்பெரும் இவ்வாலயம் செங்கல் தளியாகவே இருந்திருத்தல் கூடும். இதனைக் கற்றளியாகப் புதுக்கியவர் சோழப் பேரரசி செம்பியன் மாதேவியார் ஆவார்.

இவர்தம் கணவர் சிவஞான செம்மல் கண்டராதித்தரின் மறைவுக்குப் பிறகு இவர் மைந்தன் மதுராந்தக உத்தம சோழரின் ஆட்சிக்காலத்தில் தன் கணவர் பெயரில் (கண்டராதித்த ஈஸ்வரம்) இதனைக் கருங்கற் கோயிலாக எடுப்பித்தார். அக்கோயிலையே இன்று நாம் காண்கின்றோம். பொதுவாகச் சோழர் காலத்துக் கற்கோயில்களை நாம் காணும்போது அவற்றின் கட்டிடக்கலை அழகு, அதில் பொதிந்துள்ள சிற்பங்களின் பேரழகு, அங்கு இடம்பெற்றுத் திகழும் செப்புத் திருமேனிகளின் கலைநயம், வரலாறு கூறும் கல்வெட்டுகள் ஆகியவற்றைக் கண்டு களிப்பெய்தலாம்.

அக்கோயில்கள் வரிசையில் செம்பியன்மாதேவியாரின் கொடையாக அமைந்த கோயில்கள் நம்மை வியப்பின் உச்சத்திற்கே இட்டுச் செல்லும் சிறப்பு பெற்றவையாம். அவர் படைத்த கோயில்கள் வரிசையில் திகழும் திருநல்லம் (கோனேரிராயபுரம்) கண்டராதித்த ஈஸ்வரத்தில் கண்டராதித்த சோழர்,  அக்கோயிலை செம்பியன் மாதேவியாரின் ஆணைக்கிணங்க எடுப்பித்த சாத்தன் குணபட்டன், சண்டீசர் கோயிலை கற்கோலியாக எடுத்த திட்டை வில்மொய்யன் போன்ற சிலர்தம் உருவச் சிலைகளை கல்வெட்டுக் குறிப்புகளோடு காணும்போது நமக்குக் கிட்டும்.

ஆயிரம் ஆண்டுகால வரலாற்று நிகழ்வுகளை எவ்வாறு சிற்பக் காட்சிகளோடு சோழப்பெருமன்னர்கள் பதிவு செய்துள்ளனர் என்பதை இங்கு கண்டு ஒவ்வொரு தமிழனும் பெருமிதம் கொள்ளலாம். கருவறையும் தென்புறச் சுவரில் ஒரு புடைப்புச் சிற்பக் காட்சியும், அதன்கீழ் சோழர்கால கல்வெட்டுப் பொறிப்பும் காணப்பெறுகின்றன. சிற்பக் காட்சியில் ஒரு சிவலிங்கத்திற்கு சிவாச்சாரியார் ஒருவர் மாலை அணிவிக்க, எதிரே சம்மணமிட்டு கைகளை கூப்பிய நிலையில் கண்டராதித்த சோழர் வழிபாடு செய்ய, பின்புறம் ஒரு அடியவர் சாமரம் வீச, ஒருவர் அமர்ந்த வண்ணம் ஒரு கையில் குடையை ஏந்தி மார்பில் அணைத்தபடி மறுகரத்தால் ஈசனைப் போற்றுகின்றார்.

இக்காட்சிக்கு கீழ்க்காணப்பெறும் கல்வெட்டில், “ஸ்வஸ்தி ஸ்ரீகண்டராதித்த தேவர் தேவியார் மாதேவடிகளாரான ஸ்ரீசெம்பியன் மாதேவியார் தம்முடைய திருமகனார் ஸ்ரீமதுராந்தக தேவரான ஸ்ரீஉத்தமசோழர் திருராஜ்யஞ் செய்தருளாநிற்கத் தம்முடையார் ஸ்ரீகண்டராதித்த தேவர் திருநாமத்தால் திருநல்லமுடையார்க்குத் திருக்கற்றளி எழுந்தருளுவித்து இத்திருக்கற்றளியிலே திருநல்லமுடையாரை திருவடி தொழுகின்றாராக எழுந்தருளுவித்த ஸ்ரீகண்டராதித்த தேவர் இவர்” என்ற பொறிப்பு காணப்பெறுகின்றது. இங்கு நாம் சோழப் பேரரசர் சிவஞான செம்மல் ஸ்ரீகண்டராதித்த சோழரையும், அவர் வணங்கும் திருநல்லமுடையாரையும் தரிசிக்கும் பேறு கிட்டுகின்றது.

கருவறை சுவரின் தென்புறம் சோழர் கால கல்வெட்டுப் பொறிப்பு ஒன்றும் அதன் ஊடே கீழ்புறம் வணங்கும் கோலத்தில் ஆண் ஒருவரின் புடைப்புச் சிற்ப உருவமும் காணப்பெறுகின்றன. அக்கல்வெட்டை நாம் படிக்க முற்படும்போது அதில் “ஸ்வஸ்தி ஸ்ரீமதுராந்தக தேவரான உத்தம சோழரைத் திருவயிறு வாய்த்த உடைய பிராட்டியார் திருக்கற்றளி எடுப்பித்த ஆலத்தூருடையான் சாத்தன் குணபத்தனான ஹரசரண சேகரன் இவர் பட்டங் கட்டின பேர் ராஜகேசரி மூவேந்தவேளார் இவர்” என்று சோழர் கால எழுத்தமைதியில் திகழ்வதைக் காண இயலுகின்றது.

இங்கு சிற்பமாகக் காணப்பெறுபவர்தான் திருநல்லமுடையார் கோயிலை, செம்பியன் மாதேவியாரின் ஆணைக்கிணங்க எடுப்பித்தவர். அவர் ஆலத்தூர் எனும் ஊரினர். சாத்தன் குணபத்தன் என்றும், ஹரசரண சேகரன் என்றும் அழைக்கப்பெற்றவர். மகத்தான கோயில் எடுத்த சாதனைக்காக அவருக்கு செம்பியன் மாதேவியார், “ராஜகேசரி மூவேந்த வேளாண்” என்ற பட்டத்தினை அளித்து கௌரவப்படுத்தியுள்ளார். இக்கோயில் இப்பூவுலகில் இருக்கும்வரை அவர்தம் கணவரின் திருவுருவத்தையும், கோயில் எடுப்பித்த மாமனிதரின் திருவுருவத்தையும் நல்லமுடையாரோடு உலக மக்கள் என்றென்றும் காண வேண்டும் என இவற்றை இடம்பெறச் செய்த செம்பியன் மாதேவியாரின் மாட்சிமையை யாரே அளவிடுதல் கூடும்!

இவ்வாலயத்து ஷண்டீசர் கோயிலை முதலாம் குலோத்துங்கனின் 15ம் ஆட்சியாண்டில் (கி.பி. 1085) புதுப்பித்தவர் திட்டை வில்மொழியான் எனப்பெறும் பிள்ளை அடையார் என்பாராவார். இச்செய்தியை கல்வெட்டாகப் பொறித்த இவர் அதே கல்வெட்டுக்களுக்கிடையே, தான் உருத்திராக்க மாலைகள் தரித்து நின்ற கோலத்தில் திருநல்லமுடைய மகாதேவ லிங்கத்தை வணங்குகின்றாராகவும், ஷண்டீசதேவர் அதே பெருமானை தரையில் மண்டியிட்டு அமர்ந்து வழிபாடு செய்கின்றாராகவும் புடைப்புச் சிற்பக் காட்சியாக அங்கு இடம்பெறச் செய்துள்ளார். திருக்கோபுரத்திலுள்ள ஒரு கல்வெட்டு, அக்கோபுரம் வேங்கிபுரம் முதலிப் பிள்ளையின் அறக்கொடையால் கட்டப்பெற்றது என்பதைக் கூறுகின்றது.

இக்கோயிலின் முகமண்டபத்தினை புகழாபரண மண்டபம் என மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டொன்று (கி.பி. 1194) கூறுவதோடு, மற்றொரு கல்வெட்டு, திருநடை மாளிகையை அருமொழிதேவன் வயநாட்டு அரையன் என்பான் எடுத்ததாகக் குறிப்பிடுகின்றது. சுத்தமல்லி வாய்க்கால் கரையில் இருந்த ‘ராஜேந்திர சோழன்’ எனும் புளிய மரத்தடியில் பாவைக்குடி ஊர் சபையோர் கூடி, திருநல்லமுடைய மகாதேவருக்கு நிலக்கொடை அளித்ததை முதலாம் ராஜாதிராஜ சோழனின் சாசனம் செப்புகின்றது. உத்தம சோழனின் சாசனங்களில் இக்கோயிலில் பணிபுரிந்த அனைத்து வகை ஊழியர்கள் பற்றியும் அவர்களுக்கு வீட்டு வசதி அளிக்கப்பெற்றது பற்றியும் குறிப்பிடுவதோடு,

அப்பேரரசன் அளித்த பெரிய அளவிலான நிலக்கொடைகள் பற்றியும் விளக்கமுற எடுத்துரைக்கப்பெற்றுள்ளன. இவ்வாலயத்து நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள முகமண்டப விதானத்தில் நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தீட்டப்பெற்ற வண்ண ஓவியக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அவ்வாலய விழாக்கள் பற்றிய காட்சிகளும், அவற்றைக் கண்டுகளித்த அப்பகுதி மாந்தர்தம் ஓவியங்களும், புராண வரலாற்றுக் காட்சிகளும் காணப்பெறுகின்றன. கண்ணுக்கு விருந்தளிக்கும் இனிமையான காட்சிகள் அவை. திருநாவுக்கரசு பெருமானார் தம் பதிகத்தில் குறிப்பிட்டவாறு, ‘நக்கன்சேர் நல்லம் நண்ணுதல் நன்மையே’ என்ற வாக்கு என்றும் பொய்த்ததில்லை.

- முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்