தடுக்கும் இரண்டு கொம்புகள்!வணக்கம் நலந்தானே!

‘எனக்கு எந்தக் கவலையும் இல்லை, வருத்தம் இல்லை, பிரச்னை இல்லை, வாழ்க்கை மிகவும் இனிமையாகப் போய்க் கொண்டிருக்கிறது. குறை ஒன்றும் இல்லை.’ இப்படிச் சொல்லக்கூடியவர் ஒருவரும் இருக்க முடியாதுதான். காரணம், இப்படி சலனமில்லாத ஆற்றொழுக்காய் வாழ்க்கை அமையுமானால் சாதனைகளுக்குதான் சந்தர்ப்பம் ஏது? சோதனைகள் இருந்தால்தான் சாதனைகளும் சாத்தியம். சாதனைகள் இல்லாத வாழ்க்கையில் சுவாரஸ்யமும் இருக்காது. அகங்காரம், அவநம்பிக்கை என்ற இரு கொம்புகளை உடைத்தெறிந்துவிட்டால் சோதனை, நிச்சயம் சாதனையாகிவிடும்.

இந்த வகையில் வாழ்க்கையை ரசனையுள்ளதாகத் தந்திருக்கும் இறைவனுக்கு நாம் நம் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்ள வேண்டும். ஒரு சிக்கலிலிருந்து மீண்டு வருவது, நமக்கான அனுபவம் மட்டுமல்ல, அதைப் பார்க்கக்கூடிய, கேள்விபடக்கூடிய பிறருக்கும் அது படிப்பினையாக அமையலாம். இந்த வாய்ப்புக்காகவும் நாம் இறைவனுக்கு நம் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்ளவேண்டும். சோதனைகளும், வேதனைகளும், குழப்பங்களும்தான் எத்தனை எத்தனை வகை!

‘எல்லா பிரச்னைகளும் எனக்கே வருகின்றனவே’ என்று யாராலும் அங்கலாய்த்துக் கொள்ள முடியாது. அவரவருக்கு அவரவர் பிரச்னை பிரதானமாகத் தெரியலாமே தவிர, ஒருவருடைய வலியை இன்னொருவரால் அனுபவிக்க முடியாது. இதுபோன்ற வாழ்வு முறையில்தான் சாதனைகள் களிப்பூட்டும் சாதனங்களாக அமைகின்றன. இதற்காகவும் நாம் இறைவனுக்கு நம் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்ளவேண்டும்.

மிகவும் அதிசயமாக, ‘வெறும் கற்பனை, சாத்தியப்படாது’ என்று முந்தைய காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டதெல்லாம், இப்போது உண்மையாகிவிடும் நேர்த்தியையும் நாம் உணர்கிறோம். தர்க்கத்துக்கு உள்ளானதாகவும், ஏற்றுக் கொள்ளவே முடியாததாகக் கருதப்பட்டதும், இப்போது ஒரு புது கண்டுபிடிப்பாக, பலருக்கும் பயனுள்ளதாக, ஒரு சாதனையாக மாறிவருவதையும் பார்க்கிறோம். அன்று மறுத்தது அகங்காரத்தால், அன்று ஒதுக்கியது அவநம்பிக்கையால். இன்று இந்த இரண்டு கொம்புகளையும் தகர்த்தெறிந்து அந்த மாயையிலிருந்து வெளிப்படுகிறோம், சாதனைகளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம்.

இதற்காகவும் நாம் இறைவனுக்கு நம் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்ளவேண்டும். ஓட்டப் பந்தயத்தில் ‘நான் மட்டும்தான் ஓடுவேன், எனக்கு போட்டி பிடிக்காது, என்னுடன் யாரும் போட்டியிட நான் அனுமதிக்க மாட்டேன்’ என்று வீம்பு காட்ட முடியுமா? அது பேதமை இல்லையா? நம்மைச் சங்கிலியாய் கட்ட முயலும் சோதனைகளைக் கொஞ்ச தூரம் இழுத்துச் சென்று, ஒரு கட்டத்தில் அந்த வியூகத்திலிருந்து விடுபட்டு எல்லைக் கோட்டை அடையும்போதுதானே சாதனை பூர்த்தியாகிறது! இப்படி ஒரு எண்ண வலிமையை, மன ஒருமைப்பாட்டை, உத்வேகத்தை அளிப்பது இறையருள்தானே! இதற்காகவும் நாம் இறைவனுக்கு நம் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்ளவேண்டும்.

- பிரபுசங்கர்
(பொறுப்பாளர்)