பிரார்த்திப்போம், வித்தியாசமாக!



வணக்கம் நலந்தானே!

சுயநலம் இல்லாத பிறவியே இருக்க முடியாது. அந்த சுயநலத்தையும் மீறி பிறர் நலனிலும் அக்கறை கொள்வதுதான் மனிதம். ஒருவருடைய வளர்ச்சி என்பது ஒவ்வொரு கட்டத்திலும் சமுதாயம் அவருக்கு அளித்திருக்கும் கொடை என்பதை யாராலும் மறுக்க முடியாது! அந்த சமுதாயத்துக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன்தான், மனித நேயம். தேவைப்படுவோருக்கு நன்மை பயக்கும் ஆலோசனை, அரவணைப்பு, உதவி, தொடர்ந்த ஆதரவு என்று வழங்குவதுதான் அத்தகைய மனித நேயம். தேவைகள் எத்தகையனவாகவும் இருக்கலாம், கோரிக்கைகளும் எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம், உதவிகளும், தீர்வுகளும் அத்தகையனவாகவே இருத்தல் நல்லது.

சுயம் இன்றி தனி மனித வாழ்வில்லை. நமக்கென்று ஒரு அடையாளம், வாழ்க்கை முறை என்பதோடு பிறர் நலன் சார்ந்தும் அந்த முறையை அமைத்துக் கொள்வதுதான் மனித நேயம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒருவருக்கோ அல்லது ஒரு நிறுவனத்துக்கோ நாம் உதவத் தயாராகத்தான் இருக்கிறோம். இந்தக் கட்டத்தில், ‘நம்மால் இயன்றவரை’ என்ற கட்டுப்பாடு, அந்த உதவியின் பரிமாணத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்யலாம். எதிர்பார்க்கப்பட்ட உதவியை அளிக்க இயலாமல் போனால், அது பெறுபவருக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம்.

இதுபோன்ற சம்பவங்களை நாம் நிறைய சந்தித்திருப்போம். ஒருவருடைய தேவையின் அளவுக்கு முழுமையாக நம்மால் உதவ முடிவதில்லை என்பதும் யதார்த்தம்தான். ஆனால், யாருக்காகவும் நாம் பிரார்த்தித்துக் கொள்ளலாம். நம் தினசரி பூஜை நேரத்தில் நாம் ஸ்லோகங்கள் சொல்வதும், மலரிட்டு இறைவனை அர்ச்சிப்பதும், நிவேதனம் படைப்பதும், கற்பூர ஒளியேற்றுவதும் இயல்பானவைதான் என்றாலும், உள்ளோட்டமாக நம் மற்றும் நம் குடும்ப நலனைக் காக்குமாறு இறைவனை வேண்டிக்கொள்வதும் இருக்கும்.

இந்த சந்தர்ப்பத்தில் நமக்குத் தெரிந்தவர்கள் மற்றும் நம் தொடர்பு வட்டத்திற்குள் வராதவர்கள் என்று யாருக்காக வேண்டுமானாலும் நாம் பிரார்த்தித்துக் கொள்ளலாம். நமக்கு வேண்டாதவராக நாம் கற்பித்துக்கொண்டவர்கள் நன்றாக வாழ்ந்துவிடக்கூடாது என்பதுபோன்ற எதிர்வினை பிரார்த்தனைகளுக்குக் கொஞ்சமும் இடம் கொடுக்காமல் இருப்போம். முயற்சித்துப் பார்ப்போம், பிறர் இன்னல்கள் தீரவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்ள ஆரம்பிப்போம். இதன் பலனாக, நிச்சயமாக, வெகு விரைவில், நம் பிரச்னைகள் என்று நாம் நினைத்துக்கொண்டிருந்தவை எல்லாம் நீர்த்துப்போய் நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். தன் ரட்சிப்பில் நாமும் பங்கு கொள்வது குறித்து இறைவன் பேருவகை கொள்வார். 

- பிரபுசங்கர்
(பொறுப்பாசிரியர்)