ஆலமரக் கட்டையில் ஆவிர்பவித்த அற்புதன்!



ஆந்திர மாநிலம் - வடாலி

மஹாவிஷ்ணுவின் முக்கியமான பத்து அவதாரங்களான தசாவதாரங்களைத் தவிர, கலியுகத்தில் மக்களைக் காப்பாற்றும் பொருட்டு ஸ்ரீமஹாவிஷ்ணு  திருமலை திருத்தலத்தில் திருவேங்கடவனாகவும், ஒடிஷா மாநிலம் புரி திருத்தலத்தில் ஜகந்நாதராகவும் தோன்றி மக்களைக் காத்து ரட்சித்து வருகிறார். பூலோக வைகுண்டமாகப் போற்றப்படும் திருமலை போன்றே புரி க்ஷேத்திரமும் மக்களால் வழிபடப்படுகிறது. இங்கு நடைபெறும் ரத யாத்திரை உலகப் பிரசித்தி பெற்ற உற்சவமாகத் திகழ்கிறது. திருவேங்கடவனுக்கு இந்தியா முழுவதும் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளதைப் போன்றே புரி ஜகந்நாதப் பெருமாளுக்கும் ஏராளமான ஆலயங்கள் உள்ளன.

புதுடெல்லி, ஆள்வார், கொல்கத்தா, அஹமதாபாத், மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகர்த்தலா, ராஞ்சி, ரெய்ச்சூர் போன்ற பல முக்கியமான நகரங்களில் உள்ள ஸ்ரீஜகந்நாத் ஆலயங்கள் பிரபலமானவை. வெளிநாடுகளிலும் ஜகந்நாத் ஆலயங்கள் அமைக்கப்பட்டு புரி ஆலயம் போன்றே ரத யாத்திரைகளும் நடைபெறுகின்றன. இந்த ஆலயங்களிலும் பலபத்திரர் (பலராமர்), சுபத்ரா (பலராமர் - கிருஷ்ண பகவானின் சகோதரி மற்றும் அபிமன்யுவின் தாய்), ஸ்ரீஜகந்நாதர் ஆகிய மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆண்டுதோறும் புரி போன்றே ரத யாத்ரா உற்சவம் நடைபெறுகிறது.

இஸ்கான் அமைப்பினரால் நிர்மாணிக்கப்படும் இத்தகைய அனைத்து ஆலயங்களிலும் புரியில் எழுந்தருளியிருக்கும் ஜகந்நாதர், பலபத்ரர் மற்றும் சுபத்ரா ஆகிய மூன்று மூர்த்திகளே பிரதானமாக எழுந்தருளி அருட்பாலிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சார்தாம் என்று போற்றப்படும் பத்ரிநாத், துவாரகா, புரி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய முக்கியமான யாத்திரைத் தலங்களில் ஒன்று, ஒடிஷா மாநிலத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள புரி ஜகந்நாத் மந்திர். திரேதா யுகத்தின் முடிவில் ஸ்ரீமஹாவிஷ்ணு புரித் தலத்தில் கடற்கரையில் ஓர் ஆலமரத்தின் கீழ் இந்திர நீலமணி எனப்படும் ஓர் அற்புதமான நவரத்தினக் கல்லில் எழுந்தருளி காட்சி தந்ததாக ஐதீகம்.

துவாபர யுகத்தில் இந்திரத்யும்னன் என்ற மன்னன் அதை அடையும் பொருட்டு மஹாவிஷ்ணுவை நோக்கித் தவம் செய்தபோது, அவர் தோற்றமளித்து, கடலில் மிதந்து வருகின்ற ஒரு மரக்கட்டையில் தான் ஆவிர்பவித்திருப்பதாகத் தெரிவித்து, அதை கரைக்குக் கொண்டு வந்து அதில் விக்கிரகம் செய்து வழிபடுமாறு அறிவுறுத்தினார். மன்னரும் அந்த மரத்தில் பலபத்திரர், ஜகந்நாதர், சுபத்ரா மற்றும் சுதர்ஸன சக்கரம் ஆகியவற்றை விஸ்வகர்மா மூலம் செய்வித்து, ஆலயம் கட்டி, பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக புரித்தல புராணம் தெரிவிக்கிறது. புரி ஆலயம் போன்றே சின்ன புரி என்று குறிப்பிடப்படும் அளவிற்கு பிரபலமான ஸ்ரீஜகந்நாதர் ஆலயம் ஒன்று ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், வடாலி கிராமத்தில் அமைந்துள்ளது.

இந்த ஆலயம் அமைந்துள்ளதன் பின்னணியில் கூறப்படும் தல புராணம் சுவாரஸ்யமானது. புரித்தலத்தில் ஸ்ரீஜகந்நாதரைப் பிரதிஷ்டை செய்த இந்திரத்யும்னன் மன்னனே மற்றொரு  பிறவியில் வடாலித் திருத்தலத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பாக புருஷோத்தமானந்த் அவதூத் என்ற பெயரில் அவதரித்ததாகவும் ஸ்ரீஜகந்நாதர் ஆணைப்படி அவரே இங்கு ஆலயம் அமைத்ததாகவும் இங்குள்ள வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்ரீபுருஷோத்தமானந்த் அவதூத் அவர்களின் கனவில் ஸ்ரீஜகந்நாதர் தோன்றி தான் அங்கு ஒரு ஆலமரத்தின் அடிப்பாகத்தில் எழுந்தருளியிருப்பதாகத் தெரிவித்து, தனக்கு ஆலயம் எழுப்புமாறு ஆணையிட்டார்.

அவர் அப்போது ஆட்சி புரிந்துகொண்டிருந்த ஹைதராபாத் நவாபிடம் சென்று ஆலயம் கட்ட நிலம் வேண்டும் என்று கேட்டு 12 ஏக்கர் நிலத்தைப் பெற்று பக்தர்களின் உதவியோடு இறைவன் காட்டிக் கொடுத்த ஆலமரக் கட்டையில் பலதேவர், சுபத்ரா, ஜகந்நாதர் ஆகிய திருஉருவங்களை வடித்து இந்த அழகிய ஆலயத்தை 1565ம் ஆண்டு அமைத்ததாகக்  கூறப்படுகிறது. ஆல (வட விருட்சம்) மரத்தின் அடியில் ஸ்ரீஜகந்நாதர் காட்சி தந்ததால் இந்த ஊருக்கு வடாலி என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பிற ஜகந்நாதர் ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இந்த மூர்த்திகள்  பெரிய கண்களோடு முறையான வடிவின்றி அரு உருவமாகக் காட்சி தருகின்றனர்.

ஆனால் இம்மூவரும் அகன்று விரிந்த கண்கள், எடுப்பான நாசி, உதடுகளோடு கம்பீரமாகக் காட்சி தருவது இந்த வடாலி ஆலயத்தின் ஒரு தனிச் சிறப்பாகும்.  சிதிலமடைந்த  நிலையில் இருந்த இந்தப் பழமையான ஆலயம் 2001ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் புனருத்தாரணம் செய்யப்பட்டு மீண்டும்  புதிய பொலிவோடு தற்போது காணப்படுகிறது. ஒடிஷா மாநிலம், புரி தலத்தைப் போன்று மிகப் பிரமாண்டமான ஆலயமாக வடாலி ஆலயம் இல்லாவிட்டாலும், இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின்  சிறப்பை முன்னிருத்தி மக்கள் இதை சின்ன புரி என்றே அழைக்கின்றனர்.,

நுழைவாயிலை அடுத்து பலிபீடம், கொடிமரம், கருடனுக்கான ஒரு சிறு சந்நதி ஆகியவற்றோடு அமைந்துள்ள இந்த ஆலயக் கருவறை புரி ஜகந்நாதர் ஆலயம் போன்றே உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பதினாறு கால் மஹாமண்டபத்தின் மேற்புறம் ஸ்ரீஜகந்நாதர், பலபத்திரர், சுபத்ரா மூர்த்திகளை சுதை உருவத்தில் தரிசிக்கலாம். மேல் விதானத்தில் வடிக்கப்பட்டுள்ள வடபத்ரசாயி என்ற ஆலிலைக் கிருஷ்ணர் சிற்பம் கண்டுகளிக்கத்தக்கது. மிக விசாலமான கருவறையில் நடுநாயகமாக பலபத்திரர், சுபத்ரா தேவி மற்றும் ஸ்ரீஜகந்நாதர், நன்கு வண்ணம் தீட்டப்பட்ட தாரு (மர) சிற்பங்களாக அருட்பாலிக்கின்றனர்.

இந்த ஆலயத்தில் பலபத்திரரும் ஜகந்நாதரும் அகன்ற கண்கள், முகத்தில் பெரிய மீசையோடு காட்சி தருகின்றனர். கிருஷ்ண பகவானான ஸ்ரீஜகந்நாதர் நீல வண்ணத்திலும், ஆதிசேஷனான பலபத்ரர் என்ற பலராமர் செந்நிறத்திலும், அவர்களது சகோதரியான சுபத்ரா தேவி ஐஸ்வர்யத்தைக் குறிக்கும் மங்களகரமான மஞ்சள் வண்ணத்திலும் பக்தர்களுக்கு அருட்பாலிக்கின்றனர். பழைய ஆலயம் சிதிலமடைந்ததை அடுத்து இந்த ஆலயம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. வைகானச ஆகம முறைப்படி பூஜைகள் உற்சவங்கள் நடைபெறும் இந்த ஆலயத்தில் ஜூலை மாதம் பூரியைப் போன்றே வைசாக பௌர்ணமி அன்று ரத உற்சவமும், திருக்கல்யாண உற்சவமும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த வடாலி ரத யாத்திரையிலும் பூரியைப் போன்றே ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனைத்துப் பகுதிகளிலிருந்தும்,

பல மாநிலங்களிலிருந்தும், ஏன் வெளிநாடுகளிலுமிருந்து வந்து கலந்து கொள்கின்றனர். யுகாதி, நவராத்திரி, ஜன்மாஷ்டமி, தனுர்மாத உற்சவம் போன்றவை இந்த ஆலயத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த வடாலி ஸ்ரீஜகந்நாதர் ஆலயத்திலிருந்து 500 அடி தொலைவில் ஸ்ரீஅன்னபூர்ணா சமேத ஸ்ரீவிஸ்வேஸ்வரஸ்வாமி ஆலயம் உள்ளது. இந்த மிகப் பழமையான ஆலயத்தில் அன்ன பூர்ணா தேவி அன்ன பாத்திரம், அகப்பையுடன் காட்சி தருகிறாள்.வடாலி ஸ்ரீஜகந்நாதர் ஆலயம் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை திறந்து வைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத் தலைநகரான மச்சிலிப்பட்டணத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள முதினேபள்ளிக்கு அருகில் வடாலி அமைந்துள்ளது.

- விஜயலட்சுமி சுப்பிரமணியம்