இறைவனே சொல்லித் தருவார்!



வணக்கம் நலந்தானே!

‘தயங்குபவன் கைதட்டுகிறான், துணிந்தவன் கைத்தட்டல் பெறுகிறான்,’ என்று சொல்வார்கள். உண்மைதான். எதிலும் தயக்கம் கொள்பவர்களால், எதையும் சாதிக்க இயலுவதில்லை. அதனால்தான் சாதித்தவர்களைப் பார்த்து, பிறருடன் சேர்ந்து கைதட்டி அவர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் மனசுக்குள் பொருமிக்கொள்கிறார்கள் -  ‘நாம் கைத்தட்டல் வாங்கும் காலம் எப்போது வரும்?’ இந்தத் தயக்கத்துக்குக் காரணம் என்னவாகுமோ, ஏதாகுமோ என்ற அனாவசிய பயம்தான். வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற உறுதியை, தோல்வியுற்றுவிடுவோமோ, அதனால் பலரும் பரிகசிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிவிடுவோமோ என்ற பய பலவீனம் வீழ்த்திவிடுகிறது.

சாலையில் முன்னே செல்லும் வாகனத்தைக் கடக்க முயற்சிக்கிறோம், அப்போது எதிரே வரும் வாகனங்களை உத்தேசித்து அவ்வாறு கடக்க முயற்சிப்பதைத் தவிர்க்கிறோம் அல்லது வேகத்தைக் குறைத்து முன்செல்லும் வாகனத்துக்குப் பின்னாலேயே சென்று, எதிர்த் திசையில் வாகன வரத்து இல்லை என்று உறுதி செய்துகொண்ட பிறகு, வேகத்தை அதிகரித்து கடந்து செல்கிறோம். இது புத்திசாலித்தனம், கைத்தட்டல் பெறும் செயல்.

ஆனால், எதிரே வாகனம் வந்துவிடுமோ, வந்தால் நம் மீது மோதி விடுமோ, மோதினால் நமக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டுவிடுமோ, அதனால் பலரும் கேலி செய்யக்கூடிய நிலைமை உருவாகிவிடுமோ என்று பயந்துகொண்டு மெதுவாகவே செல்லும் முன் வாகனத்துக்குப் பின்னாலேயே அதன் வேகத்திலேயே செல்வது விவேகமற்ற செயல். இது கைக்கொட்டிச் சிரிக்கவைக்கும் செயல். வாகனத்தை சாலையில், மிகுந்த போக்குவரத்துக்கிடையே செலுத்துமளவுக்கு மன உறுதி இருக்கும்போது, இப்படி பக்குவமாக, அதே போக்குவரத்தை அனுசரித்து, அனுமானித்து, முன்னேறும் உறுதி இல்லாமல் போவதேன்?

மன உறுதி இல்லாததால்தான். தேவையில்லாமல் கற்பனையை வளர்த்துக்கொள்வதால்தான். தவறு நேர்ந்துவிடுமோ, பொல்லாப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற பயம்தான். உடலுக்கு பலம் ஊட்ட எத்தனையோ வகை உணவுப் பொருட்கள் இருக்கின்றன. ஆனால் மனதிற்கு பலம் ஊட்டவல்லது எது? இறை நம்பிக்கைதான், இறையருள்தான். தினமும் பிரார்த்தனையில் முழுமையாக ஈடுபடுங்கள். அடுத்தடுத்த வேலைகளைப் பற்றி மனதிற்குள் நேரக் கணக்கு போட்டுக்கொண்டு பூஜையறையில் அமர்ந்திருக்காதீர்கள். பிரார்த்தனைக்காக நீங்கள் ஒதுக்கிக்கொள்ளும் நேரம் அதற்காக மட்டுமே என்று இருக்கட்டும்.

சிந்தையாலும் வேறு விஷயங்களை நாடாதீர்கள். புலன்கள், சுற்று உணர்வுகளை உங்களுக்கு அறிவித்துக்கொண்டே இருக்கும்தான். அதற்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும், நாளாவட்டத்தில் அந்த உணர்வு அறிவிப்புகளூடே, நீங்கள் இறைவனுடன், எந்த இடையூறுமில்லாமல் உரையாடிக் கொண்டிருக்க முடியும்! இந்த இறை அனுபவம் உங்களுடைய தயக்கங்களெல்லாம் போக்கும். தைரியமாக யாரையும் சந்திக்க முடியும், எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியும். உங்கள் சாதனைகள், உங்களை உலகத்துக்கு அறிமுகப்படுத்தும், உங்கள் சோதனைகள், உலகை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் என்ற யதார்த்தத்தை இறைவன் அழகாக உங்கள் பிரார்த்தனை மூலமே உங்களுக்குச் சொல்லித்தருவார்.