அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள்



66. ப்ராணதாய நமஹ (Praandhaaya namaha)

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, “கருடா! சௌக்கியமா?” - இத்தொடரை அனைவரும் கேட்டிருப்போம். ஆனால் முதன்முதலில் கருடனைப் பார்த்து சௌக்கியமா என்று கேட்ட பாம்பு யார் தெரியுமா? பிரம்ம புராணத்தில் ஒரு சம்பவம். ஆதிசேஷனின் மகனுக்கு மணிநாகன் என்று பெயர். அவனுக்குக் கருடனைக் கண்டால் பயம். அந்த பயம் தீர வேண்டும் என வேண்டிப் பரமசிவனைக் குறித்து அவன் தவம் புரிந்தான். ஆசுதோஷியான சிவனும் அவனுக்குக் காட்சி தந்து, ‘இனி கருடனைக் குறித்து நீ அஞ்சத் தேவையில்லை,’ என்று வரமளித்தார்.

பரமசிவன் தந்த வரத்தின் பலத்தால், பாற்கடலுக்குச் சென்ற மணிநாகன் கருடனை ஏளனமாகப் பார்த்து, “கருடா! சௌக்கியமா?” என்று கேட்டான். கடுங்கோபம் கொண்ட கருடன் மணிநாகனைத் தன் அலகால் கொத்திச் சென்று சிறைபிடித்தார். மணிநாகன் பரமசிவனிடம் தன்னைக் காக்குமாறு மனதாற வேண்டினான்.
உடனே சிவன் நந்திகேஸ்வரரைப் பாற்கடலுக்கு அனுப்பி வைத்தார். சிவபெருமான் மணிநாகனை மீட்டுத் தரும்படி வேண்டிக் கொண்டதாகத் திருமாலிடம் நந்திகேஸ்வரர் கூறினார். திருமால் கருடனை அழைத்து, “கருடா! மணிநாகன் சிவபெருமானுக்கு மிகவும் பிரியமானவன்.

அவனை நீ சிறைபிடித்து வைத்துள்ளது மிகவும் தவறு. அவனை விடுவித்து விடு!” என்று கூறினார். திருமாலின் இந்த வார்த்தைகள் கருடனின் கோபத்தீயில் எண்ணெயை ஊற்றுவது போல இருந்தன. “உங்கள் கண்ணெதிரே அவன் என்னை ஏளனம் செய்தான். அதை நீங்கள் தட்டிக் கேட்கவில்லை. இப்போது அவனைச் சிறையிலிருந்து விடுவிக்கவும் சொல்கிறீர்கள். அந்தப் பரமசிவன் தன் பக்தன் மேல் இவ்வளவு பரிவு கொண்டு அவனை விடுவிக்க வேண்டித் தூதுவரை அனுப்புகிறார். ஆனால் உங்களுக்கு உங்கள் பக்தனான என்மேல் அத்தகைய பரிவு இல்லையே!” என்று கோபத்துடன் திருமாலைப் பார்த்துச் சொன்னார் கருடன்.

“அப்படியில்லை கருடா! நம்மைத் தேடி வந்த தூதுவர் வேண்டிக் கொள்வதை நாம் நிறைவேற்றித் தர வேண்டாமா?” என்று கேட்டார் திருமால். “அப்படியாயின், நான் இதுவரை உங்களுக்கு எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன்? என்னுடைய ஆதரவு இல்லாமல் உங்களால் அசுரர்களை வெல்ல முடியுமா? நான் உங்களுக்கு வாகனமாக இல்லாவிட்டால் உம் அடியார்கள் அழைக்கும் போதெல்லாம் உங்களால் அவர்கள் இருப்பிடம் சென்று அவர்களைக் காக்க முடியுமா?” என்று வரிசையாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தார் கருடன்.

திருமால் சிரித்தபடி, “ஆம் கருடா! உன்னுடைய பலத்தால் தான் நான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றேன்!” என்று சொல்லிக் கொண்டே, தன் சுண்டு விரலைக் கருடனின் கிரீடத்தின் மேல் வைத்தார். அடுத்த நொடி, அந்தச் சுண்டு விரலின் சுமை தாங்க முடியாமல், அவரது கிரீடம், முகம், மார்பு எல்லாம் வயிற்றுக்குள்ளே அழுந்திப்போய் கோரமான வடிவம் பெற்றார் கருடன். அப்போதுதான் தன் பலத்தால் திருமாலைத் தாங்கவில்லை. அவரைத் தாங்குவதற்குரிய பலத்தையும் திருமால் தான் தனக்குத் தந்துள்ளார் என்பதை உணர்ந்து கொண்டார் கருடன்.

தன் தவறை உணர்ந்து, “உங்களைக் காண வேண்டுமெனில் அதற்குரிய பார்வையை நீங்கள் தந்தால்தான் உங்களைக் காண இயலும். உங்களை அறிய வேண்டுமெனில் அதற்குரிய அறிவையும் நீங்கள் தந்தால்தான் அறிய இயலும். உங்களைத் தாங்கவேண்டுமெனில், அதற்குரிய பலத்தையும் நீங்கள் தந்தால்தான் தாங்க இயலும். இதை இப்போது உணர்ந்து விட்டேன். அடியேனை மன்னித்தருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார் கருடன். கருடனை மன்னித்த திருமால், “கருடா நீ கோதாவரி நதியில் நீராடி உன் பழைய வடிவத்தை மீண்டும் பெறுவாய்!” என்று கூறினார்.

அவ்வாறே கருடனும் கோதாவரியில் நீராடி மீண்டும் நல்வடிவைப் பெற்றார். மணிநாகனையும் தன் பிடியிலிருந்து விடுவித்தார். இந்த லீலையின் மூலமாகக் கருடனைப் போன்ற நித்யசூரிகளுக்குக்கூட பலம் தருபவராகத் தான் விளங்குவதை உணர்த்தினார் திருமால். இப்படி அனைவருக்கும் பலம் தருபவராகத் திருமால் விளங்குவதால் ‘ப்ராணதஹ:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 66-வது திருநாமம். “ப்ராணதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் பங்கேற்கும் தேர்வுகள், நேர்காணல்கள், அலுவலகப் பணிகள் உள்ளிட்டவற்றை எதிர்கொள்வதற்கான பலத்தைத் திருமால் தந்தருள்வார்.

67. ப்ராணாய நமஹ (Praanaaya namaha)

பிரம்ம வைவர்த்த புராணத்தின் கணேச கண்டத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சம்பவம்: பரமசிவனுக்கும் பார்வதிக்கும் திருமணமாகிப் பல வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. அதனால் சனத்குமாரரைக் கொண்டு திருமாலைக் குறித்து அவர்கள் வேள்வி செய்தார்கள். அந்த வேள்வியின் விளைவாகப் பார்வதிக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையைக் காண அனைத்துத் தேவர்களும் வந்திருந்தார்கள் சனீஸ்வரனும் கைலாசத்துக்கு வந்தார். ஆனால் குழந்தையைக் காணாமல் தயங்கியபடி நின்று கொண்டிருந்தார். “என்ன ஆயிற்று?” என்று பார்வதி கேட்டாள்.

அப்போது சனீஸ்வரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் பற்றிக் கூறினார். நான் ஒரு முறை தியானத்தில் ஆழ்ந்திருந்தேன். விதிமுறைகளின்படி, கண்களைத் திறந்தபடி மூக்குநுனியில் இறைவன் இருப்பதாகக் கருதித் தியானம் செய்யவேண்டும். ஆனால் ஆரம்ப நிலையில் அந்தப் பக்குவம் அனைவருக்கும் வராது என்பதால், கண்ணை மூடியபடி தியானம் செய்யச் சொல்கிறார்கள். நான் தியானத்தில் நல்ல பக்குவ நிலையை அடைந்தபடியால் ஒருநாள் இரவு முழுவதும் கண்களைத் திறந்த நிலையில் திருமாலைத் தியானித்துப் பரவசம் அடைந்தேன்.

என் கண்ணெதிரில் இருக்கும் எந்தப் பொருளும் எனக்குத் தெரியவில்லை. எங்கும் திருமால் மட்டுமே தெரிந்தார். அடுத்தநாள் காலை தியானம் கலைந்தது. என் எதிரே என் மனைவி மந்தா நின்று கொண்டிருந்தாள். “அன்பே! என்ன வேண்டும்?” என்று அவளிடம் கேட்டேன். அவளோ, “என்ன வேண்டும் என்றா கேட்கிறீர்கள்? இரவு முழுவதும் உங்கள் முன் நின்று கொண்டே இருந்தேன். ஆனால் என்னை நீங்கள் கண்டுகொள்ளவே இல்லை. இப்போதுதான் உங்கள் கண்களுக்கு நான் தெரிகிறேனா?” என்றாள்.

“நான் தியானத்தில் இருந்ததால் உன்னைக் காண முடியவில்லை,” என்று நான் சொன்ன விளக்கத்தை ஏற்காத மந்தா, “என்னைப் பார்க்காத நீங்கள் இனி வேறு யாரையும் பார்க்கவே கூடாது. இனி நீங்கள் எந்தப் பொருளை ஆசையுடன் பார்த்தாலும் அது வெடித்துத் தூள் தூளாகும்!” என்று சபித்தாள். “இப்போது உங்கள் குழந்தையை நான் ஆசையுடன் பார்த்தால் உங்கள் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படுமோ என்று என் மனம் பதறுகிறது!” என்றார் சனீஸ்வரன். “அதெல்லாம் என் குழந்தைக்கு ஒன்றும் ஆகாது! வாருங்கள்!” என்று சனீஸ்வரனை அழைத்துச் சென்றாள் பார்வதி.

சனீஸ்வரன் ஆசையுடன் பார்த்தவுடன் குழந்தையின் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறியது. அதைக் கண்ட பார்வதியின் உள்ளமும் சிதறியது. “முடவனே! நீண்ட நாட்கள் கழித்து எனக்குப் பிறந்த குழந்தையைக் கொன்று விட்டாயே!” என்று புலம்பினாள் பார்வதி. தன் குழந்தைக்கு உயிரளிக்குமாறு திருமாலிடம் வேண்டினாள். அடுத்த நொடி கருடன்மேல் ஆரோகணித்துப் பறப்பட்டார் திருமால். ஒரு காட்டில் பெண் யானைகளால் சூழப்பட்டு ஓர் ஆண்யானை உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

அதன் தலையைக் கொய்து, பார்வதிக்குப் பிறந்த குழந்தையின் கழுத்தில் இணைத்தார். இறந்த குழந்தை உயிர்பெற்று எழுந்தது. யானை முகம் கொண்ட விநாயகர் இப்படித்தான் உருவானார். “திருமாலின் படைத்தளபதியான விஷ்வக்சேனரின் படையிலுள்ள தும்பிக்கை ஆழ்வார் எனப்படும் கஜானனரைப் போன்ற உருவம் என்மகனுக்கும் கிட்டி விட்டதே!” என்று பரமசிவன் மகிழ்ந்தார். இச்சம்பவத்திலிருந்து சாதாரண மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் திருமால் உயிரளித்து அவர்களைக் காக்கிறார் என்று அறிகிறோம்.

தேவர்கள், நித்யசூரிகள் அனைவரையும் உயிர் தந்து காப்பதால் திருமால் ‘ப்ராணஹ’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 67-வது திருநாமம்.‘ப்ராணதஹ’ என்ற 66-வது திருநாமம் திருமால் நமக்குப் பலம் தருகிறார் என்பதைக் காட்டியது; ‘ப்ராணஹ’ என்ற 67-வது திருநாமம் திருமால் உயிர் தந்து காக்கிறார் என்பதைக் காட்டுகிறது. “ப்ராணாய நமஹ” என்ற திருநாமத்தைத் தினமும் சொல்லி வந்தால் அனைத்து விதமான ஆபத்துகளிலிருந்தும் திருமால் நம்மைக் காத்தருள்வார்.

68. ஜ்யேஷ்டாய நமஹ (Jyeshtaaya namaha)

“இறைவனின் ஆனந்தம் எவ்வளவு?” என்பதை ‘ஆனந்தவல்லீ’ என்ற வேதப்பகுதி மிக அழகாக விளக்குகின்றது. மனிதனுடைய ஆனந்தத்துக்கு முதலில் அளவுகோலைக் கூறுகிறது வேதம். ஒரு மனிதன் நன்கு கற்றவனாகவும், நிறைந்த செல்வம் கொண்டவனாகவும், மனவலிமை உடல்வலிமை கொண்டவனாகவும், ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும், இளமையுடனும் இருந்தால் அவன் எவ்வளவு ஆனந்தமாக இருப்பான்! அவனுடைய ஆனந்தம் மனித ஆனந்தத்தில் ஓர் அலகு.

(1 unit) அதைவிட நூறு மடங்கு உயர்ந்தது சாதாரண மனிதரால் பாட இயலாத இசையையும் பாடவல்ல மனித கந்தர்வர்களின் ஆனந்தம். (100 units) அதைவிட நூறு மடங்கு உயர்ந்தது தேவலோகத்துப் பாடகர்களான தேவ கந்தர்வர்களின் ஆனந்தம். (10000 units) அதை விட நூறு மடங்கு உயர்ந்தது பித்ருலோகத்தில் இருக்கும் நம் முன்னோர்களான பித்ருக்களின் ஆனந்தம். (1000000 units) அதைவிட நூறு மடங்கு உயர்ந்தது சொர்க்கத்திலுள்ள தேவர்களின் ஆனந்தம். (100000000 units) அதைவிட நூறு மடங்கு உயர்ந்தது தேவர்களின் தலைவனான இந்திரனின் ஆனந்தம்.

(10000000000 units) அதைவிட நூறு மடங்கு உயர்ந்தது இந்திரனின் குருவான பிரகஸ்பதியின் ஆனந்தம். (1000000000000 units) அதைவிட நூறு மடங்கு உயர்ந்தது பிரம்மாவின் ஆனந்தம். (100000000000000 units)அதைவிட நூறு மடங்கு உயர்ந்தது திருமாலின் ஆனந்தம். எனவே சாதாரண மனிதனின் ஓர் அலகு ஆனந்தத்தை விட 10000000000000000 (1016) மடங்கு உயர்ந்ததாகத் திருமாலின் ஆனந்தம் விளங்குகிறது என்றது வேதம். ஆனால் இப்படிச் சொன்ன வேதமே ஒரு நொடி யோசித்து, ‘நான் கூறிய அளவு மிகவும் குறைவானது.

1016 அலகுகளை ஓர் அலகு ஆனந்தமாகக் கருதினால்கூட, அதைக் காட்டிலும் மேலும் 1016 மடங்கு உயர்ந்ததாகத் திருமாலின் ஆனந்தம் இருக்கும் என்றது. மீண்டும் யோசித்தது வேதம். 1032 அலகுகளை ஓர் அலகு ஆனந்தமாகக் கொண்டாலும்கூட அதைவிடவும் 1016 மடங்கு உயர்ந்திருக்கும் திருமாலின் ஆனந்தம் என்றது. மீண்டும் யோசித்த வேதம், வார்த்தைகளாலோ எண்ணிக்கை அலகுகளாலோ அவனது ஆனந்தத்தை அளக்கவே முடியாது என்று சொல்லி அந்தப் பகுதியை நிறைவு செய்தது.

எனவே திருமாலின் ஆனந்தத்தின் அளவு என்ன என்பதை வேதத்தால்கூட முழுமையாகக் கூற முடியவில்லை. வைகுந்தத்தில் அவருக்கு எப்போதும் தொண்டு செய்து கொண்டிருக்கும் நித்யசூரிகளான கருடன், ஆதிசேஷன், விஷ்வக்ஸேனர் உள்ளிட்டோராலும்கூட அவனது ஆனந்தத்தின் எல்லையே அறியவே முடியாது. இதை வேதம் தமிழ்செய்த நம்மாழ்வார் திருவாய்மொழியில்,

“அணங்கென ஆடும் என் அங்கம்
வணங்கி வழிபடும் ஈசன்
பிணங்கி அமரர் பிதற்றும்
குணங்கெழு கொள்கையினானே”

- என்று பாடினார். திருமாலின் குணங்களைப் பற்றியும், மேன்மையைப் பற்றியும் வைகுந்தத்து நித்யசூரிகளுக்குள் பெரிய விவாதமே நடக்குமாம். எவ்வளவு விவாதம் செய்தாலும் அவர்களாலும் அவனது குணங்களின் மேன்மை இன்னது என்று நிர்ணயிக்க இயலாதாம். இவ்வாறு வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாத குணங்களுடன் விளங்குவதால் திருமாலுக்கு ‘ஜ்யேஷ்டஹ’ என்று திருநாமம். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 68-வது திருநாமம். “ஜ்யேஷ்டாய நமஹ” என்று தினமும் சொல்லி வருபவர்களுக்கு நீங்காத ஆனந்தத்தைத் திருமால் தந்தருள்வார்.

69. ச்ரேஷ்டாய நமஹ (Sreshtaaya namaha)

சாந்தோக்ய உபநிஷத்தின் 7-வது அத்தியாயத்தில் சனத்குமாரருக்கும் நாரதருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் இது: நாரதர்: சனத்குமாரரே! அடியேனுக்கு ஏதாவது உபதேசிக்க வேண்டும். சனத்குமாரர்: தங்களுக்கு இதுவரை என்னென்ன விஷயங்கள் தெரியும்?

நாரதர்: அடியேன் நான்கு வேதங்கள், இதிகாச புராணங்கள், இலக்கிய இலக்கணம் உள்ளிட்டவற்றை அறிவேன். ஆனால் அவற்றிலுள்ள எழுத்துகளை மட்டுமே நான் அறிவேன். வார்த்தைகளுக்கு மேம்பட்டதை அடியேனுக்கு உபதேசிக்க வேண்டும்.
சனத்குமாரர்: எழுத்துகளைவிடப்
பேச்சாற்றல் உயர்ந்தது.
நாரதர்: பேச்சாற்றலை விட எது உயர்ந்தது?
சனத்குமாரர்: மனத்தால் நினைத்தால்தானே வாயால் பேச முடியும்? அதனால் பேச்சாற்றலை விட மனம் உயர்ந்தது.
நாரதர்: மனத்தை விட எது உயர்ந்தது?
சனத்குமாரர்: மன உறுதி.
நாரதர்: அந்த மனவுறுதியை விட?
சனத்குமாரர்: ஒருமுகப்படுத்தப்பட்ட மனது.
நாரதர்: அதைவிட?
சனத்குமாரர்: தியானம் உயர்ந்தது.
நாரதர்: அதைவிட?
சனத்குமாரர்: விஞ்ஞானம்.
நாரதர்: அதை விட?
சனத்குமாரர்: உடலில் வலிமை இருந்தால் தானே கல்வி கற்று விஞ்ஞானத்தைப் பெற முடியும்? அதனால் விஞ்ஞானத்தை விட உடல்வலிமை உயர்ந்தது.
நாரதர்: உடல்வலிமையை விட?
சனத்குமாரர்: உணவு உண்டால்தானே உடல் வலிமை பெறும்? எனவே அன்னமாகிய உணவு வலிமையை விட உயர்ந்தது.
நாரதர்: அதைவிட?
சனத்குமாரர்: மழை பொழிந்தால்தான் உணவுப் பண்டங்கள் விளையும். எனவே அன்னத்தைவிடத் தண்ணீர் உயர்ந்தது.
நாரதர்: அதைவிட?
சனத்குமாரர்: சூரியன், மின்னல் போன்ற ஒளிகள்.
நாரதர்: அவற்றைவிட?
சனத்குமாரர்: அந்த ஒளிகளை உடைய ஆகாயம்.
நாரதர்: அதைவிட?
சனத்குமாரர்: மனிதனின் நினைவாற்றல்.
நாரதர்: அதைவிட?
சனத்குமாரர்: இவ்விஷயங்களைக்
கேட்பதில் உங்களுக்குள்ள ஆர்வம் இவை
அனைத்தையும் காட்டிலும் உயர்ந்தது.
நாரதர்: ஆர்வத்தைவிட உயர்ந்தது எது?
சனத்குமாரர்: ஜீவாத்மா. அந்த ஜீவாத்மாவை அறிந்தவன் அனைத்து வாதங்களிலும் வெல்வான்.
நாரதர்: மிக்க மகிழ்ச்சி. இனி அந்த ஜீவாத்மாவை அறிய அடியேன் முயற்சி செய்யப் போகிறேன். நான் சென்று வருகிறேன்.
சனத்குமாரர்: நில். அந்த ஜீவாத்மாவை விட மேம்பட்டவன் ஒருவன் இருக்கிறான். அவன்தான் பரமாத்மாவான திருமால். அவன் பூமா என்றழைக்கப்படுகிறான்.
பூமா என்றால் மிகப்பெரியவன் என்று பொருள். அவனைக் காணும்போது கண்கள் மற்றொன்றைக் காணாது, அவனைப் பற்றிக் கேட்கும்போது காதுகள் மற்றொன்றைக் கேட்காது, அவனை எண்ணும்போது மனம் மற்றொன்றை எண்ணாது. மிகவும் சிரேஷ்டமானவனான அவனைப் பற்றி அறிந்துகொண்டு அவனை வழிபடுபவன் உய்வடைகிறான்!

இவ்வாறு பூமவித்யையை சனத்குமாரர் நாரதருக்கு உபதேசித்தார். இதில் வார்த்தை, பேச்சு, மனம், உறுதி, சிந்தனை, தியானம், விஞ்ஞானம், பலம், உணவு, தண்ணீர், ஒளி, ஆகாயம், நினைவாற்றல், ஆர்வம், ஜீவாத்மா இவை அனைத்தையும் விட உயர்ந்த பரமாத்மாவாகத் திருமால் கொண்டாடப்பட்டுள்ளார். இவ்வாறு அனைத்தையும் விட உயர்ந்து விளங்குவதால் திருமால் ‘ச்ரேஷ்டஹ’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 69-வது திருநாமம். “ச்ரேஷ்டாய நமஹ” என்று தினமும் சொல்லி வருபவர்களைத் திருமால் வாழ்வில் உயர்த்தி அருளுவார்.

70. ப்ரஜாபதயே நமஹ (Prajaapathaye namaha)

தாமிரபரணி நதியின் தென்கரையில் உள்ள திருக்குருகூரைச் சேர்ந்தவர்கள் காரிமாறன்-உடையநங்கை தம்பதி. அவர்களுக்குத் திருக்குறுங்குடி பெருமாளின் அருளால் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை அழவில்லை, கை கால்களை அசைக்கவில்லை, பால் குடிக்கவில்லை. மூச்சு மட்டும் ஓடிக் கொண்டிருந்தது. பத்து நாட்கள் கடந்தன. குழந்தையிடமிருந்து எந்த அசைவும் தென்படவில்லை. காரிமாறனும் உடையநங்கையும் குழந்தையைத் திருக்குருகூர் ஆதிநாதப் பெருமாள் சந்நதிக்கு எடுத்துச் சென்று பெருமாள் முன்னிலையில் கிடத்தி மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்கள்.

என்ன விந்தை! குழந்தை எழுந்து நடக்கத் தொடங்கியது. கோயிலுக்கு எதிரில் இருந்த தல விருட்சமான புளியமரத்திலுள்ள ஒரு பொந்தில் யோகத்தில் அமர்ந்து கொண்டது. உணவு அருந்தாமல், இயற்கை அழைப்புகளுக்குச் செல்லாமல் தியானத்தில் ஆழ்ந்தது. உலக வழக்கத்துக்கு மாறாக அக்குழந்தை இருந்தபடியால் அதை ‘மாறன்’ என்று எல்லோரும் அழைத்தார்கள். சில வருடங்கள் கழிந்தன. திருக்குருகூரை அடுத்த திருக்கோளூரில் வாழ்ந்த மதுரகவி வடநாட்டு யாத்திரை சென்றிருந்தார்.

அங்கிருந்து தெற்கு நோக்கி அவர் பார்த்த போது, பூமியிலிருந்து சிலஅடி உயரத்தில் அந்தரத்தில் சூரியன் தொங்குவது போலத் தெரிந்தது. அந்த ஒளியைத் தேடி தென்திசை நோக்கி நடந்தார் மதுரகவி. திருக்குருகூரில் புளியமரப் பொந்தில் அமர்ந்திருந்த அற்புதக் குழந்தையான மாறனின் முன் சென்று நின்றார். மாறனிடமிருந்து அவ்வொளி வந்ததை உணர்ந்து கொண்டார். தன் குருவைத் தான் அடைந்துவிட்டதாக உணர்ந்த மதுரகவி, மாறனிடம், “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று கேட்டார். “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்!” என்று பதிலளித்தார் மாறன்.

(“செத்தது என்று அறிவில்லாத இவ்வுடலுக்குப் பெயர். அத்தகைய உடலில் அணுவைப் போல் சிறியதான ஜீவாத்மா பிறவி எடுத்தால், அது எதை அநுபவித்து எங்கே வாழும்?” என்று கேள்வி. “அந்த சரீரத்துக்குரிய சுக துக்கங்களை அநுபவித்துக்கொண்டு அவ்வுடலிலேயே அந்த ஜீவாத்மா வாழும்!” என்பது மாறன் தந்த பதில்.) அதைக் கண்டு வியந்த மதுரகவி, அவருக்குச் சீடராகி, மாறன் பாடிய பாசுரங்களை எல்லாம் ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்தார். முப்பத்தைந்து ஆண்டுகள் பூமியில் வாழ்ந்த மாறன், தன் பூதவுடலை நீத்து வைகுந்தம் அடைந்தார்.

முப்பத்தைந்து ஆண்டுகளும் மாறன் எந்த உணவும் உட்கொள்ளாமல் எப்படி வாழ்ந்தார்? அதற்கான விடையை அவர் பாடிய திருவாய்மொழியில் அவரே தெரிவித்துள்ளார். “உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” என்ற பாசுரத்துக்கேற்ப, கண்ணபிரானையே தனக்குத் தாரக போஷக போக்யங்களாகக் கொண்டு அவனது அழகையும் குணங்களையுமே உணவாக உண்டு வாழ்ந்தமையால், வேறு உணவு ஏதும் அவருக்குத் தேவையில்லை.

‘சடம்’ என்ற வாயு ஜீவாத்மாவை இந்த உடலுக்குள் கட்டிப்போட்டு வைக்கிறது. கண்ணனைத் தியானித்து, அதனால் சடம் என்னும் வாயுவையே வென்றதால் சடகோபர் என்றும் சடாரி என்றும் மாறன் அழைக்கப்பட்டார். அந்த சடகோபர் தான் ஆழ்வார்களின் தலைவராகக் கொண்டாடப்படும் நம்மாழ்வார். அவரே திருமாலின் பாதுகையாக இருப்பதால், கோயில்களில் பெருமாளுடைய பாதுகை ‘சடாரி’ என்ற நம்மாழ்வாரின் பெயரை இட்டே அழைக்கப்படுகிறது.
‘ஜா’ என்றால் வடமொழியில் பிறப்பு என்று பொருள்.

‘ப்ரஜா’ என்றால் நல்ல பிறப்பு, அதாவது நம்மாழ்வாரைப் போலப் பிறக்கும் போதே பக்தியுடன் பிறத்தலாகிய நற்பிறப்பை உடையவர்கள் என்று பொருள். நம்மாழ்வார் பிறந்தநாள் முதல் கண்ணனையே தன் உணவாகவும் தண்ணீராகவும் வெற்றிலையாகவும் கொண்டு வாழ்ந்தது போல, உயர்ந்த பிறவிகள் எடுத்த அடியார்களுக்குத் தலைவனாகத் திருமால் விளங்குவதால் ‘ப்ரஜாபதி’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 70-வது திருநாமமாக அமைந்துள்ளது.“ப்ரஜாபதயே நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அடியார்களின் குலத்தில் நம்மாழ்வாரைப் போன்ற பக்தியுள்ள
குழந்தைகள் பிறப்பார்கள்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

- திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்