என்றே நான் ஈடேறுவேன்?இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் - 6

‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்’

- என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். ஆறறிவு பெற்ற உயர்திணை மக்களாக இவ்வுலகில் உருப்பெற்ற நாம் வாழ்வாங்கு வாழ்ந்தால்தான் தெய்வத்தின் திருவடிப் பேற்றைப் பெற முடியும். ஆன்மிக வழியில் ஒவ்வொரு மனிதனும் முன்னேற உலக உயிர்களிடம் அன்பு காட்டுவதும், அறம் செய்தலும் ஆலய வழிபாடு மேற்கொள்ளலும், உள்ளம் கசிந்து இறைவனின் திருநாமம் ஓதுதலும் அவசியத் தேவையான நெறிமுறைகள் ஆகும்.

திரு ஆவினன்குடி என்று போற்றப்பெறும் மூன்றாம் படை வீடான பழநி திருத்தலத் திருப்புகழில் அருணகிரியார் பதறி உருகிக் குழைந்து பாடுகிறார். ஒரு மனிதனிடம் இருக்க வேண்டிய ஐந்து அற்புதமான நற்குணங்கள் என்னிடம் இல்லையே! அதற்குப் பதிலாக அரக்க குணங்கள் ஐந்து என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறதே! இவ்வாறிருக்க அடியேன் எப்படி தங்கள் திருவடித் தாமரைகளை அடைய முடியும் என்று வினாவிடுக்கின்றார்.

‘மூல மந்திரம் ஓதல் இங்கிலை
ஈவதிங்கிலை நேயம் இங்கிலை
மோனம் இங்கிலை ஞானம்
இங்கிலை மடவார்பால்
மோகம் உண்டு அதிதாகம் உண்டு
அபராதம் உண்டு அபசாரம் உண்டு இடு
மூகன் என்றொரு பேரும் உண்டு!’
பழநியில் பாடிய மேலும் ஒரு திருப்புகழில்
‘திடமிலி சற்குணமிலி நல்திறமிலி
அற்புதமான செயல் இலி மெய்த்தவம் இலி

- என்றும் பாடுகிறார். அருணகிரியாரின் மேற்கண்ட பாடல் வரிகளின் மூலம் அவர் இப்படிப்பட்ட தீய நடைமுறைகளுக்குச் சொந்தக்காரர் என்று முடிவு கட்டி விடலாமா? அப்படி அனுமானிப்பது நம்முடைய அறியாமையே ஆகும். பொதுவாக அருளாளர்கள் உலகினர் செய்யும் பழி பாவங்களை தன்மேல் போட்டுக்கொண்டு இறைவனை இறைஞ்சும் மனப்பாங்கு கொண்டவர்கள். நாமோ நம்மிடம் இருக்கும் குறைகளையும் மறைப்போம். அதேசமயம் மற்றவர்கள் மீது குறைகளுக்கான பழியையும் சுமத்துவோம்.

முள்ளிருக்கும் பகுதியில் அஜாக்கிரதையாக நடப்போம். ஆனால் நாம் சொல்வது என்ன? ‘முள் குத்தி விட்டது!’நிலைவாசலில் குனியாமல் நிமிர்ந்து ஒரு வீட்டின் உள்ளே செல்வோம். ஆனால் பழகு மொழியில் ‘வாசல் இடித்து விட்டது என்று கூறுவோம். ‘முள்ளா குத்தியது? வாசற் கதவா இடித்தது? நம்முடைய தவறை இன்னொன்றின் மேல் சுமத்துவதே நம் வாடிக்கை என்பதை நடைமுறையில் இப்படிப் பேசுவதில் இருந்தே புரிந்துகொள்ள முடிகிறதல்லவா? ஆனால் சான்றோர்கள் பிறர் பழியை தம்மீது சுமத்திக்கொண்டு அதற்காக வருந்தும் மனப்பாங்கு கொண்டவர்கள்.

‘பிறர் பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு’

- என்கிறார் திருவள்ளுவர். ஆசிரம வாசிகள் சிலர் செய்த தவறுக்காக அண்ணல் காந்தி உண்ணாவிரதம் இருந்ததை நாமெல்லாம் அறிவோமே மேற்கண்ட முறையில்தான் சிதம்பர சுவாமிகள் பாடுகின்றார். திருப்போரூர்ச் சந்நதி முறை நூலில்! சிதம்பர சுவாமிகள் மதுரையில் வாழ்ந்தவர். அம்பாளின் அன்புக் கட்டளையை ஓரிரவு கனவின் மூலம் பெற்ற அவர் திருப்போரூரைத் தேடி வந்தார்.

‘திருப்போரூரில் என் புதல்வன் முருகனின் ஆலயம் உள்ளது. மகிமை மிக்க அக்கோயிலைப் புதுப்பித்துத் திருப்பணி செய்து விளங்கவை!’ என்ற தேவியின் ஆணையால் சென்னை-மாமல்லபுரம் சாலையில் உள்ள திருப்போரூர் திருத்தலத்தைத் தேடி வந்தார். அங்கு பனை மரத்தடியில் சுயம்புவான கந்தசாமியின் திருத்தோற்றம் காணப் பெற்றார். பின்னர் திருநீறு வழங்கி மக்களின் குறைகளைத் தீர்த்து அதன்மூலமே வருவாய் பெற்று ஆலயத் திருப்பணிகளை அற்புதமாக நிறைவேற்றினார்.

‘சகல லோகமும் மாசறு சகல வேதமுமேதொழு
சமரமா புரி மேவிய பெருமாளே!’

- என்று அருணகிரி நாதர் திருப்புகழால் ஆராதனை செய்த கந்தசாமியிடம் சிதம்பர சுவாமிகள் மனம் கசிந்து ‘முருகா! எத்தகுதியும் இல்லாத நான் எவ்வகையில் ஈடேறுவேன்? என்று மக்களின் குறைகளை தன்னுடையதாக பாவித்துக்கொண்டு கீழ்க்காணும் வண்ணம் பாடுகின்றார்:

இல்லறத்தான் அல்லேன்! இயற்கைத் துறவி அல்லேன்
நல்லறத்து ஞானி அல்லேன்! நாயினேன்- சொல்லறத்தின்
ஒன்றேனும் இல்லேன்! உயர்ந்த திருப்போரூரா
என்றே நான் ஈடேறுவேன்?

‘குடும்ப வாழ்க்கையையும் மேற்கொள்ளாமல், பற்றற்ற துறவியாகவும் பரிணமிக்காமல், சீரிய ஞானநெறியிலும் நிலை பெறாமல் உள்ள கடையனாகிய எனக்கு கடைத்தேற்றமே கிடையாதா?’ என்று திருப்போரூர் கந்தசாமிப்பெருமானிடம் கண் கலங்க வேண்டுகிறார் சிதம்பரம் சுவாமிகள். செந்தமிழ் வேலவன் சிதம்பர சுவாமிகளைக் கைவிடுவானா? அவர் பாடிய பாடல் கருவறைச் சுவர்களில் மோதி மீண்டும் எதிரொலித்தது.

அதே வரிகள்தான்! எதிரொலியாக மீண்டும் கேட்டபோது அப்பாட்டின் அர்த்தம் வேறு விதமாக, எப்படி ஈடேற முடியும் என்பதை சுவாமிகளுக்கு உணர்த்தியது. அவர் பெற்ற அனுபவத்தை நாமும் பெறலாமா? பாடலின் பொருளை மீண்டும் பார்த்தால் இறைச்சுவை இனிக்கும் இலக்கியத்தேனை நம்மால் பருக முடியும். ஞானியாகவோ, துறவியாகவோ, குடும்பஸ்தனாகவோ எவ்விதத் தகுதியும் இல்லாதவனாக ஒருவன் இருந்தாலும் பரவாயில்லை.

‘திருப்போரூரா’ என்று மீண்டும் மீண்டும் உச்சரித்தே அவன் உயர்வு பெற முடியும். நம்மை ஈடேற வைக்கும் ஈசனின் மந்திர ஜபம். வினாவாகவும், அதற்கு ஏற்ற விடையாகவும் ஒரே பாடல் திகழ்வது ஒப்பற்ற அதிசயம் அல்லவா! ‘திருப்போரூரா, என்றே நான் ஈடேறுவேன்?’ என்று கேட்பது வினா. திருப்போரூரா என்றே நான் ஈடேறுவேன் என்றால் அதுவே விடையாகி நாம் உய்வு பெற உதவுகிற மூலமந்திரம் ஆகிறது. கந்தர் அலங்காரம் அற்புதமாக ஆறுமுகப்பெருமானின் நாம விசேடத்தை நமக்கெல்லாம் ஓதுகிறது. அழகொழுகும் அந்த அற்புதப் பாடலைப் பார்ப்போமா?

‘விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள்! மெய்மைகுன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்! முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்! பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங் கோடன் மயூரமுமே!

உற்ற துணையாக, உயிர்த்துணையாக, வாழ்க்கைப் பாதையில் நம் வழித்துணையாக வருவான் வடிவேலன் என்பதை அருணகிரியாரின் அலங்காரப்பாடல் நமக்கு உணர்த்துகிறது. இக்கால தமிழறிஞர் ஒருவர் கேட்டார்: ‘மொழிக்குத் துணை முருகா எனும் நாமம்!’ என்று ஒருமையில்தான் பாட வேண்டும்? முருகா எனும் நாமங்கள் என்று பன்மையில் பாடுகிறாரே! என்று கேட்டார். அருணகிரியாருக்கா அடி சறுக்கும்? முருக என்ற மந்திரத்தில் மூன்று மூர்த்திகளின் முதல் எழுத்து ஒரு சேர இணைந்திருக்கின்றது.

‘மு’ என்றால் முகுந்தன்
‘ரு’ என்றால் ருத்ரன்
‘க’ என்றால் கமலன் (பிரம்மா)

எனவே முருக எனும் நாமம் ஒருமை அல்ல. பன்மை என்று உணர்த்தவே ‘நாமங்கள்’ என்றார். இன்னொரு திருப்புகழில் அனைவர்க்கும் விளங்கும் வண்ணம் மேற்கண்ட பொருளை விரித்துப் பாடுகிறார் அருணகிரியார்.

‘அகரமும் ஆகி, அதிபனும் ஆகி, அதிகமும் ஆகி அகமாகி
அயன்என ஆகி, அரிஎனஆகி, அரன்என ஆகி அவர்மேலாய்
இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே!
இருநிலமீதில் எளியனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும்!

சந்தம் கொஞ்சும் செந்தமிழில் விந்தையாக இப்படி சிந்து பாடினால் கந்தன் வந்து காட்சி தருவான் என்பது நிச்சயம் தானே!

(இனிக்கும்)

- திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்