பிரார்த்தனையின் நோக்கம்!



வணக்கம் நலந்தானே!

பிரார்த்தனையின் நோக்கம் என்ன? மன உறுதி பெறுவதுதான். பிரார்த்தனையின் மூலம் நாம் பயணம் செய்யும் மலையின் உயரத்தைக் குறைத்துவிட முடியாதுதான். ஆனால், அந்தப் பயணத்தை எளிமையாக்கிவிட முடியும். அந்த அளவுக்கு இறைவனருளால், நம்மால் மனஉறுதி பெற முடியும். எதிர்ப்படும் இடர்களைப் புன்னகையுடன் புறந்தள்ள முடியும். உடன் வரும் தொல்லைகளையும் முக மலர்ச்சியோடு அனுசரித்துக்கொண்டு செல்ல முடியும். ஆனால், பொதுவாக பிரார்த்தனையின்போது கடவுள் நம் துயர்களை எளிதாகக் களைந்து விடுவார் என்று நாம் கற்பனையை வளர்த்துக் கொள்கிறோம்.

கற்பனை வளர வளர எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டே போகிறது. நமக்கு எல்லாம் நல்லதாகவே நடக்க வேண்டும், நாம் நினைத்ததெல்லாம் நிறைவேற வேண்டும் என்ற வேட்கை மிகுந்து விடுகிறது. அதனாலேயே பொதுவாக நியாயமற்ற விஷயமெல்லாம் நமக்கு நியாயமானதாகவும், அந்த கோரிக்கைகளுக்கும் கடவுள் நமக்குச் சாதகமாகத் தீர்வு காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கவும் செய்கிறோம். ஆனால், எதிர்பார்ப்பு அதிகமாக ஆக, இயல்பாக நிறைவேறவேண்டிய கோரிக்கைகள், சிரமமின்றித் தீரக்கூடியதுகூட, எந்த நற்பயனும் இல்லாமல் போய்விடும்போது, பிரச்னையின் முடிச்சு மேலும் இறுகுகிறது.

மாறாக, பிரார்த்தனையின்போது ‘இதுவரை நீ கொடுத்த வாய்ப்புகள், நிறைவேற்றித் தந்த கோரிக்கைகள், தீர்த்து வைத்த பிரச்னைகள், எல்லாவற்றிற்கும் நன்றி’ என்று சொல்லிப் பாருங்கள் - அடுத்தடுத்து பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும்படி கடவுளிடம் வேண்டிக்கொள்ள வேண்டிய அவசியமே இருக்காது. ஏனென்றால், மனது பக்குவப்பட்டு விடும். பக்குவப்பட்ட மனதில் மனோதைரியம் கூடும். பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள புதுப்புது வழிகள் தாமாகத் தோன்ற ஆரம்பிக்கும்.

அப்படித் தோன்றும் வழிகளைக் கடைப்பிடித்தோமேயானால், அதற்குப்பிறகு கடவுளிடமான பிரார்த்தனையில் எந்தவித எதிர்பார்ப்பு பக்தியும் இருக்காது; இனிய நண்பர்கள், பாசமிகு குடும்பத்தினர், நம் நல்வாழ்வில் அக்கறை கொண்ட பெரியவர்களைப்போல இறைவனும் நல்வழி காட்டுவார். ஆமாம், கடவுள் நம்மை அரவணைத்து நட்பு, அன்பு பாராட்டுவதை நம்மால் அறிய முடியும். நமக்குப் பிரச்னையாகத் தோன்றும் காலகட்டங்களில் நம்மை அவர் தாங்கி நடத்திச் செல்வதையும் உணர முடியும். ஆகவே, பிரார்த்தனையால் பிரச்னைகள் மலையளவாகத் தோன்றினாலும், அவை குறையாவிட்டாலும், எளிதில் கடக்கக் கூடியனவாகவே அமையும்.

- பிரபுசங்கர்
(பொறுப்பாசிரியர்)