பக்திப் பரவசம் தரும் ஆல(ய)மர மணி ஓசை!



கேரளம் - பொன்மனா

விஜயலட்சுமி சுப்பிரமணியம்


பக்தர்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதில் பலவகை உண்டு. அவற்றில் ஒன்று மணிகளை சமர்ப்பிப்பது. அப்படி    மணிகளை ஆலயத்தினுள் உள்ள ஆலமரக் கிளைகளில் கட்டித் தொங்கவிடும் சம்பிரதாயம் கொல்லம் மாவட்டம், பொன்மனா என்ற இடத்தில் உள்ள தேவி ஆலயத்தில் மேற்கொள்ளப்படுகிறது.கேரள மாநிலத்தில் கடற்கரைக்கும், திருவனந்தபுரத்திலிருந்து ஷோரனூர்வரை செல்லும் டி.எஸ்.கெனால் எனப்படும் கால்வாய்க்கும் இடையே, தீவுபோன்ற பகுதியில் எழுந்தருளியிருக்கிறாள், ஸ்ரீபத்ரகாளிதேவி. ‘காட்டில் மேக்கத்தில் அம்மா’ என்று அன்போடும் பக்தியோடும் பக்தர்கள்  குறிப்பிடுகின்றனர். ஆலயத்திற்கு படகு மூலமாகவே சென்று வழிபடுவது தனிச் சிறப்பு.

அக்காலத்தில் இப்பகுதியில், எட்டுக்கெட்டு என்றும் பந்தீரடிமனா என்றும் அழைக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய வீட்டில் வசித்த ஒரு செல்வந்தர் (காரணவர்) தன் வயல்களுக்கு விதைநெல் வாங்கும் பொருட்டு படகு மூலம் ஆலப்புழைக்குச்  சென்றார். அங்கு அழுதபடி தனியே நின்று கொண்டிருந்த ஒரு சிறுமியைக் கண்டார். தன் அலுவல் முடிந்து திரும்பும்போதும் அந்தச் சிறுமியை அதேநிலையில் கண்ட அவர் இரக்கப்பட்டு அவளை தன்னுடன் அழைத்து வந்து தன் வீட்டில் தங்க வைத்து, வளர்த்து, மணமும் முடித்து வைத்தார். பல தலைமுறைகளுக்குப் பிறகு அந்தக் குடும்பங்களின் வாரிசுகள் தொடர்ந்து ஏதோ ஒரு நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தது கண்டு வருந்திய குடும்பத்தினர் ஜோசியரை அழைத்து பிரச்னம் வைத்துப் பார்த்தனர். அக்காலத்தில் காரணவரோடு வந்தது தேவியே என்றும், அவளை முறையாகப் பிரதிஷ்டை செய்து ஆராதிக்காமல் போனதால்தான் இவ்வாறு நேர்கிறது என்றும் அறிந்துகொண்டு உடனே அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு சிறிய ஆலயத்தை எழுப்பி வழிபட ஆரம்பித்தனர். பின்னர் அந்தக் குடும்பத்தில் நோய் நொடிகள் அகன்று செல்வ வளம் பெருகியது.

கேரளத்தின் ஒரு பகுதியான திருவிதாங்கூரை ஆண்டு வந்த மார்த்தாண்ட வர்மா, ஒர நாடு ராஜா என்ற மன்னரைச் சந்தித்து விட்டு தன் கப்பலில் 1781ம் ஆண்டு தைப்பூச நாளன்று திரும்பிக் கொண்டிருந்தார். தேவி எழுந்தருளியிருக்கும் இந்தப் பகுதியை அவருடைய கப்பல் கடந்தபோது கடல் நீருக்கு மேல் கண்களைப் பறிக்கும் ஒரு ஒளி தோன்றி மீண்டும் கடலில் மறைவதைக் கண்டு அதிசயப்பட்டார். தன் கனவின் மூலம் பத்ரகாளிதேவியின் சாந்நித்தியம் இந்த இடத்தில் இருப்பதை உணர்ந்தார். ஆலயம் அமைந்திருந்த இடத்திற்கு வந்து அமர்ந்து, தேவியை பக்தியோடு தியானித்தார். அவருக்கு மும்மூர்த்தி சொரூபமாக தேவி அங்கு எழுந்தருளியிருப்பது புலப்பட்டது. தேவிக்கு சிறிய ஆலயம் எழுப்பியதோடு, அவ்வப்போது இங்கு வந்து தேவியை வழிபட்டார்.
இவ்வாறு மன்னர் வழிபட வரும்போது அவர் தங்குவதற்காக சிறிய அரண்மனை ஒன்றும் கட்டப்பட்டது. அது ‘கொட்டாரக் கடவு’ என்று அழைக்கப்பட்டது. தேவி முதன் முதலாக வந்து இறங்கிய இடம் ஆராட்டுக் கடவு என்றழைக்கப்படுகிறது. உற்சவங்களின்போது அங்குதான் ஆராட்டு கோலாகலமாக நடத்தப்படுகிறது. பரமனா என்றும் பொன்மனா என்றும் அழைக்கப்படும்  இத்தலத்தில் பிரசன்னவதனத்துடன்  எழுந்தருளியிருக்கிறாள், காட்டில் மேக்கத்தில் ஸ்ரீபத்ரகாளிதேவி. ஒருசமயம், தேவியின் சந்நதிக்கு எதிரே இருக்கும் கொடிமரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளில் ஒன்று கீழே விழுந்துவிட, அதைக் கண்டெடுத்த பக்தர் ஒருவர் அதை பயபக்தியோடு, ஆலய வளாகத்தில் இருந்த ஆலமரக் கிளையில் கட்டினார். அப்போது அவரே அறியாமல் அவர் உடலில் ஒரு தெய்வீகப் பரவசம் தோன்றியது. அதற்குப் பின்னர் அவருடைய கோரிக்கைகள் எல்லாம் தேவியின் அருளால் நிறைவேறின. கோயிலும் சிறப்பாக வளர்ந்தது. கொடிமரத்திலிருந்து  மணி கீழே விழுந்துவிட்டதால் தக்க பரிகாரம் செய்யும் பொருட்டு தேவப் பிரச்னம் பார்த்தபோது பக்தர்கள் தனக்கு சிறிய மணிகளைக் காணிக்கையாக்கி இந்த ஆலமரத்தில் கட்டினால் தான் மிகவும் சந்தோஷமடைவதாக பத்ரகாளி தேவி தெரிவித்தாள்.

பின்னர் இந்த ஆலமரத்தில் மணிகளைக் கட்டுவது பிரதான வழிபாடாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேவியின் அருளால் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேறுவதால், இப்போது தினமுமே  நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோயிலை தேடி வருகிறார்கள். ஆலய வளாகத்தில் கட்டப்படும் அழகிய சிறிய மணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கணக்கற்ற சிறிய மணிகள் காற்றில் அசைந்து எப்போதும் இனிமையான ஓசை ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த ஆலயத்தை பக்தர்கள் மணிக்கட்டு அம்பலம் என்றும் அழைக்கின்றனர்.

சுற்றிலும் பரந்த வெண்மணல், தென்னை மரங்கள், இரு புறங்களிலும் நீலநிறக் கடலும் காயலும் என்று மனதைக் கொள்ளைகொள்ளும் இயற்கை எழிலுக்கு நடுவே கேரள பாணியில் அமைக்கப்பட்ட சிறிய ஆலயம் இது. கருவறையில் பத்ரகாளிதேவி நின்ற திருக்கோலத்தில், இரு கரங்களுடன், வலக்கரம் அபய ஹஸ்தமாகவும், இடக்கையில் குங்குமப் பாத்திரம் ஏந்தியும், மலர் மாலைகள், ஆபரணங்கள் அணிந்து, அன்னை அருட்பாலிக்கிறாள். இருபுறங்களில் கேரள ஆலயங்களுக்கே உரித்தான தொங்கும் எண்ணெய் தீபங்களுக்கு நடுவே அருட்காட்சி தரும் தேவியைக் கண்டு பக்திப் பரவசப்படும் பக்தர்களின் ‘அம்மே நாராயணா, அம்மே சரணம்’ என்ற கோஷங்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

தேவிக்கு உகந்த காணிக்கையான சிறிய அழகிய மணிகளை தேவஸ்தான நிர்வாகமே, தேவி சந்நதியில் வழங்குகிறது. ஆலய வளாகத்தில் உள்ள ஆலமரத்தின் விழுதுகளிலும் கிளைகளிலும்  கட்டப்படும் இந்த மணிகளின் பாரத்தால் மரக்கிளைகள் ஒடிந்துவிடக்கூடாது என்பதற்காக 15-20 கிராம் எடையுள்ள சிறிய மணிகளே ரூ 30 விலையில் வழங்கப்படுகிறது. செந்நிறக் கயிறுகள் கட்டி தேவியின் முன்பாக ஒரு கூடையில் இந்த மணிகள் வைக்கப்பட்டுள்ளன. மணிக்கட்டுச் சடங்கு என்றும் மணிச்சூட்டல் என்றும் அழைக்கப்படும் இந்த சிறப்பு வழிபாட்டை நிறைவேற்ற பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு தங்களுக்கு சௌகரியப்படும் ஏதேனும் ஏழு நாட்களில் வந்து வழிபட்டு காணிக்கையைச் செலுத்தலாம். தேவியின் அருட்பிரசாதமாக அளிக்கப்படும் அந்த மணியைக் கையில் ஏந்தி ஆலமரத்தை ஏழுமுறை வலம்வந்து ஏழாவது சுற்றில் விழுது அல்லது கிளையில் கட்டுகிறார்கள். ஆலயத்துக்கு வரும் நாளுக்கு முந்தைய நாள் கடும் விரதம் அனுஷ்டித்து, ஆசாரத்தோடு இங்கு வருவதை ஒரு கட்டுப்பாடாக கொண்டுள்ளனர்.

(பொன்மனா காட்டில் மேக்கத்தில்  தேவி ஆலயத்தில் மணிகள் கட்டப்படுவதைப் போன்றே, அசாம் மாநிலம், தின்சுகியா மாவட்டம், போர்துபி கிராமத்தில் உள்ள ஒரு சிறிய சிவாலயத்திலும் மணிகளை கட்டும் வழிபாடு காணப்படுகிறது. இங்கு பக்தர்கள் தாங்களாவே வாங்கிக் கொண்டு வரும் மணிகளை ஆலய வளாகத்தில் பிரத்தியேகமாகஅமைக்கப்பட்டுள்ள இரும்புக் குழாய்களில் கட்டி வழிபடுகின்றனர். இங்கு கட்டப்படும் மணிகள் 50 கிராம் எடையிலிருந்து  55 கிலோ வரை சிறிதும், பெரிதுமாக இருப்பது குறிப்பிடத் தக்கது. இங்கும் ஒரு ஆலமரத்தின் அடியில் சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை சுற்றி ஆலயம் எழுந்துள்ளது. பொன்மனா  ஆலயம் மணிக்கட்டு அம்பலம் என்ற அழைக்கப்படுவது போன்றே, இந்த ஆலயமும் திரிலிங்கா மந்திர் (திரிலிங்கா என்று அசாமிய சொல்- மணியைக் குறிக்கும்) என்றே அழைக்கப்படுவதும் ஒரு சிறப்பாகும்.)

கேரளத்தின் பிற தேவி ஆலயங்களைப் போன்றே யட்சி, மாடன், யோகீஸ்வரர், சாமுண்டி, பிரம்மராட்சஸ் ஆகியோருக்குத் தனிச் சந்நதிகள் உள்ளன. கடற்கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவே உள்ள இந்த ஆலயத்திலுள்ள இரண்டு கிணறுகளில் உள்ள நீர் நன்னீராக இருப்பது ஓர் அற்புதம். இந்த நீரை புனித நீராக பக்தர்கள் அருந்துகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை (விருச்சிகம்) மாதம் மிகக் கோலாகலமாக தேவிக்கு நடத்தப்படும் உற்சவத்தின்போதும், சாதாரண நாட்களிலும் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், கர்நாடகா, தமிழ்நாட்டிலிருந்தும் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வேண்டி வழிபட்டுச் செல்கின்றனர். பன்னிரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின்போது பக்தர்கள் ஆலயத்தைச் சுற்றிலும் அமைத்துக் கொடுக்கப்படும் கூடாரங்களில் தங்கி தேவியை தினமும் வழிபடுகின்றனர். கடந்த ஆண்டு உற்சவத்தின் போது சுமார் 1000 கூடாரங்கள் அமைக்கப்பட்டனவாம்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத் தலைநகரிலிருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ளது சவரா என்ற தலம். இந்த சவராவில் கொட்டங்குளங்கரா ஸ்ரீபகவதிதேவி ஆலயம் உள்ளது. இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் பொன்மனா காட்டில் மேக்கத்தில் தேவி ஆலயம் உள்ளது. காயல் வழியாக, இலவச படகு வசதி மூலம் ஆலயத்தை அடையலாம். காயங்குளத்திலிருந்து 26 கி.மீ. தொலைவிலும், கருநாகப்பள்ளியிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் பொன்மனா உள்ளது. கொல்லம் செல்வோர் கொல்லம் ஸ்ரீஉமா மஹேஸ்வரர் (திருமணத் திருத்தலம்), சாஸ்தாங்கோட்டா தர்ம சாஸ்தா, குளத்துப்புழா தர்மசாஸ்தா, கொட்டாரக்கரா ஸ்ரீமஹாகணபதி,  ஓச்சரா ஸ்ரீபரப்ரஹ்மா ஆகிய ஆலயங்களையும் தரிசிக்கலாம். பொன்மனா ஸ்ரீபத்ரகாளிதேவி ஆலயம், காலை 5 முதல் 10 மணி வரையிலும், மாலை 5  முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.