விலங்குடன் வாழ்ந்த சந்நியாசி



மான்பூண்டி கோவில்

ஜெயவண்ணன்

மான்பூண்டி நல்லாண்டவர் ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்துடன் கூடிய அழகிய முன் வாயிலைக் கடந்தவுடன் நீண்ட பிராகாரம் உள்ளது. வலது புறம் மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மியும் தனி சந்நதிகளில் அருட்பாலிக்கின்றனர். அவர்களுக்கு எதிரே ஏழு கருப்பண்ண சுவாமிகளின் சந்நதி உள்ளது. தெற்குச் திருச்சுற்றில் தல விருட்சமான காட்டு மன்னை எனும் தெய்வீக மரம் படர்ந்து, உயர்ந்து, விண்ணுயர நிற்கிறது. தல விருட்சத்தின் அருகே ஓங்கார விநாயகர் சந்நதி உள்ளது. அடுத்து, பேச்சியம்மன் சந்நதி. தேவக்கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்க, மேல்புறம் சீதா - ராமர் திருமணக்காட்சி தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.
(சீதை விரும்பிய பொன்மானைத் துரத்தியபடி ராமர் இந்தப் பகுதி வழியாகத்தான் வந்தார் என்கிறது கர்ணபரம்பரைக் கதை ஒன்று)ஆலயத்தின் நடுநாயகமாய் மூலவர் நல்லாண்டவரின் சந்நதி உள்ளது. கருவறை முகப்பில் நான்கு கரங்களுடன் துவாரபாலகர்கள் காட்சி தருகின்றனர். கருவறையில் நல்லாண்டவர் சுதை வடிவத் திருமேனியில் அருட்பாலிக்கின்றார். அனைத்து அபிஷேகங்களும் அருகேயிருக்கும் உற்சவருக்கே நடைபெறுகிறது. மூலவருக்கு ஆடி மாதம் நான்காவது வெள்ளியன்று புனுகுச் சட்டமும், வாசனைத் திரவியங்களும்சாத்தப்படுகின்றன.கருவறையின் வடபுறம் பொந்து புளி கருப்பண்ண சாமி சந்நதியும், ஏழு கன்னிமார்கள் சந்நதியும் உள்ளன. கருவறைக்கு வடபுறம் தென்திசை நோக்கிய நிலையில் லாட சன்னியாசி தனி சந்நதியில் அருட்பாலிக்கிறார். இங்கு முதல் பூஜை சப்த கன்னியருக்கும், இரண்டாவது பூஜை லாட சன்னியாசிக்கும் நடைபெறுகிறது. மூன்றாவது பூஜையே மூலவர் நல்லாண்டவருக்கு.

அறுநூறு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை மாமுண்டி என்பவர் அரசாண்டு வந்தார். மந்திர ஆற்றலும் வீரமும் படைத்த மன்னர் இவர். மக்களின் மனம் கோணாது நீதி வழி தவறாது ஆண்டு வந்தவர். தற்போது உள்ள இந்த ஆலயத்திற்கு வடபகுதியில் அகஸ்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இதனருகே கன்னிமார் நீருற்று, குளம்போல் காட்சியளிக்கிறது. இதில் ஏழு தேவப் பெண்டிர் இறங்கி நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது  அங்கு வந்த கயவர் கூட்டம் அவர்களின் கற்பை சூறையாட எண்ணி அவர்களை நெருங்கினர். ஏழு பெண்களும் பதறி “அண்ணா, எங்களைக் காப்பாற்றுங்கள்,’’ எனக் கதறினர். அப்பகுதி வழியே குதிரைமேல் வந்து கொண்டிருந்த மன்னர் மாமுண்டியின் செவிகளில் அவர்களின் ஓலம் கேட்டது. உடனே ஓடிச்சென்று கயவர்களைக் கொன்று தெய்வப் பெண்களைக் காப்பாற்றினார். “நல்ல நேரத்தில் வந்து எங்களை ஒரு அண்ணனாக காப்பாற்றிய நல்லண்ணன் நீங்கள்” என ஏழுபேரும் மாமுண்டியை நோக்கி கரங்குவித்து நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர்.
அன்று முதல் நல்லண்ணன், நல்லாண்டவர், நல்லையா மாமுண்டி வள்ளல் என்ற பெயர்களில் மன்னர் மாமுண்டி அழைக்கப்படலானார். ஏழு கன்னிமார்களும் நல்லாண்டவரின் சகோதரிகளாக கருதப்பட்டு முதல் பூஜை இவர்களுக்கு நடைபெறுகிறது. இத்தலத்துக்கு வந்த ஒரு வடநாட்டு சன்னியாசி, தன்னைப்போலவே, மன்னர் மாமுண்டி மக்களின் நோய்களைத் தீர்ப்பதை அறிந்து அவர்மேல் பொறாமை கொண்டார். பொந்து புளி கருப்பு, ஆடு கருப்பண்ண சாமியின் அருளால்தான் மன்னர் அந்த சக்தி பெற்றிருக்கிறார் என்பதை அறிந்த சன்னியாசி, தனது மந்திர சக்தியால் அந்த தெய்வங்களைத் தன் கட்டுப்பட்டிற்குக் கொண்டுவர முனைந்தார். இதை உணர்ந்த மன்னர், சன்னியாசியை அவ்வாறு செய்யவிடாமல் தடுத்து, அவருக்கு விலங்கிட்டு சிறையிலிட்டார். பிறகு அவர்மீது இரக்கம் கொண்டு, விடுதலை செய்ய முன்வந்தபோது ‘‘மன்னா, உன் பெருமையை உணராது எதிர்ப்போருக்கு நான் ஒரு பாடமாக அமைவேன்,’’ எனக் கூறி, விலங்குடனேயே வாழ்ந்தார் அந்த சன்னியாசி. அதனாலேயே அவர் லாட சன்னியாசி என அழைக்கப்பட்டார். இன்றும், இவரது சிலை லாடம் பூட்டப்பட்டே காட்சி தருகிறது. இவருக்கே இங்குஇரண்டாவது பூஜை.
 லட்சக்கணக்கான மக்களின் குலதெய்வமாக இந்த மான்பூண்டி நல்லாண்டவர் திகழ்கிறார். கன்னிப் பெண்கள் ஐந்து அமாவாசை நாட்களில் இறைவனுக்கு நெய்தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால் அவர்களுக்கு விரைவில் மணமாவது உறுதி என்கின்றனர் பக்தர்கள். தங்கள் வேண்டுதல் பலித்ததும் கணவருடன் வந்து இறைவனுக்கு அபிஷேக ஆராதனையை நன்றியறிதலாகச் செலுத்துகின்றனர்.இங்கு விபூதி, குங்குமம் தவிர, துளசி தீர்த்தமும் பிரசாதமாகத் தருகிறார்கள். சடாரி சாத்துகிறார்கள். சைவ, வைணவ சம்பிரதாயங்கள் மேற்கொள்ளப்படுவது  இந்த ஆலயத்தின் சிறப்பு அம்சமாகும். ஊர் மக்கள் காது குத்துதல்,
முடி காணிக்கை, திருமணம் போன்ற சுபவிசேஷங்களை இந்த ஆலயத்திலேயே நடத்தி மகிழ்கின்றனர். காலை 6.45 முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 முதல் இரவு 8 மணிவரை ஆலயம் திறந்திருக்கும். திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 40கி.மீ தொலைவில், குளித்தலை சாலை சந்திப்பில் உள்ளது இந்த ஆலயம். மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவு.