உயர்ந்த சாதனை!



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

ஆன்மிகம் இதழுக்கான கட்டுரையே பாலகுமாரன் அவர்களின் கடைசி எழுத்து என்று அறிந்த மனம் நெகிழவே செய்கிறது. இருப்பினும் என்ன செய்ய? இறைவன் கணக்கை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.
- கே.ஆர்.எஸ்.சம்பத், திருச்சி.

பிராட்டியை வணங்கினால் ராஜயோகம் கிட்டும் என்ற சக்தி தத்துவ தொடர் தெள்ளென விளக்கியது. முனைவர் பா.ராஜசேகர சிவாச்சாரியார் தற்காலத்திய அபிராம பட்டரோ என்று வியக்க வைக்கிறது.
- ஆர்.அரிமளம், பெங்களூர்-76.

அட்டைப்படத்தில் சப்த கன்னியரின் படத்தை வெளியிட்டு, அவர்களின் தியானம், காயத்ரி மந்திரங்களையும் அவர்களின் வடிவ விளக்கம் மற்றும் அவர்களின் நைவேத்யங்களை கூறியதோடு அவர்களை வழிபடுபவர்களுக்கு ஏற்படும் பயன்களை கட்டுரையாக வெளியிட்டிருந்தது வாசகர்களுக்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது. நன்றி.
- K.சிவக்குமார், சீர்காழி.

பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று மனித வாழ்க்கையில் எப்படி இடம் பெறுகிறது என வள்ளுவத்தின் வாயிலாக திருப்பூரார் காட்டிய விதம் அருமை.
- இராம.கண்ணன், சாந்தி நகர், திருநெல்வேலி.

மனம் செம்மையாகி, உறுதியடைந்தால் சூழ்நிலையில் ஏற்படும் பிரச்னைகளை அமைதியாகத் தீர்த்து விடலாம், சூழ்நிலை சவாலாக மாற மனம் இடம் தரக்கூடாது, மனம் கலக்கமில்லாது வலிமையாகிவிட்டால் பிரச்னைகளை தீர்ப்பது எளிது, என்று தெளிவாக விளக்கியது பொறுப்பாசரியரின் ‘சூழ்நிலை வாய்ப்புகள்’ கட்டுரை.
- A.T.ஸுந்தரம், சென்னிமலை.

சகல நலன்கள் அருளும் சப்த மாதர்கள் மகத்துவம் கூறும் கட்டுரை விஷ்ணுதாசனின் வித்தியாசமான பாடல், தோஷம் நீங்கிய சப்த கன்னியர் குறித்த குளித்தலை திருத்தல கட்டுரை, சகல வரம் அருளும் சப்த மாதர்களை போற்றி வணங்கத்தக்க ஸ்ேலாகங்கள்... சப்த கன்னியரின் மகத்தான சிறப்புக்களை உணர்த்தும் வகையில் ஒரு சிறப்பு மலரே வெளியிட்டிருப்பது அற்புத முயற்சி. சப்தமின்றி செய்யப்பட்ட ஒரு உயர்ந்த சாதனை! பாராட்டுக்கள்!
- அயன்புரம் டி. சத்தியநாராயணன், சென்னை-72

சப்த மாதர்களது பெயர்களில் ஒரு சிறு குழப்பம் இருந்தபோதிலும், அவர்களை வணங்கி வசந்தம் பெற்றிட தோதாக இருந்தது அவர்களது காயத்ரி மந்திரங்கள்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

இன்றைய தலைமுறையினருக்குப் பொதுவாகத் தெரிந்திராத  சப்த கன்னியர்கள் குறித்து வண்ணப்படத்துடன் அவர்களைப் பற்றிய குறிப்புகள், கோயில்கள் என பலவகைத் தகவல்களை அளித்து அரும் சேவை ஆற்றிவிட்டீர்கள்.
- ப.மூர்த்தி, பெங்களூரு.

அட்டையில் காமாட்சி உட்பட சப்த கன்னியர்களை நீ கண்டதும் ஒரு கணம் பக்திப் பரவசத்தால் ‘சப்த’ நாடியும் சிலிர்த்தது! நாமக்கல் கோயில் தகவல் பக்கங்களைப் புரட்டப் புரட்ட நேரில் கோயிலை வலம் வந்ததுபோலவே ஒரு பிரமை! அருமையான வழிகாட்டி.
- சிம்ம வாஹினி, வியாசர் நகர்.

‘அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள்’ தொடர் கட்டுரை படிக்க ஆனந்தமாய் இருக்கிறது. மகா பெரியவாளைப் பற்றிய குறிப்புகளை அர்த்தமுள்ள இந்து மதத்தில் கவிஞர் கூறியிருப்பதைப் படித்து பக்தி பரவசமானேன்.
- பாரதி கேசவமேனன், கொல்லம்.

சப்த கன்னிமார்கள் பற்றிய கட்டுரைகள், தகவல்கள், ஸ்லோகங்கள் எல்லாமே வெகு சிறப்பு. குறிப்பாக அட்டைப்படம். அந்தப் படத்தை எங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்துள்ளோம்.
- திலகா ராஜேந்திரன், திருவொற்றியூர், சென்னை.