பிராட்டியை வணங்கினால் ராஜயோகம் கிட்டும்!அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-21

(அபிராமி அந்தாதி பாடல் 14க்கான மேலும் சில விளக்கங்கள்)


‘பாரில் உன்னை சந்திப்பவர்க்கும் எளிதாம்’ -
இறவா நிலையை பெற்றவரும், மூப்பு பிணியற்றவரும், தான் எண்ணிய அனைத்தும் பெற்று இன்புற்று வாழ்பவரும், யாரிடத்தும் கையேந்தாமல்  வளமையுடைய சிறப்புடையவர்கள் தேவர்கள். ‘அமரர் தங்கோன்’ (பாடல் - 97)

தேவர்களை வென்று, தன்வயப்படுத்திய பெரிய பலம் பொருந்தியவர்களும், அதனால் அனைத்து இன்பங்களையும் தான் அனுபவிப்பவர்களும், மிகுந்த  தவத்தினால் இந்திரனை வெல்லும் உடல்பலம் கொண்டவர்களுமான அசுரர்கள். ‘மகிடன் தலைமேல் அந்தரி’ (பாடல் - 8) தன் மனதை முழுவதுமாய்  அடக்கியவர்களும், தன் மூச்சுக் காற்றை முழுவதுமாய் தன் வயப்படுத்தியவர்களும் இடையறாது இறைவனின் திருநாமத்தை செப்புபவரும்,  இறையன்பின்றி வேறு ஒன்றையும் விரும்பாதவரும் ஆகிற வானவர், தானவர், ஆனவர் ஆகிய மூவரும் சிறப்பாக உன்னை வந்திப்பவராவார்.

‘மாயா முனிவரும்’ - பாடல்-4

இவர்கள் ஒரு பக்கம் உன்னை வணங்குவதற்காக காத்திருக்க, ஆன்மாவின் ஆணவ மலத்தை (அறியாமையை) நீக்குவதற்காக இறைவனின்  அருளாணையின் வண்ணம், புல், பூண்டு, செடி, கொடி, மரம், பறவை, விலங்கு, மனித, பூத, தேவ ஆன்மாக்களுக்கான உடலை அற்புதமாக அமைத்து  தருபவனும், ஒவ்வொரு உயிரும் நலம் பெறுவதற்காகத் தன்னை வருத்தி காக்கின்ற பேரருள் கொண்டு, பத்து அவதாரங்களை எடுத்து மக்களை காத்து  அருள்கின்றவனும், அஷ்ட ஐஸ்வர்யங்களும் விரும்புகின்ற பேராண்மை படைத்தவனும், அனைத்து செல்வங்களுக்கும் அதிதேவதையான  இலக்குமியால் விரும்பப்படுபவரும், (‘லக்ஷ்மி காந்தம் கமலநயனம்’), குறைவற நிறையுடையவனும், பூரண பொருளுமாகிற நாராயணர் உன்னையே  ஒருபுறம் சிந்தித்திருக்க அனைத்து அரண்களையும் ஆலமரத்தின் கீழிருந்து அருள்கிறவனும், விஷ்ணு, பிரம்மா, ஸ்கந்தன், இந்திரன், உபமன்யு, நந்தி  முதலான மிகச்சிறந்த தேவர்கள் யாருடைய கடைக்கண் கருணைத் துளியால் இத்தகைய கடவுள் என்னும் உயர்ந்த நிலையை அடைந்தார்களே,  அப்படிப்பட்ட ‘பரமானந்தர்’ என்ற தட்சிணாமூர்த்தி, இப்படிப் பக்குவமுடைய ஆன்மாக்களை தன் கருணைப் பார்வையால் மேலான கடவுளாக்கிய  பெருமைமிக்க தட்க்ஷிணாமூர்த்தி. தன் சிந்தையுள்ளே உன்னை பந்தித்திருக்கிறார்.

மேற்கண்ட அனைவருமே அழியா பரமானந்தத்தை பெற்றவர்கள். தன்னளவில் குறைவற்றவர்கள், இப்படிப்பட்ட மிகுந்த வலிமை, செல்வம், கருணை,  பேராற்றல் கொண்டவர்களாகிய அவர்களாலே வணங்கப்படுகிற மிக உயர்ந்த நிலையிலேயிருக்கக்கூடியவள் உமையம்மை. ஆசை முழுவதும்  நிறைவேறிய தேவர்கள் எங்கே? ஆசைக்கடலில் அகப்பட்ட அடியேன் எங்கே? (‘‘ஆசை கடலில் அகப்பட்டு’ பாடல் - 32) எமனையும் நடுங்க வைக்கும்  அசுரர்கள் பலம் எங்கே? அவனைக் கண்டால் அஞ்சி நடுங்குகிற பலவீனமுடைய நான் எங்கே? (‘வெங்காலன் என்னை நடுங்க அழைக்கும்’ பாடல் -  33); மனத்தை தன் வயப்படுத்திய ‘ஆனவர்கள்’ (சித்தர்கள்) எங்கே? நெஞ்சம் பயில நினைக்காத நான் எங்கே? (‘நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன்’  பாடல் - 59); வேதத்தையே படைத்த பிரம்மா எங்கே? மறை சொல்லிய வண்ணம் தொழும் நான் எங்கே? அனைத்து செல்வங்களும் விரும்புகின்ற  விஷ்ணுவானவர் எங்கே? கோத்திரம், குலம், குன்றி நாளும் தலங்கள் தோறும் பாத்திரம் கொண்டு உழலாய் அலைந்து திரியும் நான் எங்கே? பிராண  சக்தியால் உமையம்மையை பந்தித்து தன் இதயத்திலே இருத்திக் கொண்ட தட்சிணாமூர்த்தி எங்கே? ஆவியை (உயிரை) தயிரிலிடப்பட்ட மத்து போல்  சுழன்று அலைக்கழிக்கப்படும் தளர்வுடைய ஆவியாகிற நான் எங்கே?

‘ததியுறு மத்தில்’ - பாடல் 7

இப்படி எண்ணிப்பார்க்கின், எல்லா நிலையிலும் மதிப்பற்ற நாயாகிற என்னை (‘நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து’ பாடல் - 61)  நயந்துவந்து உமையம்மை ஆண்டுகொள்வதென்பது எக்காரணத்தை முன்னிட்டும் என் இழிவு கருதியும் அல்ல, தகுதி கருதியுமல்ல, மாறாக  தன்னிடமுள்ள கடல் போன்ற ‘தன்னளியே’ எல்லாவற்றையும் விட உயர்ந்த அருளை எனக்கு பெற்றுத் தந்தது. ‘அவ்யாஜ கருணா மூர்த்தையே’ -  காரணமில்லா கருணை. ‘கருணா ரஸ ஸாகரா’
- கருணையே அவளின் இயல்பு.

‘எம்பிராட்டி - நின் தன்னளியே’ -

பிராட்டி என்கின்ற வார்த்தை, ராஜமாதாவை, அரசியை இச்சொற்களால் குறிப்பிடலாம். தலைமைப் பொறுப்பிலுள்ள மாதரையும் இச்சொல் குறிக்கும்.  அந்தவகையில் அன்னை என்றால் அன்பைப் பெறலாம். பிராட்டி என்றால் கருணையைப் பெறலாம். அன்னைக்கு அன்பை மட்டுமே தரும் வல்லமை  இருக்கிறது. பிராட்டியாருக்கு அன்புடன் சேர்த்து அறிவித்தலாகிற ஞானத்தை உபதேசிக்கவும், தீயவற்றை விலக்கவும், தண்டிக்கவும், அறத்தை  பின்பற்ற வலியுறுத்தி கண்டிக்கவும் உரிமை உள்ளவர்.

அரச கட்டளையை எவ்வாறு நாட்டிலுள்ளவர் பின்பற்ற வேண்டுமோ அது போல் பிராட்டியார் கட்டளையுமாகும். பிராட்டியாக உமையம்மையை  வழிபாடு செய்வதனால் தாம் வேண்டியவற்றை உடனடியாக அளித்து அனுபவப்படுத்துகிற பேராற்றல் பிராட்டியாக, வணங்குவோருக்கு உரித்தாகும்.  தீயின் மேல் நிற்பதாலும் (உரியில் நிற்பது) உடனடியாக செய்ய வேண்டும் என்பதாலும், அனைவரும் அறிய அமாவாசையை பெளர்ணமி ஆக்க  வேண்டுமென்பதாலும் பிராட்டி என்கின்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.

எம்பிரான் என்பது என் பிராட்டி என்றும் தனக்கு அன்புடையவள், தன் பெயரில் கருணையுடையவள் என்பதாக குறிப்பிடுகின்றார். அரசியரின் அன்பைக்  கொள்வதென்பது அந்நாட்டில் அனைத்து நன்மையையும் தான் பெற்றுக் கொள்ள காரணமாக அமையும். அதனாலேயே ‘எம்பிராட்டி’ என்கிறார்.  ஆகமங்கள் ‘எம்பிராட்டி’யை ராஜராஜேஸ்வரி என்று குறிப்பிடுகிறது. இதையே லலிதா ஸஹஸ்ரநாமம், பெரிய பிராட்டி மஹாராக்னி என்று  குறிப்பிடுகின்றது. அம்பாளின் ஒவ்வொரு உருவமும் ஒரு சிறப்பு பயனைத் தரவல்லது.

அந்த வகையில் பிராட்டியாரை வணங்கினால் ராஜவசியம் ஏற்படும். அரசாங்கத்தின் மூலம் பல நன்மைகள் உண்டாகும். எடுத்த காரியம் வெற்றியாக  முடியும். செல்வம் பெருகும், அச்சம் தீரும், வாழ்விற்கு உண்டான இவ்வுல இன்பங்கள் அனைத்தையும் உடல் அனுபவிக்கும். ஆரோக்கிய  தேகத்தையும், செல்வத்தையும், ஆற்றலையும் வழங்கவல்லது இந்த மஹாராக்னி - ராஜேஸ்வரி - ராஜ இராஜேஸ்வரி வடிவங்கள்.

‘நின் தண்ணளியே’ -

ஒவ்வொரு தேவதைக்கும் கருணையானது இயல்பாகவே அமைந்திருக்கிறது என்றாலும் அந்தக் கருணையின் அளவானது மிகவும் மிகுதியானது. பிற  தேவதைகள் காரணத்தோடு, அறத்தோடு கருணை செய்யக்கூடியது. உமையம்மையின் கருணையோ காரணமில்லாதது. அறத்தை பின்னணியாகக்  கொண்டோர் என்பவருக்காக மட்டுமில்லாமல் எனையோருக்கும் கருணை செய்பவள். (‘தர்மா தர்ம விவர்ஜிதா’ - லலிதா ஸஹஸ்ரநாமம்). அறம்,  பாவம் பார்க்காது கருணை செய்பவள்.

பேராற்றல் கொண்டமையால் அச்சக்தியின் கருணையை பெற்றுக் கொள்பவர் பெறும் பேறு அதிகமாக இருக்கும். உதாரணமாக, யட்ஷிணி கருணை  செய்தால் மூன்று காலம் மட்டும் அறியலாம். சரஸ்வதி கருணை செய்தால் கல்வியை மட்டும் அடையலாம். எம்பிராட்டியின் தண்ணளியானது  அனைத்து தேவதைகளின் அருளிற்கும் நம்மை பாத்திரப்படுத்த வல்லமையுடையது. உமையம்மையின் கருணை நின் என்ற வார்த்தையால்  திருக்கடையூர் அபிராமியின் கருணையைக் கூறுகின்றார். தான் உபாசனை செய்த உமையம்மையின் தனி உருவத்தை குறிப்பிடுகின்றார்.

தனக்கு முன் அபிராமியானவள் அரசகுலப் பெண்ணாக காட்சியளித்ததை நமக்கு மறைமுகமாக சுட்டுகிறார். மேலும் அரசகுலப் பெண்ணாக  வளர்ந்தவள் மதுரை மீனாட்சி. அந்த மீனாட்சியம்மையை ‘பிராட்டியார்’ என்று அழைக்கிறார். மந்திர வழக்கில், மீனாட்சியை சாக்தபரம் என்றும்,  சிதம்பரம் சிவகாமசுந்தரியை சிவபரம் என்றும் காஞ்சி காமாட்சியை உபயம் (சிவசக்தி சமம்) என்றும் குறிப்பிடுவர். மீனாட்சி மந்திரத்தையே இந்தப்  பாடல் குறிப்பிடுகிறது. இவ்வாறு வழிபடுதல் என்பது உமையம்மையின் அருளே.

தண்ணிளிக்கு என்று முன்னே பலகோடி தவங்கள் செய்வார்
   மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும், அழியா முக்தி வீடும் அன்றோ?
   பண்ணளிக்கும் சொற் பரிமளையாமளைப் பைங்கிளியே.
(பாடல் - 15)

தண்ணளி என்ற சொல்லிற்கு அருள் என்று பொருள். அருளிற்குக் காரணம்: அழுகின்ற, துன்பத்தை உடைய உயிர்களின் மீது, அஃதில்லாத  ஆனந்தமயமான இயல்பை உடையவளாகிய இறைவிக்கு ஏற்படும் ஒரு குணமே அருளாகும். ‘பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள் கூர்’ (பாடல் -  9) அருள் அனுபவத்தைச் சொல்லுவது: ஒரு சாமானியரிடத்து எந்தவிதமான தேவையும் எதிர்பார்ப்பும் இல்லாமல், அவருக்கு அடுத்தடுத்து மிக  உயர்ந்த நன்மையைச் செய்வதும் மிகக் கொடிய தீமையை விலக்கியதும், மிகப்பெரிய மதிப்பை அளிப்பதுவும், செய்யப்பட்டால் அச்சாமானியரானவர்,  அப்படி செய்பவர்களின் மீது கொள்கின்ற அன்பு, நன்றி, வியப்பு, விசுவாசம் இதுபோன்று அனைத்து உணர்வும் கலந்ததே அருள்.

அந்த உள் உணர்வை வாக்கால் விளக்க இயலாது. அப்படிச் சொன்னால் அது முழுமையாகச் சொல்லுவதாக ஆகாது என்பதனாலேயே ‘நின் அருள்  ஏதுதென்று சொல்லுவதே’ (பாடல் - 27) என்கிறார். அருளாற்றல்: வானவர்களுக்கு வாழ்வைத் தரும், தானவர்களுக்கு வலுவைத் தரும், ஆனவர்களுக்கு  (பக்குவமானவருக்கு) ஞானத்தைத் தரும். அயனுக்கு படைத்தலையும், மாலுக்கு காத்தலையும், உருத்திரனுக்கு அழியா ஆனந்தத்தையும் தரும்  பேராற்றலே உமையம்மையின் அருளாற்றலாகும். ‘பாரில் உன்னை சந்திப்பவருக்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே’ (பாடல் - 14) அருளின்  வடிவம்: மூக்குத்தியானது தங்கத்தினாலானதுபோல, கப்பலானது மரத்தாலானதுபோல, இறைவியானவள் அருளால் ஆனவள். ‘பேரருள் கூர் திருத்தன  பாராமும்’ (பாடல் - 9)

அருளின் தன்மை: நீருக்கு கீழ்நோக்கி விழும் தன்மையும், தீக்கு மேல் நோக்கி எழும் தன்மையும் எப்படி இயல்பானதோ, அவ்வப் பொருளை விட்டு  அந்தந்தத் தன்மை இயல்பாய் எப்பொழுதும் நீங்காததுபோல இருப்பதே உமையம்மையின் இயல்பாகிய அருளாகும். தகுதி உள்ளவர்கள், அஃது  இல்லாதாரிடத்து கொள்ளும் உணர்வே கருணை என்றாலும், தாயின் கருணையால் அன்பையும், தந்தையின் கருணையால் பாதுகாப்பையும், குருவின்  கருணையால் அறிவையும், அரசனின் கருணையால் ஆற்றலையும், ஆண்டவனின் கருணையால் இவையனைத்தையும் பெற முடியும். கருணையின்  தன்மை அதை உடையவரைச் சார்ந்தது.

அருளைப் பெறும் வழி: கடவுள் செய்வது அருள். பிறர் செய்வது கருணை என்று பிரித்துச் சொல்கிறார்கள். ஒரே பொருளாயிருந்தும் கருணை  செய்பவரிடத்து நாம் அவர்கள் விரும்பும்வகையில் நடக்க வேண்டும். ஆனால் அருளைப் பெறுவதற்கு தவம் செய்ய வேண்டும் என்கிறார் பட்டர்.  ‘தண்ணளிக் கென்று பலகோடி தவங்கள் செய்வார்’ (பாடல் - 15) கோடி தவங்கள் என்ற வார்த்தையினாலே தவத்தின் கடினத்தையும், நெடிய  காலத்தையும் மறைமுகமாக குறிப்பிடுகின்றார். உலகத்திற்கு சிவனை அடைவதற்கு தவமே சிறந்த சாதனம் என்பதை அறிவுறுத்த, உமையம்மை  தவத்தின் இலக்கணத்தை பிறருக்கு உணர்த்த, தானே தவம் செய்தாள், அதனால்தான் ‘மாத்தவளே’ (பாடல் - 13) என்கிறார்.

தவம் என்றால் என்ன? அதை எப்படி செய்வது? இதோ மாத்தவளைக் கொண்டே ‘மா’ தவத்தை அறிவோம். மிக உஷ்ணமான கோடைகாலத்தில் அவள்  நாற்புறத்திலும் அக்னியை ஜ்வாலிக்கச் செய்து அதன் மத்தியில் புன்னகையுடன், வேறு எதையும் பாராது சூரியனையே பார்த்தபடி நிற்கிறாள். மழை  பொழியும்போது அந்த மழைநீரை மட்டுமே உணவாகக் கொள்கிறாள். ஒற்றைக்காலில், வளையாமல், சோர்ந்து போகாமல், அசையாமல், நேராக  நிற்கிறாள். மழைக்காலத்தில் கடுமையான காற்றுடன் கூடிய ஓயா மழையில் திறந்தவெளியில் இறைவனை அழைக்கும் தவம் அது. இத்தகைய  கடுமையான முயற்சியும், தொடர்ந்த ஈடுபாடும், துன்பங்களைப் பொறுத்துக்கொள்ளும் தன்மையும், மனஉறுதியுடனும், நீண்டகாலத்திற்கு செய்வதுதான்  ‘கோடி தவம்.’ (‘முன்னே பல கோடி தவங்கள்’ பாடல் -15)

‘மண்ணளிக்கும் செல்வமோ’ -

மண்ணளிக்கும் செல்வம் யாது? உலகில் ஆன்மாக்கள் உடலோடு பொருந்தியிருக்கிறபோது, பெற்று அனுபவிக்கத் தேவையான ஆற்றல் இருக்கும்.  செல்வம், கல்வி, தொடர்ந்த வெற்றி, தளர்வில்லாத மனது, நோயில்லாத, வளமான, பலமான, நலமான வாழ்வு, இளமையான யாக்கை, நல்ல  மனதைக் கொண்ட சுற்றத்தார்கள், வாகனங்கள், மிகுதியான செல்வம், அரசாட்சி, புகழ் இவை அனைத்தும் மண்ணளிக்கும் செல்வமாகும். (‘தெய்வ  வடிவந் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும்’ பாடல் - 69); ‘வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை, பெய்யும்  கனகம் பெருவிலை ஆரம் - பாடல் - 52)

கலையாத கல்வியும், குறையாத வயது மோர்
   கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத
இளமையும்
   கழுபிணியிலாத உடலும்,
சலியாத மனமும் அன்பகலாத
மனைவியும்
   தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்

- அபிராமி அம்மை பதிகம்
அழகு, வலிவு, துணிவு, வாழ்நாள் வெற்றி இந்த அனைத்து செல்வத்தையும் உமையம்மை தருவாள். அதைக்கேட்டு அவளிடத்தில் பெறலாம்  என்றாலும், அபிராமி பட்டர் கடினமான தவம் செய்ததனால் பெறப்படும் பயனானது இதைவிட மிகவும் அதிகமாக இருக்கும், அதனால் மண்ணளிக்கும்  ‘செல்வமோ’ பெறுவர் என்கிறார். இச்சொல்லில் ‘மோ’ (ம்+ஓ) இழிவுப் பொருளினமைந்தது, இதை பெற மாட்டார்கள் என்று கூறுகிறார்.

‘மதிவானவர்தம் விண்ணளிக்கும் செல்வமும்’ -

மதி என்ற ஞானத்தினாலும், மதியாகிற சந்திரனிடத்திலிருந்து தோன்றுகின்ற அமுதத்தை உண்பதனாலும், விண்ணிலே வசிப்பதனாலும், மதிவானவர்  என்றார். மதிவானவர் என்பவர் மரணம், பிணி, மூப்பு இல்லாதவர், முப்பருவமுள்ளவர். பிறப்பு, குழந்தை, இளமை, இந்தப் பருவம் மட்டுமே  உள்ளவர்கள். குறைவற்ற செல்வமுடையவர்கள், நல்ல செயல்களால் அடையப்படுகின்றவர், சூரியனிடமிருந்து வரும் கதிர்களை உணவாக உண்பவர்,  அதிகமாக விளையாட்டில் விருப்பமுள்ளவர், மூன்று வகையானவர்கள், பதவி இன்பத்தை அனுபவிக்கிறவர்கள், பிறப்பின்வழி வரும் உரிமையால்  மிகுந்த செல்வத்தை அடைபவர்கள், தேவதா ஆராதனையினால் அருளை அனுபவிக்கிறவர்கள்.

அனைவரும் தனக்கு மட்டுமே சொந்தமான வாகனம், வீடு போன்ற உடைமைகளையும், மனைவி, மக்கள், தாய், தந்தை போன்ற இன்பமளித்து துன்பம்  நீக்குகின்ற உண்மை உறவுகளையும், தனிப்பட்ட அறிவு, அழகு ஆகியவற்றை விரும்புகிறவர்கள் இது அனைத்தும் சொர்க்கத்தில் இயல்பாய் இருக்கும்.  உதாரணமாக, இந்திரன் (இந்திரன் என்பது பதவி) என்பவருக்கு ஒழுக்கமும், அழகும், செல்வமுமுடைய மனைவி, இந்திராணி. அவர்கள் வாழுமிடம்,  அனைத்து வசதிகளும் கொண்ட பெருநகரம், அமராவதி. இந்திரன் நினைத்த மாத்திரத்தில் அனைத்து இடங்களுக்கும் பயண களைப்பின்றி சென்றுவர  உச்சைஸ்ரவஸ் என்ற குதிரை, பாதுகாப்பாக வாகனம் செலுத்துகிற மாதலி என்ற தேரோட்டி.

நினைத்த வண்ணம் மகிழ்ச்சியைத் தூண்டும் வகையில் ஐம்புலன்களுக்கும் இன்பம் தருகின்ற நந்தவனம். கண்ணுக்கினிய வண்ணமலர், காதுக்கினிய  ரீங்காரமிடும் வண்டு, மூக்கிற்கினிய சந்தனவாசம், மெய்யிற்கினிய தென்றல், வாயிற்கினிய கனிதரும் மகிழ்ச்சியளிக்கும் மரங்கள் சூழ்ந்த நந்தவனம்.  கோடைகாலத்தில் உடலுக்குத் தேவையான குளிர்ச்சியையும்,  குளிர்காலத்தில் வெப்பத்தைத் தரும் ருதுக்கள் சார்ந்த தட்பவெட்ப நிலை வசதிகளைக்  கொண்ட பாதுகாப்பான மாளிகை. தந்தையின் கருத்தே தன் செயலெனக் கொண்ட, மகிழ்ச்சி தரும் புதல்வன் ஜெயந்தன்.

போர்க்காலத்தில் உறுதியாக நின்று தன் தலைவனைக் காக்கும் யானை, ஐராவதம். வெற்றியை மட்டுமே தரும் வலிமையான வஜ்ராயுதம். நல்லதில்  ஊக்கத்தை தூண்டக்கூடிய முனிவர்களாகிய குருக்கள். அறத்தையே செய்யக்கூடிய சுதர்மா என்ற அரசவை. ஆன்மாவை புனிதப்படுத்தும் கங்கை -  இதுபோன்ற அனைத்து சுகங்களையும் அனைவருக்கும் தரவல்ல, குறைவற்ற செல்வம் வாய்ந்த பகுதியான சொர்க்கம். நினைத்ததை நினைத்த  வண்ணம் தரக்கூடிய கல்பதரு என்ற மரங்கள். அடர்ந்த காடு. திசையின் அதிபர்களால் (எண் திசை வேந்தர்கள்) காக்கவல்ல பாதுகாப்புடன் அமைந்த  நாடு. எப்பொழுதும் புத்துணர்ச்சி அளிக்கும் அமிர்தம்.

முனைவர்
பா.இராஜசேகர
சிவாச்சாரியார்