நல்லவர் யார், கெட்டவர் யார்?



வணக்கம் நலந்தானே!

நல்லவர் யார், கெட்டவர் யார் என்ற கேள்விக்கான விடை, பெரும்பாலும் சுயநல நோக்கிலேயே அமைந்து விடுகிறது. நன்மை செய்பவர் நல்லவர், நன்மை அல்லாததைச் செய்பவர் கெட்டவர். யாருக்கு? அவரைச் சார்ந்திருப்பவருக்கா அல்லது சமுதாயத்திற்கா? தன்னை அண்டியவர்களை அரவணைத்து அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்பவர்கள், அவர்களைப் பொறுத்தவரை நல்லவர்கள். ஆனால், ஒரு கட்டத்தில் அப்படித் தன் தேவை நிறைவேற்றப்படாவிட்டால், அந்த நல்லவரும் கெட்டவராகிவிடுகிறார்!

அதுவரை உதவி பெற்றுவந்தவர்கள், இந்தக் கட்டத்தில் தமக்கு அவரால் உதவ முடியாததற்கு உண்மையான காரணம் என்ன என்பதை ஆராய முற்படுவதில்லை; ஆனால், சந்தேகப்படத் தயாராக இருக்கிறார்கள்! சுயநலம்.அதேபோல சமுதாயக் கண்ணோட்டத்தில், கெட்டவர்கள் என்று கருதப்படுபவர்கள், தாம் செய்யும் உதவிகளால் தங்களுக்கு விசுவாசமாக இருப்பவர்களின் கண்ணோட்டத்தில் நல்லவர்களாகக் கருதப்படுகிறார்கள்! இந்தத் தரப்பிலும், உதவி கிட்டாமல் போனாலோ, அதனால் விசுவாசம் குறைந்தாலோ பகை மூள்கிறது. இந்த ‘நல்லவரு’ம் கெட்டவராகிவிடுகிறார்.

எதிர்பார்த்தல் ஏமாற்றமாக முடியும்போதுதான் ஒருவருடைய சுயரூபம் வெளிப்படுகிறது. அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாததால் அதற்குக் காரணமானவர் மீது கோபம், வெறுப்பு, பகையுணர்வு என்று அடுத்தடுத்து ஏற்படுகின்றன. நட்பு, பாசம், காதல் எல்லாமும் முறிந்துபோகின்றன - நல்லவர் கெட்டவராகிறார். பிறரைச் சார்ந்து வாழ்தல் என்பது எப்போதுமே இன்றியமையாததுதான். ஆனால், அவ்வாறு சார்ந்திருத்தல் ஒருவழிப்பாதையாக அமையும்போதுதான் உரசலும், விரிசலும் உருவாகின்றன. நல்லவரும், கெட்டவரும் இடம் மாறுகிறார்கள். தன்னைப் போலவே பிறரையும் கருதும் மனோநிலை அமையுமானால், நல்லவர் நல்லவராகவே இருப்பார்; கெட்டவரும் நல்லவராகத் தெரிவார்!

இப்படிப்பட்ட மனநிலை அமைய இறையருள் கட்டாயம் தேவை. அவர் அருளால் மனிதரை நல்லவரா, கெட்டவரா என்று எடைபோடுவதற்கு பதிலாக, சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் ஏற்படும். அவரவருக்கு நேரும் சந்தர்ப்பங்களே அவரவர் பழகுவதற்கான காரணங்கள் என்பதும் புரியவரும். எல்லோருக்கும் தீயவனாகத் தெரிந்த துரியோதனன், கர்ணனுக்கு நல்லவனாகத் தெரிந்தான் இல்லையா?எல்லோருக்கும் நல்லவராகத் தெரிந்த மகாத்மா காந்தி, கோட்ஸேக்குக் கெட்டவராகத் தெரிந்தார் இல்லையா?

- பிரபுசங்கர்
(பொறுப்பாசிரியர்)